அக்னிப்பிரவேசம்-20

This entry is part 12 of 28 in the series 27 ஜனவரி 2013

yandamuri veerendranath

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

“உன் மனதில் என்ன இருக்கிறது என்று என்னால் ஊகித்துக் கொள்ள முடிகிறது சாஹிதி. உனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அப்படித்தானே?” என்றான் பரமஹம்சா.

அவள் பேசவில்லை. கடந்த சில நாட்களாய் அவன் இதே வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்தான். திரும்பத் திரும்ப “உனக்கு விருப்பம் இல்லை போல் தோன்றுகிறது. அப்படித்தானே” என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.

உண்மையில் அது அவன் மனதில் இருக்கும் எண்ணம் போலவே தோன்றியது. ஏனோ அவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அந்த விஷயத்தை வெளிப்படையாக சொல்லவும் மாட்டான். இதுபோல் கேட்டுக்கொண்டே இருப்பான்.

ஆனால் இவனுக்குப் பிடிக்காதது சாஹிதியின் திருமண முயற்சியா? அல்லது இந்த வரனைப் பிடிக்கவில்லையா? அதுதான் தெரியவில்லை.

பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்த நிர்மலா வெற்றிலையை மடித்து அவனுக்குத் தந்துகொண்டே “சாஹிதி! உனக்குப் பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடும்மா” என்றாள். பரம்ஹம்சா உண்மையிலேயே மகளின் மனதையறிந்து பேசுகிறான் என்று நம்பினாள் அவள்.

என்ன பேசுவாள் சாஹிதி? ‘இல்லை அம்மா. எனக்கு விருப்பம்தான். சீக்கிரமாய் திருமணம் செய்துகொண்டு போய்விடணும் என்று இருக்கு’ என்று அவள் எப்படிச் சொல்லுவாள்?

அவளை அந்த சூழ்நிலையிலிருந்து மீட்பதற்காகக் கடவுளே அனுப்பி வைத்தது போல் வேலைக்காரன் வந்தான்.

“உங்களைத் தேடிக்கொண்டு யாரோ வந்திருக்கிறார்கள் ஐயா” என்றான்.

பரமஹம்சா புரியாமல் பார்த்தான். சாதாரணமாய் இந்த முதல் மனைவியின் (இல்லை இல்லை ..மூன்றாவது) வீட்டுக்கு அவனைத் தேடிக்கொண்டு யாரும் வரமாட்டார்கள். அப்படி இருக்கும்போது இந்த ராத்திரி வேளையில் வந்திருப்பது யாராய் இருக்கும் என்று புரியாமல் முன்னறைக்கு வந்தான். பின்னாடியே நிர்மலாவும் வந்தாள். ஹாலில் இருவர் உட்கார்ந்து இருந்தார்கள். அதில் கொஞ்சம் சிறியவனாய் தென்பட்ட இளைஞன் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்துவிட்டு “என் பெயர் குணசேகர்” என்றான்.

உள்ளேயிருந்து வரப்போன சாஹிதி சட்டென்று நின்றுவிட்டாள். சேகர் தன்னுடன் வந்த இன்னொரு நபரைச் சுட்டிக்காட்டி  “இவர் எழுத்தாளர் பர்த்வாஜ்” என்றான்.

அப்பொழுது ஒரு வினோதம் நிகழ்ந்தது.

பரத்வாஜ் திடீரென்று இருக்கையை விட்டு எழுந்திருந்து பரமஹம்சாவின் காலைத் தொட்டுவிட்டு எழுந்தான்.

நிர்மலா அளவுகடந்த ஆச்சரியத்துடன் இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பரமஹம்சா பூஜைப் பண்ணும்போது சில பக்தர்கள் இதுபோல் அவருடைய பாததூளியை எடுத்துக்கொள்வதைக் கண்டிருக்கிறாள். ஆனால் இந்த சூழ்நிலை வேறு. தம்பதிகள் இருவருக்குமே வந்த இரண்டுபேரின் மீதும் அபிமானம் கூடியது. பரிவோடு முறுவல் பூத்தபடி பரமஹம்சா பரத்வாஜ் பக்கம் திரும்பினான்.

“மன்னிக்க வேண்டும். சாஹிதி என்ற பெண்ணின் தாய் மாமா சொன்னார். பையனை ஒருமுறை பார்க்கணும் என்று சொன்னீங்களாம். அதனால்தான் வந்தோம். பஸ் தாமதமாகிவிட்டது” என்றான் பரத்வாஜ்

நிர்மலா சங்கடத்துடன் பிரமஹம்சாவைப் பார்த்தாள். அண்ணனின் மீது கோபம்கூட வந்தது. ஏதோ வேலை இருப்பதாய் அழைப்பது வேறு. இப்படி வெறுமே பார்ப்பதற்காக வரச் சொல்லுவது வேறு.

“என்ன படிதிருக்கிறாய் தம்பி?” கேட்டான் பரமஹம்சா.

“இன்ஜினியரிங் படித்திருக்கிறேன்” என்றான் குணசேகர். பரம்ஹம்சா அந்த இளைஞனை உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் பார்த்தான். சேகர் தலை குனிந்தபடி உட்கார்ந்திருந்தான்.

“கொஞ்சம் காபி கொண்டு வருகிறேன்” என்று எழுந்து கொண்டாள் நிர்மலா.

“அதெல்லாம் வேண்டாம். குணசேகர் காபி குடிக்க மாட்டான். எனக்கு இது காபி குடிக்கும் சமயம் இல்லை” என்றான் பரத்வாஜ் பணிவாய்.

“இன்னும் மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?”

“இல்லைங்க. இப்பொழுதே அப்பாவின் மீது பாரம் வைத்து விட்டேன். ஏதாவது வேலை பார்த்துக்கொண்டால் உதவியாக இருக்கும்.”

“உனக்கு இன்னும் படிக்கணும் என்று விருப்பம் இருப்பது போல் என் மனம் சொல்கிறது.” கம்பீரமாய் சொன்னான் பரமஹம்சா. “அதில் தவறு இல்லை. நன்றாக படிக்கலாம். இந்த வீட்டு மாப்பிள்ளைக்குப் பணம் ஒரு பிரச்சனையா? கேட்டால் சிரிப்பார்கள். அமெரிக்காவுக்குப் போய் படிக்கலாம். இங்கேயே இந்த வீட்டில் இருந்துவிடலாம். இனி உன் தாய் தகப்பனைப் பற்றிக் கேட்கிறாயா? அவர்களுக்கு வேண்டிய பணம் தந்து விடலாம். உன் ரசனைகள், பொழுதுபோக்குகள் என்ன?”

“படிப்பது ஒன்றுதான்.”

“எதாவது பழக்கம் உன்னடா? சந்கோஜப்படாமல் சொல்லு. சிகரெட், சினிமா..”

“இல்லைங்க.”

“சாஹிதி ஒரே பெண். தந்தை இல்லாத பெண். ரொம்பச் செல்லமாய் வளர்ந்தவள். கெட்டிக்காரி. வேண்டிய அளவு சொத்து இருக்கிறந்து. அதனால்தான் இந்த வீட்டுக்கு வரும் மாப்பிள்ளை எல்லா விதத்திலேயும் குணவானாகவும், சொல்லும் பேச்சை கேட்பவனாகவும் இருக்க வேண்டும் என்பது என் உத்தேசம். இந்தக் குடும்பத்தைத் தாங்க வேண்டிய  பொறுப்பு என் மீது இருக்கு. சாஹிதிக்கு இப்போதே கல்யாணம் பண்ணுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அவளுக்குத் தகுந்த பையன் அத்தனை சுலபமாக கிடைத்து விட மாட்டான் என்பது ஏன் அபிப்பிராயம். அதனால்தான் நான் முதலில் உன்னைப் பார்க்கணும் என்று நினைத்தேன். ஆளைப் பார்த்ததுமே அவனைப் பற்றிச் சொல்லிவிட முடியும் என்னால்.”

“கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். வரப்போகும் மாப்பிள்ளையைப் பற்றி எல்லா விஷயமும் தெரிந்துகொள்ள விரும்புவதில் தவறு இல்லை மிஸ்டர் பரமஹம்சா” என்றான் பரத்வாஜ்

பரமஹம்சா பெருமையுடன் சிரித்தான்.

“அதேபோல் குணசேகர் கூட இந்த வீட்டைப் பற்றித் தெரிந்து கொள்வதில் தவறு இல்லையே?” என்று முடித்தான்.

பரமஹம்சாவின் முகத்தில் இருந்த சிரிப்பு மாயமாகிவிட்டது.

