This entry is part 2 of 5 in the series 8 அக்டோபர் 2023

ஆர் வத்ஸலா

அடுத்த முறை 

யாரிடமாவது 

அன்பு செலுத்தினால்

வெளிக்காட்டாதே

இப்படி அதை

அடுத்தமுறை

காண்பிக்காதே

கண்களில் 

இத்தனை கரிசனத்தை

யாரிடமும் 

அடுத்தமுறை 

வெளிப்படுத்தாதே 

இவ்வளவு அழகான  சொற்களில்

உன் மதிப்பை

யாரிடமும்

அடுத்த முறை 

பிரதிபலிக்காதே

உன் கண்களில் 

யார் வலியையும்

இவ்வாறு

அடுத்த முறை 

உன் சொந்த ஊரின் பெயரை சொல்லாதே

உனதன்பு நிரந்தரம்

என நம்புபவரிடம்

நீ விலகிய பின்

தைத்து நிற்கக் கூடும்

முட்களாக

இவற்றின் நினைவுகள்

அவர் மனதாழத்தில் 

நாள்காட்டியில் 

தேதி கிழித்ததும்

உனது ஊர் கோவிலில்

திருவிழா அன்றென்றறிந்து

எழலாமவை

சுரீரென

எனக்கு ஒன்றுத் தோன்றுகிறது

இதெயெல்லாம் விட

அடுத்த முறை

நீ அன்பு செலுத்தாதையேன்

யாரிடமும்

இந்த அளவு

Series Navigationமறுபடியும் நான்கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023