ஆர் வத்ஸலா
நிலவைத் தொட்ட மணித்துளியை
சிறைப்படுத்தி காட்டியது
தொலைக்காட்சி
சிறு வயதில் நிலாச்சோறு தின்றதை
அசை போட்டார்
அப்பா
சோஃபாவில் சாய்ந்தபடி
கைகொட்டி கொண்டாடினான்
மகன்
‘பாப்கார்ன்’ தின்று
‘கோக்’ குடித்தபடி
“அம்மா, பசிக்குது” என்றான்
நடைபாதையில் உறங்கி எழுந்த
சிறுவன்
நீரற்ற கண்களுடன்
நிலவை வெறித்தாள்
பாப்பம்மா