குரு அரவிந்தன்
கனடாவில் நினைவுதினம் என்பது போர்க்காலத்தில் நாட்டுக்காக உயிர் தந்தவர்களையும், அக்காலத்தில் போர்முனையில் தம் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியவர்களையும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இதில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மரணித்த போர் வீரர்களும் அடங்குவர். இந்த வாரம் முழுவதும் கனடியர்கள் சிகப்பு நிறத்திலான பாப்பி மலர்களை அணிவதன் மூலம் மரணித்தவர்களை நினைவேந்தல் மூலம் கௌரவிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த மொய்னா மைக்கேல் என்பவர்தான் சிவப்பு பாப்பி மலரை 1918 ஆம் ஆண்டு இதற்காக அறிமுகம் செய்தார். 1921 ஆம் ஆண்டு கனடாவில் இந்த சிவப்பு பாப்பி மலர் இதற்காக அறிமுகமானது. கனடாவில் சில அமைப்புக்கள் வெள்ளை பாப்பி மலரை அறிமுகம் செய்தாலும் அது பெரிதாக மக்களிடையே பிரபலமடையவில்லை.
இதற்கு முன்பு தென்னாபிரிக்கப் போரின் நினைவு நாளாகக் கனடாவில் இந்தத் தினம் இருந்தது. முதலாம் உலப் போரின் போது சுமார் 61,000 கனடியர்கள் கொல்லப்பட்டனர். 1918 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் தான் போர்நிறுத்தத்திற்கான கையெழுத்திடப்பட்டது. இதன் காரணமாக 1919 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி கனடியர்கள் போர் நிறுத்தத் தினத்தை நினைவேந்தல் தினமாக நினைவு கூர்ந்தாலும், உத்தியோக பூர்வமான நினைவேந்தல் 1931 ஆம் ஆண்டுதான் இத்தினத்தில் இடம் பெற்றது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளும் வெவ்வேறு பெயர்களில் இந்தத் தினத்தையே கடைப்பிடிக்கின்றன.
இந்த நினைவேந்தல், இரண்டாம் உலகப் போர், கொரியப் போர் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர், அமைதி காக்கும் பணிகள் மற்றும் பிற சர்வதேச இராணுவ ஈடுபாடுகளின் போது போரில் இறந்தவர்களின் நினைவாகவும் இடம் பெறுகின்றது. இதுவரை சுமார் 118,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு மோதல்களில் இறந்துள்ளதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2020-2021 ஆண்டு கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக பொது இடங்களில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறவில்லை.
தாயகத்தில் எம்முயிர் காக்கத் தம்முயிர் தந்தவர்களைத் தமிழர்கள் நினைவுகூரும் நாளாகக் கனடாவில் நவெம்பர் 27 ஆம் திகதி இடம் பெறுகின்றது. அவர்கள் செய்த தியாகம்தான் இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் என்பதை அடுத்த தலைமுறையினரும் இந்த நிகழ்வின் மூலம் அறிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றது. முதல் இரு வாரங்களில் சிவப்பு பாப்பி மலர்ச்சின்னம் அணிந்தவர்களையும் கடைசி வாரத்தில் காந்தள் மலர்ச் சின்னம் அணிந்தவர்களையும் பொது இடங்களில் காணமுடிகின்றது. ரொறன்ரோவில் 27-11-2024 மிசசாகா எயர்போட் வீதியில் உள்ள இன்ரநாசனல் சென்ரரிலும், மொன்றியலில் Le Chateau Royal மண்டபத்திலும், ஒட்டாவாவில் Nepean Sportsplex என்ற இடத்திலும் மேலும் பல இடங்களிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
Laurence Binyon என்பவரால் 1914 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘For the Fallen’ என்ற கவிதையில் இருந்து Act of Remembrance என்ற வரிகள் எடுக்கப்பட்டு உலகெங்கும் உள்ள அனேகமான போர்க்காலக் கல்லறைகளில் பொறிக்கப்பட்டன. அந்தப் பாடலின் சில வரிகள் இதோ:
‘உயிரோடு எஞ்சியிருக்கும் நாம் முதுமை அடைவது போல இவர்கள் முதுமை அடைய மாட்டார்கள். வயது இவர்களைச் சோர்வடையச் செய்யாது, முதுமை இவர்களைத் தண்டிக்காது. சூரியன் மறையும் நேரத்திலும், காலையிலும், நாம் அவர்களை நினைவில் கொள்வோம்.’
நிச்சயமாக எம் உயிர் காக்கத் தம் உயிர் தந்தவர்கள் நினைவில் கொள்ளப்பட வேண்டியவர்கள், காலம் மறந்தாலும் நாம் மறக்கக்கூடாது!
- மீளா துயர்
- கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும்
- ரகசியம்