முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 2
சி. ஜெயபாரதன், கனடா
படிப்பினை-2 முதியோர் இல்லப் புலப்பெயர்ச்சி தவிர்க்க முடியாத ஒரு சிறை அடைப்பு
ரிவெல்லா முதியோர் இல்லத்தில் 50 பேர் தனித்தனி அறைகளில் ஐந்தாறு மாதங்களோ, ஓரிரு வருடங்களோ வசித்து வருகிறார். தம்பதிகள் ஒரு பெரும் அறையிலே தங்கி இருக்கிறார். சேர்ந்த முதல் நாள் காலை உணவு தின்னக் கூடியிருந்த குழுவுக்கு ஹாலில் நான் அறிமுகம் செய்யப் பட்டேன். சேர்ந்த சில தினங்கள் அங்குள்ள பலரும் என்னைப் பாராதவர் போல் நடந்து கொண்டார். நான் செவ்வாய் கோளில் முதன்முதல் தடம் வைத்தது போல் ரிவெல்லா இல்லத்தில் உணர்ந்தேன். சில நாட்களில் சில மாதர், வயோதிகர் என்னைப் பேர் சொல்லி அழைத்தார்கள்.
உணவு, உறவு, ஓய்வு இம்மூன்றும் முதியோர் இல்லத்தில் ஒருவர் வசிக்க முணுமுணுக்கும் தாரக மந்திரம். இம்மூன்றில் எது ஒன்று முதியோர் இல்லத்தில் ஒருவருக்கு நீண்ட காலம் குன்றி விடுகிறதோ அப்போது அவரது மனம் மீளாதபடி உடைகிறது ! படாத பாடு படுகிறது. பழமொழி: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. எந்த உணவு ? ஒருவருக்குப் பிடித்த உணவு. தினமும் மூன்று வேளை காலை 8 மணி, பகல் 12 மணி, மாலை 5 மணிக்கு உணவு தயாராகி அனைத்து முதியோரும் ஒருங்கே அமர்ந்து ஒரு ஹாலில் உண்கிறார்.
வட அமெரிக்க மாமிச உணவுகள் பலவகை இந்தியருக்குப் பிடிப்ப தில்லை. யாராவது வீட்டில் இந்திய உணவு [அரிசி சாதம், சாம்பார் சப்பாத்தி, குருமா] சமைத்து அனுப்பினால் ஒரு சில தினங்கள் உண்ணலாம். ஆனால் அந்த
வசதி நீடிப்பதில்லை. இட்லி, தோசை, உப்புமா, அரிசி சாதம், சாம்பார், புலாவ், தயிர் சாதம் சுவையாக உண்ட தமிழருக்கு, முதியோர் இல்லத்தில் உணவு ஒன்றே தீராத முதல் பிரச்சனை யாகி விடுகிறது.
அடுத்தது உறவு. அதாவது ஆண்-பெண் நெருக்க உறவு. [intimate mates] ரிவெல்லா முதியோர் இல்லத்தில் சேர்ந்தது முதல் என்னைக் கொல்லாமல் கொன்றது தனிமை உணர்வு. மனைவி இறந்த பிறகு, மூன்று தனிப்பட்ட மாதரை அணுகி உடன்வாழ நேராகவே கேட்டேன், துணையாக வாழ்வ தற்கு. அவரை மணந்து கொள்ளவும் தயார் என்றும் சொன்னேன்.. ஒரு மாது கணவனை இழந்தவர், மொம்பையில் வாழ்ந்த [1959-2009] போது நன்கு பழக்கமான தமிழ் மாது. 65 அல்லது 70 வயது இருக்கலாம். அந்த வயதிலும் அழகிய கவர்ச்சி மாது. இனிய குரல். கணவர் சகோதரன் போல் என்னை நடத்திய நண்பர். கனடாவில் வாழ்பவர். ஆனால் நான் எவ்வளவோ முயன்றும் என்னை மணக்க மறுத்து விட்டார். ஒருத்திக்கு ஒரு கணவன் தான், ஒரு திருமணம் தான், என்று கொள்கை உடையவர்.
அடுத்த மாது பஞ்சாபிப் பெண் 60 அல்லது 65 வயதிருக்கலாம். மிகவும் பழக்கமான பஞ்சாபி நண்பர் மனைவியின் தங்கை. திருமணம் ஆகாத மாது. கனடாவில் தமையனுடன் வசிப்பவர். நேராக நான் மணந்து கொள்ள முயன்றும் நண்பரின் மனைவி அதற்கு உடன்பட வில்லை.
எழுபது, எண்பது வயதில ஆணுக்கு பெண்ணுறவு, பெண்ணுக்கு ஆண் உறவு, மிகவும் தேவைப் படுகிறது. Seek your mate there, Reach out & love someone, touch someone you love,.you need body heat and intimate relations. உடல் உறவல்ல, உடல் நெருக்கம் முதியோர் இருபாலாருக்கும் அவசியம் கிடைக்க வாய்ப்புகள் அமைய வேண்டும். வயிற்றுப் பசி, அடுத்தது உடற்பசி இந்த இரண்டு மனித இச்சைகள் முதியோருக்கு அவசியம் பூர்த்தியாக வேண்டும். தனிமையில் முதியோர் இல்லத்தில் தவித்து இறக்கும் முதியவர் அநேகம்.
முதிய காலத்தில் பெண் நெருக்கம் கொண்டது ஒருசில உதாரணங்கள்.
படிப்பினை -3 : உணவுப் பசி, உடற்பசி முதியோர் இல்லத்தில் பூர்த்தியாக வாய்ப்புகள் அமைய வேண்டும்.
[தொடரும்]