நாவல்  தினை              அத்தியாயம் இருபத்திரண்டு

This entry is part 6 of 6 in the series 9 ஜூலை 2023

   

மதுரைப் பட்டணம் களைகட்டியிருந்தது. வழக்கமாகவே இருபத்து மணி நேரமும் கோவிலுக்கு தரிசனம் செய்யத் தேசம் முழுவதிலிருந்தும் வந்திருக்கும் யாத்ரீகர்கள் ராத்திரி ரெண்டு மணிக்கு மதுரை மண்ணில் கால் பதித்தாலும், அடுத்த பத்தாவது நிமிடம் கோவிலுக்குப் போகவும் அப்புறம் பலகாரம் பண்ணவும் ஏகப்பட்ட ஆர்வம் காட்டுவார்கள். 

ராத்திரி ஒரு மணிக்கு இட்டலி அவித்து விற்கிற தெருக்கடைகளை வேறு எங்கும் பார்க்கமுடியாது. அப்படியான இட்டலிக்கடையில் ஓரமாக மரமுக்காலி போட்டு ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள். சுடச்சுட இட்டலியும் கூடக் கருவாட்டுக் குழம்புமாக ரசித்து உண்டு கொண்டிருக்கிறாள். 

பக்கத்தில் நிற்கும் சுமார் பதினைந்து வயசுக்காரன் அவள் காதில் மெல்ல ஓதுகிறான் – அக்கா, ரொம்ப கருவாடு எடுத்துக்கிட்டா நாளைக்கு தொண்டை கட்டிக்கும். மேல் ஸ்தாயி ரொம்ப சிரமப்படுத்தும்.  

தெருவோடு வந்த ஒரு இளைஞன் இந்த உரையாடலைக் கேட்டபடி அந்தப் பெண்ணைப் பார்க்கிறான். அவளைப் பார்த்தபடி சாம்பார் வாளியில் மோதிக்கொள்கிறான். வாளி கவிழ அவன் காலை நனைத்து ஓடுகிறது சூடான சாம்பார். 

இட்டலி அவித்து விற்கும் கிழவி ஐயா சாமி துரை பொழைப்பை கெடுத்துட்டியே நூறு ரூபா கொடுத்திட்டு போ என்று குரல் எடுத்து வராத அழுகைக்கு நடுவே ஒலிக்கிறாள். 

இது நூறு ரூபாயா, யார் கிட்டே சொல்றே. சாம்பாருக்கு ஐந்து ரூபா பாத்திரத்துக்கு ஒரு மூணு ரூபாய் மொத்தமா எட்டு ரூபா தரேன். வாங்கிட்டு ஓடிடு. உடனே காசு தந்தா ஏழு ரூபா தரேன் நாளைக்குன்னா எட்டு ரூபா எது சௌகரியம் என்று சிரிப்போடு அந்த இளைஞன், சாப்பிட மறந்து முக்காலியில் இருந்த பெண்ணைப் பார்த்துச் சொல்கிறான். 

இட்லி மட்டும் வச்சுக்கிட்டு எப்படி விற்கப் போறே, அதுக்கு ஒரு ரூபா போட்டுத் தரேன்.

கிழவி வரவுக்கு மேல் வரவாக இந்த ராத்திரி பணம் வரும் விசித்திரம் நடக்குதே, இவன் சோமசுந்தரப் பெருமான் தானோ என்று உரக்கவே கேட்க, வந்தவன் மொத்தமாக எட்டு ரூபா கிழவிக்குத் தருகிறான். 

அடுத்த பதினைந்து நிமிடம் இட்லி எல்லாம் சுடச்சுட இட்டலி உப்புமாகி ப்ளேட் ரெண்டணாவுக்கு பிய்த்துக் கொண்டு போகிறது.  அவன் கூட வந்த அவன் வயசு சிநேகிதர்கள் ரெண்டு பேரும் அவனும் பச்சை மிளகாயும் வெங்காயமும், இஞ்சியும் வாங்கி வந்து கலந்து கொத்துப் பராட்டா போல கிண்டி இட்டலியை இட்டலி உப்புமா ஆக்க பதினைந்தே நிமிடம் தான் எடுத்துக் கொண்டார்கள்.

கிழவி பிரமித்துப் போய்ப் பார்க்கிறாள். பதினைந்து ரூபாய் வருமானம் இட்டலி உப்புமாவுக்கு. அவள் ராப்பூரா கண் விழித்து இட்லி விற்றிருந்தால் பத்து ரூபாய் வந்திருந்தால் அபூர்வம். 

கடைசி பிளேட் இட்டலி உப்புமாவும் காரசாரமாக விற்றுப்போக இளைஞன், இந்தா அம்மா, அதிக பட்ச வருமானமாக இட்டலி பதினைந்து ரூபாய்க்கு விற்றாச்சு. நான் கொடுத்ததையும் நீ சம்பாதித்ததையும் உனக்கே தந்தேன் என ஈந்தான்.

அவள் சாமி இதை என்ன செய்ய என்று மேஜைக்குக் கீழே குனிந்தாள்.  கருவாட்டு வாடை அடிக்கும் சின்ன வாளி மேஜைக்குக் கீழ் இருந்து சிலருக்குப் பொறுக்க முடியாத துர்க்கந்தமாகவும் மற்றவர்களுக்கு கமகமக்கும் அடர்திரவமாகவும் மூக்கில்  வாடை ஏறியது. 

அய்யர் கிட்டே கருவாட்டு குழம்பை கொடுக்கறியே கூறு கெட்ட கிழவி அதை வச்சுட்டு அவர் என்ன பண்ணப் போறார் என்று சூழ்ந்த கும்பலில் யாரோ கேட்க ஒரே சிரிப்பு. நீயே எடுத்துப் போ என்று சம்பந்தமில்லாத யாரோ உத்தரவு தர கருவாட்டு குழம்பு கைமாறும்.

யார் முகத்திலே  முழிச்சேனோ நல்ல வருமானம் என்றாள் கிழவி. யாரா, இவங்களாகத்தான் இருக்கும் எனச் சிலர் விரல் சுண்ட எச்சில் கையை முகர்ந்து பார்த்தபடி எழுந்து நின்றாள் அந்தப் பெண். மகராசி சபை கூட்டத்துலே நல்லா பெயர் வாங்கி, வரவும் வாங்கணும் என்று கிழவி அவள் தலையைச் சுற்றி சொடக்கு போட்டுச் சுற்றினாள்.

மகாநாட்டுலே டப்பாங்குத்து டான்ஸுக்குப் பாட்டு பாட வந்திருக்கியா என்று     சுவாரசியமாக வேடிக்கை பார்த்தபடி அடுத்த கடையில் இடியாப்பம் சாப்பிட்டபடி நின்ற யாரோ பகடி செய்தார்கள்.

 அந்தப் பெண்ணோடு வந்திருந்த பையன் வீராவேசமாக யோவ் எங்களைப் பார்த்தா டப்பாங்குத்து ஆட்டக்காரங்க மாதிரியா இருக்கு என்று இரைய வேறென்ன பாடப் போறீங்க என்று வம்பைக் கெல்லியபடி இருந்தான். 

கர்னாடக சங்கீதம் கேட்டிருக்கியா சீதேவி என்று பையன் கேட்க என்ன கர்னாடக சங்கீதமா என்று அடக்க முடியாத ஆச்சரியத்தோடு அந்த இளைஞன் அவளையே பார்த்தபடி நகர்ந்தான். 

எந்த ஊர் என்று ஒரு அடி பின்னால் வைத்துக் கேட்டான். கும்பகோணம் என்றான் அந்தப் பையன். கை கழுவியபடி அந்தப் பெண். நீங்களும் பாட வந்திருக்கீங்களா? இல்லே என்றான் இவன். 

சாமி மன்னிக்கணும். நீங்க மகாசபையிலே லெக்சர் கொடுக்க வந்திருப்பீங்களா இருக்கும். சரியா? மீசை அரும்பிய பையன் சர்வமும் தெரிந்தவனாகக் கேட்க இவன் நகர்ந்து போனான். 

கொஞ்சம் கூடவே சொல்லி வைக்கணும். அப்போ தான் கேள்வி மேலே கேள்வியா கேட்க மாட்டாங்க. அவன் சொல்ல அந்தப் பெண் சிரித்தாள். 

அதுக்காக, நன்னிலம் கிட்டே குக்கிராமத்திலே இருந்து வந்ததை கும்பகோணத்துக்காரின்னு சொல்றது அதிகமில்லையா. அது போகட்டும். கச்சேரிப் பாட்டு நான் எப்போ பாடினேன்? 

பக்திப் பாட்டு, சினிமா பாட்டுன்னு காதுலே கேட்டு மனசுலே வாங்கிப் பாடறியே அதெல்லாம் கச்சேரி பாட்டு தானே

கச்சேரி பாட்டுக்கு குருவைத் தேடிப் போய் கத்துக்கணும். சாதகம் செய்யணும்.

அக்கா, கத்துக்க நேரம் வந்தா அதுவும் கத்துக்கலாம். எனக்கு கூட டேப் அடிச்சு கச்சேரி பாட்டுக்கு பின் பாட்டு பாடணும்னு இருக்கு என்றபடி மங்கம்மா சத்திரத்தில் தங்கியிருந்த அறைக்கு நடந்தார்கள் அக்காவும் தம்பியும். 

அதை டேப் அடிச்சு பின்பாட்டு பாடறதுன்னு  சொல்லக் கூடாது அது உப பக்கவாத்தியமா கஞ்சிரா வாசிக்க ஆசைன்னு சொல்லணும். 

அவள் அறைக்கதவைப் பூட்டியிருந்த பெரிய திண்டுக்கல் பூட்டைத் திறந்து இருட்டு தொலைக்க மாடப்பிறையில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க, இரண்டு பிரப்பம்பாய்கள் அறையில் சுருளவிழ அடுத்த பத்தாம் நிமிடம் நித்திராதேவி வசமானார்கள்.

                                                         ********

தமுக்கம் மைதானம் முழுக்கக் கதர்ச்சட்டைக்காரர்கள்  அங்குமிங்குமாகப் பரபரப்பாக அலைந்து கொண்டிருந்தார்கள். மோதிலால் நேரு வந்திட்டிருக்கார். ராஜன் டாக்டர் வந்துட்டிருக்கார் என்று கூட்டம் அலைமோத, காந்திஜி வந்துட்டிருக்கார் என்று குரல் எழுந்ததும் ஒட்டு மொத்தமாக காந்தியை வரவேற்க வந்தேமாதரம் ஒலித்துக் காத்து நின்றார்கள். 

நான்கு இளைஞர்கள் பாரத் மாதா கி ஜெய் முழங்கியபடி தார்ப்பாய் கொண்டு முன்னால் வைத்திருந்த குவியலை மூடியபடி இருந்தார்கள். காந்தி, மைதான வாசலில் இருந்து வேகமாக நடந்து உள்ளே மேடைக்குப் போனார். 

அந்த இளைஞன் வந்தேமாதரம் சொன்னபடி திரும்பப் பார்க்க, பின்னாலிருந்து பெண்குரலில் பாரத் மாதா கி ஜெய் முழக்கம். திரும்பிப் பார்க்க ராத்திரி பார்த்த பெண். 

இன்னிக்கு கச்சேரி இருக்கில்லியா? அவன் கேட்டபடி நடக்க அவள் அழகான புன்சிரிப்பே பதிலாகப் போனாள். 

அய்யரே, என்ன சிரிப்பு கருவாட்டுக் கொழம்பு சாப்பிட்டிருக்கியா என்று அவள் சொன்னதாகத் தோன்றியது. ஏ குட்டி கர்னாடக சங்கீதமா பாடப் போறே? வாதாபி கணபதி முழுக்க பாடுவியா என்று அவன் பகடி செய்வதாகத் தோன்ற இன்னொரு முறை சிரித்துப் போனாள்.

கூட்டம் எல்லாம் மீட்டிங் மேடைக்கு முன்னால் இருக்க, இந்த நாலு இளைஞர்களும் சிறிய மேடையாகப் பலகைகளையும் பெஞ்சுகளையும் போட்டு வீடுகளில் கொலு வைக்கிற மாதிரி அமைத்து மேலே நீலத் துணியை விரித்து மூட பெரிய பைகளில் இருந்து என்னென்னமோ பொருட்களை எடுத்து வைத்து எதை எடுத்தாலும் எட்டணா என்று குரல் உயர்த்தாமல் சொல்லிப் பார்த்துக்கொண்டார்கள். 

இரண்டாம் தடவை எதை எடுத்தாலும் எட்டணா என்று சொல்லி ஒரே குரலாக சோப்பு சீப்பு கண்ணாடி   பொம்மை என்று நூறு பொருள் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும்போது வந்தேமாதரம் சுபலாம் சுஜலாம் மலயஜ சீதலாம் என்று இனிமையான பெண் குரல். 

செவிமடுத்த அனைவரும் மெய் மறந்து நிற்க, கணீர் என்று சுவரம் உயர்ந்து எங்கும் பரவ, கூட்டத்தில் மூத்த விடுதலை வீரர்களெல்லாம் கை கூப்பி கண் மூடி கண்ணீருகுத்து நின்றார்கள்.  

கர்ப்பூரம் அருமையான பாட்டுடா என்று இன்னொரு இளைஞன் சொல்ல ஏதோ சந்தேகம் வந்தது போல் கர்ப்பூரமய்யன் மேடைக்கு ஓட அவன் நண்பர்கள் பின்னாலேயே நடந்தார்கள். மேடையில்  இறைவணக்கம், சற்று வித்தியாசமாக பாரதமாதா வந்தனையான வந்தேமாதாரம் முடிந்து கொண்டிருந்தது. 

ஓராயிரம் பேரைக் குரலில் தேசபக்தி அளித்து இன்று ஒரு நாள் முழுக்க தேசம் பற்றிய சிந்தனைகளில் ஆழ்த்தும் அந்தப் பெண் யாரென்று அறிந்தபோது கர்ப்பூரமய்யனுக்கு ஆச்சரியமில்லை. 

பாபுஜி. காந்தி காதில் டாக்டர் ராஜன் கிசுகிசுக்க, அவர் இரு கையும் வானத்தை நோக்கி உயர்த்தி ஹே ராம் என உரக்கச் சொன்னார். டாக்டர் கைகாட்ட, அந்தப் பெண் கதர்க்கொடி கப்பல் காணுதே விஸ்தாரமாகப் பாட, அனைவரும் மெய்மறந்தனர். அடுத்த பதினைந்து நிமிடத்தில் பாரத சமுதாயம் வாழ்கவே ஒலித்து கைதட்டலோடு ஓய்ந்தது.

காலை சந்திப்புகள் பாட்டு கொஞ்சம், பேச்சு கொஞ்சம் என்று கொஞ்சம் லேசாக இருப்பதாக காந்திஜியே சுட்டிக்காட்டினார். நான் இசை விரோதி இல்லை என்றாலும் கடவுள் வாழ்த்தை வந்தேமாதரம் பாடலாக்கி கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பாடியது நன்றாக இருந்தது என்றாலும் அந்த நேரத்தில் ஒரு முழுப் பஞ்சுக் கதிரை ராட்டையில் வைத்து நூற்றிருக்கலாம். நாம் இங்கே கூடியிருக்கும் மைதான ஓரத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் தண்ணீரை அடித்து ஊற்றிச் சுத்தப்படுத்தியிருக்கலாம் என்றார் அவர் பேச்சுக்கு நடுவே.

 பாபு இங்கே வருடக் கணக்காக தண்ணீர் கஷ்டம் என்று கூட்டத்தில் இருந்து யார்யாரோ எழுந்து சொல்ல, காந்தி ஆச்சரியப்பட்டு, வைகை நதி ஓடும் பூமி ஏன் தண்ணீர் கஷ்டம் என்று கேட்டார். மேடையில் ரெண்டு நிமிடம் கூட இருந்தவர்களிடம் பேசி சரி சுதந்திரம் வரட்டும், வைகையில் தண்ணீர் வரும் என்கிறார்கள் உங்கள் தோழர்கள். சீக்கிரம் சுதந்திரம் வரட்டும் என மேலே அழகாகத் தொடர்ந்தார். 

போனால் போகட்டும், அற்புதமான குரலில் நேர்த்தியாக வந்தேமாதரம் பாடிய இந்தக் கன்யகைக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்வோம் என்றார் அடுத்து. தாமரை மலர்வது போல் கூட்டத்தில் நடுவில் இருந்து இருகை தலைக்கு மேல் வைத்து ஆண்டவனை வழிபடுவது போல் எழுந்தாள் அவள். கைத்தட்டு காதைப் பிளந்தது. 

கர்ப்பூரமய்யனுக்கு ஏனோ அந்தப் பெண் பெற்ற பாராட்டு தனக்கே கிடைத்த மகிழ்ச்சி. ஆனால் அந்தப் பெண்ணின் பெயர் தெரியாமல் அவனுக்குத் துன்பமாக இருந்தது. 

நீ அற்புதமாக வங்காளிப் பாடல் பாடினயே பிறப்பால் வங்காளியா என்று காந்தி கேட்டார். கும்பகோணத்துக்காரி வங்காளம் தெரியாது என்று காந்திக்கு பதில் கிட்டியது. 

எல்லா மொழியும் எம்மொழி என்று நீங்கள் தமிழோடு பிற இந்திய மொழி ஒன்றாவது கற்றுக்கொள்க எனச் சொன்னார் அவர். 

சாப்பாடு நேரம் எல்லோரும் வரிசையில் நின்று இலையில் கட்டிய எலுமிச்சம் சாதம், தேங்காய்ச் சாதம், தயிர்சாதத்தை வாங்கி உண்ணலாம். பணம் படைத்தவர்கள் என்றால் அல்லது கட்டணம் கட்டி உணவு வாங்க ஆர்வமிருந்தால் ஒரு ரூபாய் ஒரு செட்டுக்குக் கொடுத்து தேசசேவை நிதியில் சேர்க்கலாம். 

கர்ப்பூரமய்யன் நண்பர்களை நாடிப் போனான். சாப்பாட்டை கொஞ்சம் தள்ளிப் போடலாம். பிசினஸ்ஸை தொடரலாம் என்ற நினைப்போடு அவர்கள் இருந்த இடத்துக்குப் போனான். 

மும்முரமாக மூன்று பேரும் எதை எடுத்தாலும் எட்டணா என்று கூவிக் கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு விட்டார்களாம். கர்ப்பூரம், கமிட்டி அன்னதானம் நடக்கும் இடத்துக்குப் போனபோது மலைப்பாம்பு போல பெரிய வரிசை சோற்றுக்காகக் காத்திருந்ததைக் கண்டான்.  

ஜனசபா கூட்டத் தொடருக்கு வந்திருக்கும் கூட்டத்தை விட கால்வாசி அதிகம் இலவச சோற்றுக்காக என்று தோன்றியது. 

நான் இங்கே நிற்கலாமா? பெண் குரல். அவனுக்குத் தெரியும் யாரென்று. 

பொண்ணு நீ எனக்கு முன்னால் நிக்கலாம். பின்னால் நிக்கலாம். கூடவே நின்றால் சந்தோஷமடைவேன் என்று பித்தனாக மனம் பிதற்றியது. அந்த சோற்று வரிசை முடிந்து விடாமல் நீளட்டும் என்று ஆசை எழ அவள் கூடுதல் இடம் விட்டு நடந்து வந்தாள். 

நல்லா பாடினே என்றான் கர்ப்பூரமய்யன்.   எங்கே கத்துக்கிட்டே?

அப்படியா? எங்க ஊர்லே மராட்டி ராவ்ஜிகள் சிலபேர் கல்கத்தாவிலே  ஜரிகை வியாபாரம் பண்ண சுலபமா இருக்க பெங்காலி படிச்சாங்க. நானும் அவங்க கிட்டே புத்தகம் இரவல் வாங்கி படிச்சேன். வந்தேமாதரம் பாட்டு எங்க தெருக்கார மராட்டி நடுவயது ஸ்திரி சொல்லிக் கொடுத்தது. 

இவ்வளவு செய்து மகாத்மா கிட்டேயே பாராட்டு வாங்கிட்டே. பெயர் தான் யாரும் தெரிஞ்சுக்கலே. 

கேட்கலே சொல்லலே. காந்திஜி கூட பெயர் கேட்கலே என்று குறைப்பட்டுக் கொண்டாள். 

அவருக்கு ஆயிரம் வேலை ஒண்ணு செய் எங்கிட்டே உன் பெயர் என்னனு ரகசியமாகச் சொல்லு நான் காந்திக்கு சொல்றேன் என்றான் கர்ப்பூரமய்யன். 

அவள் சிரித்தபடி பூரணியை கிறுக்கச்சியாக்கிட்டீங்களே சாமி என்றாள். சாமி இல்லே, கர்ப்பூரம், கர்ப்பூரமய்யன். இந்தக் கழுதைக்கு அவிடத்து வாசனை தெரியுமா என்று சொல்லியபடி கர்ப்பூரத்தைப் பார்க்க இரு கை உயர்த்தி நெட்டி முறித்தவன் உடனே நேரானான். 

வெட்கத்தில் அவள் முகம் சிவக்க, அன்னதான கவுண்டர் வந்திருந்தது. 

தயிர் சாதம் ஒரு பாக்கெட் தான் இருக்கு. சாதம் வடிச்சு ஆறவச்சு தயிர் கலந்தாறது, எலுமிச்சை சாதம் ஆளுக்கு ரெண்டு கொடுத்துடட்டா வந்தேமாதரம் என்று சாப்பாட்டு கவுண்டர் தொண்டர் சிரித்தபடி சொன்னார். 

பாதகமில்லை அந்த ஒரே ஒரு தயிர்சாத பாக்கெட் இருக்குன்னேளே அதைக் கொடுக்கறதுலே ஆட்சேபணை இருக்காதுன்னு நினைக்கறேன். 

முரட்டுக்கதர் ஜிப்பா போட்டிருந்த தொண்டர் சத்தம் போட்டுப் போட்டுப் பழக்கமான உச்ச ஸ்தாயியில் சொன்னார் – ஒரு ஆட்சேபணையும் இல்லை. மாமி இந்தாங்கோ.

 பூரணியிடம் அந்தத் தயிர்சாத பாக்கெட்டைக் கொடுத்தபடி சொன்னார் –  மராத்தியிலே ரொம்ப அம்சமா பாடினேள். சுத்த ஜலம் சுப்ப ஜதை மலைமேல் சீதாராம்.  

பூரணி கேட்காமலேயே இன்னொரு எலுமிச்சை சாத பாக்கெட்டும், ஜவ்வரிசி வடகமும் ஈந்தார். 

நிழலுக்காக கிடுகு வேய்ந்திருந்த பாதி மைதானத்தில் ஓர் ஓரமாக உட்கார்ந்தார்கள் இருவரும். தம்பி எங்கே?

அதை ஏன் கேட்கறீங்க. என் செருப்பு காலையிலே அறுந்து போச்சு, தச்சுண்டு வரேன் நீ நேரே மைதானத்துக்கு வந்து டாக்டர் சார் கிட்டே பேசிக்கோ என்றிப்படி போனவன் தான். நூறு வயசு தயாவுக்கு. இதோ வந்துட்டான் பாருங்க. 

வரும்போதே கை நிறைய சாதப் பாக்கெட்களோடு வந்து சேர்ந்தவன் தோளில் மாட்டிய கதர் ஜோல்னாப்பையைக் கழற்றினான். என்னடா இது பை நிறைய செருப்போடு வந்து நிக்கறே. செருப்பு விட்டெறிய காந்திக்கு எதிரி வந்திருக்கான்னு நினைச்சுடப் போறாங்கடா கஷ்டம் என்று சிரித்தாள் பூரணி. 

ஏற்கனவே அரையும் குறையுமாக் காதுலே வாங்கி மலை மலை  சீதாராம்னு பாடிட்டு இருக்காங்க என்று கர்ப்பூரமய்யன் சாப்பிட்டபடியே பேச்சில் கலந்து கொண்டான். 

ஏன் கேக்கறே அக்கா, பத்து மணி வரை செருப்பு தைக்கறவங்க யாரும் கண்ணுலே படலே. எல்லோரும் இங்கே வந்துட்டாங்க போல. நேரமாச்சேன்னு புதுச் செருப்பு வாங்கிட்டேன், அளவு இறுக்கம் எல்லாம் பழைய செருப்பு இருக்கற மாதிரி தானே. அப்புறம் திரும்பினா மாரட் வீதியிலே மூணு பேர் செருப்பு தைச்சுக்கிட்டிருந்தாங்க. சரி அதையும் விடுவானேன்னு பழைய செருப்பை தச்சு வாங்கிட்டு வர நேரமாச்சு.

 பூரணி தம்பியை கனிவாகப் பார்த்தாள். 

சார் நீங்க யார் நேத்து ராத்திரி பார்த்த ஞாபகம். சட்டென்று விஷயத்துக்கு வந்து விட்டான் அந்த தயா.  

ஏன் தம்பி தயா முழுப் பெயர் தயாசாகரன். அது அவனுக்கே தெரியாது. 

கர்ப்பூரமய்யன் தயிர் சாதத்தை ஒரு கவளம் எடுத்து உண்டபடி பூரணியைப் பார்க்க, நான் கல்லாண்டை தயா இது என் அக்கா பூரணி. ரெண்டு பேர் மத்தப்படி வீட்டுலே அப்பா அம்மா எல்லோரும் கல்லூர்  வழி. நீங்க? 

நான் கர்ப்பூரம். கர்ப்பூரவிநாயக அய்யன். எக்சிபிஷன் மகாநாட்டுலே   கடை போட்டு வியாபாரம் பண்றது தான் உத்தியோகம். என்னவா? எதை எடுத்தாலும் எட்டணா மற்றபடி மூணு ரூபாய்க்கு முப்பது ஐட்டம் அதோட வளையம் விட்டெறிஞ்சு எதுலே போய் உக்காறறதோ அது இலவசம். இப்படி ஜீவிதம் போறது. 

அடுத்த பத்தாவது நிமிடம் பூரணியும் தயாவும் கர்ப்பூரய்யன் கடையில் இருந்தார்கள். ஏற்கனவே அங்கே இரண்டணாவுக்கு வாங்கி வளை எறிந்து ராட்சசத் தலை முடியை வாரும் பெரிய சீப்பு, நிறம் வெளுத்த டபரா செட் என்று குழந்தை மாதிரி சந்தோஷத்தோடு வாங்கிக் கொண்டிருந்தாள் பூரணி. 

எவ்வளவு பிரயத்தனப்பட்டாலும், காய்கறி நறுக்க   தட்டு சுழன்று கரகரவென்று சுழன்று வெட்டும் மெஷின்மேல் தூக்கியெறிந்த வளை உட்காரவே இல்லை. பூரணிக்கு மட்டுமில்லை, வந்தேமாதரம் சொல்லி வளை வீசிய எல்லோருக்கும். 

மூணு மணிக்கு ம்ருத்யுஞ்ஜெயன் சாப்ரு, சம்யுக்த் தேஷ்பாண்டே, பினாய் கௌரங்க், பரசுராம் சோப்தின்னு பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் நம்மைத் தேடி வந்து முழங்க இருக்காங்க. 

எட்டணா கடை வாசலில் நின்று ஒரு தொண்டர் இரைந்தார் – 

காந்திஜி காலையிலே பேசிட்டுப் போனதும் எல்லோரும் வந்தேமாதரம் சொல்லிட்டிருந்தாங்க. ஏம்பா கர்ப்பூரம்  அவங்களை எதை எடுத்தாலும் எட்டணான்னு ஜபிக்க வச்சுட்டியே. 

அவர் பின்னால் வந்த டாக்டர் ராஜன்   சொன்னார் – இந்தக் கடையை சாயந்திரம் ஆறு மணிக்கு விரிக்கலாம். இப்போ எல்லோரும் மீட்டிங் போங்க. 

டாக்டர் ராஜன் கர்ப்பூரத்தின் தோளில் தட்டி நாலு வந்தேமாதரம் சொல்ல கூட்டம் பெரும்பாலும் உதிர்ந்து பொதுக்கூட்டப் பந்தலுக்குள் போனது. 

ஏம்மா உனக்குத் தனியாச் சொல்லணுமா? 

நாக்கை சன்னமாகக் கடித்தபடி அடுத்த வளையை வாழைக்காய் நறுக்கும் யந்திரத்தை நோக்கிப் போட்டாள் பூரணி. பச்சென்று அதன் மேல் பாந்தமாக உட்கார்ந்தது வளை. அவளே கைதட்டிக் கொண்டாள். நம்ப முடியாத ஆச்சரியத்தோடு கர்ப்பூரமய்யனும் சிநேகிதர்களும் பார்த்துக் கொண்டிருக்க மூணுரூபா மிஷின் அது என்று முணுமுணுத்தான் அய்யன். 

அட நீயாம்மா பூரணிதானே பெயர்? காலையிலே தேசிய கீதம் பாடிட்டு சாயந்திரம் கர்ப்பூரமய்யர் கடையிலே வம்படிச்சுட்டிருக்கே. என்னோடு வா. 

அடுத்த பத்தாவது நிமிடம் தொன்று நிகழ்ந்ததனைத்தும் என்று   பாரதி பாட்டு பூரணி குரலில் மிதந்து வந்து மகாநாட்டுச் சூழ்நிலையை ஏற்படுத்தியது. 

கர்ப்பூரம், இந்தப் பொண்ணு ஒருத்தி போதும், நம்ம தொழிலை முடக்கி தலையிலே துண்டு போட வச்சுடும். 

கர்ப்பூரமய்யனின் சிநேகிதர்களில் ஒருத்தன் அசூயையோடு சொல்ல மற்றவர்கள் உடன்பட்டுத் தலையாட்டினார்கள். ஒருத்தன் மட்டும் காவலாக இருக்க, விற்பனை மேடையை தார்ச்சீலை போட்டு மூடிவிட்டு கர்ப்பூரமய்யனும் மற்றவர்களும் பாட்டு வந்த திசைக்கு நடந்தார்கள்.

(தொடரும்)

Series Navigationஓ நந்தலாலா
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *