பெண்களின் விதிகள்

This entry is part 18 of 26 in the series 30 டிசம்பர் 2012

தேமொழி

இந்த டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி இரவு, இந்தியத் தலைநகர் டெல்லியில், கயவர்களால் வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளான 23 வயது கல்லூரி மாணவியின் நிலையைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. தற்பொழுது சிங்கப்பூர் அனுப்பப்பட்டு, உறுப்பு மாற்ற சிகிச்சைக்கு ஆயத்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் அவர். ஞாயிறு மாலை திரைப்படம் பார்த்துவிட்டு, தக்க துணையுடன் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிற்கு ஏற்பட்ட நிலைமை இது.  இதனால் மக்கள் பொங்கி எழுந்து, தலைநகரும், நாடும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. கலவரத்தில் மேலும் உயிர்ச் சேதம்.

செய்தித்தாள்கள், தொலைகாட்சி செய்திகள், இணையப் பதிவுகள் என ஊடகங்கள் யாவும் இந்தக் கொடூர நிகழ்ச்சியினை ஆராய்ந்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.  கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றது.  இந்தியப் பெருநகரங்களில் வன்புணர்ச்சி நிகழ்வுகள் அதிகம் என்றொரு  தகவல்.  இந்த ஆண்டு மட்டுமே டெல்லியில் 582 வன்புணர்வுக் குற்றங்கள் பதியப் பட்டிருக்கிறது என்ற தகவலை வெளியிடுகிறது “மெயில் டுடே”.

காலம் காலமாக நகரில் நடக்கும் கொடுமைதான் இது. மக்கள் தற்காலத்தில் விழிப்புணர்ச்சியுடன்  தைரியமாக வெளிவந்து போராடுவதாலும், நியாயம் கேட்பதாலும், ஊடகங்ளின் தகவல் தொலைதொடர்பு முன்நேற்றதினாலும் இப்பொழுது புள்ளிவிவரங்கள் அதிகம், மக்கள் கவனத்தையும் அது கவர்கிறது.  முன்பு மானம், மரியாதை போகும் என வெளியில் சொல்லாமல் குமைந்து கிடந்தனர் என்று விளக்க முற்படுகிறார்கள்  ஒரு சாரர்.

இது தகுந்த வாதமல்ல, முன்னை விட குற்றங்கள் அதிகரித்து விட்டது.  இதற்கு காரணம் இவை இவை எனப் பட்டியலிடுகிறார்கள் மற்றப் பிரிவினர்.  கடுமையான மரண தண்டனையே இதற்கு சரியான தீர்வு என  குற்றத்தைக் குறைக்க வழியும் சிலரால் சொல்லப்படுகிறது. இவ்வாறு நடந்த பின்பு, நோய் வந்தபின்பு மருந்து போடுவதைப் போலச்  செயல் படாமல், நோயே வராமல் வழி வகுப்பது போல, குற்றம்  நிகழக் காரணமாக இருந்த காரணிகளை நீக்க வேண்டும் என்ற கருத்துக்களும் வலம் வருகிறது.

குற்ற நிகழ்ச்சியின் மூலம் என ஆராயும் பொழுது அதற்கும் பற்பல காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன:
– பெண்களின் ஆபாச உடை குற்றத்திற்கு ஒரு காரணம் என்று சொல்பவர் உண்டு.  பொருள் பூட்டப் படாமல் வெளியே இருந்தால் நமது என்று திருடும் மனப்பான்மை நம்மிடம் உண்டு என்பதைச் சொல்கிறது இந்த வாதம். உணர்ச்சிகளை சுயக்கட்டுப்பாட்டில் வைக்காமல் பெண்களைக் கண்டவுடன் மேலே பாயும்   நாகரீகம் அடையாத காட்டுமிராண்டித்தனத்திலிருந்து முன்னேற்றம் அடையாதவர்களா மனித இனத்தினர்?

– பெற்றோர்கள் வளர்ப்பைக் குறை கூறுவோர் உள்ளனர். இவர்கள் வாதப்படி உழைக்கும் பெற்றோர்களால் குழந்தை வளர்ப்பில் நேரம் செலுத்த முடிவதில்லை.  இதன் விளைவு போக்கிரிப் பிள்ளைகள் உருவாதல் என்பது.  இவ்வாறு குறை கூறுபவர்கள் காலம் மாறிவிட்ட நிலையில் குழந்தைகள் வளர்ப்புச் சூழ்நிலை முன்பு போல இல்லை என்ற உண்மையை முக்கியமாக மறந்து விடுகிறார்கள்.

இயற்கையாக மரபணு அடிப்படையில்  வந்த   குணநலன்களும், வளர்ப்பு சூழ்நிலையும் (Nature + Nurture) மனிதப் பண்புகளுக்கு அடிப்படைக் காரணம்.  எந்தப் பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வளர்ந்து சமுதாயத்தின் களைகளாக மாற வேண்டும் என்று விரும்புவதும் இல்லை, அவ்வாறு வளர்க்க நினைப்பதும் இல்லை. குழந்தை பிறந்த முதலே அவர்களை  எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்பது  பெற்றோர்களின் கனவு.  அதைக் குறைத்து மதிப்பிடுவது தவறு.  குழந்தை வளர்ப்புச் சூழ்நிலை மிகவும் மாறிவிட்டது.  வளரும் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து கற்றுக் கொள்வதைவிட ஊடகங்களின் மூலம் அறிந்துகொள்வது இக்காலத்தில் அதிகம்.

பெண்களின் நடை உடை பாவனையைக் கட்டுப் படுத்த நினைப்பதோ, அல்லது “எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே”,  என்று பாடிக்கொண்டிருப்பதோ காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்கள் மட்டுமல்ல, பெணகளுக்கு  குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட்டு,  அவர்களை மறைமுகமாக கட்டுப்படுத்த நினைக்கும் செயல் திட்டங்கள்.  இது போன்ற வாதங்கள் பெண்கள் முந்நேற்றதிற்கு குறுக்கே நிற்கும்.

உண்மையான காரணம் குடும்பத்திற்குள் கருத்துப் பரிமாற்றத்தில் ஏற்படும் குறைகள்.  பெற்றோர்கள் தங்கள் எதிபார்ப்பை குழந்தைகளுக்குச் சரியான முறையில் எடுத்துச் சொல்வதில்லை. குழந்தைகளுக்கு கிடைக்கும் கருத்துப் பரிமாற்றங்களோ அவர்களை நல்வழிப் படுத்துவதாக இல்லை.  காலம் காலமாக குழந்தைகளை நல்வழிப்படுத்த நன்நெறிக் கதைகள் கூறப்பட்டு வளர்க்கப்பட்டார்கள். சத்திரபதி சிவாஜி  தன் தாயிடம் கதை கேட்டு  வளர்ந்ததையும், காந்தி ஹரிச்சந்திரா கதை கேட்டு உண்மையே பேசும் மகாத்மாவாக வளர்ந்தததையும் சிறு வயதில் நாம் அனைவரும் பள்ளியில் படித்துள்ளோம்.

இக்காலக் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பில்லை.  அவர்களுக்கு சத்திரபதி சிவாஜிக்கும், காந்திக்கும் கொடுக்கப்பட்ட முன்னுதாரணங்கள் போல நல்ல முன்னுதாரணங்கள் காட்டப் படுவதில்லை. பெற்றோர் நல்ல முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக முன்பு பிள்ளைகளுக்கு ஒரு கதை சொல்லப்படும்.  தன்  தந்தையை அவமதித்து சரிவர உணவிடாமல் இருந்தான் ஒருவன். அவனது தந்தை இறந்த பிறகு அவன் மகனே அந்த உணவுத் தட்டை எடுத்து பத்திரப் படுத்துவான். அதில் அவன் கிழவன் ஆனவுடன் அதே  போல சோறு போடப் போவதாகச் சிறுவன் சொல்வதாகவும் கூறப்படும். இதைக் கேட்ட பின்பு தந்தையை அவமதித்தவனுக்குத்   தன் தவறு புரியும்.

இது போன்ற நன்னெறிக் கதைகளும், நம்  நாட்டின் பெருமை வாய்ந்த இதிகாச நீதிக் கதைகளும், இலக்கியக் கதைகளும் வளரும் பிள்ளைகளை நல்வழிப் படுத்த இப்பொழுது பயன் படுவதில்லை. அவர்களை எளிதில் சென்றடையும் திரைப்படங்கள், தொலைக்கட்சிகள்,  வீடியோ விளையாட்டுகள் யாவும் போதிப்பது வன்முறையே. இப்பொழுது குழந்தைகளுக்கான திரைப்படங்கள்  தயாரிக்கப் படுவதில்லை. சமீபத்தில் கர்ணன் படம் பார்த்தவர்கள் இது போன்று குடும்பமாகச் சென்று பார்க்கும் படங்கள் இப்பொழுது வருவதில்லை என்று நொந்து கொண்டார்கள்.

இந்தியத்  தணிக்கைக் குழுவால் பெரியவர்கள் பார்ப்பதற்கு மட்டும் என்ற தகுதிச் சான்றிதழ் பெற்ற படங்கள் திரை அரங்குகளில் மட்டும் வெளியிடப்பட்டுப்  பார்க்கப் படுவதில்லை. குழந்தைகள் பார்க்கத் தகுதியற்ற அப்படங்கள் “இந்திய தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக… திரைக்கு வந்து சில மாதங்களே ஆன… புத்தம் புதிய திரைப்படம் என்ற அறிவிப்புடன் ” சில வாரங்களில் தொலைக்காட்சி வழியே வளரும் குழந்தைகளின் பார்வைக்கு வருகிறது. அப்பொழுது இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு சான்றிதழ் தன் தகுதியை இழந்து விடுகிறது. படம் ஆரம்பிக்கும் முன் காட்டப்படும் தகுதிச் சான்றிதழை தொலைக்காட்சியில் படம் பார்ப்பவர் மதித்ததாக கேள்விப் பட்டதில்லை.

இதுபோன்ற தகுதியட்ற திரைப்படங்களும், இவற்றையும் விடத் தகுதியற்ற தொலைக் காட்சிகளும், அவற்றை ஆதரிக்கும் விளம்பரங்களும் குழந்தகளுக்கு போதிக்கும் நன்னெறி என்ன? அவை  வாழ்வின் குறிக்கோள் என்னவென்று வளரும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறது? உண்மைக்குப் புறம்பான காட்சிகளும் வன்முறையும்தான் அவர்களுக்கு வாழ்வில் என்ன குறிக்கோளைக் கொடுத்துவிடும்.

அத்துடன் இதுபோன்ற திரைப்பட, தொலைக்காட்சிகள் மற்றும் விளம்பரங்களில் பெண்களை சித்தரிப்பதும் அவர்கள் பிறப்பின் நோக்கமே ஆண்களின் தேவையை   பூர்த்தி செய்வதும், அதற்காகத்  தங்கள் அழகு ஒப்பனை பற்றியே கவனம் செலுத்த வேண்டும்  என்ற நோக்கிலேயே அமைக்கப் படுகிறது (ஓரிரு விதிவிலக்குகளும்   உண்டு).

பெண்களை ஆண்களின் வாழ்க்கைத் துணையாக, நல்ல நட்பாக அறிவுறுத்த வேண்டும்.   ஆண்களின் இச்சைப் பொருட்களாக,  தனக்கென சுயசிந்தனை இல்லாத உயிரினம் போன்ற எண்ணங்களை உருவாக்கும் காட்சிகளைத்  தவிர்க்க வேண்டும்.  உண்மையாக நடப்பதைத்தான் சித்தரிக்கிறேன் என்ற காரணம் கூறி சமுதாயப் பொறுப்பில் இருந்து தவறக்கூடாது.  பெண்களைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை  சமுதாயத்தில் நிலை  நிறுத்தாத வரை பெண்களுக்குத் தற்காப்பு பயிற்சிகள் அளிப்பதோ, மீண்டும் நீதி போதனை வகுப்புக்களை பள்ளியில் துவக்குவதோ சரியான பயனை அளிக்காது.

பொழுதுபோக்கு படைப்புகளில்  பெண்கள் பண்புடன் சித்தரிக்கப் படுவதை நிர்ணயிக்க  அமெரிக்காவில் “பெஷல் சோதனை” (Bechdel Test; /bech·del test/) உபயோகப் படுத்தப் படுகிறது. பெஷல் சோதனை முறை மிகச் சமீபத்தில்தான் பிரபலமடைந்தது (இந்தச் சுட்டி வழி சென்று அதன் பரவலைக் காணலாம்: http://www.google.com/trends/explore#q=Bechdel%20Test).  ஆலிசன் பெஷல் (Alison Bechdel) எழுதிய “டைக்ஸ்  டு வாட்ச் அவுட் ஃபார்” (Dykes to Watch Out For ) என்ற ஓவியக் கதையே இந்த ‘பெஷல் சோதனை’ முறை தோன்ற அடிப்படையாகும். இக்கதைத் தொடரில் 1985 ஆம் ஆண்டு வெளியான “தி ரூல்” (“The Rule”) என்ற அத்தியாயத்தில் ஒரு பெண் தன் தோழியிடம் அவர் பார்க்கும் திரைப்படங்களின் தகுதி எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிடுவார்.

அப்பெண்ணின் கொள்கையின் படி அப்படங்கள் கீழ்கண்ட மூன்று தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

(1) குறைந்தது இரண்டு பெண்களாவது கதையில் இடம் பெற்றிருக்க வேண்டும் (நம் கனவுப் பாடல் காட்சிகளில் ஒடி ஆடும் வெள்ளுடைத் தேவதைகள் இத்தகுதிச் சோதனை விதியைக் குலைத்துவிடுவார்களோ?)

(2) இடம் பெறுவது மட்டும் போதாது அவர்கள் தங்களுடன் உரையாடிக்கொள்ள வேண்டும் (ஆஹா ..நல்லது  …வெள்ளுடைத் தேவதைகள் உதவவில்லை!)

(3) அப்பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதும் ஆண்களைப் பற்றி இருக்கக்கூடாது (பின்னே என்னதான் பேசுவது? “பொம்பளைங்க சமாச்சாரம்” என்ற சமுதாய ஆக்கபூர்வ கருத்துக்களோ?)

தி ரூல் கதையின் படம்:

இந்த மூன்று விதிகளிலும் தேர்ச்சி  பெறும் கதைகளே  பெண்களின் சமத்துவத்திற்கு ஊரு விளைவிப்பதில்லை என முடிவெடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு தேர்ச்சி  பெறும் படங்கள் பார்க்கத் தகுதி வாய்ந்த படவரிசையிலும் இடம் பிடிக்கிறது. இதனால், பெஷல் சோதனை முறை புனைக்கதை படைப்புகளில் பெண்களுக்கு கொடுக்கப்படும் சமத்துவத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாக உதவுகிறது.

முதலில் இச்சோதனை திரைப்படங்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப் பட்டாலும், பின்னர் தொலைக் காட்சி, புத்தகங்கள் என மற்ற புனை ஆக்கங்களின் தகுதியையும் நிர்ணயம் செய்ய உபயோகப் படுத்தப் படுகிறது.  இச்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அமெரிக்க படங்களில் ஏறத்தாழ 50% படங்கள் பெண்களுக்கு சமத்துவம் தருவதாக தகுதி பெறவில்லை.  இதுவரை 3000 க்கும் மேற்பட்ட படங்கள் இச்கோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. தகுதி பெற்ற படங்களிலும் பேசும் பெண்கள் உரையாடலில் தங்கள் குடும்பம், குழந்தைகள் போன்றவற்றையே பேசுகிறவர்களாகச் சித்தரிக்கப் படுகிறார்கள்  எனக் குறைபடுவோரும் உண்டு.

இச்சோதனையை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் எத்தனை இந்தியப் படங்கள் தேர்ச்சி  பெறும் என்பது கேள்விக்குறியே.   பொழுது போக்கு ஆக்கங்களில் பெண்கள் சமத்துவத்துடன் சித்தரிக்கப் படும்  பொழுது, சமுதாயத்தில்  அவர்களுக்குத்  தகுந்த மரியாதையை அந்த முயற்சி பெற்றுத்தரும்  என்பதில் சந்தேகமில்லை. அதனால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் குறையும்.

இந்தியா ஆன்மீக நாடு, பெண்கள் எங்கள் கண்கள் போன்றவர்கள் என்பது போன்ற வெட்டிப் பேச்சுக்களைக் குறைத்துக் கொண்டு வளரும் இளைய சமுதாயத்திற்கு நல்வழிக்காட்ட முன்வந்து அதற்கேற்ற நடவடிக்கையை  எடுக்க வேண்டும்.

சமுதாயப் பொறுப்புமிக்க படைப்புகளை உருவாக்குவதும் , அவற்றின் வழியே தகுதி நிறைந்த முன்னோடிகளை வளரும் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்தி அவர்களை நல்வழிபடுத்துவதும்  நம் யாவருக்கும் கடமையாகிறது.

References:
Shock and outrage over India Delhi bus gang rape, 17 December 2012 – (http://www.bbc.co.uk/news/world-asia-india-20765320)

Bechdel test, From Wikipedia, the free encyclopedia – (http://en.wikipedia.org/wiki/Bechdel_test)

The ‘Bechdel Rule,’ Defining Pop-Culture Character, by Neda Ulaby, September 02, 2008 – (http://www.npr.org/templates/story/story.php?storyId=94202522)

Alison Bechdel’s ‘The Rule’ strip, from a 1985 installment of her comic Dykes to Watch Out For – (http://dykestowatchoutfor.com/)

Series Navigationமொழிவது சுகம்: தூக்ளாஸ் கிரெஸ்ஸியெதண்டனை யாருக்கு?
author

தேமொழி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *