நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தொன்று

This entry is part 13 of 13 in the series 2 ஜூலை 2023

   நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தொன்று

காலப்படகு காலத்தில் முன்னும் பின்னும் பத்து நாள் போகுமளவு பழுது திருத்தியிருந்தது. முழுக்க முன்னே, பின்னே நூற்றாண்டுகள் போய்வர இன்னும் நிறையச் செய்ய வேண்டியது உண்டு.

வேறு கால ஓடத்தை அனுப்பி வைத்து நம்மை இந்த இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து மீட்டுப் போனால் என்ன? வானம்பாடி குயிலியைக் கேட்டாள். செய்யலாம் தான். ஆனால் வருஷம் – மாதம் – வாரம் –நாள் –மணி-நிமிடம் – நொடி- இடம் என்று அத்தனையும் துல்லியமாக நம்முடையதாக இருக்க வேண்டும். கொஞ்சம் முன்னால் பின்னால் இருந்தால் நம் பிரதிகள் உருவாகி விடுவார்கள். 

நீலன் வைத்தியருக்கு இதொன்றும் புரியவில்லை. வீடு போய்ச் சேர இன்னும் நேரம் பிடிக்கும் என்பது மட்டும் புரிந்தது.

நான்கு பரிமாண வெளியில் நான்கையும் தற்காலிகமாகக்   கூறுகளைச் சற்றே திருத்தி குயிலியும், வானம்பாடியும், நீலன் வைத்தியரும் கர்ப்பூரமய்யன் இல்லத்தில் நிகழ்வதை எல்லாம் அவனுடைய மற்றும் கபிதாளின், மற்றும் வேறு யாருடைய பார்வையிலும் படாமல், சத்தம் கேட்காமல் கவனித்தபடி இருக்கிறார்கள்.  காலப்படகும் அதேபடி தான். இருப்பது தெரிவதில்லை. சத்தம் கேட்பதில்லை. பிரபஞ்சத்துக்குள் ஒரு சிறு பிரபஞ்ச வெளி அது.

கபிதாளின், மற்றும் கர்ப்பூரமய்யனின் அந்தரங்க வாழ்வில் இது ஓரளவு குறுக்கீடுதான். எனினும் நிர்ணயிக்கப்பட்ட சமூக அத்துகளைக் கடந்து இந்த ‘அடுத்தவர்கள் வீட்டில் எட்டிப் பார்ப்பது’ நடக்காது. படுக்கை அறை, கழிவறை ஆகிய பிரதேசங்களில் இந்தக் காட்சியமைப்பு செயல்படாது.

கர்ப்பூரமய்யன் கபிதாளைச் சமையல்கட்டில் ஆலிங்கனம் செய்ய முற்பட்டாலோ? வானம்பாடி குயிலியின் காதில் கிசுகிசுத்தாள். அப்போது நாம் தான் அந்தக் காட்சியை மேலும் காணாமல் வெளிவரணும். குயிலி அவள் காதைத் திருகியபடி சொன்னாள்.

பல்லக்கு கர்ப்பூரமய்யன் வீட்டுக் கூடத்தில் இறக்கி வைத்திருப்பது பார்க்க ஒரு மாதிரி இருந்தது நீலன் மருத்துவருக்கு.  

அய்யன் மனைவியைப் படுக்கையில் விட்டுப் பல்லக்கை வெளியே வைத்துவிடலாமே என்று குயிலியைக் கேட்டார் அவர். 

 குயிலி பல்லக்குப் பக்கம் போய் கபிதாள் உறக்கம் தீர்ந்திருக்கிறாளா என்று  பார்க்க முற்பட்டபோது உள்ளே அ-மனிதர் பேசும் ஒலி கேட்டு ஒரு வினாடி நின்றாள். இது அவளுக்குப் பழக்கமான ஒலி.  அதிகாரம் செய்தும், அன்பு காட்டுவதாக அபிநயித்தும், கோகர் மலையிலும் மலை சார்ந்த மண்ணிலும் நீரிலும் ஆட்சி செய்யும் செந்தேள் வர்க்கத்தின் மொழி. 

மனித மொழி போல்தான் அந்த மொழியும்.  முப்பது நூற்றாண்டு முன் இருந்தது போல் அது இப்போது இல்லை. Electric oven, loft, cerebral venom என்றெல்லாம் மனித மொழியைப் பகர்த்தெடுத்து தேள்  மொழியாகியபோது புதுச் சொல்லாடல்கள் தேள்பேச்சில் புகுந்தன.

 அவை ஒரு சில இருக்க, கூடவே எம்டன், ரிக்கார்ட் போன்ற சொற்கள் இந்தப் பல்லக்குத் தேள்களின் மொழியில் புகுந்துள்ளதையும் கவனித்தாள் குயிலி. உள்ளே எத்தனை பேர் உண்டு என்று முணுமுணுப்பாகத் தேள்மொழியில் அவள் கேட்க உள்ளே தேள்பேச்சு நின்று போனது.  

ஒரு மனுஷப் பெண் தங்கள் மொழியில் பேசுவது கேட்டு திகைப்பும் பயமும் தோன்ற ஜோடித் தேள்கள் அசையாமல் நின்றன. சிறிய செந்தேள்கள். இப்போதைய தேளரசு தேள்கள் இவை போல் ஐநூறு சதவிகிதம் பெரியவை. சிறிய என்றாலும் பயமும், பணிவும் கண்களில் காட்டி அவை நின்றன. 

அந்த மனுஷப் பெண்ணுக்கு உபத்திரவம் இல்லாமல் வெளியே வாருங்கள்  எனக் கட்டளையிட்டாள் குயிலி. பெண்டாட்டி தேள் கொடுக்கை மரியாதையோடு ஆட்டி வெளியே வந்தது. பின்னாலேயே ஆண் தேள். 

குயிலி பல்லக்கு உள்ளே எட்டிப் பார்த்தாள். அங்கே கபிதாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.   நேரம் காட்டும் வீட்டுக் கடிகாரம் பனிரெண்டு முறை அடித்து ஓய்ந்தது,   குயிலிக்கு இந்த சூழல் அபத்தமாகத் தோன்றியது. வெவ்வேறு காலங்களைச் சேர்ந்த மனுஷர்களும், தேள்களும் நாடகம் நிகழ்த்துவதுபோல்    கூடும் இரவு.. குயிலி வேறே தேள் வர்க்கத்தவர்  பல்லக்கின் உள்ளே உண்டா என்று கேட்க இரண்டு தேள்களும் பதட்டத்தோடு இல்லை என்றன. 

எனில் நீவிர் இருக்கும் வளை எங்குள்ளதோ? 

ஒழுங்கையின் ஓட்டுக்கூரைக்கு உள்ளே, சகோதரி என்றது நடுங்கியபடி ஆண் தேள். வலிந்து உறவு சொல்லி விளித்தல் தவிர்க்கவும் என்று புன்னகையோடு கூறினாள் குயிலி. அவள் திரும்பும்போது இரண்டு தேள்களும் ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கு நிமிர்த்தாமல்  நிற்பதை ஓரக்கண்ணால் கண்டு புன்னகை புரிந்தாள்.  

என்ன நான் சொன்னது புரிந்ததா? அமைதியான குரலில் குயிலி கேட்டாள். அவை நடுநடுங்கி புரிந்தது என்றன. தேளரசர் வாழ்க என்றும் இன்னும் பலதுமாகக் கோஷம் எழுப்பாமல் கூ கூ என்று மட்டும் பயப்பட்டு ஒலி எழுப்பி அவை போமிடம் சென்றடைந்தன. 

தேளரசு, பெருந்தேளன் என்றெல்லாம் இந்த இழிபிறவிகளை மரியாதையோடு விளித்து, அவற்றின் சொற்படி ஆடும் ஆட்டம் அலுத்துப் போனது. ஒரு மாறுதலுக்கு, தேள்கள் எமக்கு அஞ்சட்டும். ஆரம்பத்திலிருந்து அப்படித்தானே இருந்தது? 

காலம் ஒரு மாதம் முன்னால் போகிறது. வீடும் வெளியும். மனுஷர்களும் தேள்களும் காலப் பிரவாகத்தில் முன் போகிறார்கள். கபிதாள் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் திரும்ப, வீடு சுத்தமாக்குதல், சமையல், துணி துவைத்தல் என்று மும்முரமாக இருக்கிறாள். கண் மூடி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று நாமம் ஜபிக்கிறாள். 

கிருஷ்ண ஜெயந்தி மாலை நேரம் அது. வெல்லச் சீடைகளும் உப்புச் சீடைகளும் பொரித்தெடுத்து பசு வெண்ணெயோடு கிருஷ்ண விக்ரகத்துக்குப் படைத்து தீப ஆராதனை செய்கிறாள் கபிதாள். அவள் மடியை இறுக்கிச் சார்ந்த மடிசாராக உடுத்தியிருந்தது ஒன்பது முழச் சீனப்பட்டு சேலை.   

இரண்டு சிறு தேள்கள் அசைவின்றி கொசுவம் தழையும் சேலை மடிப்புகள் ஊடே அமர்ந்து சுவாரசியமாக அந்த நைவேத்தியத்தைப் பார்த்தபடி இருக்கின்றன. அவற்றுக்கும் கிருஷ்ணன் தான் தெய்வம் என்று தேள்மொழி சொல்கிறது. 

அந்தத் தேள்கள் மணிச் சத்தம் கேட்டு அரண்டு சுவரில் பாய்ந்து ஏறி ஒழுங்கைக்கு ஓடிய பிறகுதான் கண் மூடி நாம ஜபத்தில் ஈடுபட்டிருந்த கபிதாள் கண் திறந்து பார்த்தாள். சுவர் ஓரமாக இரண்டு சிறு ஜந்துகள் ஓடுவது ஒரு வினாடி காட்சியாகத் தெரிந்தது. 

எலியோ? கபிதாளுக்கு சந்தேகம். எலி வந்தால் சகலமானதையும் சிதைத்துவிடும், தேங்காய் மூடியைப் பல்லால் துருவப் பார்த்தால் எலியின் குணாதிசயம் என்று எடுத்துக் கொண்டு தேங்காய் மூடியை எலி  வாயில் வைக்க முடியாத அலமாரிக்குள் வைத்து விடலாம். ஊரிலிருந்து கொண்டுவந்த கொப்பரைத் தேங்காயைத் துருவப் பார்த்தால்? 

கபிதாளுக்குச் சிரிப்பு வந்தது. நாய் உருட்டிய தெங்கம்பழம் என்று அவள் பிறந்த ஊரான திருமாந்தாங்குன்றில் சொல்லும் வழக்கம். அது நாயை விட எலிக்கு இன்னும் பொருத்தமானது.

 அலமாரிக்கு சீடைகள் இடம் மாறின, பாயசத்தையும் பாத்திரத்தோடு உள்ளே வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அடி வயிறு வலிக்க ஆரம்பித்தது. சுவரைப் பிடித்துக்கொண்டு தரையோடு சாய்ந்து அமர்ந்த போது பின்னால் எலி வந்த மாதிரி சத்தம். 

சாடி எழுந்து பின்கட்டில் இருந்து பூந்துடைப்பத்தை எடுத்து அது வேண்டாம் என்று வைத்து தென்னந்துடைப்பத்தை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். சீடைத் தட்டுக்கு வெகு அருகே இரண்டு சிறு பூச்சிகள் ஓடியது கண்டு துடைப்பத்தை வீசி அவற்றை அடித்துத் தள்ளக் கை துருதுருத்தது. 

சாமி பூஜை அலமாரிக்குக் கீழே இப்படி வதம் எல்லாம் செய்யக்கூடாது என்று மனதில் பட விளக்குமாறை அந்தாண்டை போட்டு விட்டு வந்தாள். பக்கத்தில் வந்தபோதுதான் அந்த ரெண்டும் தேள் குஞ்சுகள் என்று புரிந்தது. 

விளக்குமாறை எடுத்து ஓங்கினாலும் அதை இறக்கி அந்தத் தேள்குழந்தைகளைக் கொல்ல மனம் வரவில்லை. வயிறு வேறே மறுபடி வலிக்க ஆரம்பித்தது. அவள் பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்தத் தேள் குஞ்சுகள் சுவரில் தாவி ஏறி ஓட்டுக் கூரைக்குள் மறைந்தது தெரிந்தது. 

விஞ்சியூர் கோவிலில் சங்காபிஷேகம் என்று போயிருந்த கர்ப்பூர அய்யன் ராத்திரி வரும்போதே டிரஸ்ஸரோடு வந்தான். டிரஸ்ஸர் குழாய் மாட்டிக்கொண்டு கபிதாளை நாடி மட்டும் பரிசோதித்து விட்டு, நான் சொல்வதை விட டாக்டர் அல்லது மருத்துவச்சி சொல்லட்டும் என்று புன்னகையோடு அறிவித்துப் போனான். 

மருத்துவச்சியை ட்ரஸ்ஸர் வீடு திரும்பும்போது வழியில் வைத்துக் கண்டு கர்ப்பூர அய்யன் வீட்டுக்குப் போகச் சொல்லிப் போனான். அவளும் போய் கபியின் நாடியும் மற்றதும் சோதித்துப் பார்த்து விட்டு அவள் மூன்று மாத கர்ப்பிணி என்று அறிவித்தாள். 

கபிதாளுக்கு எப்படியான குழந்தை வேண்டும் என்று ராத்திரி ஏகாந்தத்தில் கர்ப்பூர அய்யன் கேட்டபோது எதோ நினைவில் தேள் குஞ்சென்றாள் அவள். 

குயிலி காலத்தைச் சற்றே முன்னால் போகச் சொன்னாள். பொறுமை காக்கவும். பெரிய பழுது என்பதால் இன்னும் காலம் எடுக்கும். அதுவரை இந்த இருபதாம் நூற்றாண்டுத் துவக்கத்திலேயே ஜாக்கிரதையாகக் கலந்து பழகி இருக்க வேணும்.

பெருந்தேளர் உருவம் காலப்படகுச் சுவரில் தட்டுப்பட்டுப் போனது.  வீடும் கதவும் சுவரும் கபிதாளும் கண்ணன் விக்ரகமும் நிலச் சரிவு போல் மெல்ல அதிர்ந்து நிலைகொண்டன.

காலம் ஒரு மாதம் முன்னால் போனதாக சுவர் அறிவிப்பு வந்து போனது.

 காலை நேரம். பட்டணம் என்று அழைக்கப்பட்ட மதராஸ் மாநகரில், மதறாஸ் என்றும் சென்னை என்றும் குறிப்பிடப்படும் சென்னைப் பட்டணத்தில் பொழுது விடிந்திருக்கிறது. நகரத்துக்கு அணி செய்யும் மணல் நிரம்பிய அழகான கடற்கரையில் கடலுக்குப் போய் மீன் பிடித்த படகுகள் திரும்பி வந்திருக்க விற்பவர்களும் வாங்குகிறவர்களுமாக உற்சாகமான இரைச்சல். திருவல்லிக்கேணியின் குறுகலான தெருக்களில் பசுவையும் வைக்கோல் கன்றையும் கொண்டு வந்து பால் கறந்து விற்கிறவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. 

அப்போது ஓர் இளம்பெண் கர்ப்பூர அய்யன் வீட்டு வாசலில் அடைத்த கதவுகள் திறக்கத் தட்டி விட்டு நின்று கொண்டிருந்தாள். கையில் ஒரு சிறு ட்ரங்க் பெட்டியும் கையில் தண்ணீர் கூஜாவுமாக நிற்கிற அந்தப் பெண்ணைக் காலை உலா நடத்திச் சேரிடம் ஏகும் செந்தேள்கள் அவள் கண்ணில் படாத ஓரத்தில் நின்று நோட்டமிடுகின்றன, 

திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருவல்லிக்கேணி வந்தபோது ஒரு சிறு குடும்பமாக அவையும் கள்ளியம்பெட்டிக்குள் மறைந்திருந்து பயணம் செய்து இந்தத் திருவல்லிக்கேணி வீட்டுக்கும் வந்துவிட்டன. 

அந்தப் பெண் களைப்பும் பசியுமாக நிற்கிறாள் என்று ஆண் தேள் சொல்கிறது. கபிதாளுக்கு வேண்டியவளா என்று ஆண் தேள் பெண் தேளைக் கேட்க, தெரியாது என பதில் சொன்ன பெண் கர்ப்பூர அய்யனை வீட்டு வாசலுக்குக் கொண்டு வராவிட்டால் இவள் நின்று கொண்டே இருக்க, அவன் வீட்டுக்கு உள்ளே, நீண்டு போகும் காலை நேர பூஜை செய்து கொண்டிருப்பான். 

ஆண் தேள் சற்று உயரமாகச் சுவரில் ஏறித் தரையில் வைத்திருந்த கோலப்பொடிப் பாத்திரத்தில் விழுந்து ஓட அந்தச் சத்தத்தில் கபிதாள் சமையல்கட்டிலிருந்து கையில் கரண்டியோடு வெளியே வருகிறாள். 

கதவு தொடர்ந்து தட்டப்பட அவள் கரண்டியை இடுப்பில் செருகிக் கொண்டு கதவைத் திறக்கிறாள்.   வெளியில் நிற்கும் பெண்ணிடம் யாரைப் பார்க்கணும் என்று கபிதாள் கேட்கிறாள்.

 சாரை பார்க்கணும் அக்கா. 

அவள் அக்கா என்று சொன்னது பிடித்திருந்தாலும் விடிந்து ஒரு பொழுது ஆகும் நேரத்தில் தெருவோடு போகிற யாரோ அக்கா என்று விளித்தால் ஜாக்கிரதை கைக்கொள்ள வேண்டும் என்று கபிதாளுக்குத் தோன்றுகிறது. 

சார் அவரைத்தான் பார்க்கணும் என்று தவித்துத் தண்ணீர் குடிக்கிற அவஸ்தையோடு அந்தப் பெண் மறுபடி சொல்கிறாள். 

ஏம்மா யார் நீ? சாரைப் பார்க்கணும் மோரைப் பார்க்கணும்னு ஏதோ சொல்றே. எந்த சார் எங்கே இருந்து நீ வரே? 

அவள் பெயர் சொல்வாள். பக்கத்து வீட்டு ராமானுஜ ஐயங்கார், எதிர் வீட்டு அர்ச்சகர், அப்புறம் இருக்கப்பட்ட சார்களை கபிதாளுக்கும் தெரியாது. அக்கம் பக்க அய்யங்கார்களின் பெண்டாட்டி, அம்மா, அக்கா, தங்கை, மகள் என்று மதியம் பெண்ணரசிகள் தெரு வம்பு ஊர் வம்பு என்று கூடிப் பேசுவதால் கபிதாள்  அவர்களை அறிவாள். அந்த அய்யங்கார் சுவாமிகளில் ஒருத்தர் பெயரை முழுங்காமல் சொல்லி அந்தப் பெண் நிற்பாள். பகல் வம்புக்கு அவல் கிடைத்த சந்தோஷத்தோடு அவளை அய்யங்கார் வீட்டைக் காட்டி அனுப்ப வேண்டியதுதான்.

 சொல்லும்மா யாரை பார்க்கணும். 

எனக்கு எனக்கு கல்ப்பூரய்யர்வாளைப் பார்க்கணும்.

 அவள் கபிதாவுக்கு நாடி நரம்பெல்லாம் துடிக்க அந்தப் பெயரைச் சொன்னாள். கல்ப்பூரய்யரை பாக்கணுமாமே சிறுக்கிக்கு. 

இந்த வீடு தானே? 

கேட்டபடி அவள் கதவை முழங்காலால் தள்ளித் திறந்து கொண்டு ஒரு கையில் பெட்டியும் மற்றதில் கூஜாவுமாக உள்ளே வந்துவிட்டாள். 

ஏய் நான் கேட்டுண்டே இருக்கேன் நீ பாட்டுக்கு உள்ளே நுழைஞ்சா என்ன அர்த்தம்? திறந்த வீடு இல்லை இது. நீயும் நானும் மனுஷா தான், கேட்டியா? 

ஓ கேட்டேன் என்றபடி ஹாலில் நுழையாமல் நின்றாள். அந்த சத்தம் கேட்டு பூஜையை அவசரமாக முடித்த கர்ப்பூரய்யன் கையில் எதற்காகவோ உத்திருணியில் நாலு சொட்டு அர்ச்சனை ஜலத்தோடு வாசலுக்கு வந்தான். 

அவனைப் பார்த்ததும் என் ஐயனே என்று சத்தமாக விளித்துக் கைநழுவ, கூஜா தரையில் உருண்டு மூடி கழன்று தண்ணீர் சால் கட்டி ஓடியது. ட்ரங்குப் பெட்டியும் கீழே தடாலென்று விழுந்து தாழ்ப்பாள் திறந்து இரண்டு சாதா ரக தேவேந்திரா புடவைகளும் ஜம்பர்களுமாக ஈரத்தில் கிடந்தன. 

அவளோ இதை எதுவும் லட்சியம் செய்யாமல் குனிந்து கர்ப்பூரமய்யர் பாதம் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டாள். பிரமித்துப் போய் கபிதாள் இதெல்லாம் நடக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

அவளது பிரமிப்பு பயமாக மாற, கர்ப்பூரய்யன் குனிந்து அந்தப் பெண்ணை எழுப்ப அவள் சட்டென்று அவன் மார்பில் தலை சாய்த்து கரங்களால் இறுகக் கட்டிக்கொண்டு ஐயனே ஐயனே என்று அழத் தொடங்கினாள்.

இவ யாரு? சொல்லுங்கோ, யாரு இந்தப் பொண்ணு? தேவிடிச்சி தொடுப்பெல்லாம் உண்டா உங்களுக்கு என்று கிரீச்சிட்டாள் கபிதாள். 

கர்ப்பூரய்யன் வந்த பெண்ணைப் பிரித்து விட்டு கபிதாவிடம் ஓடிப் போய் உதட்டில் விரல் வைத்து ரகசியம் பேசும் குரலில் சொன்னது – அக்கம்பக்கத்திலே இங்கே எல்லோருக்கும் பாம்புச்செவி. உள்ளே வா.   

இழுத்து ஹாலுக்குள் அவளைச் செலுத்தியபடி, வந்த பெண்ணையும் கைபிடித்து உள்ளே கூட்டிப் போனான். ஹாலுக்குத் திறக்கும் வேலைப்பாடமைந்த பெரிய கதவை அடைத்தான்.

ஏகமான தைரியத்தோடு. கபிதாள் அவனை முறைத்துப் பார்த்து விட்டு இவள் யார்னு சொல்லுங்கோ முதல்லே என்றாள். இவள் தான் பூரணி என்று ஏதோ பெரிய ரகசியத்தைக் கோபுரத்தில் ஏறிநின்று சொல்கிறது போல் சொன்னான். கூடவே சிரிப்பு வேறே. 

அவ பூரானோ தேளோ உங்களோடு என்ன தொடர்பு? இங்கே எதுக்கு வந்திருக்கா?

கபிதாள் விடாமல் அவர் வார்த்தை ஜாலத்தை எல்லாம் கடப்பாரையாக விழுங்கி, ஜீரணமாகச் சுக்குக் காப்பி சாப்பிடும் தெளிவும் தீர்மானமுமாக இருந்தாள். 

குயிலி கால நகர்வை நூறாண்டு இல்லாமல் பத்து இருபது வருடம் முன்னாலோ பின்னாலோ போக வழிசெய்யும் சாதனத்தை இயக்க, அது சீராக இயங்கியது அதிசயம்தான் என்றாள் அருகே இருந்து பார்த்த வானம்பாடி. 

நீலன் வைத்தியர், குயிலி, வானம்பாடி மூவரும் மற்றோர் பார்வையில் இல்லாதவர்கள். காலப் படகே யார் பார்வையிலும் இல்லை. உணவும் உடுப்பும் சக்தித் துகளுருவாக ஐம்பதாம் நூற்றாண்டில் தேளரசு ஆணைப்படி இவர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. உருத் திரள,  அவை உணவாகின்றன. உடையாகின்றன. காலப் படகின் பழுது திருத்துதல் விரைவாக நடக்கிறது.

காட்சி தெளிகிறது

ஒரே ஒரு நாள் காலம் பின்னேகும். நெடுநெடுவென்று உயரம். இடுப்பில் முழங்கால் வரை நீளும் ஏழை விவசாயியின் ஆடை. மேலே சாதாரண கைத்தறித் துண்டு. கையில் கைத்தடி. காலில் சாதாரணச் செருப்புகள். தேசத் தலைவர் வந்து கொண்டிருக்கிறார்.  

அவர் எந்த அரசாங்கத்தையும் தலைமை தாங்கி நடத்தவில்லை. எந்த அமைப்புக்கும் வழிகாட்டவில்லை. கடையரிலும் கடைப்பட்டவராக ஒதுக்கப்பட்டவர்களோடு சேர்ந்திருந்து அவர்களோடு ஒரே பாத்திரத்திலிருந்து பரிமாறிய உணவைச் சாப்பிடுகிறார். ஒரே குவியலில் எடுத்த குவளையில் தண்ணீர் சேந்திப் பருகுகிறார். 

இந்த வினாடி இந்த இடத்தில் வரலாற்றில் வாழ வேண்டும் என்றாள் வானம்பாடி, குயிலியிடம். கைகூப்பி ஆம் எனத் தலையசைத்தாள் குயிலி.  நேரமானது, உறங்குக சேய்களே என்றார் நீலன்.

(தொடரும்)

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 297 ஆம் இதழ்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *