முதல் பதிப்பு – 2012
மொத்த பக்கங்கள் – 210
விலை – 165
பொதுவாக ஒரு சிறு பிரயாணம், அது வியாபார நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ செல்வதென்றாலே பல முன்னேற்பாடுகள் அவசியமாகிறது. அதுவும் எங்கு பார்த்தாலும் தீவிரவாதமும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைக்ளும் மலிந்து கிடக்கின்ற இந்த காலகட்டத்தில் நாடு விட்டு நாடு பயணம் செய்யும் போது, குறிப்பிட்ட அந்த நாட்டைப்பற்றிய அனைத்து தகவல்களும் அறிந்து கொண்டு பயணம் செய்யும்போது ஒரு தற்காப்பு உணர்வை அது கொடுக்கும் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்பு அந்த நாட்டைப் பற்றிய பொருளாதாரம், வரலாற்று செய்திகள், பருவ நிலைகள், பார்க்க வேண்டிய இடங்கள் என அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் அனைத்துத் தகவல்களும் ஓர் இடத்தில் கிடைப்பது என்றால் அது பயணத்தை மிக சுவாரசியமாக மாற்றிவிடக்கூடுமல்லவா?
“அமெரிக்காவைப் பற்றி வரும் கட்டுரைகளையும், துணுக்குகளையும் படித்திருக்கிறேன். பெரும்பாலான துணுக்குகள் அவை எழுதப்பட்ட, சொல்லப்பட்ட சூழ்நிலையைப் பற்றிக் கூறாததால் படிப்பவர்களுக்கு வேறு விதமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கக் கூடும்; அவை சில சமய்ம் உண்மையை திரித்துக் கூறுவது போலவும் இருக்கும்” ஆசிரியர், நாகேஸ்வரி அண்ணாமலை ஆரம்பத்திலேயே தம் முன்னுரையிலேயே, இப்படி நூலின் கருத்து பற்றிய பெரும் எதிர்பார்ப்பை விதைத்து விடுகிறார். வெளிநாடுகளில் முதல் அடி எடுத்து வைக்கும் எவருக்கும் தோன்றும் சுத்தம் பற்றிய அந்த திகைப்பு பல்லாண்டுகளாக அமெரிக்காவில் வாழும் இவருக்கும் ஏற்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.
அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பற்றி குறிப்பிடும்போது, “ஜனாதிபதி ரீகன் காலத்திலிருந்து, அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரம் வேறு பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்புவரை மனிதனை மனிதன் கபளீகரம் செய்யும் பொருளாதாரமாக முதலாளித்துவம் இருக்கவில்லை. இந்த முப்பது ஆண்டுகளில்தான் ஏழை, பணக்காரர்களுக்கிடையே இடைவெளி அதிகமாகி இருக்கிறது. அமெரிக்கா போகும் திசையைத் திருப்ப ஜனாதிபதி ஒபாமா எவ்வளவோ முயன்று கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி இதை ஒபாமாவின் சோஷலிசம் என்கிறது. சோஷலிசம், கம்யூனிசம் போன்றவை அமெரிக்காவிற்கு அலர்ஜியைக் கொடுப்பவை. ….. அமெரிக்காவில் இப்போது எங்கே கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது? இரண்டாவது உலகப் போருக்குப் முன்னால் சிறிய அளவில் முளைவிட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் கிள்ளியெறிந்து விட்டார்களே! …. உலக நாடுகளிடையே மிகவும் தாழ்ந்து போயிருக்கும் அமெரிக்காவின் படிமத்தை மேம்படுத்துவது பற்றி ஒபாமா பேசினால் அமெரிக்காவின் தனித்தன்மையை குறைத்து மதிப்பிடுகிறார் என்று அவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். அமெரிக்கா செய்த தவறுக்கு அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால் ஒபாமா அமெரிக்கரே இல்லை என்கிறார்கள்” என்று தன்னுடைய ஆதங்கத்தை மிகத்தெளிவாகப் பதிவிட்டிருக்கிறார் ஆசிரியர்.
இன்றைய அமெரிக்கப் பொருளாதாரம் கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதுதானே நிசம். இவர்களுக்குப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டால் அது மொத்த அமெரிக்காவையே பாதிக்கக்கூடிய சூழ்நிலையில்தானே இருக்கிறது. ஆனால் நம் இந்தியப் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் ஒருநாளும் அது கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கும் வாய்ப்பு இல்லை. ஆகவே எந்த சூழ்நிலையிலும் இந்தியப் பொருளாதாரம் நலிவடையும் வாய்ப்புகள் மிகக்குறைவு. எந்த நிலையிலும் நம் இந்தியப் பொருளாதாரம் முட்டி மோதி மீண்டும் துளிர்விட்டு தளைப்பதற்கும் இதுவேதான் காரணம். திரு ராஜீவ் காந்தி பிரதமராகவும், திரு மன்மோகன்சிங் அவர்கள் நிதியமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் பெரும் பொருளாதார சீர்திருத்தம் ஏற்பட்டிருந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த வகையில் ஆசிரியரின் கருத்து ஏற்புடையதாக்வே உள்ளது.
”அமெரிக்க ஜனநாயக நாகரீகம் பற்றிப் பெருமையாகப் பேசப்பட்டாலும் அமெரிக்காவை இப்போது ஆள்வது பணம் படைத்த அமெரிக்கக் கார்ப்பரேட்டுகள்தான் , அமெரிக்காவின் உண்மை நிலையை ஓரளவிற்குப் படம்பிடித்துக் காட்ட வேண்டும் என்ற என் ஆசையின் விளைவே இந்தப் புத்தகம்” என்ற வரிகள் நம்மை மேலும் ஆழ்ந்து வாசிக்கத் தூண்டுகிறது.
அமெரிக்க நகரங்களுள் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும், உலகப்புகழ் பெற்ற ,ஓவியர் பிக்காசோவின் ஐம்பதடி உயர இரும்புச் சிற்பம் அலங்கரித்துக் கொண்டிருக்கிற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ நகரம் பற்றி பல மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கிறார் ஆசிரியர். ஊழல் அரசியல் மலிந்து கிடப்பதோடு, பனிப்புயல் போன்ற இயற்கை சீற்றமும் அதிகமாக உள்ள சிகாகோ மாநிலத்தின் அழகான மற்றொரு பகுதியை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
தன் கணவருடன் தான் அங்கு தங்கியிருந்த காலங்களில் நடத்தப்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகள் முதல் நியூயார்க் நகர வணிக மையத்தின் சின்னமாக விளங்கிய இரட்டைக் கோபுரங்கள் விமானம் மூலம் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவம், கறுப்பர் இனத்தின் தலைவர்கள் பற்றிய குறிப்பு, நகரத்தின் வளர்ச்சி, அதன் அமைப்பு, கறுப்பர் வாழும் பகுதி பற்றிய ஆதங்கம், நகரின் முக்கியத்துவம் என அனைத்தையும், மிகத்தெளிவாக படங்களுடன் பதிவிட்டிருப்பது பாராட்டிற்குரியது.
’மாறும் பருவநிலைகள்’ என்ற தலைப்பில் ஆசிரியர் மிக விளக்கமாக அளித்திருக்கும் தகவல்கள் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை. நான்கு பருவங்கள், மாறும் காலம், கோடைச் செயல்கள், புயல், வானிலை என அனைத்துத் தகவல்களும் நல்ல இரசனையுடன் அழகு நடையில் எழுதியிருப்பதும் வரவேற்கத்தக்கது. முதல் முறையாக பனிக்காலத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சென்று மாட்டிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வருவது ஒரு பெரிய சாதனைதான் என்று அனுபவத்தில் உணர்ந்ததால் இவருடைய விளக்கங்களின் வலிமையை உணர முடிகிறது. பனியை அகற்றுவதற்கும், தோட்டங்கள் பராமரிப்பு என பெரும்பாலான வேலைகளுக்கு மெக்சிகோவிலிருந்து வரும் குடியேறிகள் பன்னிரண்டு மில்லியன் பேர்கள் என்ற தகவலும், இவர்கள் சரியான விசா இல்லாமல் இருக்கும் குடியேறிகள் என்றாலும், இவர்கள் இல்லாமல் முதுகை ஒடியச் செய்யும் வேலைகளை அமெரிக்கர்கள் செய்யமாட்டார்கள் என்பதால் இரு அரசியல் கட்சிகளும் மிகுந்த கருத்து வேறுபாட்டுடன் குழப்பத்தில் இருப்பது போன்ற தகவல்களும் அளிக்கிறார்.
‘உணவுகள் பலவிதம்’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய பல நாட்டு உணவு வகைகள், உணவு உற்பத்தி முறைகள், அதிக அள்வில் வீணாக்கப்படும் உணவுகள், சமைக்கும் முறைகள் மற்றும் அதன் மாற்றங்கள், சமைக்கும் வகைகள், விதம் விதமான ச்மையல் சாதனங்கள் நண்பர்களோடு உணவருந்தும் பழக்கம், தயார் நிலை உணவு, நலம் கெடுக்கும் உணவு, இயற்கை உணவு போன்ற பல சுவாரசியமான தகவல்களை வழங்கியுள்ளது சிறப்பு. வீணாக்குவதில் அவர்களின் வல்லமை குறித்து மிக விளக்கமாகவே கூறியிருக்கிறார்.
”பருவ வயது வந்தவுடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாலுணர்வு தோன்றுவது இயற்கை. அதற்கு வடிகால் அமைத்து அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு ஒவ்வொரு சமூகமும் சில விதிகளை வகுத்திருக்கிறது. அமெரிக்கச் சமூகம் என்ன செய்திருக்கிறது என்று பார்ப்போம்” என்று ’திருமணத்தின் புதிய அர்த்தங்கள’ என்ற பகுதியில் கலாச்சார ஒப்பீடுகள் மிகச் சுவையாக அமைந்திருக்கிறது. திருமணம் செய்யாமலே பிள்ளை பெற்றுக்கொள்ளும் தற்போதைய நிலையையும், லிங்கன் (1809 – 1865) திருமணம் குறித்த சுவையானதொரு சம்பவமும் கொண்டு பலவிதமான மாறுபட்ட கலாச்சாரங்களை தெளிவாகவே விளக்கியுள்ளார். பெற்றோர்களின் விவாகரத்தினால் அல்லலுறும் குழந்தைகளின் நிலை, ஓரினச் சேர்க்கை, ஓரினத் திருமணம் கருப்பு – வெள்ளைத் திருமணம் என அங்கு நடக்கும் அனைத்து வகைகளையும் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியிருப்பதும் சிறப்பு.
’இந்தியர்களின் இக்கட்டு நிலை’ என்ற தலைப்பில் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் நிலை குறித்த தம் கருத்தையும் பகிர்ந்துள்ளார். 1950ம் ஆண்டு முதல் இன்றைய நிலைவரை தெள்ளத் தெளிவாக, நிதர்சனத்தை சொல்லியிருக்கிறார் என்பது அன்றாடம் நம் செவிவழி மற்றும் செய்தித் தாள்களில் காணும் செய்தியாக இருப்பது மூலம் ஒப்புக்கொள்ள முடிகிறது. இவர் விளக்கியுள்ள பல சம்பவங்கள் வேதனை அளிக்கக் கூடியதாகவே உள்ளது. அமெரிக்காவில் குடியேறியுள்ள பிள்ளைகளின் பெற்றோரின் நிலை குறித்து மிகச் சிறப்பாக புரிந்துணர்ந்து சொல்லியிருக்கிறார். தம் இறுதிக் காலங்களை பிள்ளைகளுடன் கழிக்க விரும்பி அமெரிக்காவில் சென்று தங்கும் முதியவர்களுக்கு ஏற்படும் மிக முக்கியமான மருத்துவக் காப்பீட்டுப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை இவர் அலசியுள்ள விதம், அங்கு சென்று தங்க விரும்பும் ஏனையோருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குடியேறிய நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதின் சிரமங்கள் போன்ற அனைத்தையும் நன்றாகவே விளக்கியுள்ளார். ஆன்மீக நாட்டம் உள்ளவர்களின் பழக்க வழக்கங்களையும், அதற்கான ஏற்பாடுகள் தொழில்நுட்பங்களின் உதவியுடன் நடத்தப்படுவதையும்கூட அழகாகவே சொல்கிறார். குடியேறியவர்களின் திருமணப் பிரச்சனை, கல்விப் பிரச்சனை பெற்றோர் பிரச்சனை கறுப்பர்களை மதியாமை, இவை அனைத்திற்கும் மேலாக பெயர்ப் பிரச்சனை என அனைத்தையும் மிகச் சுவையாகவே அலசி ஆராய்ந்திருக்கிறார்.
பொதுவாகவே நீண்ட ஆயுள் கொண்டவர்களாக இருக்கும் அமெரிக்கர்கள் முதுமையில் படும்பாட்டையும், ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்காகக் கண்டறியப்பட்ட தீர்வுகள் என அனைத்தும் படித்து அறிய வேண்டிய தகவல்கள். மருத்துவச் செலவு என்பது அங்கு எத்துனை பெரிய தலைவேதனை என்பதை அறியும் போது அந்த வேதனை நம்மையும் தொற்றிக் கொள்வதும் உண்மை.
கார் கலாச்சாரம் பற்றி பல தகவல்களும், தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்தும், மிகப்பெருமையாக அவர் குறிப்பிட்டாலும், Keyless entry போன்ற தொழில் நுட்பங்கள் நம் நாட்டிலும் பல ஆண்டுகள் முன்பே வந்துவிட்டதும் உண்மை என்பதை பதிவிடவில்லை… ஆனாலும் கடன் பெறுவது முதல் வரி வட்டி கட்டுவதுவரை மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது.
நம் இந்தியத் திருநாட்டில் லஞ்சம் மற்றும் அரசியல் வியாதிகளால் கொள்ளை போகும் சொத்துக்களுடன், நம் நிம்மதியும் போவது குறித்த கவலை மிக அதிகமாகிறது இவருடைய நூலின் சில பகுதிகளை வாசிக்கும்போது! இந்த லஞ்ச இலாவண்யமும், அரசாங்கம் மற்றும் மக்கள் சொத்தை கொள்ளையடிக்காத நேர்மையான அரசியல்வாதிகளும் இருந்திருந்தால் நம் நாடும் என்றோ வல்லரசாகியிருக்குமோ என்ற் ஏக்கமும் வராமல் இல்லை.
‘வரிவிதிப்பு முறையும் சமூக அமைப்பும்’ என்ற தலைப்பில் அ முதல் ஃ வரையிலான அனைத்துத் தகவல்களையும் வழங்கியுள்ளதும் சிறப்பு. அதே போல நீதியின் இரு பக்கங்கள் குறித்த கட்டுரையில் பல சம்பவங்களுடன் விளக்கியுள்ள பாங்கும் இனிமை. கடன் அட்டைகளின் பிடியில் சிக்கித் திணறும் அமெரிக்கர்களை விடுவிக்கப் போவது யார் என்ற இவருடைய கவலையும் நியாயமானதாகவே உள்ளது. கடன் அட்டைக்கான தவணைகளை சரியான நேரத்தில் கட்டத் தவறினால் வட்டி கூடிப்போய் எத்துனை சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதைக்கூட தன்னுடைய கவனக் குறைவினால் ஏற்பட்ட சம்பவத்தின் ஒப்பீடு மூலம் அழகாக விளக்கியுள்ளார்.
‘இதம் தரும் சேவை, பணம் பண்ணும் ஆசை’ என்ற தலைப்பில் இந்தியாவின், இரயில் நிலையம், அஞ்சல் நிலையம், மருத்துவமனை, அரசுத்துறை அலுவலகம் போன்ற பொதுப்பணித் துறைகளில் பணிபுரிபவர்கள் சேவை மனப்பான்மை என்பதே துளியும் இல்லாமல் இருப்பதையும், கிம்பளம் எதிர்பார்த்திருப்பதையும் நொந்துபோய் சாடியுள்ளார். அமெரிக்காவில் அதற்கு நேர்மாறாக, தேவை அறிந்து சேவை செய்பவர்கள் மற்றும் அன்பான மருத்துவ சேவை செய்பவர்கள் பற்றியும், தனக்கு ஏற்பட்ட இதமான அனுபவங்கள் கொண்டே விளக்கியிருக்கிறார் ஆசிரியர். அதேபோல் இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட மிக மோசமான மருத்துவமனை அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார் மிக வேதனையுடன். அன்றாடம் இந்தப் பிரச்சனைகளுடனேயே உழன்று உறவாடி வாழும் நம்க்குத்தான் இது பெரிதாகப்படவில்லை போலும்! கருத்துக் கணிப்பிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட ஆச்சரியம் அளிக்கிறது நமக்கு.
பின்னுரையில் ஆரம்பத்தில் அமெரிக்காவின் வளமான வாழ்க்கையில் நிறைவு கண்ட தான் சில ஆண்டுகளில் குறைகளைக் கவனிக்கத் தொடங்கியதையும், 1929ல் பொருளாதார வீழ்ச்சியின் பிறகு ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் காலத்தில் ஏற்பட்ட சீர்திருத்தம் முதல் இன்றைய அரசியல் நிலை வரை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். பெண்ணியம் முதலில் அமெரிக்காவில் தோன்றியதற்கான காரணம் அவர்களின் பொருளாதார சுதந்திரம் என்றாலும், குடும்பம் என்ற சமூக நிறுவனம் குலையத் தொடங்கியதும் அதனால்தான் என்கிறார். உண்ணும் உணவு முறையிலிருந்து, திருமண பந்தம் என்ற கட்டமைப்பு வரை தவறான கலாச்சாரங்களினால், பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலை குறித்தும் வெளிப்படையாகக் கூறுகிறார்.
ஒபாமா ஒருவேளை பதவியிலிருந்து இறங்க நேர்ந்தால் குடியரசுக் கட்சிகள் நாட்டை அவர்கள் பாதையில் கொண்டு செல்லக்கூடிய நிலை உருவானால், அமெரிக்காவில் ஏழை, பணக்காரர்களுக்கிடையே உள்ள இடைவெளி கூடுவதோடு, உலக அரங்கிலும் அமெரிக்கா பெரிய அபாயங்களை விளைவிக்கும். அந்த வகையில் 2012 தேர்தல் எல்லோருக்கும் ஒரு முக்கியமான தேர்தல் என்று சொல்லி நம்மையும் பெரிதும் சிந்திக்க வைக்கிறார்.
- பொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்
- சின்னஞ்சிறு கிளியே
- காலத்தின் கொலைகாரன்
- அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11
- சங்க இலக்கிய மகளிர்: விறலியர்
- தங்கமே தங்கம்
- விண்மீனை தேடிய வானம்
- தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !
- வெல்லோல வேங்கம்மா
- கனிகரம்
- பணிவிடை
- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்
- செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]
- அகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்
- எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்
- வெற்றிக் கோப்பை
- புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15
- புகழ் பெற்ற ஏழைகள் – சார்லி சாப்ளின்
- நம்பி கவிதைகள் இரண்டு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5
- அக்னிப்பிரவேசம்-29
- நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3
- முத்தம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்
- புகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்
- தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்