காடு முழுக்க ஒரு தேனீ சுற்றினாலும், எந்த மரத்தில், எந்தக் கிளையில் கூடு கட்டவேண்டும் என்று அதற்குத் தெரியும். நாம் வீடு கட்டுவதுகூட அப்படித்தானோ? உடன்பிறப்புகளோடு உறவாடிக்கிடந்த கூட்டுக்குடும்ப காலங்கள், படிப்பதற்கென்று ஊர்ஊராய்ச் சுற்றிய காலங்கள், முதல் சம்பளம் வாங்கிய காலங்கள், நமக்கென்று ஒரு துணையோடு தனிக்குடித்தனம் தொடங்கிய காலங்கள், தந்தையாக பதவி உயர்வு பெற்ற காலங்கள், வருமானம் பெருக்க வெளிநாடுகளில் அலைந்த காலங்கள் என்று காலங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. இடங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது. எங்கே வீடு கட்டுவது ? யோசித்தேன். நான் தந்தையாக பதவி உயர்வு பெற்ற மண்ணில் கட்டுவது என்று முடிவு செய்தேன். அந்த மண்தான் தஞ்சாவூர்.
எப்போதோ வாங்கிப்போட்ட இடம் பத்திரமாக இருந்தது. அத்தா தந்த ஒரு சொத்தை நல்ல விலைக்கு ஒருவன் கேட்க, கையில் காசும் வந்தது. வீடு கட்டித்தர இரண்டு பொறியாளர்கள் காற்றிலேயே அழகான வீட்டைக்கட்டி, எட்டு மாதத்தில் முடித்துத் தருவேன் என்று ஆசை காட்ட, வீடு கட்டும் வேலை தொடங்கியது. எட்டு மாதம் முப்பது மாதங்களாகி, எப்படியோ வீட்டைக்கட்டித் தந்துவிட்டு அந்தப் பொறியாளர்கள் கழன்றுகொண்டது என் மூதாதையர் செய்த புண்ணியம் என்றுதான் நான் இப்போதும் நம்புகிறேன்.
இந்த ஆண்டு 2025ல் ஜூன் மாதம் பால் காய்ச்ச ஏற்பாடாக, நாங்கள் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு தஞ்சை வந்துவிட்டோம். பிள்ளைகள் பிறகு வந்து சேர்ந்துகொண்டார்கள். உடன்பிறப்புகளில் போனது போக ஓர் அண்ணன், ஒரு தம்பி, ஒரு தங்கை, பழைய நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று ஒரு ஜோசியர், ஒரு பத்திரப்பதிவாளர், ஓய்வுபெற்ற ஆசிரியர் என்று 50 பேர் சேர்ந்துவிட்டனர். 11 மணிக்கு பால் காய்ச்சியபின் மதிய விருந்து மௌலானா பிரியாணி. சாப்பாடு முடித்து பத்துப்பேர் கூடத்திலிருந்த சாய்வு நாற்காலிகளில் வெற்றிலைத்தட்டைச் சுற்றி அமர்ந்தோம்.
அறுபதடி உயரத்தில் கனியும் பாக்கு, ஆழத்தில் கிடக்கும் சுண்ணாம்பு, ஆற்றுப்படுகையில் படரும் வெற்றிலை மூன்றையும் சேர்த்து மென்றால் வாய் சிவக்கும் என்று எவன் கண்டுபிடித்தானோ? வெற்றிலை மென்றுகொண்டே பத்துப்பேரும் பத்துத் திசையில் பேச ஏதோ ஒரு முடிவைத்தான் நான் எடுக்கவேண்டியிருந்தது. பேச்சு இப்படித்தான் தொடர்ந்தது
‘வீடு கட்டிட்டீங்க இங்கேயே இருப்பீங்களா, இல்ல மறுபடியும் சிங்கப்பூர் போயிருவீங்களா?’
‘இங்கேயே எப்படி இருப்பாங்க. அவங்களுக்கு ஒன்னுன்னா, நாங்க சிங்கப்பூர்லேருந்து அலறிஅடிச்சுக்கிட்டு இங்க வரணும். எங்களுக்கு ஒன்னுன்னா எங்க அத்தாஅம்மா சிங்கைக்கு வரணும். நடக்கிற காரியமா?’
‘அப்ப போகவரத்தான் இருப்பீங்க இல்லே’
‘அப்ப போயிட்டா வீட்டெ யாரு பாக்கிறது. காய்ச்சிய பாலெ குடிக்காம வச்சிருந்தா தெரஞ்சுபோயிரும்ணே. அதச் சொல்லத்தான் இந்தப் பால் காய்ச்சுற சடங்கு.’
‘கீழ் விட்டைப் பூட்டி வச்சுட்டு, மே வீட்டெ யார்ட்டயாச்சும் வாடகைக்கு விட்டுடுங்க. வீட்டுக்கும் ஒரு காவலா இருக்கும்’
‘ஆமா. வாடகைக்கு விட்டுட்டு நீங்க போயிடுவீங்க. தண்ணி மேல ஏறலேம்பான். கழிவுத்தண்ணி ஓடலேம்பான். நூறு தடவெ தொலைபேசில கத்துவான். நீங்க தூங்கமுடியும்ங்கிறீங்க. உடனே நீங்க தஞ்சாவூர் வந்தாகனும்’
‘புது வீடு. ஒரு ஆண்டுக்குள்ள அப்படியெல்லாம் ஆகாதுண்ணே. பேசாமெ ஓராண்டுக்கு வாடகைக்கு விட்டுட்டு போறதுதான் நல்ல யோசனையாப் படுது.’
‘இப்ப ஜூன் மாதம். 50 ரூபாய் பத்திரத்தில ஒரு ஆண்டுக்கு வாடகெக்கு விட்றதா பத்திரம் பண்ணுவோம். மே 31ல காலிபண்ணி சாவியெ கொடுத்திடனும்னு கறாரா எழுதிருவோம்’
‘வாடகைக்கு விட்றதுன்னு முடிவானா, ஆள் தயார். பக்கத்துல இருக்கிற காமாட்சி மருத்துவமனைல எலும்பு சிகிச்சை பிரிவுக்கு ஒரு மருத்துவர் வந்திருக்காரு. அவரு பிள்ளங்க இங்கதான் படிக்கிறாங்களாம். வீடு பாத்துக்கிட்டிருக்காரு. நம்ம வீட்டப்பாத்தா உடனே ஒத்துக்கிருவாரு. அவர்ட்டயே விட்டுடலாம்.’
ஒன்றுமட்டும் எனக்குப் புரிந்தது. ‘காசு செலவில்லாமெ யோசனை மட்டும் சொல்லனும்னா எல்லாருக்கமெ பிரியாணி சாப்பிடறதுமாதிரிதான்.’ எப்படியோ ஒரு முடிவுக்கு வந்துதானே தீரணும். அதுதான் சரி என்று நானும் முடிவு செய்தேன்
50 ரூபாய் பத்திரம் தயாரானது. மருத்துவரும் நானும் கையெழுத்துப் போட்டோம். அடுத்த ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி வீட்டைக் காலிசெய்து சாவியை ஒப்படைத்துவிடவேண்டும். ஒரு மாத முன்பணம் வாங்கிக்கொண்டேன். சாவியைத் தந்துவிட்டு நாங்கள் சிங்கப்பூருக்குப் பறந்தோம்.
அதே ஆண்டு நவம்பரில் ஊருக்குப் போய்வர விரும்பினோம். பார்க்கவேண்டிய உறவுளோடு இப்போது என் வீடும் சேர்ந்துகொண்டது.
சிங்கப்பூரில் நான் வந்த காலம்தொட்டு என் நெருங்கிய நண்பராக இருக்கும் சலீம் சொன்னார். நாகூரில் நவம்பர் 29 அன்று அவர் மகளுக்குத் திருமணமாம். ஊருக்குச் செல்வதாக இருந்தால் மகள் கல்யாணத்துக்கு அவசியம் வரவேண்டும் என்றார். ஊர் செல்லும் ஆசை இரட்டிப்பானது. ஊரில் ஒரு கல்யாணம் பார்த்து 40ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தக் கல்யாணத்தில் கலந்துகொள்ளவாவது ஊருக்கு அவசியம் செல்லவேண்டும் என்று முடிவு செய்ததில் சலீமுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
நவம்பர் 27. எங்கள் விமானம் திருச்சிக்கு பறந்துகொண்டிருக்கிறது. வழக்கம்போல் தஞ்சாவூர் சங்கம் விடுதியில் ஒரு வாரம் தங்க ஏற்பாடுகள் செய்துவிட்டேன். அன்று இரவே விடுதியை அடைந்துவிட்டோம். அடுத்த நாள் வீட்டை பார்த்துவருவது அதற்கு அடுத்த நாள் நாகூர்ப் பயணம் என்று இனிக்கும் திட்டங்கள். ஆசைஆசையாய் எதிர்பார்த்திருந்தேன்.
பொழுது விடிந்தது. நான் மட்டும் சென்று முதலில் வீட்டைப் பார்த்துவர நினைத்தேன். மாலையில் மனைவியோடு சேர்ந்து வீட்டைப் பாரம்ப்பதுடன் பக்கத்து வீட்டு நண்பர்கள் வீட்டுக்கும் செல்வது என்று திட்டம்.
கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு இதோ வீட்டை நெருங்கிவிட்டேன். சுற்றுச் சுவரில் வேலைக்காரப் பெண்ணின் பாவாடை சட்டை காய்ந்தது. முகப்பில் நாற்காலியில் கால்மேல் கால்போட்டு ஒரு பையன் தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தான். காதுகளில் இறுக்கமாக கேள்பொறி. நான் சுற்றுச்சுவரின் வாசல் கதவுக்கு வெளியில் நின்று கதவைத் தட்டினேன். அங்கே அழைப்பு மணி இல்லை. அவன் நிமிரவில்லை. அவன் நிமிர்ந்து எளிதாகப் பார்க்கும் திசையில் நின்றபடி மீண்டும் ‘தம்பீ’ என்று அழைத்து இல்லை கத்தி கைகளை ஆட்டி ஒரு குட்டி நடனமே ஆடிவிட்டேன். அப்பாடா! அவன் நிமிர்ந்து பார்த்துவிட்டான். ‘என்ன வேணும்’ என்றான்.
‘நான்தான் இந்த வீட்டுக்கு சொந்தக்காரன். என் வீட்டில்தான் நீங்கள் வாடகைக்கு இருக்கிறீர்கள். அப்பாவைப் பார்க்கவேண்டும். கூப்பிடுங்கள்’ என்றேன். அவன் மன்னிப்புக் கேட்டு, என்னை உள்ளே அழைத்து, அந்த நாற்காலியில் அமரவைத்து அப்பாவை அழைப்பான் என்று நான் எதிர்பார்த்தது என் முட்டாள்தனம்.
என்னை வெளியிலேயே நிற்கவைத்துவிட்டு உள்ளே போனான். பிறகு வந்தான். குளித்துக்கொண்டிருக்கிறாராம். ‘இப்ப வருவார்’ என்றான். அடப்பாவி! வீட்டுக்குச் சொந்தக்காரன் என்று தெரிந்துமா கதவைத் திறக்கவில்லை.
சில மணித்துளிகள் அப்படியே நின்றேன். சூடாக்கியில் பாலை வைத்துவிட்டு ஒரு மணித்துளி காத்திருக்கும்போதுதான் ஒரு மணித்துளி எவ்வளவு நீளம் என்று புரிகிறது. இங்கு காத்திருப்பதோ எத்தனை மணித்துளி என்று தெரியாத நிலை. ஒவ்வொரு நொடியும் மணியாகக் கடக்கிறது. காத்திருக்கும்போதுதான் இயற்கை அழைப்பு தொந்தரவு செய்யும். சகித்துக்கொண்டேன். 10 மணித்துளிகள் கடந்துவிட்டன. ஒரு வழியாக அந்த மருத்துவர் வேலைக்குச் செல்லும் தோரணையில் வெளியே வந்தார். ‘அட! நீங்களா! இந்த மாத வாடகையை உங்கள் கணக்கில் போட்டுவிட்டேனே’ என்றார். அந்தப் பையன் அவரிடம் நான் யார் என்றுகூடச் சொல்லாததில் ஆத்திரம் வந்தது. அடக்கிக் கொண்டேன். வாடகை வாங்கத்தான் நான் சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறேன் என்று அந்த மருத்துவர் நினைத்தையும் சகிக்கவேமுடியாமல் சகித்துக் கொண்டேன். பின் சொன்னேன். ‘அது தெரியும் சார். நான் வீட்டைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்’ என்றேன்.
கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே போய் மீண்டும் வெளியே வந்தார். ‘சாயங்காலம் வாங்களே. மகள் தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கிறாள். இன்றைக்குத் தேர்வு. உங்களைப் பார்த்தால் கவனம் சிதறும்.’
அடப்பாவி! கடன்கேட்க வந்தவனுக்குச் சொல்லும் பதிலைவிட கேவலமானதல்லவா இது. என்ன செய்வது. இப்போதைக்கு அப்படிச்சொல்ல அந்த உரிமை அவருக்கு இருக்கிறது. அவர் சொல்வதைத்தான் இப்போது நான் கேட்டாக வேண்டும். என்னிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காமலேயே கதவைத் திறந்துகொண்டு வெளியேறினார். அவரின் மகிழுந்து அவரின்ஓட்டுநருடன் தயாராக வெளியே நின்றது. அவர் ஏறிக்கொண்டார். மகிழுந்து புறப்பட்டது. போகும்போது கண்ணாடிக் கதவை இறக்கி ‘சாயங்காலம் சந்திப்போம்’ என்று அவர் சொல்வார் என்று நான் எதிர்பார்த்தது என் முட்டாள்தனம். அவர் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றுவிட்டார். அவர் மகன் தொலைபேசியைக் குடைய ஆரம்பித்துவிட்டான். நான் நின்றாலும் சென்றாலும அவனுக்குத் தெரியபப்போவதில்லை. வீட்டை இப்போது பார்க்கவேண்டாம் என்று முடிவு செய்தேன். மே 31ல் சாவி வாங்கும்வரை சகித்துத்தான் தீரவேண்டும்.
அன்று இரவு சலீம் அழைத்தார். நிக்காஹ் 11 மணி. காலை 8 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிடுங்கள். நிக்காஹுக்கு நீங்கள் அவசியம் இருக்கவேண்டும் என்றார்.
அடுத்தநாள் 8மணிக்கெல்லாம் தயாராகிவிட்டோம். மகிழுந்து நாகூருக்கு விரைந்துகொண்டிருக்கிறது. இதோ நாகப்பட்டிணம் வந்துவிட்டது. அடுத்த பத்து மணித்துளிகளில் நாகூரைத் தொட்டுவிடுவோம். தொலைபேசி அழைத்தது. சலீமாகத்தின் இருக்கவேண்டும் என்று திரையைக் கவனித்தேன். ஒரு புது எண். எடுத்தேன். ‘நா சலீமோட தம்பீ மீரா பேசுறேண்ணே’ என்றார். ‘நாகூருக்குள்ள வந்துட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க வீட்டுக்கு வந்துருவொம்’ என்றேன்.
அவர் அழுவதுபோல் இருக்கிறது. பேச்சு இல்லை. பின்னணியில் ஒரு பெரிய துக்கக் கலவரம். வார்த்தைகள் புரியாத ஒப்பாரியாய் இருக்கிறது. கேட்ட சில வார்த்தைகள் உறைய வைத்தது. மீரா இப்போது மீண்டும் பேசினார்
பெண்ணின் தாயார், சலீமின் மனைவி சற்று நேரத்துக்கு முன் மாரடைப்பால் இறந்துவிட்டாராம். மணப்பெண் அமரும் இடத்தில் ‘மையத்து’ வைக்கப்பட்டிருக்கிறதாம் என்று சொல்லியபடி பெரிதாகக் கதற ஆரம்பித்துவிட்டார். அவரே தொடர்ந்தார். ‘நீங்க அவசியம் வாங்கண்ணே. உங்களால்தான் அண்ணனுக்கு சமாதானம் சொல்லமுடியும். எல்லாமே அல்லோல கல்லோலமா கிடக்குண்ணே’ என்றார்.
நான் முடிவு செய்தேன். சலீமைப் பார்க்காமல் திரும்பக்கூடாது. தொடர்ந்தேன். வீட்டில் ஏகப்பட்ட கூட்டம். திருமணத்திற்கு வந்த கூட்டம் துக்கத்துக்கு வரும் கூட்டமாக மாறிவிட்டது. நிக்காஹை நடத்த பள்ளிவாசலிலிருந்து ஒரு குழு ஏற்கனவே வந்து சலீமின் வீட்டில் இருந்தனர். அவர்களைத் திரும்ப அனுப்பவேண்டும். இல்லையேல் திட்டமிட்டபடி நிக்காஹை முடிக்கவேண்டும். சலீமின் முடிவுக்காக காத்திருந்தனர்.மாப்பிள்ளை வீட்டிலிருந்தும் முக்கியமான சிலர் வந்திருந்தனர். அவர்கள் எல்லாரும் ஒரே அறையில் சலீமோடு இருந்தார்கள். அந்த அறைக்குள் என்னை வரச்சொன்னார்கள். என்னைப் பார்த்ததும் சலீம் பெரிதாக அழுததில், அதுவரை சப்தமிட்டவர்களெல்லாம் அமைதியாகிவிட்டனர். அவரவர்கள், அவரவர்கள் யோசனையைச் சொன்னார்கள்.
‘நிக்காஹ் இப்போது வேண்டாம். முதலில் ‘மையத்துக்கான’ வேலையைப் பார்ப்போம். 40 ஆம் நாள் கழித்து நிக்காஹை வைத்துக்கொள்ளலாம்’
‘மாப்பிள்ளைக்கு 15நாள்தான் விசா. நிக்காஹ் தள்ளிப்போனால் இனி அடுத்த ஆண்டுதான்’
‘மாப்பிள்ளை பற்றி கவலை வேண்டாம். உங்கள் வசதி எங்களுக்கு முக்கியம். மாப்பிள்ளை அடுத்த ஆண்டு வரும்போதுகூட வைத்துக் கொள்ளலாம்.’
எல்லாவற்றையும் சலீம் குனிந்தபடி கேட்டுக்கொண்டுதான் இருந்தார். அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.
நான் சொன்னேன்.
‘பெண்ணின் அம்மாவின் ஒரே ஆசை, தன் மகளுக்கு நல்லபடியாக நிக்காஹ் முடியவேண்டும் என்பதுதான். அவருக்கு மாரடைபபு கூட ஏதும் தடங்கல் வந்துவிடுமோ என்ற பயத்தினால்தான். அவர் மௌத்தாகிவிட்டாலும் அவருடைய ‘ரூஹ்’ இங்குதான், நம்மோடுதான் இருக்கிறது. அவருடைய ஆசையை இந்த முகூர்த்தத்திலேயே முடிப்பதுதான், நாம் அவருக்குச் செய்யும் மரியாதை. முகூர்த்தம் தவறவேண்டாம். நிக்காஹ் வேலையைப் பாருங்கள். நிக்காஹை முடித்துவிட்டு ‘மையத்து’ காரியங்களைப் பார்க்கலாம். ‘
எந்தப் பகுதியிலிருந்தும் எந்த சலசலப்பும் இல்லை. கூட்டம் அமைதியானது. பள்ளிவாசல் குழு நிக்காஹ் பத்திரம் எழுதத் தயாரானது. இஸ்லாமிய முறைப்படி, மாப்பிள்ளை வீட்டாரில் நான்கு தலைமுறை பார்த்த ஒரு வயதான அம்மா பெண்ணின் கழுத்தில் ‘கருகமணி’ யைக் கட்டினார்கள். நிக்காஹ் பத்திரத்தில பெண்ணும் மாப்பிள்ளையும், இன்னும் சில சாட்சிகளும் கையெழுத்துப் போட்டார்கள். நிக்காஹ் சிறப்பாக முடிந்தது.
அன்று மாலையே பெண்ணின் அம்மாவுக்கு செய்யவேண்டிய காரியங்களும் முடிந்தது. சலீம் என்னைக் கட்டிப்பிடித்து கலங்கினார். சமாதானப்படுத்திவிட்டு அன்று மாலையே நான் தஞ்சாவூர் புறப்பட்டேன். எனக்கு ஏற்பட்ட துக்கத்தையும் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். 40 ஆண்டுகளாக கனவு கண்ட வீட்டில், முப்பது மாதமாக காத்திருந்து கட்டி முடித்த வீட்டில் ஒரு வழிப்போக்கன் போல் வீட்டுக்கு வெளியேயே நின்றுவிட்டு வந்ததும் மறக்கமுடியாத சம்பவம்தான். இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. சலீம் வீட்டில் சுபச்செய்தி நடந்துவிட்டது. எனக்கும் நடக்கும். மே 31ல் சாவியை வாங்கியபின்.
சிலந்தி, சிட்டு, காகமெல்லாம் கூடுகட்டுவது அவைகளின் சுகத்துக்காகத்தான். வாடகைக்கு விட அவைகளுக்குத் தெரியாது. முடிவு செய்து கொண்டேன். எங்கள் வீட்டில் மே 31க்குப் பிறகு நாங்கள் மட்டும்தான். எங்கள் காலம் முடியும்வரை நாங்கள் மட்டும்தான்.
யூசுப் ராவுத்தர் ரஜித்