This entry is part 3 of 6 in the series 16 ஜூன் 2024

வேண்டும்போது
தண்ணீருண்டு
மரத்துக்குக்
கவலையில்லை
மக்கியது
மண்ணிலுண்டு
புழுக்களுக்குக்
கவலையில்லை
பசிக்கும்போது
மான்களுண்டு
புலிகளுக்குக்
கவலையில்லை
தேடும்போது
கனிகளுண்டு
கிளிகளுக்குக்
கவலையில்லை
ஈனுவது
பால் தரும்
குட்டிகளுக்குக்
கவலையில்லை
புழுக்களைப் பூச்சி தின்னும்
பூச்சிகளைத் தவளை தின்னும்
தவளைகளைப் பாம்பு தின்னும்
பாம்புகளைக் கருடன் தின்னும்
கருடனை மண் தின்னும்
எது எதைத் தின்றும்
எதுவும் அழியவில்லை
எதற்கும் கவலையில்லை
என்னில் முளைப்பதும்
எனக்குள் கிடப்பதும்
என்னுடையதல்ல வென்ற
மண்ணுக்கும்
கவலையில்லை
கொண்டுவந்த தொன்றுமிலை
கொண்டுசெல்வ தொன்றுமில்லை
உணர்ந்தால் போதும்
ஒருபோதும் கவலையில்லை
அமீதாம்மாள்

Series Navigationகனடாவில் தேசிய பழங்குடி மக்கள் தினக்கொண்டாட்டம்வாசல் தாண்டும் வேளை