நாவல்  தினை              அத்தியாயம் இருபது             பொ.யு 1900

This entry is part 7 of 19 in the series 25 ஜூன் 2023

 

கபிதாள். 

கர்ப்பூரய்யனின் இல்லத்தி பெயர் அது. கபிதா என்று பகு பிரியத்தோடு கர்ப்பூரய்யன் கூப்பிடுவான். கவிதா என்ற பெயரை வங்காளி உச்சரிப்பில் கொபிதா என அழைக்க ஆசை அவனுக்கு. கொபிதாளே!

பௌர்ணமி, அமாவாசை ராத்திரிகளில் எல்லாம் சேர்ந்து வந்தால் இரண்டு பேரும் ராத்திரி தந்த சுத்தி செய்து, குளித்து வாசனை திரவியங்களை தாராளமாக உடம்பில் வாரியெடுத்துப் பூசி மெல்லிய கருத்த ஆடை தரித்து கதவடைத்துக் கட்டிலுக்கு பரஸ்பர அணைப்பில் விரைவார்கள். 

அது இரண்டு வருஷத்துக்கு முன். அப்போது கல்யாணம் ஆன புதிது. எதைப் பார்த்தாலும், எதைத் தொட்டாலும், எதை அனுபவித்தாலும் புதுசாக இருந்ததால் கர்ப்பூரய்யன் தம்பதியினர் அமாவாசை, பௌர்ணமி தவிர மற்ற நாட்களிலும், இரவோடு கூடப் பகலிலும் உடல்சுகம் தேடி படுக்கை அறையே கதியெனக் கிடந்தார்கள்.

  அவர்களின் கட்டில் விளையாட்டு தொடங்கியபோதுதான் வெளி வாசல் நடைக்குப் போகும் ஒழுங்கையில் செந்தேள் காலனி ஒன்று ஏற்பட்டு மெல்லப் பெருக ஆரம்பித்தது. 

கல்யாணம் திருத்தணிகையில் நடந்தது. மழைநாள் திருமணம். ஈரம் பூத்த குன்றுப்பாதையில் தோள் சுமக்கும் தவிலோடும் நாகசுவரத்தோடும் வாத்திய கோஷ்டி விரைந்தபோது மழை பெய்ய ஆரம்பித்து வாத்தியக்காரர்கள் சொட்டச் சொட்ட நனைந்து போயிருந்தனர். 

நாகசுவரத்தின் உள்ளே மழைநீர் புகுந்து சீவாளி பொருத்தும் போது கீழ்வழியாக நீர் கசியத் தொடங்கியது. தவிலும் நனைந்துவிட்டது. 

மேளத்தை சிறு நெருப்பில் காட்டிச் சுழற்றி வார்களை மறுபடியும் எடுத்து முடுக்கி அந்த மிழவைக் கோல்கொண்டு மெல்லத் தட்ட சுநாதமாக அது பேசுமாம். 

நெருப்பெல்லாம் மூட்டிக் காயவைக்க வேண்டாம். நேரம் இல்லை. கல்யாணத்துக்கு முகூர்த்தம் தட்டிவிடும், வந்தவரைக்கும் வாசித்தால் போதும் என்று கூடவே வந்த புரோகிதர்கள் பொறுமை இழந்து பரபரத்தார்கள். 

கபியும் கர்ப்பூரய்யனும் திருமணம் கொள்ள கோவில் மண்டபத்தின் கூரை பாதி வானம் பார்க்கத் திறந்திருக்க, அடுத்த மழையில் எல்லோரும் இன்னொரு தடவை   நனைந்து போனார்கள். 

நாகசுவரம் தேம்பித் தேம்பித் தண்ணீரோடு இசைக்க, தவில் தோல் தளர்ந்து ஊம் ஊம் என்று ஏக்கம் கொண்டு சத்தம் எழுப்பி இதோ இதோ இதோ என்று விசும்பியது. ஜால்ரா தாளம் கூட ஈரமாகி, ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டது,

கோயில்  வெளிமண்டபத்தில் தாலி கட்டித் தம்பதிகளாக இருவரும் ஆசீர்வாதம் வாங்கியபோது புரோகிதரின் தொடையில் விழுந்து ஓடியது கரப்பு என்று மனசறிந்து பொய் சொன்னான் கல்கத்தாவிலிருந்து கல்யாணத்துக்கு வந்திருந்த கபிதாளின் தாய்மாமன். எந்த சாக்கு சொல்லியும் கல்யாணம் நின்று போகக் கூடாது என்று ஜாக்கிரதை அவருக்கு. 

ஆனால் கர்ப்பூரமய்யன் தேளைப் பார்த்திருந்தான். அமைதியாக அவன் இருந்ததற்கும் கல்யாணம் சீராக நடக்க வேண்டியிருந்ததே காரணம்.

அன்று இரவு கபிக்கு வீட்டுவிலக்கு சீக்கிரமே வந்துவிட கர்ப்பூரய்யன் ரொம்ப சரி என்று கல்யாணத்துக்காக கோவில் மடைப்பள்ளியில் வாங்கிய அதிரசமும் முறுக்கும்  தேங்காய் பர்ஃபியும் மற்றபடி நைவேத்தியம் ஆன எண்ணெய் முழுக்காட்டிய தோசையும் புளியஞ்சாதமும் வாங்கி வந்ததைக் கிரமமாகச் சாப்பிட்டு விட்டு கட்டிலில் ஒருத்தரும் தரையில் மற்றொருவருமாக உறங்கப் போனார்கள். 

தரையிலிருந்து கட்டிலுக்கும் கட்டிலிலிருந்து தரைக்கும் தம்பதிகளாக வெறும் ஆலிங்கனத்தோடு இடம்மாற, ராத்திரி அந்தப்படிக்குப் போனது. பிரஷ்டையான ஸ்திரியும் அவள் புருஷனும் தீட்டு நீக்க நடுராத்திரி வெந்நீர் போட்டுக் குளித்து உறங்கப் போனார்கள்.

அந்த ராத்திரியில் படுக்கை அறைக்குச் செல்லும் ஒழுங்கையின் ஓட்டுக் கூரையில் இரண்டு தேள்கள் புருஷன் பெண்சாதி அவை அங்கே வந்து மழைச் சாரலுக்கு விலகி இருந்தன. கலவியிலும்   ஈடுபட்டன. கபிதாளின் கனவில் அவை வந்தன. கனவுத் தேள் நேரில் வருமா என்று கபிதாள் கர்ப்பூரமய்யனை அணைத்துக்கொண்டு கேட்டாள். வராது என்று சொன்ன கர்ப்பூரமய்யன் உறங்கவே இல்லை. 

ஈதிப்படி இருக்க ஒரு மாதம் சென்று கபிதாளுக்கு ஜுரம் பாதித்தது. உடம்பு சூடு மிக அதிகமாகி இன்னும் அது மேலே போகப் பார்த்துக் கொண்டிருந்தால், அந்த வெப்பத்தில் தேகம் பற்றித் தீப்பிடித்து சாம்பலாகி விடும் என்று பயம் எழுப்பும் விதத்தில் சுகக்கேடு முற்றி இருந்தது. 

அவள் கல்யாணம் செய்து கர்ப்பூரய்யனோடு தனிக்குடித்தனம் வைத்த பிறகு, தினசரி தலைக்குக் குளிர்ந் த நீர் விட்டுக்கொண்டு குளிக்கும் சீலத்தை புதிதாகக் கடைப்பிடித்ததால் ஜுரம் வரலாச்சு எனக் கருதினாள். அது இன்றைக்கு வரும், நாளைக்கு ஒன்றுமில்லாமல் போய்விடும் என்ற நம்பிக்கையோடும் தளர்வோடும் அன்றாடம் காரியங்களைக் கவனித்து வர, ஜன்னி கண்டது அவளுக்கு.

 கர்ப்பூரய்யன் ஆஸ்பத்திரிக்கு அவளைக் கூட்டிப் போக நிச்சயம் செய்தபோது ராத்திரி ஏழு மணி.  டாக்டரிடம் போகலாம் என்று முன்வாசல் கதவைத் திறக்க சொத்தென்று கதவு மேலிருந்து ஒரு கருந்தேள் விழுந்து அவன் பாதையை மறித்து ஓடியது. அவன் சத்தம் போடுவதற்குள் அது காணாமல் போனது. வீடு நிறையத் தேள் அடைந்திருக்கிறது என்று தோன்றியது. அல்லது கபிதாளுக்கு விருச்சிக  ராசியாக இருக்க வேண்டும்.

ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்தபோது டாக்டர் அங்கே இல்லை. அவர்  லட்சார்ச்சனை கோவிலில் நடக்கிறதாக சீக்கிரமே கிளம்பி விட்டார். 

டாக்டர் தினசரி சாயந்திரம் ஐந்தரை மணிக்கு அப்புறம் நோயாளிகளை சந்திப்பதில்லை. காலை ஏழு மணிக்குத் தொடங்கி நடுவில் மதியம் பத்து நிமிடம் சாப்பிட நேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து சுகவீனம் பார்த்து மருந்து எழுதித் தருவார். அல்லது அபூர்வமாக ஊசி போடுவார். டிரஸ்ஸரே கம்பவுண்டராக இருந்து சகல விதமான உதவியும் செய்வார்.

டாக்டர் இல்லை என்று தெரிந்த அய்யன் நேரே கோவிலுக்கே  ஸ்வாமி புறப்பாட்டு பல்லக்கில் கபிதாளைத் தூக்கிப் போய்விட்டான். வேண்டாம் வேண்டாம் என்று கபிதாள் வேண்ட, கோயில் வெளிப் பிரகாரத்தில் நட்சத்திரங்களைப் பார்த்தபடி காற்றடிக்கும் வெளியில் இருட்டில் கிடக்க அவளுக்குக் கிடைத்த அபூர்வமான சந்தர்ப்பம் அது. 

நல்ல வேளை குளித்திருந்தாள். இல்லாவிட்டாலும் சாமியார்களுக்கும் நோயாளிகளுக்கும் முழுச் சுத்தம் பாராட்டாமல் இருக்க யாரோ உலக அளவில் அனுமதி கொடுத்திருப்பதால் கவலை இல்லை.

 கர்ப்பகிரஹத்தில் கிழக்கு பார்த்து ஓரமாக வைத்திருந்த லிங்கோத்பவர் விக்ரஹத்தை வெளியில் இருந்து தாராளமாகப் பார்க்க வழி செய்து, ஒரு மரபெஞ்ச் மேலே பட்டு உத்தரீயம் விரித்து மேலே வைத்திருந்த ஏற்பாட்டைப் பார்த்து திருப்தி தெரிவித்துவிட்டு அன்னாபிஷேகம் நடத்தலாம் என்று அனுமதி கொடுத்தார் டாக்டர்.

 கோயில் பிரகாரத்திற்கு  யாரோ ஓடி வரப் பின்னால் கோவில் பல்லக்கில் யாரையோ கிடத்தி முன்னும் பின்னுமாக இரண்டு பேர் சுமந்து வேகவேகமாக நடந்து வர டாக்டர் கர்ப்பகிருஹத்தில் இருந்தே சத்தம் போட்டார் – யாரது கோவில் பிரகாரத்துலே பல்லக்கு ஏறியபடிக்கு? அன்னாபிஷேகம் நடக்கறது கண்ணுலே படலியா?

 கோவில் நாகசுவரக்காரர் தொடர்ந்து தேனுகா ராகத்தை சுவாரசியமாக ஆலாபனை செய்ய, சுடச்சுட வடித்த அரிசிச் சாதத்தை கொஞ்சம் போல் உஷ்ணம் குறைய வைத்து பட்டை பட்டையாக லிங்கோத்பவர் விக்ரகத்தை முழுக்காட்டுவதுபோல் சாதத்தை மேலே ஒட்ட வைத்து கீழே விழும் சாதத்தை வீணாக்காமல் பெரிய தாம்பாளம் வைத்து அதில் உதிர ஏற்பாடு செய்து அன்னாபிஷேகம் அமர்க்களமாக ஆரம்பித்திருந்தது.  

டாக்டர் இடுப்பில் பஞ்சகச்சம் உடுத்து மேலே இறுகக் கட்டிய உத்தரீயம் அதை நிலைநிறுத்தியிருக்க உத்தரீயத்தை அவிழ்த்து மார்பில் போர்த்தியபடி வெளியே வந்தார். 

அதற்குள் பல்லக்கை வெளிப் பிரகாரத்தில் இறக்கி வைத்தாகி விட்டது. ஏய் யாரது என்ன செய்கிறீர் என்று சத்தமிட்டுக் கொண்டே டாக்டர் முன்னால் போக, அவர் சத்தத்தை லட்சியம் செய்யாமல் கர்ப்பூர அய்யன் பல்லக்கைச் சற்றே கவிழ்த்து உள்ளே இருந்து கபிதாளைக் கைகளில் ஏந்திப்  பிரகாரக் கல் தரையில் வைத்தான். 

டாக்டர் அண்ணா காப்பாத்துங்கோ என்று அங்கே இருந்தபடிக்கே விழுந்து நமஸ்காரம் செய்தான். 

கர்ப்பூரம் என்னடா ஆச்சு அது யார் பல்லக்குலே? 

அவள்தான் அண்ணா. அகத்துக்காரி. ஜன்னி கண்டிருக்கு போலே. காப்பாத்தணும். 

அவன் விதிர்விதிர்த்துப் பேசினான். கோவில்லே வச்சு நான் எப்படிடா வைத்தியம் பார்க்கறது? குருக்கள் தர்மகர்த்தா பேஷ்கார்னு வந்து அவா அவா கண்டிப்பாளே. 

எல்லோருட்டையும் சொல்லியாச்சு. ஒரு நிமிஷம். 

அதற்குள் டாக்டர் பல்லக்கு பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்து திரை விலக்கி கபிதாளின் கையைப் பிடித்து நாடி பார்த்தார். கோவில் மடப்பள்ளியில் கேட்டு வெந்நீர் கொண்டுவரச் சொன்னார். அதைப் புகட்ட ஒரு வினாடி ஜுரம் மட்டுபட்டு ஜிவ்வென்று மறுபடி ஏறியது. அவர் கண்களோ மிரட்சியைக் காட்ட முணுமுணுத்தார் டாக்டர். 

ஆஸ்பத்திரிக்கு எடுத்துண்டு ஓடினாலும் பிரயோஜனமில்லை. போயிண்டிருக்கற உயிரில்லே பாவம் என்று கர்ப்பூரத்திடம் தாழ்ந்த குரலில் சொல்ல கோவில் என்பதால் அழாமல் விம்மினான் அவன். 

அய்யா நான் பாக்கலாமா என்று மருத்துவர் நீலர் முன்னால் வந்தார். அவர் யார் எவர் என்றெல்லாம் தெரியாவிட்டாலும் உதவிக்கரம் நீட்டியதைப் புறக்கணிக்க டாக்டருக்கு மனம் வரவில்லை.   

அடுத்த நிமிடம் நீலன் வைத்தியரின் ஆயிரத்தெண்ணூறு வருடம் முற்பட்ட சங்ககால மருத்துவம் அந்த ராத்திரி   கபிதாம்பாள் என்ற அந்தணப் பெண்மேல் வெற்றிகரமாகப் பிரயோகம் ஆனது. 

உடல் வெப்பம் தான் இன்னும் தணியவில்லை. குயிலி, குறிஞ்சித் திணை பார்க்கக் கிளம்பியபோது மலைமுது கிழவன் அளித்த வேல் துடைத்த இலைகளின் சருகை கபிதாள் மேலே வைத்தாள். கர்ப்பூரய்யன் வீட்டுச் சமையலறையில் வெந்நீர் சுட வைத்து, நீலன் தோளில் மாட்டியிருந்த துணிப்பை உள்ளே இருந்து மூலிகைப்பொடி எடுத்து அதை கபிதாள் வென்னீரோடு விழுங்க வைத்தனர் குயிலியும், வானம்பாடியும். இரண்டு மணி நேரத்தில் உடல் வெப்பம் கபிதாளுக்குச் சீரானது. 

கர்ப்பூர அய்யன் கோவில் வெளிப் பிரகாரத்திலேயே துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு நீலன் மருத்துவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். 

வைத்தியர் அய்யா, நீங்கள் இப்படி பயங்கரமான யுத்தகால ராத்திரியில் என் பொருட்டுக் கிளம்பி வந்தீரே கூடவே உம் புத்திசாலியரான பேத்தியரும் மருந்து கலக்க உடனுக்குடன் ஒத்தாசை செய்ததும் கரம் கூப்பி வணங்க வேண்டிய காரியம். உமக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்றபடி தரையில் கிடத்தி இருந்த கபிதாளைப் பார்த்தபடி நன்றி நன்றி என்று பித்துப் பிடித்தவன் போல் வணங்கி வணங்கி எழுந்தான். 

நீலன் மருத்துவர் சொன்னது – ”கைமாறெல்லாம் வேண்டாம், உங்கள் மனையாட்டியை பல்லக்கிலேயே வீட்டுக்குக் கொண்டு செல்க. அவள் கொஞ்சம் உறங்கட்டும். மற்றபடி உம்மால் முடியுமென்றால் ஓராழாக்கு அரிசியும், கொஞ்சம் உப்பு புளி, மிளகரைக்க அம்மியும் தாரும். நாங்கள் பயன்படுத்தி விட்டு சுத்தம் செய்து திரும்பக் கொடுத்து விடுகிறோம்”. 

குயிலியும் வானம்பாடியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்கக் கூறியதாவது-  வண்டியில் இருக்கும் என் துணிப்பையில் கபில பிரான் எழுதிய அற்புதமான குறிஞ்சிக் கலி பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகள் உண்டு. அவற்றில் திளைக்குக. வயிற்றுக்கு ஈயப்படும்வரை செவிக்கும் இதயத்துக்கும் இன்பம் தரும். போய் மாந்தியிரும் சிறுமீர்காள்! இப்படி அவர் சொல்லி அனுப்பினார்.

கிழக்கு பார்த்து அடுப்பை வைக்காமல் மேற்கு நோக்கி அமைத்துள்ளீரே. உம் மனைவியைப் பிடித்து வாட்டும் ரோகத்துக்கு அதுவே காரணம் என்றபடி பெரிய கும்முட்டி அடுப்பு இரண்டையும் கிழக்கு நோக்கித் திருப்பினார். 

என்ன பார்க்கிறீர், எப்படி கிழக்கு மேற்கு தெரியும் என்றா? சிரித்தபடி சொன்னார் என் உடலே என்றும் வடக்கு நோக்கி நிலைகொண்டது என்றபடி சரியாகக் கிழக்குப் பார்த்து அடுப்புகளை நகர்த்தினார். 

அந்த ஈர்க்குச்சி உடம்பில் இருந்த அசாத்திய பலம் சொல்ல ஒண்ணாது என்று கண்ட கர்ப்பூர அய்யன்  ஆச்சரியத்தோடு பார்க்கத் தொடங்கினான். அதோடு நிறுத்தாமல் அரிசியைக் களைந்து உலையேற்றி, புளிக்குழம்பைக் காய்ச்சி இறக்கி, கத்தரிக்காயைச் சுட்டுத் துவையல் அரைத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் பம்பரமாகச் செயல்பட்டு சமையலை முடித்தார். 

ஏழை மருத்துவன் அளிக்கும் விருந்துக்கு வாரீர் என்று சத்தம் கூட்டி குயிலியையும் வானம்பாடியையும் அழைத்தார். உமக்கும் சேர்த்துத்தான் பொங்கியது வந்து அமரும் என்று கர்ப்பூரய்யனையும் விளிக்க அவன் மகிழ்ச்சியோடு வந்தமர்ந்தான். 

நீர் சமணரா எனக் கேட்டார் நீலன் மருத்துவர் கர்ப்பூரய்யனை.   நான் தினம் காலை மாலை சந்தியாவந்தனமும் பகலில் மாத்தியானமும் செய்கிறவன், வாரம் ஒரு முறை ஞாயிறன்று சாளிக்கிராமங்களை வைத்து பூசை செய்து அவற்றுள் பசுவின் பால் ஊற்றிச் சுழலச் செய்து வழிபடுபவன். 

அப்போது நீர் சமணரில்லை, சைவர் என்று கர்ப்பூரய்யனை நோக்கிக் கூறினார் மருத்துவர். உதிரி உதிரியாக மல்லிகைப் பூ போல் வெண்மையாகச் சோறும் குழம்பும் சுட்ட கத்தரிக்காய்த் துவையலும் உண்டு இருக்க, ஒழுங்கை ஓட்டுக்கூரையில் இருந்து இரு செந்தேளும் ஜாக்கிரதையாகத் தரையில் நகர்ந்து பல்லக்கில் ஏறின. 

ஓய்வும் மயக்கமுமாகக் கிடந்த கபிதாளின் கைப்பத்தைக்கு அருகே பல்லக்கின் ஒரு இருண்ட மூலையில் அவை கிடக்க அங்கே சங்கடமான அமைதி நிலவியது,

காலக் கோட்டைச் சற்றே மாறுவதாக இந்த நிகழ்வுகள் இருந்தன. எனவே அவற்றை நீக்கி விடலாம்.

குயிலி வானம்பாடியிடம் சொல்ல வானம்பாடி மறுமொழி இறுத்தது – நாம் நம்மைப் பற்றி இவர்களிடம் அளித்த அடையாளங்கள் அப்படியே இருக்கட்டும். காலப் படகு பழுது திருத்திப் புறப்படும் வரை இங்கே இருக்கப் போவதால் இது தேவைப்படலாம். எனில், மரணத்தைத் தடுத்து ஜன்னி குணமடைய வைத்தியம் பார்த்தது காலக்கோட்டைப் பெரிதாகப் பாதிக்கும் நிகழ்வு. அதை சரியாக்க வேண்டும். மற்றபடி நாம் பங்குபெற்ற இந்த இரவின் நிகழ்வுகளை, நீலன் வைத்தியரில் தொடங்கி, கபிதாள் வரை அவரவர் நினைவிலிருந்து அழித்து விடலாம் 

அப்படியே செய்யலாம் அழகுப் பெண்ணே என்று கால நுண்ணதிர்வுகளை ஐந்து வினாடி அதிகமாக்கினாள் குயிலி. அப்புறம் நீலன் வைத்தியரும் குயிலியும் கபிதாளுக்கு அளித்த வைத்தியம் பற்றி அவர்கள் யாருமே பேசவில்லை.

சிறிது நேரத்தில் அங்கே குயிலியும், வானம்பாடியும், நீலன் வைத்தியரும் அவர்கள் பற்றிய நினைவுகளும் இல்லாது போயாச்சு.

தொடரும்  

Series Navigationமாணவர் சேர்க்கையும் பேராசிரியர்கள் நிலையும்உள்மன ஆழம் 
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *