வேதனை

2
0 minutes, 41 seconds Read
This entry is part 4 of 13 in the series 2 ஜூலை 2023

உஷாதீபன்

ushaadeepan@gmail.com       

சார்…சார்…விட்ருங்க…. – சத்தமாகவே சொன்னார் அவர். பதறிப் போய் ஓடி அந்தப் பையனைத் தூக்கப் போனதைத்தான் அப்படித் தடுத்தார். அதற்குள் அந்தப் பையனாகவே எழுந்து, வண்டியையும் தூக்கி நிறுத்தி, சட்டென்று கையிலும், காலிலும் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு,  திரும்பவும்  வண்டியை உயிர்ப்பித்து, டுர்ர்ர்….என்று சீறிக்கொண்டு கிளம்பி விட்டான். அப்போதும் இடது கையில் அவனது கைபேசி இருந்தது. இப்பயும் என்ன வேகம்?  எப்படிக் க்ளட்ச்சைப் பிடிப்பான் எப்படிப் பாதுகாப்பாய் ஓட்டுவான் என்று தோன்றியது எனக்கு. இனி மனிதர்களை எங்கு ஓவியமாக்கினாலோ அல்லது சிற்பமாக்கினாலோ, இடது கையில் ஒரு மொபைல் இருப்பதுபோல்தான் உருவகிக்க வேண்டியிருக்குமோ என்று தோன்றியது. குறிப்பாக இளைய சமுதாயத்தை. 

எதிரே எந்த வண்டியில் மோதாமல் தவிர்த்தானோ அவர் அவனை ஒரு முறை முறைத்துவிட்டு, வந்த அதே நிதானத்தில் வண்டியை விட்டுக் கொண்டு போய் தெருக்கோடியில் மறைந்து விட்டார். தவறு அவர் மீதில்லை. அந்தப் பையன் ஃபோன் பேசிக் கொண்டே வந்ததுதான். சாலையில் டயர் அகலத்திற்கு மணல் சரசரவெனப் பட்டைக் கோடாய்ப் பரவியிருந்தது. பிரேக் அடித்த வேகத்தை  அது உணர்த்தியது

என்ன வேடியப்பன்…இப்டிச் சொல்லிட்டீங்க…? என்றேன் நான். எடுத்த எடுப்பிலேயே இப்படிப் பெயரைச் சொல்லி அழைத்துவிட்டோமே என்று நினைத்துக் கொண்டேன். அதை ஒன்றும் அவர் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. நிமிர்ந்து ஒரு முறை தீர்க்கமாய்ப் பார்த்துவிட்டுச் சொன்னார்….

ஆமா சார்….இந்த மாதிரிப் பசங்களெல்லாம் கீழ விழுந்தா ஓடிப் போய்த் தூக்கக் கூடாது சார்….போகட்டும்…அடிபட்டுச் சாகட்டும்னு விட்டுடணும்…என்றார் கோபத்தோடு. வார்த்தைகளில்தான் கோபமிருந்ததேயொழிய தையல் மிஷின் ஓடுவதிலும், துணியை நகர்த்துவதிலும் அந்த நிதானம் இம்மியும் தவறவில்லை. அது அவர் தொழில் அனுபவம். 

அருகே சாலை ஓரத்தில் விரித்திருந்த தார்ப்பாயில் பை பையாய்த் துணி மூட்டைகள் நிறைந்து கிடந்தன. கொஞ்சம் உற்றுப் பார்த்தால்தான் அத்தனையும் கிழிசல் தைக்க வந்த துணிகள் என்று தெரிய வரும். சட்டென்று கடந்து செல்லும் ஒரு மேலோட்டப் பார்வையில் குப்பை மூட்டைகள் குவிஞ்சு கிடக்கோ என்று கூடத் தோன்றும். 

எனக்கு சிரிப்புதான் வந்தது. அதென்ன இவ்வளவு கோபம்? 

என்னங்க சொல்றீங்க நீங்க…ஒருத்தன் கீழே சறுக்கி விழுந்தான்னா…சட்டுன்னு போய்த் தூக்க வேண்டாமா? எனக்கென்னன்னா இருக்க முடியும்…? என்றேன். 

தூக்கக் கூடாது சார்…! இவங்ஞெல்லாம் எத்தனைவாட்டி சொன்னாலும் திருந்த மாட்டாங்ஞெ சார்…நம்ம பேச்செல்லாம் கேட்க மாட்டானுங்க…நம்மள ஒரு ஆளாவே மதிக்க மாட்டானுங்க…கோட்டி பிடிச்சவனுக…நல்லா அடிபடட்டும்ங்கிறேன்.- அவன் பதிலில் இருந்த அழுத்தமும் வேகமும் கண்களில் தெரிந்தது. நீங்க சட்டுன்னு ஓடினீங்க….நா எழுந்திரிச்சனா? மாட்டேன்….மாட்டவே மாட்டேன்…! என் மனசு இறுகிப் போச்சு. ஏன்னா இது மாதிரி எத்தனையோ வாட்டி இதே எடத்துல அடிச்சுப் புரண்டு விழுந்தவங்ஞள நான் தூக்கி விட்டிருக்கேன்…என்ன சொன்னாலும் எவன் கேட்கிறான்? தல தெறிக்கல்ல பறக்குறானுங்க…? எவனுக்காச்சும் பின் விளைவு தெரியுதா? கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்க்கிறானா எவனாச்சும்? 

மூன்று ரோடு சந்திக்கும் அந்த இடத்தை நோட்டம் விட்டேன். விபத்து நடக்க வாய்ப்பே இல்லாத இடம்தான். வேகம்தான் கெடுக்கிறது. சந்தேகமில்லை.

நீங்க மதுரையா…? என்றேன் சட்டென்று. ஆமா சார்…..பக்கத்துல திருமோகூர்…என்றார் வேடியப்பன். எப்டிக் கண்டு பிடிச்சீங்க…? அப்போ நீங்களும் மதுரையா? என்றார் பதிலுக்கு. தெரிந்து கொள்வதில் ஒரு நெருக்கம். 

எப்டிக் கண்டு பிடிச்சீங்க என்ற கேள்வியை விட நீங்களும் மதுரையா? என்று எப்படிக் கேட்டார்? அதுதான் ஆச்சர்யம். வந்தது முதல் நான் ஏதும் கோடி காட்டவில்லையே? என் பேச்சு அதன் அடையாளமாய் இருக்கவே இருக்காது. அங்கிட்டு, இங்கிட்டு, அவிங்ஞ, இவிங்ஞ… ம்க்கும்….எதற்கும் பழகவில்லை…. இனிமேலா வரப் போகிறது? 

நானும்  மதுரதான்….அதான் வந்தாங்ஞ…போனாங்ஞ-ன்னு பேசுறீங்களே…அது ஒண்ணு போதாதா? என்றேன். 

சற்றுத் தள்ளி நின்றிருந்த ரெண்டு பேர் அவரை நெருங்கி வந்தார்கள். 

இந்தக் காரை எடுக்கணுங்களே…டாக்டரம்மா கௌம்புறாங்க….வண்டி வெளில வரணும்….கேட் திறக்கணும்…..

அப்டீங்களா…கொஞ்சம் இருங்க…என்று விட்டு தையல் மிஷினை விட்டு எழுந்தார். பக்கவாட்டில் இருந்த ஒரு வீட்டை நோக்கிப் போய் மாடியைப் பார்த்துக் கத்தினார்.  இதோ வந்திட்டேன்  என்றவாறே ஒரு தலை தெரிந்தது பால்கனியில். கையில் வைத்திருந்த சாவிக் கொத்தை அங்கிருந்தவர் தூக்கி எறிய…சக்கென்று பிடித்துக் கொண்டார் வேடியப்பன். சாவியைக் கொண்டு வந்து  நீட்டியவாறே…சார்…அ ந்த மாருதியைத் திருப்பி இதோ…இந்த கேப்ல…தயவுசெய்து நிறுத்திடுறீங்களா….? என்றார். 

இது வழக்கந்தானே என்பதுபோல் டாக்டர் வீட்டு வாட்ச்மேன் சாவியை வாங்கி அவர்கள் டிரைவரிடம் கொடுத்து, அதோ அந்த எடத்துல நிறுத்திடுங்க….என்றார். காட்டிய இடத்தில்  ஒரு கார் அளவுக்குக் கொஞ்சம் இடம் இருந்தது. அப்படி நிறுத்துவதும் வெளியே எடுப்பதுமே ரொம்பவும் கவனமாய்ச் செய்ய வேண்டிய வேலை. முன்பக்க, பின் பக்கக் கார்களில் இடித்து விடாதபடி நிறுத்துதல் ஒரு தனிக்கலை. அதுபோல் எடுப்பதுவும்….

அந்த அகலத்  தெருவிலும், பக்கவாட்டு மெயின் ரோடைப் பார்த்திருந்த வீடுகளிலும் வீட்டுக்கு ஒன்று இரண்டு என்று கார்கள் இருந்தன. உள்ளே காம்பவுண்டுக்குள் நின்றது போக எல்லா வீட்டு வாசல்களிலும் கார்கள் நின்றன. மெயின் ரோடு பார்த்து வாசல் இருந்த வீடுகளின் கார்களும் இந்தப் பக்கவாட்டு அகலத் தெருவில்தான் நின்றன. அவர்களுக்குள் ஒரு மன ஒப்புமை இருப்பதாகத் தெரிந்தது. கார்கள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். கார் இல்லன்னா அது வீடே இல்ல…என்ற கதைதான்.இவை போக டூ வீலர்களும் எல்லா வீடுகளிலும் காட்சியளித்தன.  தெரு ஆரம்பத்தில் ஒரு பெரிய டிரான்ஸ்ஃபார்மர். அதனடியில் மட்டும்தான் எந்த வாகனமும் இல்லை. 

இந்தாங்க சாவி…. அதோ…அங்க பாருங்க….அங்கதான் வண்டி நிக்குது….என்றார் டாக்டர் வீட்டு டிரைவர். சரிங் சார்…சொல்லிடறேன்…நன்றி….என்றவாறே சாவியை வாங்கிக் கொண்ட மாரியப்பன்…அந்த மாடி வீட்டிற்கு அருகில் சென்று மீண்டும் குரல் கொடுத்தார். பால்கனியில் ஒருவர் தோன்ற, இங்கிருந்து சாவியை அவரை நோக்கி வீசியெறிய, பிடித்துக் கொண்டார் அவர். வேடியப்பன் எறிவதும், அவர் பிடித்துக் கொள்வதும், வெகு நாள் பழக்கம் போல் தோன்றியது. சாவி மிகச் சரியாக மந்திரம் போல்  அவர் கையை நோக்கிப் போய் உட்கார்ந்து கொண்டது. 

நமக்கு இதான் சார் தெரு, கடை எல்லாம். இந்த வெட்ட வெளிதான்.  இங்கதான் நம்ம தொழில்.  காலைல ஒம்பதுக்கு வந்தன்னா இருட்டும் மட்டும் இருப்பேன். இந்த லைட்டுக் கம்பம்  அடிலதான்…இந்த வீடுகள்ல இருக்கிற துணிகள்லாம் எங்கிட்டதான் வரும். பார்த்தீங்கல்ல…இந்தப் பை மூட்டைகள…அத்தனையும் தைக்க வந்தது. …சாயங்காலத்துக்குள்ள எல்லாத்தையும் தைச்சு…கொண்டு கொடுத்திடுவேன்….இடைல உங்கள மாதிரி யாராச்சும் வந்தா அதையும் கவனிச்சிக்கிடுறது….

கொரோனா காலத்துல என்ன பண்ணுனீங்க…? ரொம்பப் பாதிச்சிருக்குமே…என்றேன். அவர் முகம் இறுகியது போல் ஆனது. 

அந்த சமயம் அதோ அந்த வீட்டுக்காரரு…காம்பவுன்டுக்குள்ள எடம் கொடுத்தாரு…அப்போ அவர்ட்டக் கார் இல்ல….அப்புறம்தான் புதுசா வாங்கினாரு…அங்க வச்சு ஓட்டிக்கிட்டிருந்தேன்….அப்பத்தான் ரொம்பவும் போலீஸ் கெடுபிடியாச்சே…வெளிலயே வர முடியாதே… எப்டியோ ஒளிஞ்சு மறைஞ்சு சந்து பொந்துன்னு நுழைஞ்சு இங்க வந்து சேர்ந்திடுவேன்….துணி குடுக்கப் பயந்தாக எல்லாரும். எதுக்கு வர்றே? ன்னு கூடக் கேட்டாங்க.  சில பேர் மாஸ்க் போட்டுக்கிட்டு வந்து கொடுத்து வாங்கிக்கிட்டாங்க…அந்தப் பீரிட்தான் பொழப்பு ரொம்ப நாறிப் போச்சு. தற்கொல பண்ணிக்கிடலாமான்னு கூட நெனச்சேன். ரெண்டு பொட்டப் புள்ளைக, ஒரு பையன் மூத்தவன், எம்பொஞ்சாதி….மனசு வரல்ல…  எப்டியோ சமாளிச்சேன்னு வச்சிக்குங்க….ஆனா ஒண்ணு…அப்பயும் இந்த ஏரியா மட்டும் இல்லாமப் போயிருந்திச்சின்னா, ரொம்ப நாறிப் போயிருக்கும்….இந்தத் தெருவுல இருக்கிற எல்லா வீட்டுக்காரவுகளும் கடனாவும், இனாமாவும் பணம் கொடுத்து ஒதவுனாக…. மறக்கவே முடியாது….அதான் இந்த எடமே கெதின்னு கெடக்கேன்..இதான் என்னோட கோயில்… ஒரு நா வராட்டியும்…என்ன, ஏதுன்னு ஃபோன் பண்ணிடுவாங்க…

நான் வேடியப்பனையும், அவர் தைக்கும் வேகத்தையுமே கவனித்துக் கொண்டிருந்தேன். பேசிக் கொண்டேயிருப்பதனால் அவர் வேலை ஒன்றும் வேகம் குறையவில்லை. தடைபடவில்லை. தொழிலில் தெளிவிருந்தது. கையும் காலும் போட்டி போட்டுக் கொண்டு பேசின. அந்தந்தத் துணிகளுக்குத் தகுந்த மாதிரி கலர் நூல்கள் மாற்றும்போதும் அதை ஊசியில் கோற்கும்போதும் அவரின் கூரிய பார்வை என்னை வியக்க வைத்தது. அந்த சிறு ஊசித் துவாரத்தில் ஒரே முறையில் நூலை அவர் கோர்த்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. நூலின் நுனியை உதட்டு விளிம்பில்   ஈரப்படுத்திக் கொண்டு பிசிறை நீக்கி  கண் இமைக்கும் நேரத்தில் ஊசியின் துளைக்குள் அனுப்பிட வலக்கை கட்டை விரலும், ஆட்காட்டி விரலும்  அதைப் பதமாய் மறுபுறம் இழுத்துக் கொண்டது. அவ்வளவு பெரிய கத்தரிக்கோல் எப்படி அந்த கண்ணுக்குத் தெரியாத பொடி நூலிழையின் நுனியை “கருக்“கென்று வெட்டுகிறது என்பது இன்றுவரை ஆச்சரியம்தான் எனக்கு. 

கால் பெடல் போடாத மிஷினெல்லாம் எப்பயோ நிறைய வந்திடுச்சே….இன்னும் இதையே வச்சிருக்கீங்க…சிரமமா  இல்லையா? என்றேன்.  மெஷின் பழசாய்த்தான் இருந்தது. மேல் பலகை செதில் செதிலாய் விட்டிருந்தது. கொஞ்சம் கவனக் குறைவாய் இருந்தால் சிராம்பு விரலில் ஏறி விடும்.  தைக்க வேண்டிய இடத்தில் துணியை மடிப்பதும், அந்த மடிப்பு அயர்ன் பண்ணியதுபோல் நிற்க கட்டை விரல் நகத்தால் கரக்கென்று ஒரு கோடு இழுத்து நிறுத்துவதையும், அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்காகவே கட்டை விரல் நகம் நீளமாய் வளர்க்கப்பட்டிருந்தது. 

எங்கிட்ட இதான் சார் இருக்கு….இங்க ஒண்ணு…வீட்ல ஒண்ணு…அதுல என் சம்சாரம் தைக்கும். பக்கத்து வீடுகள்லாம் ரவிக்கைத் துணி தைக்கக் கொடுப்பாக….சின்னப் பிள்ளைங்களுக்கு டவுசர் சட்டை தைக்கும்…பாவாடை தைக்கும்…ரெண்டு பேத்துக்கும் சரியான ஒழைப்புதான் சார்….இந்த மிஷினே புதுசு வாங்கணும்னா பன்னெண்டாயிரம், பதினைஞ்சாயிரம்னு ஆகும்…அதுலயும் மார்டனா வாங்கணும்னா நா எங்க சார் போறது? இந்தப் பொழப்புக்கு பாதகம் இல்லாம ஓடுனாப் போதும்னு நெனச்சிட்டிருக்கேன்…அதப்பத்தியெல்லாம் யோசிச்சதேயில்லை. 

குட் மார்னிங் வேடியப்பன்….யாரோ ஒருவர்  சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியாய்க் கையசைத்து விட்டுப் போனார். பதிலுக்கு வணக்கம் சொன்ன வேடியப்பன்…இந்த ஐயாவெல்லாம் நமக்கு ரொம்ப ஒதவி….கொரோனா பீரியட்ல…ஐயாயிரம்…பத்தாயிரம்னு… கொடுத்திருக்காக….இன்னைவரைக்கும் திருப்பிக் கேட்டதில்ல…எனக்குத்தான் மனசாட்சி போட்டு உறுத்திக்கிட்டே கெடக்கு… ….என்றவாறே …சார்…கொஞ்சம் பக்கத்துல வாங்க…டேப்புல அளந்துக்கிறேன். கீழ எத்தனை இஞ்ச்சு வெட்டி மடிச்சு அடிக்கணும்னு தெரியணும்….என்றார்.

சும்மா ரெண்டு மடிப்பு மடிங்க…சரியா வரும்….என்றேன். ரெடிமேட் பான்ட் வேண்டாம் என்றாலும்…கேட்டால்தானே….? என்னதான் தனி அறைக்குள் சென்று போட்டுப் போட்டுப் பார்த்தாலும்…அந்தக் கண்ணாடி செய்யும் மாயமா அல்லது நம் கண்கள்தான் அங்கே மயங்கிப் போகிறதா…தெரியவில்லை. சரியான அளவில் என்றும் எடுத்ததில்லை. எட்டு மாடி, பத்து மாடி என்று அவ்வளவு பெரிய ஜவுளிக் கடைகளிலெல்லாம் போய் நிற்பதும், பார்ப்பதுமே ஒருவிதமான பதட்டத்தை உண்டு பண்ணுவதாக இருந்தது. ஒரு பான்ட்டுக்கு ரெண்டாயிரத்து ஐநூறு, மூவாயிரமா?  அநியாயமில்லை…..கொள்ளை…கொள்ளை…அநியாயக் கொள்ளை…பகல் கொள்ளை…புலம்பினேன் என் பையனிடம். ரெண்டு கால்களுக்கும் நடுவே பிடிக்கத்தான் செய்கிறது. ஒரு ரெடிமேட் பான்ட் கூட ஜட்டியோடு சேர்ந்து வசதியாய் நெகிழ்ந்ததில்லை. நான்தான் நெளிந்து கொண்டிருந்தேன். முழுக் கையும் உள்ளே போகாமல் பக்கவாட்டில் எதற்கு ரெண்டு பைகள்? கர்சீப்தான் நுழைக்க முடியும்!  டிக்கெட் பாக்கெட் என்று ஒன்று பேருக்கு. அதில் வெறும் பஸ் டிக்கெட் மட்டும்தான் செருக முடியும். அவ்வளவு சிறிசு.   

காலம் எவ்வளவுதான் மாறினாலும் தைத்துப் போட்டால்தான் வசதி. துணி வாங்கி வைத்துக் கொண்டு, ஊர் செல்லும்போது வழக்கமான தையல் கடையில் கொடுத்து, நம் அளவுக்கு வசதியாய் தைக்கச் சொல்லி போடுவதுதான் இன்றுவரை என் வழக்கம். டிக்கெட் பாக்கெட் கொஞ்சம் ஆழமாய் இருக்கணும் என்றாலும், பொந்து போல் இறக்கமாய் துணி சேர்த்து தைத்துக் கொடுப்பான் அங்கே. நகரில் பர்ஸ் பணம் திருட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு அந்த முன்புற  டிக்கெட் பாக்கெட்தான் வசதி.  கொரோனா காலங்களில் ஊர் செல்ல முடியாமல் போனதில்  பயணம்  நின்று போய்  எப்போதேனும் வெளியே செல்கையில் இந்த ரெடிமேட் பான்ட்களைப் போட்டுக் கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தேன். பெறகு பார்த்துக்கலாம் என்று கீழே மடித்து அடிப்பதைத் தவிர்க்க, அதில் ரெண்டு மூன்று நின்று போய்…இப்போது வேடியப்பனிடம் வந்து நிற்க வேண்டியதாய்ப் போச்சு. அடிக்கடி அருகிலிருக்கும் போஸ்டாபீஸ் போகையில் அந்த வழியில் இவரைப் பார்த்திருந்ததால், ரோட்டுக் கடைத் தையல்காரர்…இவர்தான் லாயக்கு நமக்கு என்று கணித்திருந்தேன். 

சார்…கொஞ்சம் எடுத்துக்குங்க… – என்றவாறே அந்தப் பிளாஸ்டிக் டப்பாவை நீட்டினார் வேடியப்பன்.   என்ன? என்று பார்த்தேன். 

அட…கேசரி….ஏது.. இந்தக் காலைல…? 

அந்த வீட்டு மாமி கொடுத்தாங்க சார் என்று பக்கவாட்டில் கையைக் காண்பித்தார்.….இன்னைக்கு ஏதோ பூஜையாம்….என்ன விசேசம்னாலும் பலகாரம்  நமக்கு வந்திடும் தவறாம….மாமி வீட்டு கேசரிதான் சார்…சாப்பிடுங்க….

அவரின் வற்புறுத்தலுக்காக ஒரு வாய் எடுத்துப் போட்டுக் கொண்டேன். நீங்க சாப்பிடுங்க….போதும்…..

வேடீ….சித்த வர்றீங்களா…..? யாரோ கூப்பிடும் குரல் கேட்டது.

இதோ வந்திட்டம்மா….என்று எழுந்து ஓடினார் வேடியப்பன். வாசலில் ஆட்டோ ஒன்று நின்றிருக்க….வாங்க….ஒரு கை கொடுங்க…அய்யாவை கொண்டாந்து உட்கார்த்திடலாம்….என்றது அந்த மாமி. 

ஆகட்டுங்கம்மா…என்றவாறே வீட்டுக்குள் நுழைந்த வேடியப்பன்….நீங்க  விடுங்க…நீங்க விட்ருங்க….நா பார்த்துக்கிறேன்….என்று கூறியவாறே….அந்தப் பெரியவரை இரு கைகளாலும் அணைத்து அலேக்காகத் தூக்கி…கிடு கிடுவென்று வாயிலை நோக்கி வந்து கடந்து, ஆட்டோவில் பதவாகமாய் அமர்த்தினார். ஒரே மூச்சில் தூக்கி வந்தது மூச்சு இழைத்தது.   அந்தப் பெரியவர் முக்கி முனகிக் கொண்டிருந்தார். ஐயா…பின்னாடி சாய்ஞ்சுக்குங்க…என்றவாறே அவரைச் சாய்த்து வைத்தார் வேடியப்பன். 

நாந்தான் சொன்னேன்ல….ரெண்டு பேருமா மெல்ல நடத்திக் கூட்டிட்டு வருவோம்னு…அதுக்குள்ளே என்ன அவசரம்….?  அந்த மாமி வேடியப்பன் இழைப்பதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு இப்படிச் சொல்ல….மேல் துண்டால் வியர்வையை அழுந்தத் துடைத்து விட்டுக் கொண்டார்.. இடுப்பில் கை வைத்து, முடியாமல் சற்றே கூனி நின்றார் 

ஆஸ்பத்திரில ஒத்தையா என்ன பண்ணுவீங்க மாமி…? நா வரட்டா….நீங்க போங்க…என் சைக்கிள்ல பின்னாடியே  வந்துடறேன்…என்றார். 

அதெல்லாம் வாண்டாம்…போய் உன் பொழப்பைப் பாரு….அங்க யாரயாச்சும் வச்சு உள்ளே கூட்டிப் போய்க்கிறேன்….வண்டித் துணி கெடக்கு…தைச்சு முடிக்க வேண்டாமா? பேச்சப் பாரு…வா்றானாம்…?   – சொல்லியவாறே மாமியும் உள்ளே அமர, ஆட்டோ நகர்ந்ததைப் பார்த்தவாறே திரும்ப வந்தார் வேடியப்பன். பேச்சப் பாரு…என்று அந்த மாமி சொன்னதில் மிளிர்ந்த உரிமை….எனக்குப் புரிந்தது. அந்தத் தெருக்காரர்களுக்கு வேடியப்பன் ஒரு காவல்.  ஆபத்பாந்தவன். 

இவுக ரெண்டே பேர்தான்யா….பையன் வெளிநாட்டுல இருக்கான்… பணம் அனுப்புறதோட சரி….எனக்குத் தெரிய மூணு வருஷமாச்சு அந்தப் பையன் வந்து அப்பாம்மாவப் பார்த்து….அதுவும் கொரோனா சமயத்துல தலையே காட்டல…இந்த மாமிதான் ஒத்தையா இருந்துக்கிட்டு, உடம்பு முடியாத அந்த அய்யாவையும் வச்சு  கஷ்டப்பட்டு சமாளிச்சிக்கிட்டுக் கெடக்கு….ஆனாலும் மன தைரியம் ஜாஸ்தி அவுகளுக்கு. நல்ல வேளை…பார்க்க வராட்டாலும் பணமாச்சும் அனுப்புறானேன்னு நெனச்சிக்கிட்டேன். இல்லன்னா சோத்துக்கே திண்டாட்டமாயிடும் அவுகளுக்கு. அந்த அய்யாவுக்கு பென்ஷன் கின்ஷன் ஒண்ணும் கிடையாது. ஏதோ சொற்பமா தனியார் கம்பெனில வேல பார்த்து ரிடையர்ட் ஆனவரு. சேமிப்பும் எதுவும் இருக்கிறாப்ல தெரில….இந்த ஒரு வீடுதான் சொந்தம்…பையன வச்சு ஓடிக்கிட்டிருக்கு…அவனும் கைவிட்டான்…கத அம்பேல்தான்…

பேச்சினூடாக…தடங்கலின்றி பேன்ட் கீழ்த் துணியைக் கட் பண்ணியதுபோக, எடுத்த அளவுக்கு வாகாக மடித்துத் தைக்க ஆரம்பித்தார் வேடியப்பன். ரெண்டு பான்ட்களையும் தைத்து முடிக்கும் முன் இன்னும் எத்தனை அழைப்புகள் வருமோ என்று தோன்றியது எனக்கு. 

அந்தப் பக்கம் வருவோர், போவோர் சிலர் வேடியப்பனிடம்தான் வழி கேட்டனர். குறிப்பாக தெருக் கடைசியில் இருந்த பள்ளிக்குத்தான் அடிக்கடி ஆள் போய்க் கொண்டிருந்தது. அட்மிஷன் நடக்குது என்றார்கள். பொறுமை ஜாஸ்திதான் வேடியப்பனுக்கு. குறி சொல்பவர் போல் அந்தத் தெரு முக்கில் அவர்.

பக்கத்தில் பாயில் கிடக்கும் துணி மூட்டைப் பைகளைப் பார்த்தபோது இத்தனையையும் இவர் எப்போது தைத்து முடிக்கப் போகிறார்? என்று எண்ணியது மனம். 

மணி பகல் பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. வெய்யில் உஷ்ணம் கடுமையாய் இருந்தது. அந்தத் தெருவே வீட்டுக்கு வீடு சாலை  மரங்கள் வரிசையாய் அடர்ந்து காணப்பட்டதால் மொத்தமாய் நிழல் படர்ந்திருந்தது. எல்லா வீடுகளும் பழமை போர்த்தியிருந்தன அந்த மரங்களைப் போல்.  குறைந்தது முப்பது ஆண்டுகளாவது ஆன வீடுகள்தான் பலதும் என்று எண்ண வைத்தது. 

ஆம்மா….வேடியப்பன்…இம்புட்டுத் துணிகளை வாங்கி வச்சிருக்கீங்களே…இதுல எங்கங்க கிழிசல்கள்னு பார்த்துப் பார்த்துத் தைச்சிடுவீங்களோ…? இருந்து தைக்காம, குடுத்துட்டுப் போயிடறாங்களேன்னு கேட்டேன்….

அப்டித்தான் சார்…சொன்னது…சொல்லாததுன்னு எல்லாந்தான். சிலதுக்கு “டக்“ பிடிக்க வேண்டிர்க்கும். சொல்லுவாக… அத மட்டும் மார்க் பண்ணியிருப்பேன். மத்ததெல்லாம் கிடுகிடுன்னு வளைச்சுப் பிடிச்சிடுவேன் சார்… எதுவும் விடுபடாது …பொழுது இருட்டுறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடும்….ஒரு மனக் கணக்கு தான்…அதுக்கு மேல வந்திச்சின்னா…நாளைக்குன்னு அனுப்பிடுவேன். புரிஞ்சிக்கிடுவாங்க… கோவிக்க மாட்டாங்க….அப்டிப் பழக்கம் நம்மளுது…

ன் இரண்டு பான்ட்களையும் வாங்கிக் கொண்டு நான் வீடு வந்து சேர்ந்தபோது எனக்கு அன்று பூராவும் வேடியப்பன் நினைவாகவே இருந்தது. வாழ்க்கையை எப்படி எப்படியெல்லாமோ சமன் செய்து கொள்ளும் வேடியப்பன் போன்றவர்களுக்கு  மொத்த வாழ்க்கையும் தீராத உழைப்பாகவே அமைந்து முடிந்து விடுகிறது…விடிவு என்பதே கிடையாதா? இந்த நித்திய உழைப்பிலிருந்து என்று அவர்கள் ஓய்வு பெறுவது? கொஞ்சமேனும் மூச்சு வாங்க வேண்டாமா? என்று அவர்கள் அக்கடா என்று அமர்ந்து நிம்மதியாய் சாப்பிட…தூங்க..என்று ஆசுவாசமாய் இருந்து கழிப்பது? அட கடவுளே…!உலகத்தின் முக்கால்வாசி மனிதர்கள் இப்படித்தானே…? கீழ் நடுத்தரமும், ஏழைகளுமாய் நிறைந்த உலகம் ஓய்வு ஒழிச்சலில்லாமல்…..இப்படிக் கிடந்து சீரழிகிறதே! சாகும்வரை இப்படி உழைத்து உழைத்தே நசிந்து இறுதி மூச்சை விட வேண்டியதுதானா? 

எண்ணிக் கொண்டே உறங்கிப்போனேன் அன்று. நாலைந்து நாட்கள் ஒடிப் போயின. புயல் மழை என்ற அறிவிப்புகள். இம்மாதிரி நேரத்திலெல்லாம் வேடியப்பன் என்ன செய்வார்…எங்கு உட்காருவார்…எந்த மறைப்பில் புகுந்து கொள்வார்? எப்படித் தன் வேலையைச் செய்வார்? இயற்கையால் அவர் தொழிலுக்குத் தடையாகும் போது அவர்  என்னாவது?  பலவாறு  எண்ணிக் மாய்ந்து கொண்டிருந்தேன். 

 பொழுது விடிந்த வேளையில் கைலிகள், பேன்ட்கள் என்று தூக்கி வந்து என் முன் போட்டான் பையன். அப்பா முன் இப்படிப் பொத்தென்று போடுகிறோமே என்கிற லஜ்ஜையெல்லாம் கிடையாது. அது சற்று மரியாதைக் குறைவான செயல் என்று கூட அவர்களுக்குத் தோன்றாது. அந்த மாதிரிச் சின்னச் சின்ன உணர்வுகளுக்கெல்லாம் அங்கே இடமில்லை. நமக்கு நேரே காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், நாம்தான் தள்ளி உட்கார்ந்து கொள்ள வேண்டும். காலை மடக்கு…இல்லன்னா அந்தப் பக்கமா நீட்டிக்கோ…என்றால் அந்த ஒரு தடவை மட்டும் செய்வார்கள். மறுபடி பழைய கதைதான். அப்படி மாறி நீட்டும்போதும் கால்களுக்கு நேரே பூஜை அறை இருக்கும். அந்தத் தப்பும் புரியாது. நச்சு நச்சென்று சொல்வதாய் எரிச்சல் படுவார்கள்.பெரிசுகள் அவர்கள் மரியாதையை அவர்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான் யதார்த்தம். 

அப்பா…எனக்கும் இதையெல்லாம் தைக்கணும் …. இந்தக் கைலியையெல்லாம் ரௌன்ட் அடிக்கணும். இந்த நாலு பேன்ட்லயும் கீழே கட் பண்ணி மடிச்சு அடிக்கணும்…உனக்கு செய்திட்ட மாதிரி…..

என்னவோ மனதில் உறுத்தியது எனக்கு.  தயக்கம் எழுந்தது. 

இந்த பார் சந்தர்…அவன் ரோட்டோரத்துல உட்கார்ந்து தைக்கிற சாதாரணத் தையல்காரன்…அவன்டெல்லாம் கொடுத்து தைச்சா உனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ…நல்லா யோசிச்சு சொல்லு….அப்புறம் என்னை எதுவும் குறை சொல்லக் கூடாது….என்றேன்.  ஏதோ அவசரத்துல இங்க கொடுத்திட்டு பிறகு தைய்யா…தக்கா என்று குதித்தால்? அதனால்தான் முதலிலேயே கேட்டுக் கொண்டேன். இந்தக் காலத்துப் பசங்களுக்கு எதுலயுமே பைசா கூடக் கொடுக்கிறதுலதான் நம்பிக்கை….அவிங்ஞ செலவு செய்றதில்ல…விரயம் பண்றானுங்க…அப்போ கேட்குறதுல என்ன தப்பு? 

அதனாலென்னப்பா…? நீ அங்கதான தைச்சிட்டு வந்தே…எனக்கும் அவனே தைக்கட்டும்….ஏன்ப்பா இப்டியெல்லாம் கேட்கிறே? என்றான். ஏதோ சங்கடப்பட்டது போல. 

இல்லப்பா…இருந்தாலும் கேட்டுக்கணும்ல….என்றேன் நான்.  விரும்பித்தான் கொடுக்கிறான் போலும்! நம்ம பையனுக்கு நம்மளோட சிக்கன புத்தில கொஞ்சமாவது இல்லாமலா போயிடும்? .  

ரெண்டு ஜீன்ஸ் பேன்ட் இருக்கு…இதையெல்லாம் அடிப்பானா…? ஊசி உடைஞ்சிடாது? இத மட்டும் வேணும்னா வேறே எங்கேயாவது கொடேன்….

அதெல்லாம் ஒண்ணும் உடையாது…..கீழ்ப் பகுதிதானே….இங்கயே தைக்கலாம்… சும்மாக் கொடு….நானும் கூட வரட்டா…?-

 வேண்டாம். நானே எடுத்திட்டுப் போறேன். அளவு பேன்ட் இருந்தாக் கொடுத்திடு….அப்பத்தான் உயரம் கரெக்டா இருக்கும்….என்றேன். மறுபடியும் வேடியப்பனைப் பார்க்கும், பார்த்துப் பேசும் சந்தோஷம் மனதுக்குள் புகுந்து கொள்ள, பையன் கொடுத்த துணியையெல்லாம் ஒரு தோல் பைக்குள் மடித்து  எடுத்து  வைத்துக் கொண்டு புறப்பட்டேன். நடைக்கு நடையாச்சு…வேலைக்கு வேலையாச்சு…..

வண்டில கொண்டு விடட்டாப்பா….என்றான். 

வேண்டாம்…நடந்தே போய்க்கிறேன். அதான் எனக்கு வசதி…என்று கிளம்பினேன்.அங்கெல்லாம் வந்து வெட்ட வெளியில் பொறுமையாய் நிற்க அவனுக்கு ஏது பெருமை? அந்தப் பெருமையெல்லாம் மூத்த தலைமுறைக்குத்தான்….! எல்லாவற்றிற்கும் மெனக்கெட்டு, கருத்தூன்றி, கஷ்டப்பட்டு குடும்பத்தைக் கொண்டு செலுத்தியது. 

வேடியப்பன் இருக்கும் கார்த்திகேயபுரம்  பகுதிக்குச் சென்று சேர்ந்தபோது அந்த மரத்தடியில் அவர் இல்லை. என்னடாது? ஆளக் காணல….?  -மனசு சுணங்கியது எனக்கு.

பதிலாக வேறொரு ஆள் அங்கே தையல் மிஷினைத் தரை விரிப்பில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து தைத்துக் கொண்டிருந்தான். இது யாரு? புதுசா ?

…இங்க வழக்கமா ஒருத்தர் இருப்பாரே….வேடியப்பன்னு…அவர் எங்கே? என்றேன். 

 வாடிக்கையா சார்?…அவர் நாளைக்கு வருவார் ….அதுக்குத்தான் நான் வந்திருக்கேன்….என்றான் அவன். 

அவனிடம் தைக்கக் கொடுப்பதா வேண்டாமா என்ற தயக்கம் வந்தது. என் துணியானாலும் பரவாயில்லை. சற்று முன்னப் பின்னே இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம். பையனுடையதாச்சே…? கத்துவானே…? கத்திக் குடியைக் கெடுப்பானே!-யோசித்து நின்ற வேளையில்….

தைக்கணுமா சார்…கொண்டாங்க….என்றான் அவன். 

இல்லப்பா…நான் அவரத் தேடித்தான் வந்தேன்.   நாளைக்கு வந்திடுவாருல்ல….? என்றேன்.

கண்டிப்பா சார்….ஆசுபத்திரிக்குப் போயிருக்கார்….சாயங்காலம் ஆகும்…திரும்ப….அதனால இன்னைக்கு வரமாட்டாரு…..

ஆஸ்பத்திரிக்கா? என்னாச்சு அவருக்கு….? உடம்பு சரியில்லையா?  -சற்றே பதற்றத்தோடு கேட்டேன். 

அவருக்கொண்ணும் இல்ல சார்…அவர் பையன்தான் வண்டில இருந்து கீழ விழுந்து கால ஒடிச்சிக்கிட்டான்…அது ஒரு மாசமாகப் போகுதே….தெரியாதுங்களா விசயம்…? 

அடப் பாவமே…! ஒரு மாசமா?  சொல்லவேயில்லையே…? –  நெஞ்சுக்குள்  ஏதோ பாரம் அழுத்தியது.  ஒவ்வொருவர் உள்ளத்துள்ளும் அடைபட்டுக் கிடக்கும் துயரமும், துன்பமும், தீராத நோவும்….?  எப்படித்தான் பிறர் உணர முடியும்? 

வண்டில போகைல ஃபோன் பேசிட்டே போயிருக்கான்….ஒரு வேன்காரன் இடிச்சித் தள்ளிட்டுப் போயிட்டான்…பாவம் சார் அவுரு…. ….எலும்பு மூட்டு ஆசுபத்திரில கெடக்கான் பையன்….செலவான செலவு….

எனக்குள் அதிர்ந்தது இந்தத் தகவல். ஐயோ பாவமே….இவருக்கா இந்த  நிலமை…? ஏதாவது உதவி செய்யலாமே…! – அடக் கடவுளே…இப்படியெல்லாமா சங்கடங்கள் வரணும்? அதான் ஆள் கலகலப்பில்லாம இருந்தாரா? ஏனோ அப்போது தோன்றியது இப்படி…!

சட்டென்று மனம்  ஒன்றை  ஞாபகப்படுத்தியது. 

விட்ருங்க சார்….விட்ருங்க….தூக்காதீங்க…இவங்ஞெல்லாம் என்ன சொன்னாலும் கேட்க மாட்டானுங்க…அகராதி பிடிச்சவனுங்க….நம்மளெல்லாம் மதிக்கவே மாட்டானுங்க!! விரக்தி கோபமாய் வெளிப்பட்டது அங்கே…! மனக் குமுறலாய் எனக்குத் தோன்றியது.

அவரின் அன்றைய வீரியமான வார்த்தைகள்…..அதற்குள் பொதிந்திருந்த ஆழமான சோகம்…!  வேதனை! மனப் புழுக்கம்…? எதையென்று சொல்வது? 

வேடியப்பனை எண்ணி என் ஆழ்  மனம்  கசிந்து உருக,  மிகுந்த சோர்வோடு வீடு திரும்பினேன். 

———————————–

Series Navigationநிழற் கூத்து பஞ்சணை என்னசெய்யும்
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    jananesan says:

    வேதனை – மனதை நெகிழ்விக்கும் கதை! உஷாதீபனுக்கு பாராட்டுக்கள்.

  2. Avatar
    bala says:

    very good narration! shows the ‘Yadartham’ in present day city-life. it leaves a pain in the corner of our heart after finishing the story.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *