ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 3

This entry is part 3 of 3 in the series 12 நவம்பர் 2023

“உங்க ஆபீஸர் பேசினார். வந்தவுடனே உங்களைப் பேசச் சொன்னார்…”

“வண்டி பஞ்சராயிருக்கு. நல்ல வேளை அவனை விட்டுட்டுத் திரும்புறபோதுதான் பஞ்சர். இல்லைன்னா அவன் ஸ்கூல் போறதும் லேட்டாயிருக்கும்…” என்றவாறே மெதுவாய் வண்டியை உருட்டி வந்து வராண்டாவில் ஸ்டான்ட் போட்டு நிறுத்தினான். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளிக் கொண்டு வந்ததில் மூச்சிரைத்தது. 

“வழியிலே ஏதாச்சும் ஒர்க் ஷாப்புல விட வேண்டிதானே…?”

“ஏழு மணிக்கு எந்த ஒர்க் ஷாப் திறந்து வச்சிருக்கான்…? ஒன்பதாகும்…பாஸ்கரன்ட்டத்தான் விடணும்…”

அன்று பஸ்ஸில்தான் ஜங்ஷன் வரை போயாக வேண்டும். அப்படியானால் கால் மணி நேரம் முன்னதாகக் கிளம்ப வேண்டும். வேலை நாள் பார்த்துத்தான் பஞ்சராகிறது. லீவு நாளில் ஆனால் கூடப் பரவாயில்லை. இந்தப் பரபரப்பு இருக்காது. 

மனதில் பதிந்த காலைப் பதட்டத்தோடு  தொலைபேசி நம்பர்களை அழுத்தினான். 

“உறலோ…ஏ.இ.இ., இருக்காரா?” 

“வணக்கம்  நாந்தான் பேசுறேன்…”

“வணக்கம் ஸார்…கூப்பிட்டீங்களாமே?”

“ஆமா கணேசன்…நேத்து கலெக்டர் மீட்டிங் போயிருந்தேனில்லையா…அது சம்பந்தமாகத்தான் சொல்லணும்னு…க்ரீயெவின்ஸ் டே பெட்டிஷன் நம்ம கிட்டே எத்தனை பெண்டிங்?” 

“”மொத்தம் அஞ்சு இருக்கும் ஸார்…”

“அதெல்லாத்துக்கும் ஃபைனல் ரிப்ளை அனுப்பிட்டமா?”

“இல்ல சார்…சைட் இன்ஸ்பெக்ஷன் முடிச்சு பதில் கொடுக்கச் சொல்லி செக்ஷன் ஆபீசர்களுக்கு சர்க்குலர் கொடுத்திருக்கோம்…”

“எத்தனை ஐடெம் அந்த மாதிரி?”

“நாலு சார்…”

“அஞ்சாவது…?”

“அது ஒரு டி.ஏ.பில் பிரச்னை சார்…”

“யாருடையது…?”

“நம்ம ஆபீஸ்ல ரெண்டாயிரத்து அஞ்சுல ரிடையர்ட் ஆகியிருக்கார் சார்…ஒரு டிரைவர்…ஜீப் டிரைவர் சார்…அப்போ கொடுத்த பில் சார் அது…அதை இன்னைக்கு வரைக்கும் சாங்ஷன் பண்ணலைன்னு புகார் கொடுத்திருக்காரு…”

“நாமளா சாங்ஷன் பண்ணனும்?”

“உங்க ப்ரிடிசெஸ்ஸார் பண்ணியிருக்கணும் சார்…. என்ன பிரச்னையோ, அவுரு போட்டு வச்சிட்டுப் போயிட்டாரு…இப்போ வந்து இவர் நம்ம கிட்டே தொங்குறார் சார்…”

“நாம சாங்ஷன் பண்ணலாமா? எனி ப்ராப்ளம்…?”

“அதெப்படி சார்…ஓவர் ஒன் இயர்…சுப்பீரியரோட ஒப்புதல் வாங்காம செய்ய முடியாது சார்…”

“ரைட் ஓ.கே…இன்னைக்கு அந்த அஞ்சு ஃபைலயும் புட் அப் பண்ணுங்க…ஃபைனலைஸ்  பண்ணிடுவோம்…அடுத்த வாரம் கலெக்டர் மீட்டிங் போது நம்ம ஆபீஸ் பென்டிங் எதும் இருக்கக் கூடாது…ஓ.கே…?”

“ஓ.கே…ஸார்…”

“சார் இன்னொரு விஷயம்…”

“என்ன…?”

“இன்றைக்கு ஆபீஸ் வர்றீங்களா, கேம்ப்பா சார்?”

“கேம்ப்தான்.. போகணும்…வெள்ளிமலை சைட்டுக்குப் போறேன்…ஏன்?”

“ஆபீஸ் வந்தீங்கன்னா நல்லாயிருக்கும்…ரெண்டு மூணு பில் டிரஷரிக்கு அனுப்பணும்…அழகேசன், எஸ்.டி..டி. யோட ஜி.பி.எப். வேறே இருக்கு…”

“அதுக்கென்ன இப்போ அவசரம்?  நான் வந்து பார்த்துக்கலாம்…”

“சார், அது அப்படியில்ல… டார்கெட் முடிக்கலைன்னா அதுக்கு தனி நடவடிக்கை. இது அவரோட பர்ஸனல்…நிறுத்தக் கூடாது…

“நான் இப்ப சைட்டுக்குத்தான் போறேன்…வேலை எந்தளவுக்கு முடிஞ்சிருக்குன்னு பார்த்துக்குறேன்…”

“ஒருத்தரோட பர்ஸனல மட்டும் தயவுசெய்து நிறுத்தாதீங்க…”

“அட்வான்ஸ் போடுறது, பயணப்படி வாங்குறது இதிலெல்லாம் மட்டும் கவனமா இருக்காங்கல்ல…அதுபோல வேலைலயும் இருக்க வேண்டாமா? ட்டியூட்டியையும் சின்சியரா செய்யணுமில்லையா? 

“அது ஏன் டிலே ஆகுதுன்னு கூப்பிட்டு வச்சி ரெவ்யூ பண்ணுங்க ஸார்…அதுக்கா இதை நிறுத்தாதீங்க…”

எதிர் வரிசையில் அமைதி. 

“சரி, பார்ப்போம்…முடிஞ்சா வர்றேன்…” – லைன் துண்டிக்கப்பட்டது. 

வரமாட்டார் என்று தோன்றியது இவனுக்கு. அலுவலருக்கும் பாதிக்காமல், பணியாளருக்கும் பாதிக்காமல் ஒரு விஷயத்தை சுமுகமாக முடிக்க வேண்டியது தன் கடமையாகிறது. 

ஆனால் விதிமுறைப்படி இன்னின்னவற்றை இப்படியிப்படி செய்துதான் ஆக வேண்டும் என்று எடுத்துச் சொல்லி அவை மறுக்கப்படும்பொழுது? மனதுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. தன்னை நம்பித்தான் அலுவலகத்தை ஒப்படைத்துச் செல்கிறார். அலுவலக நிர்வாகம் அவர் சார்பாகத் தன்னிடம். உயர் அலுவலர்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும். கீழுள்ளோரின் தேவைகளையும் பூர்த்தி செய்தாக வேண்டும். அதே சமயம் அலுவலகப் பணியாளர்களும் பாதிக்கப்படாமல் கொண்டு செல்ல வேண்டும். எதுவொன்றானாலும் தன்னிடம்தான் வந்து நிற்பார்கள். அவர்களின் தேவைகளைத் தாமதமின்றிப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியது தன்னின் கடமையாகிறது. அதில் அலுவலரின் நற்பெயரும் அடங்கியிருக்கிறது. அம்மாதிரித் தாமதமின்றி செய்து கொடுப்பது, தான் பெயர் வாங்கிக் கொள்வதற்கல்ல. அலுவலரின் பெயரைக் காப்பாற்றுவதற்காக. அந்த அலுவலகத்தின் நிர்வாகம் நல்லபடியாக நடக்கிறது என்பதை உயர் அலுவலகர்கள் உணர வேண்டும் என்பதற்காக. இப்படியான தன்னின் பொறுப்பு அங்கே மதிக்கப்படாமல் ஒதுக்கப் படுவது போல் உணர நேர்ந்தால்? இப்பொழுது அப்படித்தான் உணரத் தலைப்பட்டான் கணேசன். தன் மேலாளர் பதவிக்கான கவுரவம் பாதிக்கப்படுவதாகவே நினைத்தான். 

“பேசி முடிச்சிட்டீங்களா? ஆபீஸ் வேலைக்கு இப்படி வீட்டு ஃபோனைப் பயன்படுத்தினா பில் எக்கச் சக்கமா ஏறுது…பணம் யாரு குடுக்குறது? நாமதானே கட்டியாகணும்?”

“சரி, விடு…ரொம்பத் தேவைன்னாத்தானே…”

“ஃபோனே வேண்டாம்…எடுத்திடுங்கன்னு சொல்றேன்…அதான் செல் வேறே வச்சிருக்கீங்களே…அதுக்கு ஆகுற செலவு பத்தாதா?”

சொல்லியவாறே சுசீலா கொண்டு வந்து வைத்த சாப்பாட்டுக் காரியரை எடுத்துப் பைக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினான். 

ஜங்ஷனுக்குப் போகும் நேரடி பஸ் இருக்குமோ, போயிருக்குமோ என்ற சந்தேகத்தில் நடையை எட்டிப் போட்டான். உள்ளுரில் வேலை பார்க்கும் பலரும் வேக வேகமாய்க் கைகளை வீசிக் கொண்டு வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள். 

தான் உள்ளுரில் இருந்தபோது காலையில் ஆறு பத்துக்கு ஸ்கூல் பையனை ஏற்றி அனுப்பிய கையோடு நாலைந்து பேர் சேர்ந்து வாக்கிங் போனதையும், போக, வர சுமார் ஆறு கி.மீ, தூரம் நடந்து திரும்புகையில் சந்தையுள் கூட்டமாய் நுழைந்து புதிதாகக் காய்கறி வாங்கி வந்த நடைமுறையையும் நினைத்துப் பார்த்தான். 

மறுபடியும் தான் உள்ளுர் மாறுதலில் வந்து என்று அந்த வாக்கிங் கோஷ்டியோடு மீண்டும் சேர்ந்து கொள்ளப் போகிறோமோ? என்று நினைத்தபோது ஏக்கப் பெருமூச்சு எழுந்தது. 

இப்பொழுதுதான் வெளியூர் போயிருக்கிறோம். அதற்குள் உள்ளுருக்கு எப்பொழுது வருவது என்று நினைத்துப் பார்க்கிறோமே? காலம் காலமாய் குறைந்தது பத்துப் பதினைந்து வருடங்களாய் வெளியூரிலேயே மாறுதல் கிடைக்காமல் பணிபுரியும் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணமும் கூடவே எழுந்த போது தனது எண்ணம் ரொம்ப அதீதம் என்று தோன்றியது. என்னதான் ஆனாலும் மனிதனுக்கு சுயநலம் என்பது அவ்வப்போது தோன்றிக்கொண்டேதான் இருக்கும் போலும்…இப்டி தினசரி அடிச்சிப் பிடிச்சி எதுக்கு ஓடணும்…சிவனேன்னு கிடைக்கிற சம்பளம் போதும்னு உள்ளூர்ல கிடக்க வேண்டிதானே…? சுசீலாவின் அன்றாட அலுப்பு நினைவு வந்தது. 

வாக்கிங் கோஷ்டி இந்நேரம் எங்கு போய்க் கொண்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்தான். நிச்சயமாக ரேஸ்கோர்ஸ் நெருங்கியிருப்பார்கள். அங்கு போய் அங்கிருக்கும் கூட்டத்தைப் பார்த்தவுடன் குஷி பிறந்து விடும் எல்லாருக்கும். நான் முந்தி நீ முந்தி என்று எல்லோரும் அந்த வட்ட மைதானத்தில்; ஓட ஆரம்பித்து விடுவார்கள். வயது வித்தியாசமில்லாமல் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடுவது பார்க்கவே புது உற்சாகமாய் இருக்கும். வியர்வை சொட்டச் சொட்ட பனியன் தெப்பமாய் நனைந்தால்தான் திருப்தி. அந்த அனுபவமே தனி. 

அப்படியான இந்த நேரத்தில் தான் ஆபீசுக்கு என்று கிளம்பியாயிற்று. ஜங்;ஷன் போய் காலை ஏழே முக்காலுக்குக் கிளம்பும் அந்தப் பாசஞ்சர் ரயிலில் ஏறி அமர வேண்டும். இரண்டு மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு அடையும் அலுவலகம். 

வெளியூரிலிருந்து எண்பது கி.மீ. கடந்து வரும் தான் அலுவலக நேரமான பத்து மணிக்குள் தாமதமின்றிப் போய்ச் சேர்ந்து விடுகிறோம்…ஆனால் உள்ளுரில் உள்ள பலரும் பத்தரை பத்தே முக்கால் என்று படுதாமதமாக வரும் நடைமுறை உள்ளதே? இது என்ன கெட்ட பழக்கம்?

அந்த அலுவலகத்தில் பதவி உயர்வில்; பணியில் சேர்ந்த அன்று இவனைப் பெரிதும் நெருடிய விஷயம்  அதுவாகத்தான் இருந்தது. 

இந்த எண்ணங்களுடே நேரடி சிட்டி பஸ்ஸில் ஏறி அமர்ந்தான் கணேசன்.

Series Navigationகனடா ‘கிராமத்து வதனம்’ முன்னெடுத்த நவராத்திரி விழா
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *