This entry is part 7 of 9 in the series 8 மார்ச் 2026


பி.கே. சிவகுமார்

தி.ஜா.வின் எழுத்தைப் பொருத்தவரை இடதுசாரிகள் – அவர் எழுத்தைப் பெரிதாகக் கொண்டாடியது இல்லை. செல்வச் செழுமையில் வாழ்ந்த தஞ்சாவூர் பிராமணர்களின் பெண்ணபிலாஷைகளை அவர் எழுத்தில் வடித்தார் என்று ஒரு பார்வை அவர் மேல் இருந்தது. 

ஏன் அசோகமித்திரன் கூட தி.ஜா இனிமேல்தான் நாவல் எழுதவேண்டும் எனச் சொன்னார் எனப் படித்திருக்கிறேன். பின்னாட்களில், 2011-ல், உடல்நலம் சரியில்லை எனத் தவிர்க்கப் பார்த்த அசோகமித்திரனிடம் எடுத்த பேட்டியில், தி.ஜா.வின் இடத்தைக் கணிப்பது என்பது too early என்கிறார் அசோகமித்திரன். அவர் தவிர்க்கப் பார்க்கும்போது ஏதும் வற்புறுத்திக் கேட்டால் முகதாட்சண்யத்துக்காக எதையாவது சொல்வது அ.மி. வழக்கம். அப்படிக் கொடுத்த பேட்டியில் கூட அசோகமித்திரன் தி.ஜா.வைக்குறித்துச் சொல்லும்போது – “Essentially a far better short story writer than a novelist. நிறைய கதைகள் நன்னாருக்கும். ஜானகிராமனுடைய நாவல்களை விட சிறுகதைகள்தான் மிகவும் சிறப்பானவை என்பது என் அபிப்ராயம். அவர் சிறுகதைகளில் பெரிய master. தமிழின் மிகச்சிறப்பான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். பாயசம், கண்டாமணி ஆகியவை மிகவும் சிறந்தவை.” என்கிறார். தி. ஜா.வின் நாவல்கள் குறித்து இப்பேட்டியில் கேட்கப்பட்டபோது அசோகமித்திரன், “சில இடங்கள் ரொம்ப நன்னா இருக்கும். சில இடங்கள் சரியா வந்திருக்காது. அவர் நாவல்களில் இந்த ‘inconsistencies’ இருந்தது” என்கிறார்.

வெங்கட் சாமிநாதனுடனான ஓர் உரையாடலில் தி.ஜா.வே இப்படிச் சொல்கிறார்: “பெண்களைப் பற்றிய வியப்பு எல்லோருக்கும் உண்டு. அது sexual (சிரிப்பு)”.  ஆக பெண்கள் மீது ஆணுக்கு இயல்பாக இருக்கிற ஈர்ப்பு அவர் கதைகளில் பல வடிவங்களில் வந்ததை அவர் ஏற்கிறார்.

ஆக பெண்களைக் குறித்த ஆண் பார்வையிலான அனுதாபம், வியப்பு, சங்கீத ரசனை, அந்த ரசனையைப் படைப்பில் கொண்டுவருவது, பெரும்பாலும் அந்தக் கால பிராமண வாழ்க்கை, அதில் சுதந்திரத்தை வேண்டி மரபை மீற முயல்கிற பெண்கள், அவர்களைப் புரிந்து கொள்கிற அல்லது பயன்படுத்திக் கொள்கிற ஆண்கள் இப்படி திஜா டெல்லிக்குப் போவதற்கு முன் பார்த்த ஊர்களும், கேட்ட-பார்த்த மனிதர்களுமே அவரின் பெரும்பாலான கதைகள்.  நகர வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படல. அதனால் அதைக் குறித்து அதிகம் எழுத முடியல என்கிறார் தி.ஜா.

இன்னொரு புறம் – தி.ஜா.வுக்குக் கு.ப.ரா.வைத் தெரியும். தன் எழுத்தை ஊக்குவித்தவர் எனக் கு.ப.ரா மீது நிறைய மரியாதை இருந்தது. கு.ப.ரா மீது பாலியல் உணர்வுகள் கொண்ட கதைகளை எழுதியவர் என்று ஒரு பார்வை இருந்தது. தி.ஜா.வின் கதைகளைப் படித்தவர்கள் அவரைக் கு.ப.ரா.வின் வரிசையில் வைத்தபோது, பாலியல் உணர்வுகள் கொண்ட கதை எழுதுகிறவர் என்கிற லேபிள் தி.ஜா.வுக்கும் வந்தது ஆச்சரியமில்லை.

தி.ஜா.வின் எழுத்துகளில் சோரம் – அடல்டரி – அதிகம் உண்டு என்று அப்போது எழுந்த குற்றச்சாட்டைப் பதிவு செய்திருக்கிற சுஜாதா, அது முழு உண்மையில்லை எனத் தன் பார்வையை வைக்கிறார்.  சுஜாதா தி.ஜா குறித்துப் பாராட்டாகவே எழுதியுள்ளார். ஆனால் அதே சுஜாதாவும் தமிழ் இலக்கியத்தில் தி.ஜா.வின் பிரதானமான இடம் சிறுகதைகளில்தான் என்கிறார். இந்த இடத்தில் அசோகமித்திரன் தி.ஜா. இனிமேல்தான் நாவல்கள் எழுத வேண்டும் என்றதை சுஜாதா அவருக்கேரிய மென்மையான பூசி மெழுகும் மொழியில் சொல்லியிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

இந்த இடத்தில் சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் எனத் தி.ஜா.வைக் குறித்து சுந்தர ராமசாமி எழுதியதையும் சேர்த்துக் கொள்ளலாம். தி.ஜா.வின் படைப்புகள் குறித்த ஒட்டுமொத்த அபிப்ராயத்தைக் கோபால் ராஜாராம் வீட்டுக்குச் சு.ரா. வந்த சந்திப்பில் கோபால் ராஜாராம் அவரிடம் கேட்டபோது, பெரியதான அபிப்ராயம் இல்லை என்று சு.ரா. பதில் சொன்னார். நான் உட்பட அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட பலரும் இதை நேரில் கேட்டோம்.

ஜெயகாந்தனின் அமெரிக்கப் பயணத்திலும் கோபால் ராஜாராம் ஜெயகாந்தனிடம் தி.ஜா. எழுத்துகள் குறித்துக் கேட்டபோது ஜெயகாந்தன் அவை குறித்துத் தனக்குப் பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை என்றே சொன்னார்.

அம்பை உள்ளிட்டப் பெண்ணியவாதிகள் தி.ஜா.வின் எழுத்துகள் மீது (உதாரணமாக: மரப்பசு நாவல் குறித்து) கூர்மையான விமர்சனம் வைத்துள்ளார்கள்.

பிரபஞ்சன் தி.ஜா. எழுத்தை முதலில் இடதுசாரிகள் வழியைப் பின்பற்றிக் கடுமையாக விமர்சித்துவிட்டுப் பின்னாட்களில் புளகாங்கிதம் அடைந்து புகழ்ந்ததும் நடந்திருக்கிறது.

ஆக – தி.ஜா எழுத்துகள் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு, அவரை இலக்கியவாதியாக அங்கீகரிக்காத ஒரு தரப்பு, அவர் சிறுகதைகளிலேயே சாதனை செய்திருக்கிறார் என்கிற ஒரு தரப்பு, தி.ஜா.வைத் தலைமீது வைத்துக் கொண்டாடுகிற  (வெ.சா, தஞ்சை பிரகாஷ், பாலகுமாரன் உட்பட) ஒரு தரப்பு, தி.ஜா.வின் எழுத்துகளை விமர்சிக்கிற பெண்ணியவாதிகள் என ஒரு தரப்பு என்றெல்லாம் அந்தக் காலத்தில் இருந்து இருக்கிறது. எல்லா எழுத்தாளரைக் குறித்தும் இப்படித்தான் இருக்கும் என்பதால் இது ஆச்சரியம் இல்லை.

எனக்குக் கல்லூரி முதலாண்டில், சீனியர் மூலம் மோகமுள் நாவல் அறிமுகமாகி, அதன் மூலம் தி.ஜா அறிமுகமானார். பெண் மீதும் பெண்ணுடல் மீதும் இருந்த ஏக்கமும் வியப்பும் பழகிப்போன திருமணத்துக்குப் பின்னான வருடங்களில் மோகமுள் நாவல் மீதான என் பிரேமையும் குறையத் தொடங்கியது. மாறாக – செம்பருத்தி நாவலின் முதல் பாகம் இப்போதும் படிக்கப் பிடித்ததாக இருக்கிறது. தி.ஜா.வின் எல்லா நாவல்களையும் குறைந்தது ஒருமுறையேனும் படித்திருக்கிறேன். அவருடைய சொந்த ரசனையான சங்கீதம் குறித்த நீண்ட பகுதிகள் வந்தால், சங்கீதம் தெரியாத எனக்கு அவை கொடுத்த தொய்வைத் தவிர, தி.ஜா.வின் நாவல்களில் வாசிப்புச் சுவாரஸ்யம் நிச்சயம் உண்டு. தி.ஜா.வின் நாவல்களில் எனக்குப் பிடித்த பாத்திரங்களும் பகுதிகளும் உண்டு. ஜெயமோகன் சொல்கிற நாவல்களுக்கு வேண்டிய தத்துவ தரிசனம் தி.ஜா.வின் நாவல்களில் இருந்ததா என்பது கேள்விக்கும் ஆய்வுக்கும் உரியது.  தி.ஜா சிறுகதைகளின் தொகுப்பொன்றை முன்னர் படித்திருக்கிறேன். அப்போது அவை பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை. இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம் எனத் தோன்றுகிறது.

இந்த இடத்தில் வெ.சா. மோகமுள்ளை மிக உயர்வாக மதிப்பிட்டார் என்பதும் செம்பருத்தி அவரை ஈர்க்கவில்லை என்றும் எழுதிய நினைவு வருகிறது. அசோகமித்திரனோ தி.ஜா.வின் புகழ்பெற்ற நாவல்களை விட செம்பருத்தி போன்றவை பரவாயில்லை என ஒப்பிடுகிறார்.

தி.ஜா.வின் எழுத்தைக் குறித்துச் சொல்லும்போது மனித வாழ்வின் சலனங்களைக் காட்சிப்படுத்தியவர் எனச் சொல்லலாம். ஆனால் அவர் பெண் மீதான ஆணின் ஈர்ப்பு ஈர்ப்பு என்கிற சலனம், கூடவே பெண்களின் சலனம் என ஆண் நினைக்கிறவற்றை “அதிகம்” காட்சிப்படுத்தினார் என்பது உண்மையும். இந்த இடத்தில் “அதிகம்” என நான் மேற்கோளுக்குள் குறிப்பிட்டு இருப்பதை மறந்துவிட்டு யாரும் கம்பு சுற்றினால், கடந்து விடுவேன்.

காமம், ஆண்-பெண் உறவு குறித்த மனிதர்களின் சலனம் ஒரே மாதிரி இருக்க முடியாது. படித்தவர்க்கும் படிக்காதவர்க்கும் அல்லது குடும்ப / வளர்ப்புச் சூழல் குறித்து அவை வேறுபடலாம். அந்த விதத்தில் கூட தி.ஜா. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், குறிப்பிட்ட பொருளாதார நிலையின் காமம் குறித்த சலனங்களையே எழுதியுள்ளார் எனலாம். அவற்றை அவர் சிறப்பாக எழுதியுள்ளார் என யாரும் சொன்னால், மகிழ்ச்சி என்பதே என் நிலைப்பாடு.

ஆக – தி.ஜா.வின் சாதனை சிறுகதைகளில் மட்டுமே என அவரைப் பாராட்டுகிற ஒரு தரப்பு சொன்னாலும், அவருடைய மொத்த எழுத்துமே கிராமம், சிற்றூர்கள் சார்ந்து (கும்பகோணத்தையே அக்காலத்தில் பெரிய கிராமம் என்கிறார் தி.ஜா), அதன் வாழ்க்கை, மனிதர்கள், சங்கீதம் என அந்த வட்டத்துக்குள்ளேயே திரும்பத் திரும்ப எழுதியவர் தி.ஜா எனச் சொல்லிவிடலாம். அவரின் எல்லை அதுதான். அதை அவரிடம் யாரும் சொல்லியிருந்தால் ஆமாம் என ஏற்றுக் கொள்கிற கனவாண் குணம் கொண்டவராக தி.ஜா இருந்திருப்பார் என்பது எழுத்து வழியே அவரை அறிந்த என் யூகம்.

இதை இவ்வளவு விரித்து எழுதக் காரணம் – எழுத்தாளர் வண்ணநிலவன் சமீபத்தில் ஜெயகாந்தனையும் தி. ஜானகிராமனையும் ஒப்பிட்டு எழுதி, ஜெயகாந்தன் இலக்கியவாதி, தி.ஜா இலக்கியவாதி அல்ல எனச் சொல்லியிருந்தார். இந்த ஒப்பீடே சரியானதல்ல. இருவரின் இலக்கியப் பார்வையும் வேறு. 

மேலும், ஜெயகாந்தன் எழுதிய விரிந்த தளங்களை, கதைக்களன்களை, கதை மாந்தர்களை, எழுத்து வடிவங்களை, மொழி வடிவை (சென்னை வட்டார வழக்கில் இருந்து பிராமண் பாஷை வரை), திரைப் பங்களிப்பை, இவற்றில் எல்லாம் அவர் காட்டிய விரிவை – ஆழத்தை, தி.ஜா தொட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அதே போல் மனித மனதின் காமம், ஆண்-பெண் உறவு உட்பட்ட பல்வேறு வகையான சலனங்களை, பல்வேறுவிதமான மனிதர்களின் பின்புலத்தில் தன் படைப்புகளில் அணுகியவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் சிறப்பு அவர் தொட்ட தளமோ, மனிதர்களின் தரப்போ, சலனத்தின் வகையோ தி.ஜா.வை விட விரிந்ததும் பெரியதும் ஆகும். மோகமுள்ளைவிட பாரிசுக்குப் போ இசையைக் குறித்துப் பார்க்கும்போதும், ஆண் பெண் உறவைக்குறித்துப் பார்க்கும்போதும் நல்ல நாவல் என விரிவாக எழுதியவர்கள் உண்டு.  இந்த விதத்திலும்  ஜெயகாந்தனின் பிரம்மாண்டம் பெரியது.

ஆனால், அதையெல்லாம் தொடாமல், அவர் எழுதிய குறுகிய கான்வாசிலேயே எழுதிய தி.ஜா ஒரு நல்ல எழுத்தாளரா என்றால் என் வாசிப்பில் தி.ஜா ஒரு நல்ல எழுத்தாளரே. ஜெயகாந்தனோடு மட்டுமல்ல யாருடனும் தி.ஜா.வை ஒப்பிடாமலேயே ஒரு நல்ல வாசகருக்கு இதைச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

தி. ஜானகிராமன் மாதிரி எழுத முடியலை என ஜெயகாந்தன் சொன்னதாக, சா. கந்தசாமி சொன்னதாக சில வருடங்கள் முன் பிரஸன்னா ராமசாமி பேஸ்புக்கில் எழுதினார்.  அப்போதே அதை மறுத்தும் சிறுகுறிப்பொன்றைப் பின்னூட்டமாக எழுதினேன். இதை அவர் சா. கந்தசாமியோ ஜெயகாந்தனோ இருக்கும்போது எழுதியிருந்தால் சரிபார்த்திருக்க முடியும். அல்லது சா. கந்தசாமி அதை எழுத்தில் பதிவு செய்திருந்தால் காட்டியிருக்க வேண்டும். அப்படியும் செய்த மாதிரி தெரியவில்லை.

சரி, தி.ஜானகிராமன் மாதிரி எழுத வேண்டுமெனில் அதென்ன பெரிய விஷயமா? பாலகுமாரனில் இருந்து தஞ்சை பிரகாஷ் வரை எத்தனையோ பேர் எழுத முயன்றார்களே. இன்னொருவர் போல் எழுத நான் எதற்கு என்று கேட்டவர் ஜெயகாந்தன். இதிலே அவருக்குத் தி.ஜானகிராமன் போல எழுத ஆசை என அவர் சொன்னதாக ஜெயகாந்தன் இறந்த பிறகு கதை கட்டுகிறார்கள். மாறாக, ஜெயகாந்தன் பேசிய பலர் இருந்த சபையில் தி.ஜா. எழுத்து குறித்து ஜெயகாந்தன் சொன்னதை, அந்தக் கேள்வி கேட்டவர் பெயருடன் நான் பதிவு செய்திருக்கிறேன்.

ஜெயகாந்தன் பொதுவாக சமகாலத்து எழுத்தாளர்களைக் குறித்துக் கருத்துச் சொல்வதே conflict of interest என நினைத்தவர். காலம் பதில் சொல்ல வேண்டும் எனச் சொன்னவர். தவிர்க்க இயலாமல் சில நேரங்களில் பதில் சொன்னதுண்டு. திஜா குறித்து 2000களில் ஜெயகாந்தன் பதில் சொன்னபோது தி.ஜா உயிருடன் இல்லை.

அதனால் தி.ஜா.வின் கொடியை உயர்த்திப் பிடிக்க நினைக்கிறவர்கள் பிடியுங்கள். ஒரே ஒரு நல்ல கதையை எழுதிய எழுத்தாளரைக் கூட யாரும் பாராட்டுவது என்பது வாசகனாக, அவ்வப்போது எழுதுகிறவனாக, எனக்கு மகிழ்ச்சியே. தி.ஜா.வை நீங்கள் நினைக்கிற அவர் எழுத்தில் செய்த சாதனைகளுக்காக உயர்த்திப் பிடியுங்கள்.  திஜாவை இவர் பாராட்டியுள்ளார் அதனால் திஜா பெரிய எழுத்தாளர் என்பதெல்லாம் உங்கள் வாசக அறிவுக்கும், தி.ஜா.வின் எழுத்துத் திறமைக்கும் அழகல்ல.  ஜெயகாந்தன் சொன்னதாக ஆதாரம் இல்லாத செவிவழிக்கதையொன்றை முன்மொழிந்து ஜெயகாந்தனைத் திஜாவைப் பாராட்டத் துணைக்கழைப்பது, தி.ஜா மிகவும் பலவீனமான அஸ்திவாரத்தின் மீது நிற்கிறார் என நீங்கள் பயப்படுவதையே காட்டுகிறது.

– பி.கே. சிவகுமார்

Series Navigationநூறு குடம்கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், சார்வாகன் எழுதிய “நாதப்பிரும்மம்” சிறுகதை