ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 6

This entry is part 2 of 2 in the series 3 டிசம்பர் 2023

( 6 )

அய்யா, இங்கே சொருகட்டுங்களா…? – கேட்டவாறே எரிந்து கொண்டிருக்கும் பத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இடம் பார்த்துக் கொண்டிருந்தார் பியூன் லட்சுமணன்.

இந்த பாருங்க லட்சுமணன், நான் உங்களுக்குப் பலமுறை சொல்லிட்டேன்…என்னை இப்படி ஐயா கொய்யான்னெல்லாம் கூப்பிடாதீங்கன்னு…கேட்க மாட்டேங்கிறீங்க. சாதாரணமா சார்ன்னே கூப்பிடுங்கன்னு சொன்னா திரும்பத் திரும்ப இப்டியே கூப்பிடுறீங்களே? எனக்கு ரொம்பக் கூச்சமா இருக்கு…

ஐயா, உங்களை மாதிரி மனுசாளைக் கூப்பிடாம வேறே யாரைக் கூப்பிடச் சொல்றீங்க? நல்ல மனசுள்ளவாளைத்தான் மனசோட அப்படிக் கூப்பிட முடியும்…

சொன்னால் கேட்க மாட்டார். அவர் பாணி அது. வயசாளி…பெரிய பெரிய அதிகாரிகளிடமெல்லாம் வேலை பார்த்தவர். ஓய்வுபெறும் கடைசிக் காலத்தில் உள்ளுரோடு இருப்போமே என்று இங்கு வந்திருக்கிறார். பொறுப்பானவர். எல்லோரிடமும் மரியாதையோடும், அன்போடும் பழகுபவர். அலுவலகத்தைக் குடும்பம்போல் நினைத்து அக்கறையாய்ச் செயல்படுபவர். அவர் மாதிரி ஆட்களையெல்லாம் இப்போது பார்க்க முடிவதில்லை. இன்றைய இளைய தலைமுறைக்கு இந்தப் பொறுப்புணர்ச்சியில் கால் பங்கு கூட இருப்பதில்லை.

அலுவலகம் வந்தால் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடக்கூட சொல்லி வாங்க வேண்டியதிருக்கிறது. அத்தோடு கடமை முடிந்தது என்று எதிர்ச்சாரியிலுள்ள டீக்கடையில் போய் அமர்ந்து விடுகிறார்கள். அதுதான் ஆபீஸ் போல…எத்தனை முறை சொன்னாலும் மண்டையில் ஏறுவதில்லை. சற்றுக் கறாராகக் கண்டித்தால் இஷ்டத்திற்கு எதிர்த்துப் பேசும் தன்மை. அதையும் மீறினால் இவன் என்னை அப்படித் திட்டினான், இப்படி வைதான் என்று

மொட்டை பெட்டிஷன். பிறகு அதற்கு ஒரு என்கொயரி, அறிக்கை. ஆபீஸில் செய்ய வேண்டிய வேலைகள் வண்டி வண்டியாய் இருக்க – அத்தனையையும் மூலையில் தள்ளிவிட்டு இதற்கான நேரங்கள் வீணாகும் கொடுமை. சகிக்க முடியாத அவலங்கள் எத்தனையோ…!

அலுவலகத்தில் பொறுப்பாகச் செயல்படக்கூடியவர்கள் அனைவரையும் சுணங்க வைக்கும் நிகழ்வுகள். நிறைய விஷயங்களை வாய்விட்டே பேச முடிவதில்லை. கடமையைக் கருத்துணர்ந்து செய்ய மாட்டோம். அதைச் சுட்டிக் காட்டி யாரும் சொல்லவும் கூடாது என்கிற விட்டேற்றியான மனப்பான்மை.

இந்த மாதிரிச் சங்கடங்களுக்காகத்தான் நான் ப்ரமோஷனே வேண்டாம்னு எழுதிக் கொடுத்துட்டேன். இதுன்னா நாமுண்டு நம்ம சீட்டு வேலையுண்டுங்கிற அளவுல முடிஞ்சு போயிடும். மானேஜராப் போய் உட்கார்ந்தா ஆபீஸையே கட்டி மேய்க்கணும். எவனும் ஒழுங்கா வேலை பார்க்க மாட்டான். எல்லாத்தையும் கேட்டுக் கேட்டு வாங்கணும். நாமளே உட்கார்ந்து மாங்கு மாங்குன்னு எழுதணும். கூப்பிட்டுக் கேட்பாங்க…எவன் பதில் சொல்றது? ஃபைனான்சியலா பெரிய அளவுல பெனிஃபிட்டும் இல்ல. ஒரு இன்க்ரிமென்ட்தான்…இதுக்கு வெளியூரு போகணும்…தேவையா?

-இப்படிப் புலம்பி பதவி உயர்வே வேண்டாம் என்று மறுத்தவர்கள் எத்தனையோ பேர்.

இப்டி இருக்கட்டுங்கய்யா…அப்பத்தான் பத்தி மணம் உங்களுக்கு வரும்…

சொல்லிக் கொண்டே தன் பின்னால் இருந்த சுவாமி படத்தில் செருகப் போனார் லெட்சுமணன்.

அலுவலகங்கள்ல எந்தச் சாமி படமும் இருக்கக் கூடாது…ஏன்னா எல்லாச் சாமிகளையும் கும்புடுறவங்க வேலை பார்க்கிற, வந்து போகிற இடம் இது. இங்க நம்ம கடமைதான் நமக்கு சாமி. அதைச் சரியாச் செய்தோம்னா சாமியக் கும்பிட்ட மாதிரிதான். வந்துபோகிற பொது ஜனங்களுக்கு வேணுங்கிறதை மனசு கோணாம உடனுக்குடனே செய்து கொடுத்து அவுங்க திருப்தியா திரும்புறாங்;களில்லியா? அதுதான் முக்கியம். அவுங்க முகத்துல ஒரு நிறைவை மகிழ்ச்சியை பார்க்கிறோமில்லியா? அத விடவா ஒரு சாமி வேணும்?

ஐயா, உங்களோட பேச முடியுங்களா? நான் பழைய ஆளுங்கய்யா…என்னை விட்ருங்க… – சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்தார் லெட்சுமணன்.

குட்மார்னிங்க சார்…

வணக்கம்மா…சொல்லிவிட்டு அந்தப் பெண் பணியாளரை நேரே நோக்கினான் இவன். பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட அவர்கள்

ஸாரி சார்…வர்ற வழிக்கு கோயிலுக்குப் போயிட்டு வந்தேன்…லேட்டாயிடுச்சி…

வெளியூர்ல இருக்கிற நான் பத்து மணிக்குள்ள வந்திடறேன்…உள்ளுர்ல அதுவும் இந்தச் சின்ன டவுன்ல இருக்கிற நீங்க தினசரி லேட்டா வர்றீங்க…எத்தனை தடவை சொன்னாலும் மாற மாட்டீங்க…அப்படித்தானே…?

அப்படியில்லை சார்…இன்னைக்குதான் லேட்டாயிடுச்சு…

தினமும் அப்படித்தானே மேடம் வர்றீங்க…கோயிலுக்குப் போனேன்னா அது

ஆபீஸ் டயத்துல சேர்த்தியா? அது உங்க பர்ஸனல்…

நாளையிலேர்ந்து கரெக்டா வந்திடுறேன் சார்…

இவன் மௌனமானான். வாடிக்கையான பதில்தான். தினமும் தாமதமாகவே வந்து, அது கேள்விகளற்ற வாடிக்கையாகவே கருதப்பட வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். இவர்களுக்குப் பதமாகச் சொன்னாலும், கோபமாகச் சொனானாலும் எதுவும் உறைப்பதில்லை.

இது சரிப்படாது என்று இரண்டு நாள் தொடர்ந்தாற்போல ‘தகவலில்லை’ என்று பதிவு செய்தான். அன்று கோபித்துக் கொண்டு விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். பிறகு அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்பு அனைத்தையும் அன்று அவனே எழுதி அனுப்ப வேண்டியிருந்தது. மூன்றாம் நாள் வந்த அந்தப் பெண்மணிக்கு அது ரொம்பவும் வசதியாய்ப் போயிற்று. அவரது பிரிவுப் பணிகள் எதுவும் நிலுவையில்லாமல்… ஆண்களைப் போலத்தான் பெண்களும்…அலுவலகப் பணிகளைப் பொறுத்தவரை பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்று தோன்றியது.

வீட்டில் இருப்பதைப் போல அலுவலகத்திலும் கோபித்துக் கொண்டு அமைதி காப்பதும், முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வதும், வேலை செய்யாமல் வம்புக்கு உட்கார்ந்து கிடப்பதும், இருக்கையில் அமர்ந்து அழுது அடம் பிடிப்பதும், ஏதேனும் தேவையானது சொன்னால் அதற்கு விபரீத அர்த்தம் கற்பித்துக் கொண்டு புகார் செய்ய முயல்வதும், இவைகளெல்லாம் பெரும்பாலும் பெண் பணியாளர்களிடம் விஞ்சியிருக்கிறதோ என்று தோன்றியது.

மன முதிர்ச்சி, அறிவு முதிர்ச்சி, செயல் முதிர்ச்சி இப்படி எவற்றின் அடையாளமும் இல்லாமல் பெரும்பாலான பணியாளர்கள் இருப்பதும், ஒரு குடும்பம் என்கிற பின்னணியிலிருந்துதானே இவர்கள் வெளிப்படுகிறார்கள் என்கிற பின்புலமும் இவனுக்குள் விடைகாண முடியாத பல கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருந்தன.

வேலை கிடைக்குமுன்பு அதற்காக எவ்வளவு ஏக்கம் கொள்கிறோம்? எப்படியெல்லாம்; முயற்சி செய்கிறோம்? பாடுபட்டுத் தேடிக் கிடைத்த பணியை மனசாட்சிக்கு விரோதமின்றி நிறைவேற்ற வேண்டாமா? ஏன் அந்த நல்லுணர்வு அற்றுப் போகிறது? செய்தாலும் செய்யாவிட்டாலும் வேலை உறுதி, சம்பளம் உறுதி என்கிற நிலையில் இந்த விட்டேற்றியான மன நிலை வளர்ந்து போனதோ?; அது தவறல்லவா?

தினசரிச் சம்பளம் எழுநூறு, எண்ணூறு என்கிற அளவுகளிலிருந்து படிப்படியாக உயரும் நிலையில் வாங்கும் சம்பளத்திற்கு உழைக்கும் நேர்மையுணர்வாவது வேண்டாமா? நிறையப் பேருக்கு அது இல்லை. சிலருக்கு அது வந்து வந்து போகிறது, சிலருக்கு அது உடம்போடு ஊறிப் போய்க் கிடக்கிறது.

எப்படியிருந்தாலும் நம் மனநிலையைப் பதமாக மாற்றிக் கொள்வதுதானே முறை?

திடீரென்று சிந்தனை அறுந்து போனவனாக ‘லெட்சுமணன், இந்த லைட்டை ஆஃப் பண்ணுங்க…’ என்றான்

Series Navigationநாவல்  தினை              அத்தியாயம் நாற்பத்திரண்டு பு.யு 5000
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *