கோ. மன்றவாணன்
மரபுக் கவிதைகளுக்குத் தலைமை தாங்குவது வெண்பாதான்.
அதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை; அதற்கெனப் பல கட்டுப்பாடுகள் உண்டு; அதற்குள் சிந்தனையை அடக்குவது என்பதும் எளிய செயல் இல்லை; சிமிழுக்குள் சிகரத்தை வைப்பது போன்றது என்றே பலரும் கருதுகிறார்கள்.
பெரும்புலவர்கள் பலரும் வெண்பா எழுத முடியாமல் திணறி இருக்கிறார்கள். புகழ்பெற்ற புலவர்கள் எழுதிய வெண்பாக்களில் தளை தட்டும் இடங்களைச் சுட்டிக் காட்டிப் பேர்வாங்கும் புலவர்களும் உண்டு.
வள்ளுவரின் திருக்குறளில்கூட தளை தட்டுகின்றது எனச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
தமிழ் யாப்புகளில் கடினமானது வெண்பா. அதனால் அதனை வன்பா என்றார்கள். யாப்புகளில் மிக எளிமையானது ஆசிரியப்பா. அதனால் அதை மென்பா என்று சொன்னார்கள்.
பார்க்கப் போனால் வெண்பாவில்தான் புலவர்களும் கவிஞர்களும் அதிகம் விளையாடி இருக்கிறார்கள்.
சித்திரக் கவி என்பது தமிழ்மொழிக்கே உரிய கவிதை அமைப்பு. சித்திரங்களுக்குள் எழுத்துகளைப் பொருத்திக் கவிதை எழுதும் கலை. அத்தகைய. சித்திரக் கவிதைளில் வெண்பாதான் இடம்பெறும்.
என் சிறுவயதில் ரத பந்தனம் என்ற சித்திரக் கவிதையை எழுதி இருக்கிறேன். தேர்ப் படம் இருக்கும். அதில் கட்டங்கள் இருக்கும். அந்தக் கட்டங்களுக்குள் எழுத்துகள் அமைய வேண்டும். எதுகை, மோனை, வெண்டளை உள்ளிட்ட இலக்கணக் கூறுகளும் இருக்க வேண்டும்.
நளவெண்பா எழுதிய புகழேந்தியை, வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி என்று தமிழ்க்கவிதை உலகம் இன்றும் புகழ்கிறது.
காளமேகப் புலவரின் சிலேடை வெண்பாக்களை இன்றும் நாம் ரசித்துப் படிக்கிறோம். இன்றைய மேடைப் பேச்சாளர்களும் காளமேகப் புலவரின் வெண்பாக்களைச் சொல்லிக் கைதட்டல் வாங்குகிறார்கள்.
எண்கவனகம், பதின்கவனகம், நுாறு கவனகம் நிகழ்வுகளில் ஒரு கவனம், வெண்பா பாடுவது.
மணிமேகலை வெண்பா என்ற முழுநுாலைப் பாவேந்தர் பாரதிதாசன் எழுதி இருக்கிறார்.
இந்த நுாற்றாண்டிலும் சிலர் வெண்பாவில் காவியம் எழுதி வருகிறார்கள்.
கவியரசர் கண்ணதாசனும் வெண்பா எழுதி இருக்கிறார். ஆனால் அது அவருக்குச் சரியாகக் கைகூடவில்லை. கண்ணதாசன் கவிதைகள் தொகுதியில் அந்த வெண்பாக்கள் இருக்கின்றன. அவற்றுள் தளை தட்டும் வெண்பாக்களும் உள்ளன. ஆனால், அவர்தான் இருபதாம் நுாற்றாண்டில் வெண்பாவுக்கு ஒரு புகழிடத்தை உருவாக்கித் தந்தார். அவருடைய தென்றல் இதழில் வெண்பாப் போட்டி நடத்தினார். தென்றல் இதழில் வெண்பா வந்தது என்றால், அதை எழுதிய கவிஞருக்கு அது என்றும் வாடாத புகழ்மாலை.
நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் வெண்பாக்கள் எழுதி அசத்தி இருக்கிறார். புலவர்களையே வியக்க வைத்த வெண்பாக்கள் அவை. வட்டாரப் பேச்சு வழக்கில் வெண்பாக்களை எழுதினார் ஆகாசம்பட்டு சேசாசலம்.
காத்தப்பன் என்பவர், ஒரே ஈற்றடி கொண்டு ஐநுாற்றுக்கும் மேற்பட்ட வெண்பாக்களை எழுதித் தனிநுாலாக வெளியிட்டு உள்ளார். இருபத்து ஓராம் நுாற்றாண்டின் வள்ளுவர் எனப் போற்றத் தக்க வகையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குறள் வெண்பாக்களை எழுதி நுாலாக வெளியிட்டு உள்ளார். கவிச்சித்தர் க.பொ. இளம்வழுதி அவர்கள் பலவகை வெண்பா யாப்புகளில் வெண்பாக்கள் எழுதினார். அதனை வெண்பூக்கள் என்ற பெயரில் நுாலாக வெளியிட்டார்.
வெண்பாவில் தனி நுால்கள் படைத்து வருகிறார்கள் சிலர். முகநுாலில் வெண்பாக்களை எழுதிக் குவிப்பவர்களும் இருக்கிறார்கள். வெண்பா இலக்கணத்தை எளிதாகச் சொல்லிக் கொடுக்கும் இணையப் பதி்வுகளும் இருக்கின்றன.
இவர்களைக் கேட்டால் வெண்பா எழுதுவது கடினம் இல்லை என்பார்கள். அவர்கள் அலட்சியமாக எழுதும்போதே அந்த வெண்பாக்கள் தளை தட்டாமல் வந்து அமையும். வெண்பாவும் ஒரு மனப்பழக்கம்.
வெண்பா இலக்கணத்தைச் சரியாகக் கற்றுக் கொள்ளாமல், சிலர் வெண்பாக்கள் எழுதுகிறார்கள். அவர்களில் தமிழ் கற்றவர்களும் உண்டு. அந்த வெண்பாக்களில் தளைகள் தட்டுகின்றன. வெண்பாவின் வடிவம் இருக்கிறதே தவிர, வெண்டளை என்ற இலக்கணம் அறவே இல்லை.
தளை தளை என்கிறீர்களே…. அந்தத் தளைதான் என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். அந்தத் தளைதான் இன்றைய சில கவிஞர்களுக்குத் தடை.
மா முன் நிறை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்ற யாப்பு இலக்கணப் படி வெண்பாவின் சீர்கள் இருக்க வேண்டும். அதற்கு வெண்தளை அல்லது வெண்டளை என்பார்கள்.
தலை,கால் புரியாமல் சிலர் வெண்பாக்களை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். சற்று இலக்கணம் கற்க முயன்றால் அவர்களும் சரியாகவே எழுதி விடுவார்கள்.
தளை பற்றித் தெரியாமல் எழுதுகின்ற அந்த வெண்பாக்களில் நல்ல சிந்தனைகள் இருக்கின்றன. அழகான சொல்வளம் மிளிர்கின்றன. வித்தியாசமான வெளிப்பாடுகள் உள்ளன. கவிதையின் எழில் கொஞ்சுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் அந்த வெண்பாக்களைப் புறம் தள்ள மனம் ஒப்பவில்லை.
பழங்காலத்தில் பெரும் புலவர்களில் சிலர், கவிதைகளில் பிழைகள் செய்தனர். அவற்றைத் தமிழ் உலகம் ஒதுக்கித் தள்ளவில்லை. வழுவமைதி என இலக்கணம் வகுத்து ஏற்றுக் கொண்டது.
வெண்பாக்களில் பல வகைகள் உண்டு. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா், நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா என உண்டு. அவற்றிலும் உள்வகைகள் உண்டு. “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்ற பழைய வெண்பாவில் ஒரு சீரைக் காணவில்லை. அதனையும் சவலை வெண்பா எனப் பெயர்சூட்டி ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.
காலம் மாற மாற, வெண்பாக்களிலும் வேறு வகைகள் வந்தால் என்ன? அதன்படி, தளை தட்டும் வெண்பாக்களைத் தளையறு வெண்பா என்று சொல்லி நாம் ஏற்றுக் கொள்ளலாம். தளை என்றால் தடை என்ற பொருளும் உண்டு. அந்தத் தடையைச் சற்று நகர்த்தி வைத்து நடந்தால் என்ன?
தளையறு வெண்பா என்றால் அது வெண்பாவின் தலையை அறுப்பது போல் எனக் கொதித்துச் சிலர் சீறிப் பாயலாம். தளையறு வெண்பா என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால், வழுவமைதி போலத் தளைஅமைதி வெண்பா என்று அழைத்துக் கொள்ளுங்கள்.
வெண்பா இலக்கணத்தின் இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தலாம் என நான் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுக் காலமாகச் செழித்து வந்த மரபுக் கவிதை, மெல்ல மெல்ல… இல்லை இல்லை, விரைவாகவே மறைந்து வருகிறது. மரபுக் கவிதையை அடுத்த அடுத்த நுாற்றாண்டுக்கும் அழைத்துச் செல்லத்தான் இந்த இலக்கணத் தளர்வு தேவை என்கிறேன்.
ஆனால் ஓர் அறிவுரை
வெண்பா இலக்கணம் கற்றுக் கொள்வது மிக எளிது. கற்றுக் கொள்ளுங்கள். தளை தட்டாமல் எழுதிப் பாருங்கள்; பழகுங்கள். முடியாத போது மட்டுமே தளைஅமைதி வெண்பாக்களை எழுதலாம்.
ஆனால் ஈற்றடியில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நாள், மலர், காசு, பிறப்பு என்ற வகையில் கடைசிச் சீர் அமைந்தால் நல்லது. அதுதான் வெண்பாவை அடையாளப் படுத்தும் முகம்.
………………………………
பனி இல்லாத மார்கழியா…
படை இல்லாத மன்னவரா…
தலை இல்லாத பெண்பூவா…
தளை இல்லாத வெண்பாவா…
என்று எங்கோ யாரோ பாடுவது, இங்கு எனக்குக் கேட்கிறது.
-கோ. மன்றவாணன்