எஸ்.எம்.ஏ.ராம்
இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு டிசம்பர் இருபத்தொன்றோடு உலகம் அழிந்து போகும் என்று அதற்குப் பல வருஷங்கள் முன்னாலிருந்தே பீதியைப் பரப்பத் தொடங்கி விட்டார்கள். மாயன் காலண்டரில் அதற்கு மேல் கிழிப்பதற்குக் காகிதமே இல்லை என்றார்கள். ‘’பூமியைக் காட்டிலும் நாலு மடங்குப் பெரிதாய் ஒரு கிரகம் வந்து கொண்டே இருக்கிறது, அது அன்றைக்குப் பூமியை மாடு முட்டுகிற மாதிரி ஒரே முட்டாய்த் தள்ளித் தூளாகி விடப் போகிறது’ என்றார்கள். பெரிசாய் சினிமா எல்லாம் எடுத்துக் கிராஃபிக்ஸ் வைத்து உண்மை போல் காட்டி எல்லோரையும் பயமுறுத்திப் பணம் பண்ணினார்கள். கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை. அந்தத் தேதியையையும் தாண்டி மூன்று மாதங்கள் ஆகி விட்டன. உலகம் பத்திரமாய் இருந்து கொண்டிருக்கிறது. சொல்லப் போனால், அதன் உடம்பில் ஒரு சின்னக் கீறல் கூட விழுந்து விடவில்லை. அது மேற்சொன்ன எல்லா அபத்த அச்சுறுத்தல்களையும் தாண்டி, ‘இந்த அதி மேதாவி ஆரூடக்கார்க’ளுக்கெல்லாம் ‘பெப்பே’ காட்டி விட்டுத் தன் பாட்டுக்கு, தன் பாதையில், எந்த சலனமும் இன்றி, யாரையும் லட்சியம் பண்ணாமல், எப்போதும் போல் சமர்த்தாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது!
இப்படி ‘உலகம் அழியப் போகிறது’ என்று புரளி கிளப்பி விடப்படுவது இது முதல் தடவை அல்ல. இதற்கும் முன்னால் இப்படிப் பல தடவை நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அந்தக் காலகட்டங்களிலெல்லாம், இன்றைக்கிருக்கிற மாதிரியான அதிநவீனத் தொழில் நுட்ப வசதிகள் எதுவும் இல்லாததால், அதற்குத் தக்க மாதிரி அப்போது இத்தகைய புரளிகள் சமூகத்தின் மீது ஏற்படுத்திய உலவியல்த் தாக்கங்களின் வீச்சும் குறைவாகவே இருந்தன. ‘ஒரு விஞ்ஞான விரோதமான பீதி’ அந்த விஞ்ஞானத்தின் அசுர பலத்தைக் கொண்டே ஒரு ‘விஞ்ஞான ரீதியான உண்மை போல்’ பரப்பப் பட்ட கயமை இன்றைக்கு நேர்ந்ததைப் போல் அன்றைக்கு நேர்ந்திருக்கவில்லை. இருந்தாலும், அந்தந்தக் காலங்களின் தொடர்பு சாதனங்களின் வரையறைகளுக்கு உட்பட்டு அந்தப் புரளிகளின் வீச்சுகளும் பாதிப்புகளும் சமூகத்தில் இருந்தன என்பது உண்மை தான்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டாம் வருடம் என்று நினைக்கிறேன். ‘ஜூலை-பதினாலு’ என்பது மட்டும் ஒரு கனவுப்படலம் மாதிரி நினைவில் இருக்கிறது. இன்றையைப் போலவே அன்றைக்கும், ‘ஜூலை பதினாலாம் தேதி உலகம் அழியப் போகிறது’ என்று அதற்குப் பல மாதங்கள் முன்னமேயே பத்திரிகைகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு புரளிகளைப் பரப்ப ஆரம்பித்திருந்தன. இந்தப் ‘புண்ணிய காரியத்தை’ யார் முதலில் தொடங்கி வைத்தார்கள், இதற்கான அடிப்படை என்ன என்பது போன்ற விவரங்கள் எதுவும் எனக்கு இப்போது நினைவில் இல்லை. எனக்கு அப்போது பனிரெண்டு வயசு தான் நடந்து கொண்டிருந்தது. ஆறாம் வகுப்போ, ஏழாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம். நானும் என் அம்மாவும் எதற்காகவோ திருவானைக்காவலில் இருந்த என் பாட்டி வீட்டிற்குப் போய் இருந்தோம்.
