பவள சங்கரி
”அம்மா.. அப்பா நம்மளை விட்டுப்போயி எத்தனை வருசம் ஆவுதும்மா…?
“அவுரு போயி எட்டு வருசம் ஆவுதேப்பா.. நீ காலேசுல சேர்ந்த முதல் வருசமே போயிட்டாரே… நிமிச நேர நெஞ்சு வலியில பொசுக்குனு போயிட்டாரே..”
“நானும் வருசா வருசம் வரும்போதெல்லாம், உன்கிட்ட இந்த தறிப்பட்டறையெல்லாம் ஏறகட்டிட்டு என்கூடவே வந்துடுன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறியேம்மா… “
‘என்னமோப்பா, உங்க அப்பாரோட வாழ்ந்த இந்த மண்ணை உட்டுப்போட்டு எனக்கு எங்கியும் வர புடிக்கலைப்பா. என்னமோ அந்த மகராசரு யாபாரத்துல கடனும் வக்காம, சொத்துல வில்லங்கமும் பண்ணாம போனதால நம்ம பொழைப்பும் பிரச்சனை இல்லாம போவுது. இருக்குற சொச்ச காலமும் இங்கியே இப்புடியே கிடந்துட்டுப் போயுடலாம்னு தோணுது. தறிப்பட்டறையை லீசுக்கு உட்டுப்போடலாம்னு இருக்கேன்..”
“அம்மா அதெல்லாம் வாணாம். எல்லாத்தையும் வித்துப்புட்டு நீ என்கூடவே மலேசியாவுக்கு வந்துடும்மா. உன் பேரன் கூட இருக்கணும்னு உனக்கு ஆசையே இல்லையா..?”
பேரன் பற்றி சொன்னவுடன் அந்தப் பாட்டிக்கு பாசம் பொத்துக்கொண்டு வந்தாலும், சொந்த ஊரை சுத்தமா காலி பண்ணிட்டுப் போக மனம் இல்லை. ஆனாலும் மகனின் பிடிவாதமும், பேரனின் மீது இருந்த பாசமும் கண்ணை மறைக்க மகன் முருகானந்தன் சொன்னதை எல்லாம் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு கேட்கத் துணிந்தாள். அதன் பலனையும் விரைவிலேயே அனுபவித்தாள். தறிப்பட்டறை, குடியிருந்த கடல் போன்ற வீடு, 2 காலி மனைகள், தட்டுமுட்டு சாமான்கள் என அனைத்தையும் விற்று கையில் வந்த 2 கோடி ரூபாயும் அப்படியே மகன் கையில் கொடுத்தபோது பேரன் முகம் மட்டுமே கண்ணில் தெரிந்தது.
முதன் முதலில் கிராமத்தை விட்டு பட்டணத்தில் அதுவும் பிரம்மாண்டமான சென்னை விமான நிலையத்தைப் பார்த்தவுடன் மலைப்பாக இருக்க மகனின் கையை இருக்கிப் பிடித்துக்கொண்டாள் அந்தத் தாய். ஏனோ சிறு வயதில் தன் முந்தானையினுள் ஒளிந்து கொள்ளும் அந்தக் குழந்தை முருகானந்தனின் முகம் நினைவிற்கு வந்தது. இன்று அதே நிலையில் தான் இருப்பதை நினைத்து வேடிக்கையாக இருந்தது. கையில் பேப்பரையும், ஏதோ புத்தகங்களையும் வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் மகனைப் பார்க்க பெருமையாக இருந்தது. ஒரு ஓரமாக பஞ்சு மெத்தை இருக்கையில் உட்கார வைத்துவிட்டு சென்ற மகன் திரும்பி வருவான் என்று காத்திருந்தவர் அசதியில் அப்படியே கண்ணயர்ந்துவிட, எவ்வளவு நேரம் தூங்கிப் போனாரோ தெரியவில்லை.
“ஹலோ, அம்மா.. அம்மா..”
யாரோ கோட், சூட் போட்ட புதிய மனிதர்கள் முன்னால் நிற்க ஏதும் புரியாமல் திருதிருவென விழித்தவரை, யார்,எங்கிருந்து வருகிறார் என்று விசாரிக்க அப்போதுதான் அருகில் மகன் இல்லாததை உணர்ந்த அந்த தாய் குழந்தையைப்போல சுற்றும் முற்றும் மகனைத் தேட, அருகில் தன்னுடைய டிரங்க்கு பெட்டி மட்டும் இருக்க, மகனின் விலையுயர்ந்த அனைத்து பெட்டிகளும் காணாமல் போயிருந்தது. இரவு வெகு நேரமானதால் அங்கு தனியாக இருப்பதற்கு விமான நிலைய அதிகாரிகள் தடைவிதிக்கவும், கண்களைக் கட்டி காட்டில் விட்டதுபோல ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து ஆண்டவன் போல தூரத்து உறவினர் துரை, சிங்கப்புரிலிருந்து திரும்பியவர் அங்கு வந்துசேர, சொத்தையெல்லாம் பிடுங்கிக் கொண்டு தாயை அத்துவானத்தில் விட்டுச்சென்ற மகனின் துரோகத்தைக்கூட உணராத அந்த பரிதாபமான தாயின் நிலையைக் கண்டு மனம் பதறிய துரை தன்னுடன் தன் வீட்டிற்கு வரும்படி பலமுறை அழைத்தும் மறுத்துவிட்டதால், அவரைக் கட்டாயப்படுத்தி, ஒரு முதியோர் இல்லத்தில் தன் கைப்பணம் ரூ. 50,000 டெபாசிட்டாக செலுத்தி சேர்த்துவிட்டுச் சென்றார்.
பழைய நினைவுகளில் மூழ்கித் தவித்திருந்த முத்தாயம்மாள் யாரோ அருகில் நின்று மெல்லிதாக அழைப்பது புரிய மெல்ல அதிலிருந்து மீண்டு வந்து அருகில் தன்னுடைய மேனேஜர் மணிகண்டன் நிற்பதைப் பார்த்து சுய நினைவிற்கு வந்தார்.
‘கனிகரம்’ அமைப்பினரின் வெற்றி விழா மேடை. இந்த ஆண்டின் நான்காவது விருதைப் பெறும் நிறுவனம் என்பதால் பொது மக்களின் கவனம் மட்டுமல்லாமல் வெளி நாட்டு தொழில் முனைவோர் அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவ ஆய்வாளர்கள், பிரபல சிறு தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு அரசாங்கப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ள தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருந்ததால், இந்த விழா எவரும் எதிர்பாராத வகையில் தமிழ் நாட்டின் பெயரை உலகம் முழுக்க நொடிப்பொழுதில் மின்னச் செய்த ஒரு விழா மேடையாக மாறிப் போனது! முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விசயம் வந்தபோது இவ்வளவு நாட்கள் அமைதியாக இத்துனை அருமையாக செயல்பட்டுக் கொண்டிருந்த இப்படி ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்களை உடனே சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்லி ஆணை பிறப்பிக்க, பரபரவென அடுத்த ஐந்து மணி நேரத்தில் முதலமைச்சரின் அலுவலகத்தில் அந்தச் சந்திப்பிற்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் தள்ளி வைத்துவிட்டு முதலமைச்சர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் காரணம் புரிந்தபோது அதற்கு அந்த தகுதி இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.
பெரும் எதிர்பார்ப்புடன் தம் வரவேற்பறைக்கு அவர்களைச் சந்திக்க வந்த முதலமைச்சருக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. வேறு யாரையோ மாற்றிக் கூட்டி வந்து விட்டார்களோ என்ற சந்தேகம் வர தன் உதவியாளரைத் திரும்பிப் பார்க்க, அவர் அதைப் புரிந்து கொண்டு அங்கு சங்கடத்துடன் நாற்காலியின் விளிம்பில் அமர்ந்து கொண்டிருந்து முதலமைச்சரைப் பார்த்தவுடன் சட்டென்று எழுந்து நின்று, தயக்கத்துடன் வணக்கம் சொன்ன, 60 வயது மதிக்கத்தக்க, அல்லக் கொசுவம் வைத்த சாதாரண நூல் சேலை கட்டிய, முகத்திலும், தலையிலும் எண்ணெய் வழிய, நிற்கும் ஆறு பெண்களைக் காட்டி, இவர்கள்தான் ’கனிகரம்’ குரூப் ஆப் நிறுவனங்களின் முதலாளிகள் என்று சொன்ன போது அசந்து போய் தன்னையறியாமல் கையெடுத்துக் கும்பிட்டார், முதலமைச்சர். அவருடைய விரிந்த பார்வையும், ஆழ்ந்த பேச்சும், இறுகிய முகமும், அவர் ஆச்சரியத்திலிருந்து மீளாதது தெரிந்தது.
மிகச் சாதாரண கிராமப்புற பாட்டி வைத்திய விசயங்களை மிக அழகாகத் திட்டமிட்டு, சக்கரை வியாதி, மஞ்சள் காமாலை, டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், இரத்தக் கொதிப்பு, கேன்சர் வியாதி, ஆட்டிசம் என அனைத்திற்கும் உணவு முறை மூலமாக நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகளால் ஆன பொடிகள், டயட் ஊறுகாய்கள், தொக்கு வகைகள், என அனைத்தையும் தயாரித்து விற்க ஆரம்பித்தவர்கள், நாளடைவில் மக்களிடம் பிரபலமானதோடு மருத்துவர்களும் அதன் மதிப்பை உணர்ந்து தங்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க ஆரம்பிக்க அப்படியே சிறிது சிறிதாக வளர்ந்த நிறுவனம் இன்று பெரும் ஆய்வுக் கூடங்களுடன், பல ஆய்வாளர்கள் மற்றும் டாக்டர்களுடன் மிகச் சிறந்த முறையில் உயர்ந்து நிற்கிறது. முதலமைச்சர் ஆர்வம் தாங்காமல் அவர்களுக்கு இந்த எண்ணம் உருவான விதம் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார்.
’கனிகரம்’ நிறுவனத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட முத்தாயம்மாள் பேச ஆரம்பித்து,
“ஐயா, நீங்க நினைக்கிற அளவுக்கு பெரிய சாதனை பண்ணப்போறோம்னு நினைச்செல்லாம் ஏதும் செய்யலீங்க. என்னமோ அந்த நேரத்துல பிழைப்புக்கு ஒரு வழி தேவையா இருந்தது. நமக்கு தெரிஞ்ச தொழிலாவும் இருக்கோணும். கம்மி முதலீடு முக்கியம், அப்படி ஆரம்பிச்சதுதாங்க இது” என்று ஆரம்பித்து தன் முழு கதையையும் சொல்லி முடித்தபோது தன்னையறியாமல் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாலும், இதயம் கனத்துப் போனதை சரிசெய்ய மிகவும் பாடுபட்டார் என்பது முகம் காட்டிக் கொடுத்துவிட்டது. தான் இந்த நிலைக்கு வந்ததற்கும், நம் தமிழ் நாடே பெருமை கொள்வதற்கும் காரணமான மலேசியாவில் வசிக்கும் அந்த முக்கிய நபரையும் இந்த விழாவிற்கு குடும்பத்துடன் அழைக்க வேண்டும் என்ற வேண்டுதலையும் வைத்தார் அந்த அம்மையார். அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக அதற்கான ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி தன் உதவியாளரைப் பணித்தார், முதலமைச்சர்.
இன்று அந்த நாளும் வந்துவிட்டது. முத்தாயம்மாளுக்கு பழைய நினைவுகள் அனைத்தும் வந்து காலையிலிருந்து மனதை வாட்டிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய அதிர்ச்சியிலிருந்து தாம் மீண்டு வந்தோம் என்று நினைத்துப் பார்த்த போது, இந்த ஐந்து ஆண்டு காலங்கள் தாம் எதையும் திரும்பிப் பார்க்காமல் ஓடிக் கொண்டிருந்தது புரிந்தது. வாழ்வின் இறுதிக் கட்டம் வரை யாரை பார்க்கவேக் கூடாது என்று நினைத்திருந்தோமோ அந்த உறுதியும் தளர்ந்து போனது புரிந்தது. தன்னையறியாத பாசமும், எதிர்பார்ப்பும் ஏனோ செயலிழக்கச் செய்து கொண்டிருந்தது.
தமிழ் நாடு முதலமைச்சரின் உதவியாளரிடமிருந்து, குடும்பத்துடன் ’கனிகரம்’ விருது பெறும் விழாவில் வந்து கலந்து கொள்ள வேண்டுமென்ற அழைப்பிதழும், தனிப்பட்ட கடிதமும் கண்டு காரணம் புரியாமல் பெருங்குழப்பத்துடன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கிளம்பி வந்து கொண்டிருந்தான் முருகானந்தன்.
விழா மண்டபம் பல நாட்டு அறிஞர்களுடன் நிறைந்திருக்க அவனுடைய குழப்பம் மேலும் அதிகமானது. மிக உயரமான மேடையில் மிகப்பழமையான முறையில் உடை உடுத்திக் கொண்டு சம்பந்தமில்லாமல் அமர்ந்திருக்கும் சில மூதாட்டிகளைப் பார்த்தவுடன் குழப்பம் கூடித்தான் போனது. அதிலொருவர் தன் தாயைப் போல இருக்கவும், சந்தேகம் மேலும் கூடிப்போக, ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தான்.
ஆனால் அவையனைத்தும் விழா ஆரம்பித்து விழா நாயகி பேச ஆரம்பிக்கும் வரைதான். அதற்குப் பிறகு குற்ற உணர்ச்சியும், அதிர்ச்சியும், ஆச்சரியமும் உந்தித் தள்ள வாயடைத்துக் கிடந்தான் முருகானந்தன்.
விழாத் தலைவர் “கனிகரம்’ நிறுவனத்தாரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியபோது பெரும் கரகோசம் விண்ணைப் பிளந்தது. ‘கனிகரம்’ என்பதன் பொருள், ‘அன்பு’ அல்லது அக்கறை. மனித இனத்தின் மீது இவர்கள் கொண்ட மாளாத அன்பும், அக்கறையும்தான் இந்த ‘கனிகரம்’ நிறுவனத்தின் வளர்ச்சி. பல நாட்டு அறிஞர்களும் இதன் சேவையை பாராட்டியுள்ளதோடு இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு பல்வேறு ஆய்வுகளையும், நலத் திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருப்பதே இதற்கான ஆதாரம். இந்த ‘கனிகரம்’ உருவானதன் வரலாறு நாம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. இதோ அதன் நிறுவனர் திருமதி முத்தாயம்மாள் அவர்கள் இப்போது பேசுவார்கள் என்றபோது அரங்கமே அமைதியாக அவருடைய பேச்சைக் கேட்க காத்துக் கொண்டிருந்தது.
அவர் எழுந்து அனைவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “நான் பெரிய பேச்சாளியெல்லாம் இல்லீங்கோ.. என்னமோ எனக்குத் தெரிஞ்சதை எதையாவது செய்து நானும் பிழைக்கோணும், என்னைப் போல ஆதரவில்லாமல் நிற்பவங்களுக்கும் உதவியா இருக்கோணும், அது நம்ம மக்களுக்கும் உபயோகமா இருக்கோணும், இம்புட்டுதான் நான் யோசிச்சதுங்க…” என்று வெகு யதார்த்தமாக ஆரம்பித்து அவர் சொன்ன விசயங்களைக் கேட்டு சபையே கண்ணீர் சிந்தியது.
ஈரோடு மாவட்டம், திருச்செங்கோடு அருகே, மண்டகப்பாளையம் எனும் கிராமம். உழைப்பு மட்டுமே பிரதானமாக வாழும் மக்கள். திரும்பிய புறமெல்லாம் கைத்தறி ஓடும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த காலத்தில், மெல்ல , மெல்ல மக்கள் சொத்து பத்தை விற்று விசைத்தறிக்கு மாறிக்கொண்டிருந்தபோது மணிமாறனும் தன்னிடமிருந்த பரம்பரைச் சொத்தான ஒரு ஏக்கர் நிலத்தையும் விற்று அதனை விசைத்தறியாக மாற்றியதோடு, மனைவி முத்தாயம்மாளுடன் இராப்பகல் பாராமல் உழைத்து ஊரே மெச்சும் அளவிற்கு வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென மாரடைப்பால் மணிமாறன் உயிரை விட்டாலும், தன் ஒரே மகன் முருகானந்தனை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் துக்கத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு அதே கடுமையுடன் உழைத்து மகன் தொழிலில் உதவிக்கு வருவான் என்று காத்திருந்த சமயத்தில் அவனோ வெளியூரில் சென்று பொறியியல் படிப்பு படிக்க ஆசைப்பட்டதால் மகன் விருப்பம் போல அதையும் நிறைவேற்றி வைத்திருக்கிறார் முத்தாயம்மாள். படித்து முடித்த மகன், அங்கேயே வேலையும் கிடைத்து சென்னை நகரிலேயே குடியிருந்ததோடு, உடன் பணிபுரியும் வந்தனாவை காதல் மணமும் புரிந்து கொண்டு செட்டில் ஆகிவிட்டான். அதற்குப் பிறகு மலேசியாவில் வேலை கிடைத்து சென்றவன் வருடம் ஒரு முறை மட்டும் அம்மாவை பார்த்துச் செல்வான். அவன் பெற்ற செல்வங்களைக்கூட இன்னும் கன்ணில் காட்டவில்லை.
வேதனையிலும், அதிர்ச்சியிலும் இருந்து மீள பல நாட்கள் ஆனாலும், உடன் இருப்பவர்கள் அத்துனை பேருக்கும் தன்னைப் போல பல விதமான பிரச்சனைகள் இருப்பதைக் கேட்டவர் மெல்ல சமாதானம் ஆக ஆரம்பித்ததோடு, உழைத்து உரமேறிய கைகள் சோம்பலாக உட்கார்ந்து சாப்பிட இடம் கொடுக்காதலாலும், தனக்காக தம் உறவினர் கட்டிய பணம் கடனாக நிற்பதையும் கருத்தில் கொண்டு, பிழைப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த போதுதான், தன்னுடன் ஒத்த கருத்துடைய மேலும் ஐந்து பெண்களைச் சேர்த்துக் கொண்டு அந்த முதியோர் இல்லத்தின் காப்பாளரின் உதவியுடன் மற்றும் அவரவர்கள் கையில்,கழுத்தில் போட்டிருந்த சிறு தங்கங்களை விற்று மூலதனமாக்கி ஆரம்பித்த ஒரு சிறு குடிசைத் தொழில்தான் இன்று ‘கனிகரமாக’ ஆலமரமாக விழுது விட்டு மிகக் குறைந்த காலத்திலேயே பரவி நிற்கிறது!
சபையே அந்தச் சூழலினுள் சென்று அமைதியாக உறைந்திருந்த போது, ‘ஆத்தா’ என்று கையைத் தூக்கிக் கொண்டு பின் வரிசை இருக்கையிலிருந்து ஒரு நான்கு வயது பெண் குழந்தை ஓடிவர, அங்கு மௌனம் கலைந்தது. அக் குழந்தையைத் தொடர்ந்து வந்த அதன் பெற்றோர் மற்றும் ஒரு மூத்த ஆண் குழந்தை மேடை ஏறி வந்து அந்தத் தாயின் காலில் விழுந்த போது முருகா, எப்படிப்பா இருக்கே.. என்று அன்பாக ஆரத்தழுவிக்கொண்ட தாயைக் கண்டு அந்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தது.
விழா முடிந்தவுடன் அந்த மகனை மன்னிக்க எப்படி மன்னிக்க மனம்வந்தது என்று பலரும் பல முறைகளில் கேள்வி கேட்டாலும், அதுதான் தாயுள்ளம் என்று அனைவருக்கும் புரிந்தது. விமான நிலையத்தில் மகன் விட்டுச்சென்ற போதே அவருடைய உறவினர் வந்து காப்பாற்றிய போது, அவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தால் தாயை அனாதையாக விட்டுச் சென்ற மகனை எங்கிருந்தாலும் கைது செய்து கொண்டு வந்துவிடுவார்கள் என்று சொல்லியும் அதற்கு சம்மதிக்காத அந்தத் தாய் மகன் எங்கிருந்தாலும் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்திய தாயல்லவா அவள்! ..தவறை உணர்ந்து கதறியழுத மகனையும், மருமகளையும் மன்னித்ததோடு, அவர்களுக்கு அந்த குற்ற உணர்ச்சியைப் போக்கவே அங்கு வரவழைத்திருந்ததையும் சொன்னபோது மகன் தாயை ஆரத்தழுவியபோது அதில் இருந்த உண்மையான பாசம் புரிந்தது அந்தத் தாய்க்கு!
- பொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்
- சின்னஞ்சிறு கிளியே
- காலத்தின் கொலைகாரன்
- அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11
- சங்க இலக்கிய மகளிர்: விறலியர்
- தங்கமே தங்கம்
- விண்மீனை தேடிய வானம்
- தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !
- வெல்லோல வேங்கம்மா
- கனிகரம்
- பணிவிடை
- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்
- செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]
- அகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்
- எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்
- வெற்றிக் கோப்பை
- புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15
- புகழ் பெற்ற ஏழைகள் – சார்லி சாப்ளின்
- நம்பி கவிதைகள் இரண்டு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5
- அக்னிப்பிரவேசம்-29
- நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3
- முத்தம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்
- புகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்
- தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்