போகாதே நில்.

author
0 minutes, 26 seconds Read
This entry is part 6 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி.

‘இராகவா நாளைக்கு அரைநாள் லீவு போட்டுட்டு வந்துடு’
‘எதுக்குமா,இந்த வாரம் முழுக்க லீவே போட முடியாது’
‘ஏற்கெனவே மூணுபேர் லீவுல இருக்காங்க மா’
‘ஏண்டா உன்ன அரை நாளுதானே போடச் சொல்றேன்’
‘அதான் எதுக்கு னுதான் சொல்லேன்’
‘நாளைக்கி வேலூர்ல ஒரு பொண்ண பார்க்கப் போறோம்’
‘சரி போயிட்டு வாங்க, நானெதுக்கு?’
‘யசோதா அவனுக்குப் புரியல, உனக்குதான் பொண்ணு பார்க்கறோம்.’
என்று சொல்லிக் கொண்டே மடிப்புக் கலையாத காக்கி உடையில் தொப்பியைக் கையில்
எடுத்துக்கொண்டு வந்தார் கோவிந்தன்.
‘அப்பா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம், ரெண்டு வருஷம் போகட்டும்’
‘நீதான் வேலைக்குப் போய் நாலு வருஷம் ஆகுதே’
‘அப்பா வீடு மாத்திக் கட்டணும்னு சொன்னீங்க, முதலில் அதை முடிங்க”
‘அதுவும் சரிதான்’
காவலராக வேலை பார்க்கும் கோவிந்தனின் ஒரே மகன் இராகவன்.மோட்டார்
வாகனங்களுக்கான சில உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில்
மெகானிக்காகச் சேர்ந்துள்ளான். நல்ல சிறமையும், சுறுசுறுப்பும் அவனுக்கு நல்ல
பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. அவனது பிரிவிற்கு அவனே பொறுப்பு.
கோவிந்தனின் அப்பா சென்னையில் மளிகைக்கடை வைத்திருந்தார்.. இப்போது அந்தக்
கடையை கோவிந்தனின் தம்பி பார்த்துக் கொள்கிறார். இரண்டு கட்டு கொண்ட பெரிய
வீட்டை நடுவில் சுவர் எழுப்பி இரண்டாக்கி இருவருக்கும் தந்துவிட்டுக் கண்ணை
மூடிவிட்டார் பெரியவர். இன்றைக்கும்
அண்ணன் வீட்டிற்கான மளிகைச் சாமான்களைத் தம்பிதான் அனுப்புகிறார்.கிராமத்தில் இருக்கும் நிலத்திலிருந்து அரிசி வந்து விடுகிறது. தம்பி மகன்கள் இருவரையும் கோவிந்தன்தான் படிக்க வைத்தார். அண்ணனிடம் கேளாமல் எந்த முடிவையும் தம்பி எடுக்கமாட்டார்.
தம்பி மகளின் திருமணத்தை முன்னின்று நடத்தினார் கோவிந்தன். வருடாவருடம்
குலதெய்வக் கோவிலுக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டி விமரிசையாகக்
கொண்டாடுகிறார்கள். சொந்த பந்தம் அதிகம் இவர்களுக்கு.இது மட்டுமா?
கிராமத்திலிருந்து நெருங்கிய அல்லது தூரத்து உறவுகள் யாராவது எப்போதும் வந்திருப்பார்கள். விசேஷங்களுக்கு நகை, புடவை, பாத்திரங்கள் வாங்குவதற்கோ அல்லது உடல் நலமில்லையென மருத்துவ மனை செல்லவோ வருவார்கள். ஒரு வாரம்,
பத்து நாள் என்று தங்குவார்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மனம் கோணாமல் செய்வார்கள் சகோதரர்கள். யசோதா மருத்துவமனையில் இருப்பவருக்கு வேண்டிய
உணவைச் செய்து கொடுத்து உதவிக்கு வந்தவரைச் சாப்பிட வைத்து பார்த்துக் கொள்ளும் விதமே தனிதான். அதனால் எப்போதும் பறவைகள் வந்து தங்கும் ஆலமரம்போல் இருக்கும் வீடு.
ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கலன்று அண்ணன் தம்பி குடும்பம் பெரிய வண்டியில் கிராமத்திற்குச் செல்வது வழக்கம். அங்கே உள்ள பெரிய மூன்று கட்டு வீட்டைப் பார்த்துக் கொள்பவர்களுக்கும் , நிலத்தில் வேலை செய்பவர்களுக்கும் இனிப்பு, சேலை, வேட்டி என்று துணிகளும் எடுத்துக் கொண்டு சென்று பணம் வைத்துக் கொடுத்து,. கோலாகலமாக விருந்துச் சமைத்து உறவுகளோடு உண்டு மகிழ்வார்கள்.
அந்த வருடம் பொங்கலுக்குச் சென்று திரும்பும் வேளையில் கோவிந்தனின் தாயார் நான்கு நாட்கள் கிராமத்தில் தங்கிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டாள். வெகுநாட்களுக்குப் பிறகு பட்டணத்துச் சந்தடியிலிருந்து மீண்டு வந்திருப்பது இதமாக இருந்தது. வயலைச் சுற்றிப் பார்ப்பது, தென்னந்தோப்பில் பகல் நேரத்தில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டு அவள் வயதொத்த பெண்மணிகளோடு அளவளாவுவது என்று நேரம் போனது. ஒரு நாள் , ‘ அக்கா நம்ம பச்சையம்மனுக்கு பொங்கலு வைக்கறியே, முனீசுவரனுக்கு எப்பவாவது பூசை போட்டுருக்கியா?
‘ அந்த வழக்கமே இல்லையே குப்பு’
‘ இப்பதான் எனுக்கும் தெரியும், போன வாரம் ஒரு சாமியார் பச்சம்மா கோயிலுக்கு
வந்தாரு, ‘
‘ இன்னாடி சொன்னாரு?’
‘முனீசுவரனுக்கும் நாம பூசை வைக்கணுமாம். ‘

‘பனங்காட்டு முனீசுவரன் ஊர்க்காவல் தெய்வம்னு எல்லோரும் சேர்ந்து பூசை
வைக்கறாங்களே?
‘ இருந்தாலும் நம்ம பச்சம்மா கோயில்ல இருக்கற முனிக்கு நாம பூச தனியா
வைக்கணுமாம்.’
‘ அப்படியா?’
‘வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி னு பஞ்ச முனிகளின் ஒரே
வடிவமா அம்மனுக்கு காவலிருக்காராம் முனீசுவரன்’
‘அதனால அவுருக்கும் நாம பூசை செய்யணுமாம்’
‘சரிடி, சொல்லிட்டா போதும் , சின்னவனும், பெரியவனும் பார்த்துப்பாங்க’
ஊருக்கு வந்ததும் மகன்களிடம் இந்த விஷயத்தைச் சொல்லி வைத்தாள் அம்மா.
“’என்ன பாட்டி ஒரு வாரம் கிராமத்துல இருந்ததுல புதுக் கதை, மேல சொல்லு’
‘ஆவேசமானவர், வீரமானவர், தப்பு தண்டா செய்யறவங்களத் தலையில அடிப்பாரு’
‘அப்புறம்?’
‘வானத்துக்கும் பூமிக்குமா வெள்ள வெளேர்னு தகதகன்னு இருக்கறதா பார்த்தவங்க
சொல்றாங்க இராகவா’
‘ திரைக்கதை வசனம் எழுதிட வேண்டியதுதான்’
தன்னை நம்பறவங்கள ஒருநாளும் கைவிடமாட்டாரு, அவங்களோட ஒரு மனுஷராவே
வருவாரு.
‘சரி பாட்டி, அம்மா நான் கெளம்பறேன். இன்னக்கி வர நேரமாகும்’
மாடியிலிருந்து இறங்கி வந்து வராண்டாவில் நிறுத்தியிருந்த புதிய பைக்கை எடுத்தான்.
பின்னாலேயே வந்த யசோதா எதேச்சையாகப் பார்ப்பதுபோல் தெருவை ஒருமுறை
பார்த்துவிட்டு ,’வண்டிய வேகமா
ஓட்டாதே, பத்திரம் ‘ என்று சொல்லி வழியனுப்பினாள்.
அப்பா தனது ஜாவாவை இவனுக்குத் தந்துவிட்டு, அவர் மெட்ரோ ரயிலில் சென்றுவந்து
கொண்டிருந்தார் போனமாதம்தான் இவன் கேட்ட புது வண்டியை வாங்கித்
தந்திருந்தார்.நேற்றே அலுவலகத்தில் சொல்லியிருந்தார்கள் அறுபது கி.மீ தொலைவில்
உள்ள ஒரு ஊருக்குச் சென்று இயந்திரம் ஒன்றைப் பழுதுபார்த்துச் சரிசெய்து
வரவேண்டும் என்று.

இராகவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் மணி எட்டு என்றது. வழியில் தனக்கு
உதவியாக நியமித்திருந்த நண்பன் ஒருவனையும் ஏற்றிக் கொண்டான். இந்தச்
சென்னையின் போக்குவரத்து நெரிசல் எப்போதும் குறைவதே இல்லை என்று
நினைத்துக்கொண்டே ‘ ஜானி டிபன் எங்க சாப்பிடலாம்?’
‘இராகவ் சிட்டியைத் தாண்டினதும் பீமவிலாஸ் னு ஒரு மெஸ் இருக்கு, ரொம்ப நல்லா
செய்யறாங்க, விலையும் அதிகமில்லை’
‘ அப்படியா?’
‘ஆமாம் நான் ரெண்டுமுறை அங்கே சாப்பிட்டிருக்கேன்.’
‘சரி ப்பா’
புறநகர்ப்பகுதி வந்ததும் சற்று நெரிசல் குறைந்திருந்தது. பீமவிலாசில் நிறுத்தி உள்ளே
நுழைந்தனர். முகப்பில் வலப்புறம் சாய்பாபா படமும், கருணை பொழியும் கற்பகாம்பாள்
படமும் பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தது. இவற்றின் நடுவில் தங்க மீன்கள் நீந்தும்
அழகான கண்ணாடிக் குடுவை ஒன்று நீல நிற மூடியுடன் இருந்தது. இடது புறம்
கணினியும், வெள்ளைப் பீங்கான் கிண்ணத்தில் பலநிறச் சீரக மிட்டாய் கலந்த சோம்பும்,
கைதுடைக்கும் டிஷ்யூ பேப்பர் கொண்ட கண்ணாடித் தட்டும் அடுக்கி வைக்கப்பட்ட
நீள மேசை இருந்தது. அதன் பின்புறம் உயரமான இருக்கையில் அறுபது வயது மதிக்கத்
தக்க உரிமையாளர் நெற்றி நிறையத் திருநீறும் சந்தனப்பொட்டுமாய் அமர்ந்திருந்தார்.
உள்ளே நான்கு நாற்காலிகள் நடுவில் ஒரு மேசை என இரண்டு வரிசைகளில் நாற்பது
இருக்கைகள் இடப்பட்டிருந்தன. ஆரவாரமின்றி அமைதியாகப் பணியாளர்கள் இயங்கிக்
கொண்டிருந்தனர். பூரி கிழங்கும், பொங்கல் வடையும் சுவையோ சுவை. பில்டர் காபி
சொல்லிவிட்டு கைகழுவ வந்தபோதுதான் இராகவன் கவனித்தான்
கருப்பு கம்பளி ஒன்றைப் போர்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ஒரு ஆள் வைத்தகண்
வாங்காமல்இவனையே பார்த்துக் கொண்டிருந்தார்,. கிராமத்து ஆளாக இருக்கலாம்.
இவன் அவரைக் கடந்து போகும்போது சினேகமாய் சிரித்தார். இவனும் இலேசாகப்
புன்னகைத்தான்.
இருவரும் அங்கிருந்து புறப்பட்டு ஒரு மணிநேரத்தில் அந்தச் சிற்றூருக்கு வந்துவிட்டனர்.
அந்த ஊரின் பெரிய தனக்காரரின் நீர் இறைக்கும் எந்திரம்தான் பழுது. ஆறுமாதத்திற்கு
முன்னர்தான் வாங்கியிருந்தார். இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்,’ வாங்க தம்பி’
‘ ஐயா வணக்கம், என்ன ஆச்சு?’
‘ பத்து நாளா நெலத்துக்கு தண்ணி பாய்ச்ச முடியல, தண்ணியே எடுக்க மாட்டேன்னுது,
மோட்டர் மட்டும் சூடாகுது’

‘ சரிங்க , சரி பண்ணிடலாம்’
இவர்களை அழைத்துச் சென்றார் தென்னந்தோப்பிற்கு.
தென்னந்தோப்பைச் சுற்றிலும் பச்சைப்பசேலென்ற வயல்கள். தோப்பின் நடுவிலிருந்தது
பம்ப்செட் இருந்த அறை.அதன் பக்கவாட்டில் அகலமான குழாயோடு பெரிய
நீர்த்தொட்டி. அதிலிருந்து சிறிய நீரோடைபோல் தண்ணீர் வயல்வெளியில் பாய
வாய்க்கால் ஓடியது.
அதைப் பழுது பார்க்க ஆரம்பித்தான். ஒரு போல்ட்டைக் கழற்றும்போது
ஸ்பேனர் தவறி காலில் விழுந்தது. வலதுகால் கட்டைவிரல் நகத்தில் காயம், இரத்தம்
குபுகுபுவென வழிந்தது. ஜானி, ‘நீ விடு, நான் கழட்டறேன்’ என்று உதவினான். வலியும் வேலை முடியாமல் இழுபறியானதும் சோர்வைத் தந்தது. மதியம் பெரிய தனக்காரர் வீட்டிலிருந்து மீன் குழம்பு, இறால் வறுவலோடு சாப்பாடு. வேலையாள் பறிமாற பக்கத்திலிருந்து ‘ நல்லா சாப்பிடுங்க தம்பி’ என்று உபசரித்தார் பெரிய தனக்காரர்.
வேலை முடிவதாகத் தெரியவில்லை,’ இராகவா நாளைக்கு வந்து பார்க்கலாமா?’
‘ இல்ல ஜானி இன்னக்கு எப்படியும் முடிச்சுடுவோம்’ என்று தொடர்ந்தான். ஒரு வழியாக
எந்திரத்தைச் சரி செய்து நிமிர்ந்தபோது மணி இரவு எட்டாகி விட்டது.
பெரிய தனக்காரருக்கு சந்தோஷம். வேண்டாமென்றாலும் விடவில்லை, வீட்டிற்கு
அழைத்துச் சென்று சாப்பிட வைத்து விடை தந்தார்.
‘ தம்பி எந்த வழியா போறீங்க?’
‘ ஏரிக்கரை வழிதான் ‘
‘ வேண்டாம்பா,ராத்திரி ஒன்பது மணிக்கு மேல யாரும் அந்த பக்கம் போறதில்லை’
அவரே தொடர்ந்தார் ,
‘வழிகாட்ட ஆளனுப்பறேன், கணிச்சிக்குப்பம் வழியா போங்க’
‘ அது சுத்துவழின்னு சொன்னாங்களே ‘
‘ ஆமாம், ஆனா தொல்லையிருக்காது’
‘சரிங்க ஐயா’
வேலையாள் உடன்வரப் புறப்பட்டனர். இரண்டு தெரு தாண்டினதும்,

‘ அதோ ஐயனார் கோயிலுக்கு வடக்கால திரும்புங்க தம்பிங்களா ‘
‘ சரிங்க,’ என்று சொல்லி அவர் கையில் ஐம்பது ரூபாயைத் திணித்தான் இராகவன்.
‘ நல்லது தம்பி, தெற்கால திரும்பிடப் போறீங்க ,வடக்கால’
என்று சொல்லிச் சென்றார்.
அவர் போகும் வரை பார்த்திருந்த இராகவன்,
‘ ஜானி இப்பவே மணி பத்தாகப் போகுது, உனக்கு பயமா?
‘ அட எனக்கா , வா நாம தெற்கால திரும்பலாம்’
பெரிய முரட்டு மீசையுடன் கையில் வாள் பளபளக்க வீற்றிருந்த ஐயனாருக்கு ஒரு
கும்பிடு போட்டுவிட்டு வண்டியைத் திருப்புகையில்,
‘போகாதே நில்’ என்று ஒரு குரல்,
அதிர்ந்து திரும்பினார்கள். வெள்ளை வெளேரென்ற வேட்டி சட்டையில் ஒரு பெரியவர்
நின்றிருந்தார்,
‘ வயக்காட்டுக்குப் போயிட்டு வரேன்,வடக்கால போங்கப்பா, நல்லது’
என்று பதிலுக்குக் காத்திராமல் விடுவிடுவென வீதியில் நுழைந்தார்.
ஜானி,’ சரியான பட்டிக்காட்டு ஜனங்க என்றான்,
இராகவன் ‘ உஜாலா வெள்ளைப்பா ? ‘தொட்டதுக்கெல்லாம் பயம்’
என்று தோளைக் குலுக்கி வண்டியைச் சீறவிட்டான் .
வேகமாக ஏரிக்கரையைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையைப் பிடித்துவிட
வேண்டுமென்று வேகத்தைக் கூட்டியிருந்தான் .நல்ல இருட்டு, இடது புறம் வரிசையாக
தலைவிரி கோலத்தில் புளிய மரங்கள், வலதுபுறம் உயர்ந்த ஏரியின் கரை, தார்ச்சாலை
நீண்டு கொண்டே சென்றது.மயான அமைதி என்பது இதுதானோ?, சில் வண்டுகளின்
ஓசை கேட்டுக் கொண்டிருந்தது
ஏதோ ஒரு மரத்திலிருந்து ஆந்தை அலறியது, தூரத்தில் நாய் அழுவது கேட்டது,
இப்போது இருவருக்கும் மனதில் இலேசாக அச்சம் தோன்றியது, ஆனாலும் ஒன்றும்
ஆகாது என்ற தைரியமும் ஊடாடியது. அரைமணி நேரம் ஆகியிருக்கும்,
‘ இராகவா யாரோ சிரிக்கற மாதிரி இருக்கு’
‘ ஜானி உனக்குமா ?’ இரு வேகமா போயிடலாம்’

வேகத்தை இன்னும் கூட்டுகிறான். வண்டி பறக்கிறது , வண்டியின் சத்தம் தவிர
வேறெதுவும் இப்போது கேட்கவில்லை.
பத்து நிமிடம்தான் வண்டி பட்டென்று நின்றுபோனது,வண்டியை ஸ்டார்ட் செய்கிறான்
அசையவில்லை,
இராகவன் ஜானி என்று அழைக்கிறான் முடியவில்லை, நாக்கு மேலண்ணத்தில்
ஒட்டிக்கொண்டது, வண்டியிலிருந்து இறங்கவிடாமல் தோளை யாரோ அழுத்திப்
பிடித்திருப்பதை உணர்கிறான்.
புளிய மரங்கள் ஆவேசம் கொண்டது போல் ஆடுகின்றன. சிரிப்புச் சத்தம் உரக்கவே
கேட்கிறது. மரங்களா சிரிக்கின்றன?
மரக்கிளைகளில் குரங்கு போல் ஒன்று தாவிச் செல்வது அந்த மையிருட்டிலும் நன்றாகத்
தெரிகிறது.
பயத்தில் உறைந்திருந்த இருவரும் லாந்தர் விளக்கு ஒன்றை ஏந்தியபடி தூரத்தில் ஒரு
உருவம் நடந்து வருவதைப் பார்க்கின்றனர். மூச்சே நின்றுவிடும் போலானது. எதிரில்
வந்து விளக்கைத் தூக்கிப் பிடித்தது வேறு யாருமல்ல, உஜாலா வெள்ளை வேட்டிப்
பெரியவர்தான்.
‘சொன்னேனில்ல , சரி போ ‘ என்று கையிலிருந்த ஒரு பிடி சாம்பலைத் தூவினார். அது
முகத்தில் பட்டு சந்தனமாய் மணத்தது, இப்போது வண்டி தானே இயங்கியது, திரும்பிப்
பார்த்தான் பெரியவரும், லாந்தர் விளக்கும் இல்லவே இல்லை.

Series Navigationவௌவால் வந்துவிடும்மழை மேகக்கவிதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *