கு. அழகர்சாமி
நீர் மலி
தடாகத்தில்
ஆம்பல்
இதழவிழ்ந்து
மலர்ந்ததாய்
அந்தியில்
இசை அலர்ந்து
அறைக்குள்-
அறை நடுவில்
ஏற்றி வைக்கப்பட்ட
மெழுகுவர்த்தியின்
ஒளி மேனி
சுடர்கிறது மெல்ல
ஒளி
இருளை
வாய் மெல்ல-
மின்விசிறியின்
மென்காற்றின் உதடுகள்
முத்தமிட
ஆடும் சுடரோடு
ஆடும் படமெடுத்து
இசைப்போரின்
அரவு நிழல்கள்-
நிழல்கள்
ஒன்றையொன்று
நெட்டித் தள்ள
எது
எவரின் நிழல்?
எது
எவரின் நிழலில்லை?
எது
எவரின்
நிழலில்லாத நிழல்?
சுழலும்
மின்விசிறிக் காற்றில்
சுழலும் நிழல்களில்
சுழலும்
மாயக் கண்ணாடியாகிறது
மிதந்து இசையில்
நெகிழும் அறை.
மாயை நிழல்
மாயங்களை
ஊடுருவுகிறது
மெழுகுவர்த்தி
நெற்றிச் சுடரின்
ஒற்றைவிழி.
மருங்கு நட்டு வைத்த
மணக்குமோர் ரோஜா
முழுநிலவாய்
முறுவலிக்கிறது.
அதன் முறுவலை
இழை பிரித்து
மெழுகுவர்த்தி
சேர்த்து தன் ஒளியில்
சுடர்கிறது மேலும்.
தூரதூர வலசைப் பறவைகள்
ஏரியில் கலகலவெனக்
கூடி ஒலிப்பது போல்
கூட்டிசைக்கின்றனர் யாவரும்.
பாட்டிசை பல்கி
காற்றுப் புரவியேறிப்
பயணிக்கிறது
பிரபஞ்ச வெளியில்.
அறைக்குள்
யாரும் யாருமாயில்லை-
இருப்பு ஒன்றாய்
உயிர்ப்பு ஒன்றாய்-
மேல் விதானத்தில்
மீட்டுகிறது கீச்கீச்சென்று
சாம்பல் பல்லியொன்று.
சுருதி சேர்கிறது
சூழும் இசையோடு அது.
உன்மத்தமாகி
மெழுகுவர்த்தியின்
உயிர் சுடர்கிறது
வெண்மேனி உருக
நிலைபேறின்மையே
நிலைபேறாய்-
நிலைமை தவறிய
நிழல்கள்
அறை விதானம் அவாவி
ஆவி வெளவால்கள்களாய்
தொங்குகின்றன.
மரண விழுதுகளாய்த்
தோற்றுகின்றன.
ஒரே மாய
நிழற்கூத்து
மஞ்சள் நிறம் மணக்கும்
மெழுகுவர்த்திச் சுடர்மேனி
ஒற்றைக்காலில்
நடனமிட-
நிழல்களின் சாயை
சுடரின்
ஆடை உடுத்தி
மயக்குகிறது.
இருள் யாழினை
மீட்டும் மின்னலாய்
நீட்டிக்
குரலெடுக்கிறாள்
நீலிக்குயிலி.
அணங்கு
தொடுத்த இசை
தொடுத்து
செவி நுகரும்
இசையோவியம்
ஏற்ற இறக்கங்களில்
திரள்கிறது.
இசையின் சுதி
தொடுகிறது
இதயத்தின்
இமய உச்சம்.
ஒளியும் இருளும்
இனி இரண்டல்ல.
நெருப்புப் பூவாகிறாள்
பாட்டுக் குயிலி
சுயத்தின் நிழலின்றி.
நெருப்பின் இதழ்களாய்ப்
பூவிரியப் பார்க்கின்றன
ஆசை நிழல்கள்-
நெருப்பின் நாக்குகளாய்த்
துழாவுகின்றன
அகங் கறுத்த
சுவர்கள் மீது-
கதி தேடிக்
காகங்களினின்று பிய்ந்த
சிறகுகளாய் அலைகின்றன-
காற்றில் கரிந்த
காகிதங்களாய்த் திரிகின்றன-
சுடரைச் சுற்றி
அரூபக் கூளிகளாய்க்
குதிக்கின்றன-
குதிக்கின்றன
நெருப்புப் பூவுக்குள்
மோக நிழல் வண்டுகள்.
நெருப்புக்குள்
நிழற் குளிர்ச்சி.
நிழலுக்குள்
நெருப்பின் தகிப்பு.
மோகத்தில்
மோனம்.
மோனத்தில்
மோகம்.
ஒளிக்குள்
இருள்.
இருளுக்குள்
ஒளி.
ஒளியும் இருளும்
இனி பிரிந்தல்ல.
இணைப் பாம்புகள்
பின்னிப் பிணைந்து
புல்லுதல் போல்
ஒளியும் இருளும்
ஒன்றுகூடும் புள்ளியில்-
புவி ஈர்ப்பு கடந்த
ஒரு விகசிப்பு-
சுத்த வெளியா?
சூன்யமா?
சாந்தி
சாந்தி
சாந்தி
கு. அழகர்சாமி