வளவ. துரையன்
இருசக்கர வாகனத்தை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு, “அம்மா”
என்று குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தான் வரதன். வீடே அமைதியாக இருந்தது. அவன் இல்லம் எப்பொழுதும் இப்படி இருக்காது. அம்மாவிற்கு வானொலி கேட்பது மிகவும் பிடிக்கும். அது காலை முதல் அலறிக்கொண்டே இருக்கும்.
புரிகிறதோ இல்லையோ அம்மாவிற்கு அது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
“ஏம்மா இப்படி” எனக் கேட்டால் ”அந்த சத்தம் கேட்டுக்கிட்டே இருந்தா வீட்ல யாரோ தொணைக்கு இருக்காங்கன்னுக்கு எனக்கு நெனப்பு” என்று அம்மா சொல்லிவிட்டாள்.
அம்மா படுக்கையறையில் இருந்தாள். கட்டிலில் படுத்துக் கொண்டு மேலே பார்த்துக் கொண்டு இருந்தாள். அம்மா இருந்த நிலையே சற்று வித்தியாசமாகத் தோன்றியது.
“என்னாம்மா? வாசக்கதவைக் கூடச் சாத்தாம இப்படிப் படுத்துக்கிட்டிருக்க” என்று கேட்டான் வரதன். அம்மாவிடமிருந்து பதிலில்லை. கட்டிலின் அருகில் சென்று “அம்மா”
என்று சற்று சத்தமாகக் கூப்பிட்டான். அப்பொழுதுதான் அவனைப் பார்ப்பதுபோல் பார்த்தவர், “ஏண்டா கத்தற?” என்று கேட்டார்.
“என்னாம்மா நான் அப்போ புடிச்சுக் கூப்பிடறேன். காதுல உழாத மாதிரி
படுத்துக்கிட்டு இருக்க; ஏன் ஒனக்கு என்னா செய்யறது? ஒடம்பு சரியில்லயா?” என்று கேட்டான் அவன். அம்மா பதிலொன்றும் பேசாமல் தன் தலையணைக்குப் பக்கத்தில் வைத்திருந்த கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார். அவன் வாங்கிப் படித்தான்.
அதில் ஒரே ஒரு வரிதான் இருந்தது. “பரமசிவம் தன் பார்வதியை இழந்தார்”
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “என்னாம்மா இது? குருக்கள் சம்சாரமா” என்று கேட்டான்.
“ஆமாண்டா; அவங்கதான் போய்ச் சேர்ந்துட்டாங்க; நானும் அவர் நண்பர் கோகுலதாசனுக்குப் போன் போட்டுப் பேசினேன். அவரும் நெசந்தா”ன்னு சொல்லிவிட்டார். அம்மாவுக்கு அழுகை வரும் போல இருந்தது. அடக்கிக் கொள்வது தெரிந்தது.
“ஏம்மா அவருக்கிட்டயே பேசலாம்ல?”
”ரெண்டு நாள்தான் ஆயிருக்கு; அவரு மனசு எப்படி இருக்கோ? பேசற நெலையில இருக்காரோ இல்லியோ”
“ரெண்டு நாள் ஆயிடுச்சா?”
“ஆமாண்டா; அவரு மறுநாளே எழுதி இருக்காரு; தபாலு லேட்டா வந்திருக்கு;”
வரதன் அறையை விட்டு வெளியே வந்தான். கூடத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். ”பரமசிவம்-பார்வதி என்று பெயர்ப் பொருத்தம் கூட அவர்களுக்கு இருந்தது. கடந்த மாதம் இவன் அங்கு போனபோது கூட இவனுக்குப் பிடிக்குமே என்று அடை அவியல் செய்து போட்டார்கள். எப்பொழுது போனாலும் அவர்கள் இருவரும் அவனை இரவு தங்கச்சொல்லி விடுவார்கள். மேல்மாடிக்குச் சென்று பரமசிவமும் அவனும் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒருநாள் அப்படித் தங்கியபோதுதான் இரவு முழுதுமே பேசிக்கொண்டிருந்துவிட்டது பொழுது விடிந்த பின்னர்தான் தெரிந்தது. பார்வதி மேலே வந்து. “அப்படி என்னாதான் பேசுவீங்க ராத்திரி முழுதும்; போயிப் பல்லைத் தேய்த்துச்சுட்டு வாங்க” காப்பி வைச்சுட்டேன்”
என்றார்.
மன அழுத்தம் தலைவலிக்குக் கொண்டுவந்து விட்டதைப் போல் உணர்ந்தான்.
நெற்றிப் பொட்டுகளைப் பிடித்துக் கொண்டு தலை குனிந்தான். அழுகை தானாக வந்துவிட்டது. சத்தம் போடாமல் அழுதான். அவன் உடல் குலுங்கியது.
”டேய், இப்பதான் நான் அழுது முடிச்சிருக்கேன். நீ மறுபடியும் ஆரம்பிச்சு வச்சிடாதே. இந்தா காப்பியைக் குடி” என்று கூறியவாறு அவன் அம்மா காப்பியைக் கொடுத்தாள்.
குடித்து முடித்தவனிடம், “என்னா செய்யறது: ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க; நம்மளக் கூட வீட்டுள்ள கூப்பிட்டு சாப்பாடு போட்டாங்க இல்ல: நான் ரெண்டு தடவைதான் அவங்களப் பாத்திருக்கேன். ஏரி காத்த ராமரைப் பாக்கப் போனபோது ஒரு தடவை. அப்பறம் அவரு ஊர்லயே ஒன்னைப் பேசக் கூப்பிட்டிருந்தாரே அப்ப”
“அவரு எப்படித்தான் இதைத் தாங்கப் போறாரோ தெரியலம்மா; அந்த அம்மாதான் அவருக்கு எல்லாமும். பல ஊருக்குப் போயிப் பேசி முடிச்சுட்டு நடு ராத்திரியில வந்தாலும் சங்கடப் படாம காத்திருந்து கதவைத் தொறந்து தோசை குத்திப் போடுவாங்களாம். அத்தோடு என்னா பேசினீங்க? எவ்ளோ கூட்டம் வந்ததுன்னு கேப்பாங்களாம்”
“அவருக்கு எவ்ளோ வயசு இருக்கும்டா”
“எழுபத்தைஞ்சு ஆயிடுச்சும்மா”
“இந்த வயசில் பொண்டாட்டி போயிட்டா எந்த ஆம்பளைக்கும் கஷ்டம்தாண்டா,”
”இல்லம்மா அவரோட ரெண்டு பொண்ணுங்களும் தங்கம்மா”
“இருக்கட்டும்டா; என்னதான் இருந்தாலும் ஒரு டம்ளர் தண்ணி கொண்டான்னு பொண்டாட்டிக்கிட்ட உரிமையோட கேக்கறது எப்படி? பொண்ணுங்க கிட்டக் கேக்கறது எப்படி? எப்படித் தாங்கப் போறாரோ” என்றார் அம்மா.
“சரிம்மா” என்று பேச்சை முடிச்சவன் “நான் இப்பவே கெளம்பறேன். பள்ளிகூடத்துக்கு லீவு எழுதிக் கொடுத்திட்டு இன்னிக்குப் போறேன். காலையில பசங்கக்கிட்டக் கொடுத்து அனுப்பிச்சிடு” என்றான் வரதன்.
“இப்பா வேண்டாண்டா. இன்னிக்கு வியாழக்கெழமைதானே: சனிக்கெழமை காலையிலியே கெளம்பிப் போயிடு.
“என்னாம்மா நீ? கேள்விப்பட்ட ஒடனே போகவேணாமா?
“சரிடா; அதெல்லாம் சரிதான். இப்பவே மணி ஆறாயிடுச்சு. நீ இன்னும் விழுப்புரம் போயி பஸ்சைப்புடிச்சு அங்க போறதுக்குள்ள ராத்திரி ஆயிடும். அதான் சொல்றேன்”
வரதனுக்கும் அம்மா சொல்வதும் சரியென்றே தோன்றியது. இன்னும் ஒரு நாள் முழுதும் அவரது நினைவுகள் வந்து இம்சைப்படுத்துக் கொண்டிருக்குமே என்று அவன் எண்ணினான். அப்படித்தான் ஆகியது.
அவனும் அம்மாவும் இரவு முழுதும் பரமசிவம் குருக்கள் பற்றியும் அவர் மனைவி பற்றியுமே பேசிக் கொண்டிருந்தார்கள். எப்பொழுது உறங்கினார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.
தன் கிராமத்திலிருந்து கிளம்பும் முதல் பேருந்திலேயே கிளம்பி வரதன் விழுப்புரம் வந்தான். சென்னை செல்லும் வண்டியில் மதுராந்தகம் நிற்குமா என்று கேட்டுவிட்டு ஏறி உட்கார்ந்தான். வண்டி கிளம்பியது. சன்னலோரத்தில் இருந்ததால் காலைக் காற்று மென்மையாக வீசியது. உடலுக்கு நல்லதாக இருந்தாலும் இன்னும் அவன் உள்ளம் சாதாரண நிலைக்கு வரவில்லை.
கடலூரிலிருந்து விழுப்புரம் வழியாகச் செல்லும் பேருந்து அது. அதுவும் மாளிகைமேடு வழியாகச் செல்வதால் விரைவாகச் சென்றுவிடும். அவன் மனமும் விரைவாகவே ஓடியது. பரமசிவம் குருக்களுக்கும் தனக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பதை நினைத்துப் பார்த்தான்.
அவனது சொந்த ஊரான வளவனூரில் அப்பொழுதெல்லாம் ஆண்டுதோறும் அப்பர் திருநட்சத்திர விழா என்பது நடக்கும். அதில் யாரேனும் ஒரு சொற்பொழிவாளர் வந்து அப்பரின் தேவாரம் மற்றும் அவரின் சமயத்தொண்டு குறித்து உரையாற்றுவார்.
அப்படித்தான் ஒரு முறை பரமசிவம் வந்து பேசினார்.
நிகழ்ச்சி முடிந்து வரதன் அவரைக் கண்டு பேசினான். “ஐயா, நீங்க அப்பர் தமிழ் கெஞ்சும் தமிழ், மணிவாசகர் தமிழ் கொஞ்சும் தமிழ். சுந்தரர் தமிழ் விஞ்சும் தமிழ், எனப் பிரித்துக் கொண்டு பேசினது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது”
“அப்படியா, நீங்க வந்து கேட்டதும் இப்ப வந்து பேசறதும் மகிழ்ச்சியா இருக்கு” என்று அவர் பதில் கூறினார்.
“ஏன்யா அப்படி சொல்றீங்க?”
”பின்ன என்னப்பா? இப்பல்லாம் ஒன்ன மாதிரி இளைஞர்கள் வந்து கேக்கறதே அபூர்வம். அதிலும் இத மாதிரி பேசினவரைத் தேடிவந்து சொல்றதெல்லாம் இல்ல”
”நானும் எல்லார்கிட்டயும் போய்ச் சொல்ல மாட்டேங்க; ஒங்க பேச்சு என்னைக் கவர்ந்து இழுத்திடுச்சு; காரணம் அது அமைதியாக ஆரவாரம் இல்லாம இருந்ததுதான்” என்றான் வரதன்.
“ஆமாம்பா. என் பேச்சு அமைதியாக ஆறு ஓடற மாதிரிதான் இருக்கும். வீணான நகைச்சுவை, கையை எல்லாம் ஆட்டி உரக்கப் பேசறதெல்லாம் இருக்காது” என்று அவர் பதில் கூறினார்
இப்படித்தான் அவர்கள் இருவருக்கும் தொடர்பு வந்தது. அவன் அவர் குடியிருக்கும் ஊரான மதுராந்தகம் சென்றான். அப்பொழுது அவர் பூஜை செய்து வரும் சிவன் கோயிலுக்குக் கூட்டிச் சென்றார். எல்லா இடங்களையும் சுட்டிக் காட்டினார். பிறகு புகழ் பெற்ற ஏரி காத்த ராமர் கோயிலுக்கும் அழைத்துச் சென்றார்.
வரதன் திரும்பி வரும்போது கேட்டான். “ஐயா, நான் கேக்கறேன்னு நீங்க தப்பா நெனக்கக் கூடாது. நீங்க எப்படி பெருமாள் கோயிலுக்கு…..” என்று இழுத்தான்.
“ஏம்பா வரக்கூடாதா? அங்கையும் சாமிதான இருக்குது. என்னா பேருதான் வேற. மனசுக்கு அமைதியும் நிறைவும் வேணுமின்னா எங்கயும் போகலாம்.”
வீட்டிற்கு அழைத்துச் சென்று மதிய உணவு அளித்தார். அவர் மனைவி பார்வதியே இருவருக்கும் பரிமாறினார். “வரதா; பெருமாள் பேர வச்சுக்கிட்டு இவர் கூட நெருக்கமாயிட்டயே; பரவாயில்லயே” என்று முதல் முறை பார்த்த போதே பார்வதி உரையாடியது மனத்துக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதன் பின்னர் பலமுறை அங்கு போயிருக்கிறான். ஒவ்வொரு முறையும் அவனுக்கு என்னென்ன பிடிக்கும் என்றறிந்து அதற்கேற்றவாறு பார்வதி சமைத்துப் போடுவார்.
அவனும் அவர்களை அம்மா என்றே அழைக்கத் தொடங்கினான்.
அவர் எம்.ஏ தமிழ் முடித்தவர் என்பதை அறியும்போது அவனுக்கு வியப்பாக இருந்தது. அத்துடன் அவரின் அப்பா அவருக்கு சமய சாதி பேதமில்லாமல் வாழக் கற்றுக்கொடுத்துள்ளார் என்பதையும் அறிந்து கொண்டான்.
பேருந்து இப்பொழுது கோலியனூரை நெருங்கிக் கொண்டிருந்த்து. காலையிலேயே ஏறிவிட்டதால் கூட்டம் அதிகம் இல்லை. கோலியனூர் மாரியம்மன் கோயிலைத் தாண்டும்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது. பரமசிவத்தை வண்டிப்பாளையம் மாரியம்மன் திருவிழாவில் பேசவைத்ததை நினைத்துக் கொண்டான். ஒருமுறை அவரை அழைத்துக் கண்ணதாசன் பற்றியும் வரதன் ஒரு கூட்டம் நடத்தினான்.
அப்பொழுதுதான் அவன் தெருவில் இருக்கும் பெருமாள் கோயில் பட்டர் கேட்டார்.
“ஏம்பா வரதா, நீ அவரை ஒன் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறயே; அவரு ஒன்னை அவர் வீட்டுக்குள்ள விடுவாரா?”
“நான் அவர் வீட்ல போயிச் சாப்பிட்டிருக்கேன்” என்று வரதன் கூறியதும் அவர் முகமே மாறிவிட்டது.
இந்நிகழ்ச்சியைப் பரமசிவத்திடம் சொன்னபோது அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். “அவரெல்லாம் திருப்பாணாழ்வார் வைபவம் தெரியாத வைஷ்ணவர் போல இருக்கு”
சீக்கிரம் போகவேண்டும் என்று மதுராந்தகம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ அமர்த்திக் கொண்டு குருக்கள் இருந்த அண்ணா நகரில் போய் இறங்கினான். அவர் வீட்டிற்கு முன்னால் அவன் சென்று நின்றான். வீட்டின் உள்ளே இருந்து அவனைப் பார்த்த ஒரு பெண்மணி உடனே பக்கத்து அரைக்குச் சென்றார்.
அந்த அறையிலிருந்து பரமசிவம் வருவது தெரிந்தது. வந்தவர், “வரதா! ஏன் வெளியிலயே நின்னுட்ட? மாமி இல்லியே ஒன்னைக் கூப்பிறதுக்கு; நீ நேராக வரவேண்டியதுதான” என்றார். அதுவே அவன் மனத்தைக் கரைத்துவிட்டது.
அவனைக் கை பிடித்து அழைத்துக் கொண்டு சென்ற பரமசிவம் நாற்காலியில் உட்காரவைத்தார். அவ்வளவுதான்! அவன் அதுவரை அடக்கியிருந்த அழுகை பீறிட்டுவிட்டது, குரல் எழுப்பியே ”அம்மா! அம்மா” என்று அரற்றிக் கொண்டே அழத் தொடங்கினான். உள்ளே இருந்து பரமசிவத்தின் உறவினர்கள் வந்து சூழ்ந்து கொண்டனர்.
சில நேரம் அவனை அழவிட்டப் பரமசிவம் தொடங்கினார். “ஒனக்கு மொதல்லயே தந்தி கொடுக்கணும்னுதான் நெனச்சேன்”
”பின்ன என்ன கொடுக்கல. நான் வந்து மாமியைப் பாத்திருப்பேன்ல”
”வந்து பாத்திருந்தா அவ பொழைச்சு வந்திடுவாளா” என்று மிகவும் அமைதியாகக் கேட்டார். அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அவன் எதுவும் கேட்பதற்குள் அவரே தொடர்ந்தார்.
“நல்லாத்தாம்பா இருந்தா. வழக்கம் போல வீட்ல சாதம் வடிச்சு வைச்சிட்டு கோயிலுக்கு உச்சிகாலத்துக்கு வந்தா; ரெண்டு பேரும் கோயில்லேந்து வரும்போதே “என்னமோ மனசே சரியில்ல” என்றாள். வந்தவ வத்தக் கொழம்பு வச்சா; ரெண்டு பேரும் சாப்பிட்டோம். கொஞ்சநேரம் படுத்தவ, “ஏங்க மாரை ரொம்ப வலிக்குது”ன்னா.
ஒடனே ஆட்டோவை வரவழைச்சுட்டேன். இங்கியே இருக்கற டாக்டர் மோகன்கிட்டப் போனோம். அவரு பாத்திட்டு என்னைத் தனியா கூப்பிட்டுக்கிட்டுப் போயி “ரத்த அழுத்தம் கொறைவா இருக்கு. பல்ஸ் கொறையுது” ஒடனே செங்கல்பட்டு கூப்பிட்டுக்கிட்டுப் போங்கன்னார். ஆட்டோவிலியே வீட்டுக்கு வந்து பக்கத்து வீட்டு கோபுலுவை அழைச்சு செங்கல்பட்டுப் போக வண்டி கூப்பிட்டுக்கிட்டு வான்னேன்.
அந்த வண்டி வர்றதுக்குள்ள எருமை மாட்டுவண்டி வந்திடுச்சு” என்று அமைதியாகக் கூறிச் சிரித்தார்.
“என்னா மனுஷன் இவர்; இவ்ளோ அமைதியாக் கதை சொல்ற மாதிரி சொல்றாரே! என்னைப் பார்த்ததும் ரொம்பவும் அழுதிடுவார்னு நெனச்சேன். கண்லேந்து தன்ணியே வரலியே; இவரு சொல்லும்போது இப்ப வந்த ரெண்டு பொண்ணுங்க கூடக் கண்ணைக் கசக்கிக்கிச்சே” என்றெல்லாம் நினைத்தவன் கேட்டே விட்டான் “என்னாங்கய்யா: ஏதோ மூணாம் மனுஷனுக்கு நடந்தது போல அமைதியாக் கதை சொல்றீங்க; இன்னும் ரெண்டுநாள்தான் ஆகுது”
“வரதா; என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டார். “அதுக்காக என்ன செய்யச் சொல்றே; அழுது புரளச் சொல்றயா. நானே அழுதா வீடு எப்படி இருக்கும்: எப்பப் பாத்தாலும் ஒரே அழுகைச்சத்தம்தான் கேட்டுக்கிட்டு இருக்கும். அது அவளுக்கே புடிக்காது.”
“யாருக்கு”
”பார்வதிக்குதான். நீ கேட்டிருக்கியே? எப்பவாவது சத்தம் போட்டுப் பேசியிருக்காளா? அவள் பேசுவது எதிரே இருப்பவர்க்கு மட்டும்தான் கேட்கும். பாட்டோ சொற்பொழிவோ கேட்டாக் கூட சத்தம் கொறைச்சு வச்சுத்தான் கேப்பா. அமைதியா இருக்கறதுதான் அவளுக்குப் புடிக்கும். அதுக்காக துக்கம் இல்லாம இருக்குமா: இதோ ரெண்டு பொண்ணுங்க மாப்பிளைங்க வந்திருக்காங்க நான் அவங்கள எல்லாம் அழ வேண்டாம்னு சொன்னா நான் மனுஷனே இல்ல. துக்கத்தை வெளியிடப் பலவழி உண்டு வரதா. இதுவும் ஒரு வழி நெனச்சுக்கோ”
என்ன சொல்வதென்றே தெரியாமல் வரதன் தலையைக் குனிந்து கொண்டான்.
கண்களின் நீர் தரையில் சொட்டியது.
பரமசிவம் அவன் முதுகில் வைத்து ஆறுதலாகத் தடவினார். “வரதா; போதும் அழாதே. என்னாடா எப்படி இவரு ரெண்டே நாள்ல மனசைத்
தேத்திக்கிட்டிருக்காருன்னு நீ நெனப்ப, இது கூட இல்லன்னா நான் பேசற சைவசித்தாந்த்த்திற்கும், தத்துவங்களுக்கும் என்னா அர்த்தம் இருக்கு: அவ அமைதியைத்தான் எப்பவும் விரும்பினா. அதேபோல அமைதியாக் கைலாயம் போய்ச் சேந்துட்டா” என்று சொன்னவர் “இதோ பாரு காப்பி கொண்டுவந்து வைச்சிருக்கா குடி” என்றார்