ஜூலை பதினாலு நெருங்க நெருங்கப் பத்திரிகைகள் வியாபார நோக்கத்தோடு விதவிதமாய்க் கயிறு திரிக்கத் தொடங்கி இருந்தன. ‘ஆரூட மேதைகள்’ ஒவ்வொருவரும் எந்தெந்த விதத்திலெல்லாம் அன்றைக்கு உலகம் அழியக் கூடும் என்று தங்கள் தங்கள் கற்பனைச் சரக்குகளை அவிழ்த்து விட்டு கொண்டிருந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒலித்த ஒருசில விஞ்ஞானக் குரல்கள் கூட இந்த வியாபார, ஜனரஞ்சக இரைச்சல்களிடையே எடுபடாமல் போயின.
சிறு பையனாக இருந்த எனக்கு அன்றைக்கு உலகம் எந்த மாதிரி அழிந்து போகும் என்பதில் பல்வேறு வகையான பயம் கலந்த கற்பனைகள் இருந்தன. பெரும் காற்று வந்து உலக உருண்டையை உருட்டிக் கொண்டு போய் அப்படியே அதல பாதாளத்தில் கொண்டு போய்ச் செருகி விடுமோ? அல்லது அத்தனை சமுத்திரங்களும் நாலா திசைகளில் இருந்தும் பொங்கித் திரண்டு வந்து மொத்தமாய் எல்லாவற்றையும் ‘கபக்’ என்று ஒரே விழுங்காய் விழுங்கிக் கபளீகரம் செய்து ஏப்பம் விட்டு விடுமோ? அதற்கப்புறம் நாமெல்லாம் என்ன ஆவோம்? எங்கே போவோம்? அம்மா, பாட்டி எல்லோரும் என்ன ஆவார்கள்? எல்லோரும் தனித்தனியாய் எங்காவது வேறு வேறு மூலைகளுக்குப் போய்விடுவோமோ? முக்கியமாக உலகம் அழியப் போகிற ஜூலை பதினாலுக்கு முந்திய நாளான ஜூலை பதிமூன்றாம் நாள் வீட்டுப் பாடம் பண்ணி விட்டுப் படுக்கப் போக வேண்டுமா அல்லது அதற்கு அவசியம் இல்லையா?
ஜூலை பதிமூன்றாம் நாள் இரவு பாட்டியும் அம்மாவும் ஸ்ரீரங்கம் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். கோவிலில் கூட்டம் அதிகமாய் இருந்ததா என்று நினைவில்லை. மறு நாள் உலகம் அழியப் போவதைப் பற்றிய கவலை எதுவும் அவர்கள் முகத்தில் இருந்ததாயும் எனக்கு ஞாபகம் இல்லை. கோவிலில் இருக்கிற போதே சொல்லி வைத்தார்ப் போல் பேய் மாதிரி ஒரு மழை அடித்துத் தீர்த்தது. நான் பாட்டிக்கும் அம்மாவுக்கும் நடுவே பயந்து ஒண்டிக் கொள்ள, கோவில் மண்டபத்திலேயே மழை நிற்கிற வரை காத்திருந்து விட்டு அப்புறம் திருவானைக்காவலுக்கு பஸ் பிடித்து வந்தோம். வரும் வழி எல்லாம் பாட்டி ஏதேதோ ஸ்லோகங்களை முணுமுணுத்த படியே வந்தாள்.
அன்றைக்கு ராத்திரி பாட்டிக்கும் அம்மாவுக்கும் நடுவே உடம்பைக் குறுக்கிப் படுத்துக் கொண்டேன். ஏன் திடீர் என்று மழை வந்தது? அப்புறம் அதே மாதிரியே ஏன் அது திடீரென்று நின்று விட்டது? ஒரு வேளை ராத்திரிப் பன்னிரண்டு மணிக்குப் பிரளயம் வரப் போகிறதோ? அதற்கான முன்னோட்டம் தான் அந்த மழையோ? அம்மாவாலும் பாட்டியாலும் மட்டும் எப்படிப் பயப்படாமல் தூங்க முடிகிறது? பாட்டி வரும் வழியில் என்ன சுலோகம் சொல்லி இருப்பாள்?
கொஞ்சம் தள்ளிச் சுவரில் ஒரு பல்லி உட்கார்ந்திருந்தது. அது என்னையே முறைத்துக் கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. மறுநாள் உலகம் அழியப் போகிறது என்று அதற்கும் தெரிந்திருக்குமோ? கண்களைப் பயத்தோடு இறுக்க மூடிக் கொண்டேன். மறு நாள் பொழுது விடிந்து விட்டது என்று அம்மா என்னை உலுக்கி எழுப்பிய போது தான் தெரிந்தது. கண்ணை அகல விரித்து நாலா புறமும் பார்த்து உலகம் அழியாமல் அப்படியே இருப்பதை உறுதி செய்து கொண்டேன். அது எப்போதும் போல் பத்திரமாக இருக்கிறது. அழிந்து விடவில்லை. ஒரு வேளை இது வேறொரு புது உலகமாய் இருக்குமோ என்று சந்தேகம் வரவே சுவர் உச்சியில் பார்த்தேன். அங்கே அந்தப் பல்லி அதே இடத்தில் அந்த நிலையிலேயே இன்னும் என்னையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. இந்த முறை அது என்னை முறைக்கிற மாதிரித் தெரியவில்லை. மாறாக என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்துக் கொண்டிருக்கிற மாதிரித் தோன்றியது!
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -5 மூன்று அங்க நாடகம்
- ஆன்மிகமோ, அன்னைத் தமிழோ- அன்பேயாகுமாம் எல்லாம்!! -தமிழறிஞர் திரு.கதிரேசனைத் தெரிந்துகொள்வோம்!
- வெளியிடமுடியாத ரகசியம்!
- மீள்பதிவு
- நாளைக்கு இருப்பாயோ நல்லுலகே…?
- பிறவிக் கடல்.
- ’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை
- மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து…
- சற்று நின்று சுழலும் பூமி
- புலி வருது புலி வருது
- அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ் மெயிட்னர்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16
- மந்திரமும் தந்திரமும் – ஜப்பானிய நாடோடிக்கதை
- தாகூரின் கீதப் பாமாலை – 60 மரத் தோணியை நிரப்பு .. !
- குருஷேத்திர குடும்பங்கள் 6
- நீர்நிலையை யொத்த…
- கவிதை
- உன்னைப்போல் ஒருவன்
- கடல் நீர் எழுதிய கவிதை
- புகழ் பெற்ற ஏழைகள் 3. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வள்ளலாக வாழ்ந்த ஏழை – கலைவாணர்
- நீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்
- குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?
- குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? – 1
- ஆதாமும்- ஏவாளும்.
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 2
- அக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
- பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா
- ஒரு காதல் குறிப்பு
- இந்தியாவில் பிரேயிலின் எதிர்காலம் – வாய்ப்புகள்+சவால்கள்.
- தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் – ஆவணப்படம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களில் அரசியல் தொடர்ச்சி
- நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 4 – 5