“முதலில் .அந்த வீட்டுக்குப் போனோம். ராஜலக்ஷ்மி அம்மாள் எங்களைப் பற்றி தெரிந்துகொண்டு, முகத்தில் அறைவது போல் கதவைச் சாத்திவிட்டாள். ‘அவர் இங்கே ஏன் இருக்கப் போகிறார்? வெள்ளிக்கிழமை இல்லையா. அந்த வீட்டில்தான் பழியாய்க் கிடப்பார். அங்கே போய்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டாள். கடவுள் சொரூபியான நீங்கள் வெள்ளிக்கிசமை தோறும் இந்த மகாலக்ஷ்மி வீட்டில்தான் கழிப்பீங்க என்று தெரிந்து, உங்க லக்ஷ்மி பூஜைக்குக் குந்தகம் ஏற்பட்டு விடுமோ என்கிற பயம் இருந்த போதிலும் நாளைக்குத் திரும்பவும் எங்களுக்கு வேறு வேலை இருந்ததால் இரவோடு இரவாய் இங்கே வந்தோம். ஒருகாலத்தில் இந்த வீட்டில் வேலைப்பார்த்து, உங்களால் பணிநீக்கம் செய்யப்பட்ட வேலைக்காரந்தான் எங்களுக்கு இந்த வீட்டைக் காண்பித்தான்.”

சாஹிதி ஜன்னல் வழியாய் பரமஹம்சாவின் முகத்தில் ரத்தம் சுண்டிப் போய்விட்டதைப் பார்த்தாள்.

பரத்வாஜ் உரையாடலை மேலும் தொடர்ந்தான். “கடைத்தெருவில் விற்கும் பொருளைப் போல் என்னையே நான் போய் காட்டிக்கொள்வதா என்று எங்கள் குணசேகர் முதலில் ஆட்சேபணை சொன்னான். உன்னைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புவதில் தவறு இல்லை என்றேன் நான். அப்போ அந்தப் பெண்ணைப் பண்ணிக்கொள்வதற்கு முன்னால் அவர்களைப் பற்றி நானும் தெரிந்துக் கொள்ளணும் இல்லையா என்றான். அதுவும் உண்மைதானே என்று தோன்றியது. எழுத்தாளன் என்றால் எல்லா கோணத்திலிருந்தும் பார்க்கணும் இல்லையா? பாவம், உங்கள் நம்பகமான வேலைக்காரன் வழியைக் காட்டியபடி வந்து கொண்டிருந்த போது நாங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் சொன்னான். குணசேகர் ரொம்ப அதிர்ஷ்டசாலி. இந்த மாதிரி வீட்டுக்கு மாப்பிள்ளையாய் வருவதற்குக் கொடுத்து வைத்திருக்கணும்.”

சாஹிதி மூச்சை இழுத்து அடக்கிக்கொண்டாள். அவன் உண்மையிலேயே புகழ்கிறானா இல்லையா என்று புரியவில்லை. ஆனால் பரமஹம்சாவின் உதடுகள் ஆவேசத்தால் துடித்தது தெளிவாய்த் தென்பட்டது.

“நீங்கள் பரந்த மனதோடு இந்த வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருக்கீங்க. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லக்ஷ்மி பூஜை பண்ணி வைப்பதுடன், இறந்துபோன உங்கள் நண்பரின் மகளுக்கு வரப்போகும் மாப்பிள்ளையைக் கூட முதலிலேயே பார்த்து இன்டர்வ்யூ எடுக்கறீங்க என்றால், அது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இந்த விஷயத்தில் உங்கள் இரண்டாவது மனைவி ராஜலக்ஷ்மியின் போட்டி, பொறாமையைக் கூட நீங்கள் பொருட்படுத்த வேண்டியது இல்லை. உன்னதமான உணர்வுகளை சமுதாயம் என்றுமே புரிந்துகொள்ளாது இல்லையா? அப்படிப் புரிந்து கொள்ளாமல்தான் உங்கள் முதல் மனைவி விவாகரத்து பெற்றுக்கொண்டு இறந்துவிட்டாள். இதே விதமாக உங்கள் வேலைக்காரிக்காகக் கூட நீங்கள் லக்ஷ்மி பூஜை பண்ணி வைக்கப் போன போது, அந்த லேபர் காலனிக்காரர்கள் உங்களைத் தவறாக புரிந்து கொண்டார்கள்.”

சாஹிதிக்கு கைதட்டி ஆரவாரம் செய்ய வேண்டும் போல் இருந்தது.

பரமஹம்சா நாற்காலியை விட்டு எழுந்திருந்தான். அவன் கண்களிலிருந்து தீப்பொறி பறந்து கொண்டிருந்தது.

பரத்வாஜ் மட்டும் சாவதானமாய் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே சொன்னான். “நான் சொன்னேன். ‘குணசேகர்! பரமஹம்சா சாதாரணமானவர் இல்லை. கடவுளின் மறு அவதாரம். மதுபானம் அருந்துவதைக்கூட கடவுளுக்காகவே செய்வார். இந்த உலகத்தில் நமக்குத் தெரிந்து நான்கு பெண்களின் கஷ்டங்களைத் தன் தோளில் போட்டுக்கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட அன்பு உருவத்தின் கருணா கடாக்ஷத்தைப் பெறுவதற்குப் போனதுமே கால்களின் விழுந்து வணங்கு. அவர் மகிழ்ச்சி அடைவார் என்று. அவன் கேட்டுக்கொள்ளவில்லை.”

“கேட் அவுட்!” என்று கத்தினான் பரமஹம்சா ஆவேசத்தில் அதிர்ந்தபடி.

சாஹிதிக்கு வானத்தில் பறப்பது போல் சந்தோஷமாக இருந்தது.

‘இவ்வளவு நாட்களுக்குப் பிறகு பரமஹம்சாவை எதிர்க்கக் கூடிய ஒரு ஆள் தென்பட்டிருக்கிறான். பரமஹம்சாவைக் காட்டிலும் மென்மையாய், தன் வார்த்தைகளால் கன்வின்ஸ் செய்வது போல் நடித்துக்கொண்டே பழி வாங்குகிறான். முதல்முறையாக பிரமஹம்சா ஆவேசப்படுவதைப் பார்க்கிறாள்.’

சாஹிதிக்கு வியப்பாக இருந்தது. தன்னுள் பரமஹம்சா மீது இத்தனை வெறுப்பு இருக்கிறதா?

“போய் விடுங்கள். உடனே இந்த இடத்தை விட்டுப் போய் விடுங்கள்.”

“அப்போ எங்க குணசேகர் உங்களுக்குப் பிடித்திருக்கானா, இல்லையா என்று சொல்லவே இல்லையே?”

“இன்னும் ஒரு நிமிஷம் இருந்தாலும் போலீசைக் கூப்பிட வேண்டியிருக்கும்” என்று கத்தினான். அவன் அவ்வளவு பெரிதாய் கத்தியது அதுதான் முதல் தடவை.

“என்னங்க?” என்றாள் நிர்மலா.

“போலீசாரும், கேசுகளும் தைரியசாலிகளை பயமுறுத்தாது. போலீசார் வந்தால் வண்டவாளம் முழுவதும் வெளிப்பட்டு விடும். நீங்க செய்த காரியத்துக்கு ஒருக்கால் சுப்ரீம்  கோர்ட் உங்களை ஒன்றும் பண்ணாமல் போகலாம். உங்கள் பெண் பக்தர்கள்  நாளைக்கு கோர்ட்டில் தங்களுக்கு நீங்க லக்ஷ்மி பூஜை பண்ணி வைக்கவே இல்லை என்று சொல்லலாம். ஆனால் எனக்கு மட்டும் நல்ல சப்ஜெக்ட் கிடைத்துவிட்டது. உங்களைப் போன்றவர்கள் கூட இருப்பார்களா என்று வாசகர்கள் சந்தேகப்படும் விதமாய் இந்த உண்மைகளை எழுதுகிறேன். போய் வருகிறோம்.”

அவர்கள் போனதும் சாஹிதி அந்த அறைக்கு வந்தாள்.

“டாமிட்! அவர்களை திக்குமுக்காட வைக்கிறேன். இதுதான் என் சாபம்” என்று கத்திக் கொண்டிருந்தான்.

சாஹிதி தாயை நோக்கினாள். அவள் அழுது கொண்டிருந்தாள்.

தம் வீட்டைப் பற்றி இதுவரையிலும் யாருக்கும் தெரியாது என்று எண்ணியிருந்தாள் சாஹிதி. இவ்வளவு சுலபமாய் மற்றவர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று இப்பொழுதான் புரிந்தது. அது அவளுக்கு வருத்தத்தைத் தரவில்லை. உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

இந்தச் சம்பவம் சாஹிதியிடம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துயது. பரமஹம்சா கூட சாதாரணமான ஆள்தான். அவனையும் எதிர்க்க முடியும் என்ற உணர்வு அவளுக்கு துணிச்சலைத் தந்தது. ஆனால் அந்தத் துணிச்சல் நல்ல விதமாக செயல்படவில்லை.

அலட்சிய மனப்பான்மையும், தாயின் மீது அவமதிப்புமாய் மாறியது. அன்று இரவு அவள் தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டாள்.

“எனக்கு அன்பு வேண்டும். தன்னலமில்லாத அன்பிற்காக என் மனம் தவித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு யாருமே இல்லை.”

சிலநாட்கள கழித்து அவள் மதிப்பெண்கள் வந்தன. நிர்மலா அதைப் பார்த்து நடுங்கிவிட்டாள். சாஹிதிக்கு எதிலேயுமே இருபதுக்கு மேல் வரவில்லை.

“என்ன இது?” கேட்டாள்.

“மதிப்பெண்கள்!” அலட்சியமாக பதிலளித்தாள் சாஹிதி.

“தெரியும். முன்பெல்லாம் முதல் ரேங்க் வருமே. இப்படி ஆகிவிட்டாயே, ஏன்?”

“வீட்டில் நீங்க சரசமாடுவதைக் காணச் சகிக்காமல்தான்.”

நிர்மலாவுக்கு மகள் பேசிய வார்த்தைகள் புரியவில்லை. புரிந்ததுமே முகம் சிவக்க, இழுத்து கன்னத்தில் ஒன்று கொடுத்தாள்.

வாழ்க்கையில் அதுதான் முதல் முறையாக கன்னத்தில் அடிவாங்கியது.

தன் அறைக்கு வந்து படுத்துக்கொண்டாள் சாஹிதி. அழுகை வரவில்லை. நிர்மலாவும் வந்து பேசவில்லை.

அன்று இரவு பரமஹம்சா வந்தான். தாய் என்ன சொன்னாளோ தெரியாது. அறைக்கு வந்து சமாதானப் படுத்தினான்.

“என்னால் உன்னைப் புரிந்துக்கொள்ள முடியும். மார்க்குகளுக்கு என்ன வந்தது? ஒருதடவை வரும், இன்னொரு தடவை வராமல் போகும். அம்மாவிடம் சொல்கிறேன் நான்” என்றான்.

சாஹிதிக்கு அவன்மேல் இருந்த கோபம் போய் அவன் கைகளில் தலையைப் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினாள்.

அவள் வயதுதான் எவ்வளவு? கொஞ்சம் ஆறுதல் கிடைத்ததுமே கரைந்து போய் விட்டாள்.

“வாம்மா, சாப்பிடலாம்.”

அவள் அசையவில்லை.

“நீ சாப்பிடவில்லை என்றாள் நானும் சாப்பிட மாட்டேன். அது மட்டுமே இல்லை இன்னும் ஒரு நிமிஷத்துக்குள் நீ எழுந்துகொள்ள வில்லை என்றால் ஒரு வாரத்திற்கு சாப்பிடப் போவதில்லை என்று அம்பாளின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்.”

அவன் அப்படியே செய்து விடுவான் என்று தெரிந்ததால் சாஹிதி எழுந்து கொண்டாள். அவன் அவளை அப்படியே அணைத்துப் பிடித்துக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான்.

கதவைத் தாண்டும் போது திடீரென்று அவளுக்கு நினைவு வந்தது.

தந்தை இறந்த போது இந்த விதமாகத்தான் தாயை… சரியாய் இதே போஸில் தான் அணைத்துக்கொண்டு சென்றான் என்று. அவள் ந..டு..ங்..கி..போனாள்.

அதற்கு அடுத்த நாள் சிநேகிதியுடன் சேர்ந்து போய் முதல் முறையாய் ‘கஞ்சா’ வை ருசி பார்த்தாள் சாஹிதி.

சந்தோஷத்திற்காக இல்லை.. வெறுப்பு அதிகமாகிப் போனதால்.

(தொடரும்)

Series Navigationவங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *