புரண்டு புரண்டு படுத்தார்
தர்மகர்த்தா.
தூக்கம் வரவில்லை,
துக்கம் தொண்டையை அடைத்தது.
யாரிடம் சொல்லி அழுவது.
மனிதர்களிடமா. ..,
பிரயோசனமில்லை.
அந்த
அனந்த பூரிஸ்வரிடமா?
அவரை தான்
நேற்றே தூக்கியாச்சே!!
இனி
யாரிடம் சொல்லி அழ.
காலையில்
ஓதுவார் வந்தார்
தொங்கிப்போன முகத்துடன்
மீளா துக்கம் கண்ணில் புரண்டது.
“சிவன் சொத்து
குலநாசம் “,
தேம்பி தேம்பி அழுதார்
தர்மகர்த்தா !
தென்னாடுடைய
சிவனே போற்றி,
எந்நாட்வர்க்கும்
இறைவா போற்றி!
பாடினார் ஓதுவார்.
கண்ணில் வழிந்தோடியது
தோற்றப்பிழையா?
முன்னோர்கள் பிழையா?
“அய்யா
தர்மகர்த்தா,
எந்த நாட்டுக்கு கொடை கொடுத்தீர்
தென்னாடுடைய சிவனை “
“அமெரிக்காவிற்கு “
பத்தாயிரம் டாலர்.
சரி விடுங்க,
அதற்குதான்
அன்றே பாடிவிட்டார் மாணிக்க வாசக பெருமான்,
“எந்நாட்வர்க்கும் இறைவா போற்றி. “
கிடைத்த பணத்தில்,
கும்பாபிஷேகம் செய்துவிடுங்கள்
சிதைந்த கோவிலை செப்பனிடுங்கள்
பாவத்தை கங்கையில் கழுவி விடுங்கள்.
மீண்டும்
புதிய அனந்தபூரீஸ்வரர்
பீடத்தில் அமர்ந்து விட்டார்.
ஐந்து கால பூஜை நடந்தது,
தர்ம கர்த்தா பையனுக்கு
பிள்ளை பாக்யம் இல்லை என்று
தெரிய வந்தது.
சிவனே, சிவனே என்று
புரண்டு புரண்டு அழுதார்,
தர்ம கர்த்தா.
பண்டாரம் பாடிக்கொண்டே
தெரு தெருவாய் அலைந்தார்
அவரோடு கால பைரவரும்
அலைந்தார்,
கையில் பைரவரோடு.
ஜெயானந்தன்