வேண்டும்போது
தண்ணீருண்டு
மரத்துக்குக்
கவலையில்லை
மக்கியது
மண்ணிலுண்டு
புழுக்களுக்குக்
கவலையில்லை
பசிக்கும்போது
மான்களுண்டு
புலிகளுக்குக்
கவலையில்லை
தேடும்போது
கனிகளுண்டு
கிளிகளுக்குக்
கவலையில்லை
ஈனுவது
பால் தரும்
குட்டிகளுக்குக்
கவலையில்லை
புழுக்களைப் பூச்சி தின்னும்
பூச்சிகளைத் தவளை தின்னும்
தவளைகளைப் பாம்பு தின்னும்
பாம்புகளைக் கருடன் தின்னும்
கருடனை மண் தின்னும்
எது எதைத் தின்றும்
எதுவும் அழியவில்லை
எதற்கும் கவலையில்லை
என்னில் முளைப்பதும்
எனக்குள் கிடப்பதும்
என்னுடையதல்ல வென்ற
மண்ணுக்கும்
கவலையில்லை
கொண்டுவந்த தொன்றுமிலை
கொண்டுசெல்வ தொன்றுமில்லை
உணர்ந்தால் போதும்
ஒருபோதும் கவலையில்லை
அமீதாம்மாள்
புனரபி ஜனனம்
புனரபி மரணம்.
அமீதாம்மாள், வாழ்க்கை தத்துவங்களை
கவிதையாக வடித்துவிட்டார்.
ஜெயானந்தன்.