ஐஸ்லாந்தின் நிலவதிர்வால் எரிமலை வெடிக்குமா?

This entry is part 4 of 6 in the series 9 ஜூலை 2023

குரு அரவிந்தன்

அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இந்தத்தீவான ஐஸ்லாந்து இருக்கின்றது. திமிங்கிலங்களை அருகே சென்று பார்க்கக்கூடிய இத்தீவில், சாமத்திலும் சூரியனைப் பார்க்க முடியும். சென்ற கிழமை 24 மணி நேரத்தில் இங்கு ஏற்பட்ட 2200 நிலவதிர்வுகள் காரணமாக மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள். எந்த நேரமும் எரிமலை வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தச் சிறிய தீவில் சுமார் 30 மேற்பட்ட எரிமலைகள் இருக்கின்றன. பூமிக்கடியில் உள்ள தட்டுக்கள் முட்டிக் கொள்வதால், இந்த நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இங்கே உள்ள எரிமலை ஒன்று 2010 ஆம் ஆண்டு வெடித்த போது விமானப் போக்கு வரத்தே அப்பகுதியில் ஒருவாரகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புகையும், சாம்பலும் பல மைல் தூரங்களுக்குக் காற்றோடு பரவி மாசடைய வைத்திருந்தன.

ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்குவிக் பகுதியிலேயே இந்த நில அதிர்வுகள் இப்போது பதிவாகி இருக்கின்றன. அதன் காரணமாக இப்பொழுதும் அங்குள்ள மக்கள் பயப்படுகின்றார்கள். பொருளாதார வசதிகளுக்காகச் சுற்றுலாப் பயணிகளையே அதிகம் நம்பியிருக்கிறார்கள். பொருட்களை இறக்குமதி செய்வதால் பொருட்களின் விலை இங்கு சற்று அதிகமானது. குற்றங்களே நடக்காத நாடு என்பதால் வீதிகளில் பொலிசாரைக் காணமுடியாது. நான் அங்கு நின்ற நாட்களில் ஒரே ஒரு பொலிஸ்காரரைக் கோப்பிக் கடையில் சந்தித்து உரையாட முடிந்தது. ஆங்கிலமும் பேசும் இங்குள்ள மக்கள் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர்கள். வீடுகள் கூட்டமாக இல்லாமல், தனித்தனியாகவே அங்குமிங்குமாக இருக்கின்றன. மலைச்சரிவில் உள்ள சில வீடுகளின் கூரைகளைப் புற்கள் வளர்ந்து மூடியிருக்கின்றன. பபின் என்று சொல்லப்படுகின்ற அழகிய பறவைகளை இங்கு காணமுடிந்தது. செம்மறி ஆடுகளும், குதிரைகளும் நிறை இருக்கின்றன. சிக்காக்கோவில் ‘பான்பிட்ஸா’ போல, இங்கே கிடைக்கும் ‘ஐஸ்லாண்டிக் கொட்டோக்’ மிகவும் ருசியானது.

நோர்ஸ் இனத்தைச் சேர்ந்த வைக்கிங் காலப்பகுதியில்தான் இங்கு குடியேற்றங்கள் எற்பட்டன. சுமார் 3 லட்சம் மக்கள்தான் இங்கு வசிக்கிறார்கள். பெற்றோர் விரும்பியவாறு பிள்ளைகளுக்கு இங்கே பெயர் வைக்க முடியாது. தொடர்வண்டிகள் இங்கு இல்லை. இவர்களது முன்னோர்கள் ஒரு காலத்தில் பயங்கரமான கடற்கொள்ளையர்களாக இருந்தார்கள். கழுத்தைக் கோடாரியால் வெட்டுவது, மரத்திலே கட்டி உயிரோடு எரிப்பது போன்ற தண்டனைகளைக் கொடுத்தார்கள். இங்குள்ள காட்சியகத்தில் இது போன்ற தண்டனைக் காட்சிகளைப் பார்க்க முடிந்தது. இன்னுமொரு காட்சிப் பொருளாக 2 ஆம் உலகயுத்தத்தில் ஜெர்மனியால் சுட்டு விழுத்தப்பட்ட ரஸ்ய விமானத்தின் உடைந்த பாகங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் அமெரிக்கச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தேடுதல் செய்தபோது அமெரிக்காவிடம் இருந்து ரஸ்யா அந்த விமானங்களை வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்தது.

நிலத்திற்கு அடியில் இருந்து திடீர் திடீரென ஒரு பனைமர உயரத்திற்கு நீர் ஊற்றுக்கள் சீறிப்பாய்கின்றன. நிறைய நீர்வீழ்ச்சிகளும் இருக்கின்றன. சுடுதண்ணிக் குளங்களும் இங்கு இருக்கின்றன. வீடுகளைச் சூடாக்க இந்த சூடான தண்ணீரையம், நிலவடிச் சூட்டுகற்றையும் பயன்படுத்துகின்றார்கள். தீவைச் சுற்றி வருவதற்கு நல்ல நிலையில் ‘றிங்ரோட்’ என்ற நெடுஞ்சாலையை அமைத்திருக்கிறார்கள். வண்டியை வாடகைக்கு எடுத்து விடும்பிய இடங்களைச் சென்று பார்க்கக்கூடிய வசதிகள் உண்டு. பனிக்காலத்தில் சிறிய வீதிகளை மூடிவிடுகிறார்கள். இக்காலத்தில் ‘நொதேன் லைட்’ என்று சொல்லப்படுகின்ற வானத்தைப் பல வர்ணங்களில் பார்க்க முடியும். நோர்வே நாட்டு மன்னனின் ஆட்சிக்காலத்தில் இந்தத் தீவுகளுக்குப் பெயர்சூட்டும் போது தவறு செய்து விட்டார்கள். மாலுமிகள் தகவல் தெரிவித்தபோது ஒரு தீவு பனியாலும், அருகே உள்ள இன்னும் ஒரு தீவு பச்சைப் பசேலென்று தாவங்கள் சூழ்ந்திருப்பதாகவும் அறிவித்தபோது, நேரடியாகச் சென்று பார்க்காததால் அருகே இருந்த பனியால் சூழப்பட்ட கிறீன்லாந்திற்கு அந்தப் பெயரையும், தாவரங்கள் வளர்ந்திருந்த இந்தத் தீவக்கு ஐஸ்லாந்து என்றும் வரலாற்றுத் தவறு காரணமாகப் பெயர் நிலைத்து விட்டது.

இதேபோன்ற எரிமலைகள் ஹவாய் தீவகளிலும் இருக்கின்றன. அமெரிக்காவின் ஒரு மாகாணமாகக் ஹவாய் தீவகள் இருப்பதால், தொழில் நுட்ப அறிவியல் சார்ந்த வசதிகள் அங்கே நிறைய இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் அருகே செல்வதைத் தடுப்பதற்காக வேலிகள் போட்டிருக்கிறார்கள். கெந்தகப்புகையைச் சுவாசித்தால், உடலுக்குக் கேடு தரும் என்பன போன்ற எச்சரிக்கை வாசகங்களையும் எரிமலைப் பகுதிகளில் அறிவிப்புப் பதாகை மூலம் தெரியப் படுத்தி இருக்கின்றார்கள். இதைவிட நில அதிர்வு, எரிமலை வெடிப்பு போன்றவற்றை முற்கூட்டியே கணித்து எச்சரிக்கும் அலாரங்களையும் பொருத்தி இருக்கின்றார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு அவை எப்படி இயங்குகின்றன என்பது போன்ற செய்கை முறைகளையும் செய்து காட்டுகின்றார்கள். இப்படியான வசதிகளால் சமீபகாலங்களில் ஹவாயில் உடமைகள் அழிக்கப்பட்டாலும், உயிர்ச் சேதம் குறைந்திருப்பதை அறிய முடிகின்றது. இந்த வசதிகள் ஐஸ்லாந்தில் இருக்கவில்லை.

6 Attachments • Scanned by Gmail

Series Navigationவிலை ஓ நந்தலாலா
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *