ஆ. கிருஷ்ண குமார்.
இது படைப்புக் களம். இந்த ஒரு புத்தகத்தின் விமர்சனக் கட்டுரைக்காக படைப்புகளம் என்ற பதத்தை பயன்படுத்துவது சரியாகுமா? என்று கேட்டால் சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அன்பின் ஐந்திணை சில கட்டுரைகள் உள்ளடக்கிய ஒரு புத்தகம். கட்டுரை என்று சொல்ல வரும்போது பொது நடப்பைப் பற்றியோ சினிமா குறித்த கட்டுரைகளோ அல்ல. தன் சொந்த வாழ்வனுபவங்களை க.மோ. கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறார். அதனால், இந்த நூலிலிருந்து குறிப்பாக சில கட்டுரையின் பெயரைஎடுத்து குறிப்பிட்டு விமர்சனம் என்ற பெயரில் விளக்கி எழுத முடியாததாக இருக்கிறது.
விமர்சனக் கட்டுரை என்று சொல்ல வரும்போது, நாம் எழுதப்போகும் கட்டுரையோடு மற்ற சில படைப்புகளோடு இருக்கும் நெருக்கம், கட்டுரையின் தரம் அதனோடு சேர்த்து படைப்பாளி தன் சொந்த பார்வையை முன்வைத்தல் போன்ற மூவகையை நினைவில் வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவ்வகையில் க.மோவின் இந்த கட்டுரை நூலுக்கு விமர்சனம் எழுத – நூலிலுள்ள கட்டுரைகளுக்கேற்ப தனி நபர் அனுபவம் அவசியம் தேவைப்படுகிறது. கட்டுரைகளின் படி – அது எனக்கு குறைவாக இருப்பதால் கற்பனை அனுபவத்தை தனிப்பட்டதாக்கி அதோடு இங்கு பொதுக்களத்திலும் கலந்து எழுத முயற்சி செய்திருக்கிறேன்.
ஏற்கனவே சொல்லியபடி, இந்த நூலிலிருக்கும் எந்தவொரு கட்டுரையின் பெயரையும் குறிப்பாக சொல்லப்போவதில்லை. இரண்டு காரணங்கள் – ஒன்று, ஒவ்வொரு கட்டுரைக்குள்ளும் நமது தேவைக்கான புரிதல் கொட்டிக்கிடக்கிறது. இரண்டாவதாக அவை அனைத்தும் வாழ்வின் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஏற்படும் நிகழ்வுகளாக இருக்கின்றன. ஆகையால், இது மட்டுமே சிறந்த கட்டுரை என்று பிரித்து வகைப்படுத்திவிட இயலாமலிருப்பதை அறிந்துகொண்டு அவ்வாறு சொல்கிறேன்.
தீமையின் வடிவம் இலக்கியத்தில் பல படைப்புகளாக வெளிவந்திருக்கிறது. தீமையிலிருந்து ஒளி பெறுதல் என்ற சிந்தனையாக்கத்திலிருந்து பிறழ்ந்த படைப்புகளை இலக்கியத்தின் உதவியுடன் எளிமையாக பிரித்துணரலாம். அன்பின் ஐந்திணை அத்தகையதொரு வகைமையுள் சேர்ந்திருக்கிறது. உதாரணமாக, தி.ஜா வின் மோகமுள், அம்மா வந்தாள், ஆ. மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற ஆக்கங்களைப் பின் தொடர்ந்து செல்கிறது க.மோ.வின் இந்நூல்.
இருண்மையை வாசித்தல் என்பது மற்ற படைப்புகளை வாசிப்பதிலிருந்து வேறுபட்டதொன்றாக அமைந்துவிடுவதை உணர்ந்திருக்கலாம். ஏனென்றால், அதன் வாசிப்பு – வெளியில் ஒழுகாத கசடின் ஈரம். அதைத்தான் நாம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் என்று சொல்கிறோம்.
அதிலிருந்து க.மோ. மாற்றுப்பாதையொன்றில் பயணித்திருக்கிறார். அ.ஐ – கட்டுரைகள் கதைகளும் நிகழ்வுகளும் அடங்கிய நூலாக இருந்தாலும் அதில் உண்மையைத் தேட முடிகிறது. அந்த உண்மையிலிருந்து நம்முடைய உண்மை கசிந்து ஒன்றிணைகிறது.
சில நாட்களுக்கு முன், எந்த ஒரு நூலை வாசிப்பதற்கு முன்பும் அதன் முன்னுரை, அணிந்துரை போன்ற உரைகளைப் படிக்கும் வழக்கத்தை கை கழுவிவிட்டேன். முதலில் கரு, பிறகே உரை. ஆரம்பத்தில் இந்த வழியில் அ.ஐ-யை அணுகியபோது ஒரு சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் அனுபவம் கிடைத்தது. ஆனால், கட்டுரையில் விளித்திருக்கும் “நான்” யாரைக் குறிக்கிறது என்று நினைத்தபோது முன்னுரையை வாசிக்கமாலேயே இது உண்மையாகவே ஒரு கட்டுரை நூல் என்று பிறகு தெரிய வந்ததில் ஒரு சிறிய ஆச்சர்யம்தான்.
ஒற்றைக் காதல், உடைந்த காதல், மறைந்த காதல், புதைந்து சிதைந்த காதல் என்று காதலின் கரிய பக்கங்கள் இந்நூலில் உயிர்பெற்றிருப்பது போன்ற உணர்வும், காமம் தன் ஆடையைக் களைந்து நடமாடும் தோற்றமும் மனதில் கடந்திராமல் இல்லை. அதை முன்னிட்டு வலுத்து எழுதப்பெறாத படைப்பு இலக்கியமாகிறதோ என்னவோ? அதன் புரிதலில் கொஞ்சமாவது கிடைத்துவிடுகிறது.
முன்னுரையில் கூறியபடி, க.மோ சுயானுபவத்துடன் புனைவையும் கலந்திருந்தாலும் எது புனைவு? எது உண்மை? என்று வேறுபடுத்த முடியவில்லை. ஒரு பத்தியில்கூட வாசகனை உணர்ச்சிவசப்பட வைக்காததிலிருந்து ஒரு முதிர்ந்த பிரதியை கண்டறிய முடிந்தது.
க.மோ வின் எழுத்து யதார்த்த பாணியைச் சேர்ந்ததாக இருக்கிறது. கொங்கு பகுதியில் உலவும் நகைச்சுவை நிரம்பிய இயல்பான எழுத்து. நண்பர்களிடையே பேசப்படும் இயற்கையான வசனங்கள், ஒரு வாசகனாக வாசிக்கும்போது கிடைக்கும் சித்திரம் இரண்டும் ஒரே மையப் புள்ளியில் குவிவதை உணர்ந்துவிடலாம். அதுவே, நூலை கீழே வைக்கவிடாமல் கட்டிப்போடும் யுத்தியை பின்பற்றினாலும் அதிலிருந்தும்கூட க.மோ சிறிது விலகவைத்துவிடுகிறார். மேலும், வாசித்தலின் போது தனக்குத் தானே வாய்விட்டு சிரித்துக் கொள்வதைசில பக்கங்களில் தவிர்க்க முடியவில்லை.
பிறகு, ஜோதி. மறக்க முடியாத கட்டுரையில் வரும் பாத்திரம். என்னவோ ஒரு மாய யதார்த்த எழுத்து வகையில் சென்றுகொண்டிருக்கும் வரிகள் சடுதியில் மாயத்தை விட்டு யதார்த்தத்தைப் பற்றும் இடத்தில் கட்டுரை முழுமையாக உயிர்பெறுகிறது. இதன் காரணம்தொட்டே அடிப்படை வாசகன் முதற்கொண்டு தேர்ந்தவாசகன் வரை பொதுவாக இருக்கிறது இந்நூல்.
இருண்மையின் வெளிப்புற இயலாமையை ஆற்றுப்படுத்த அ.ஐ-யின் வாசிப்பு கட்டாயம் தேவைப்படுவதாக உணர்கிறேன். ரகசியமாக இருக்கும் கருத்துகளின் பிரதிபலிப்பு இதில் தெறிக்கப்பட்டுள்ளது. நண்பர்களின் காதல், அதன் தோல்வி, அவர்களுக்கு உதவுதல், அதில் பின்னலாகும் சுய ஏக்கம், பருவத்தில் சுயம் சார்ந்த அனைத்து அத்தியாவசியங்களிலும் இருக்கும் சிக்கல்கள் பூரணமாக இந்த நூலில் க.மோ தனது அனுபவத்துடனும், புனைவுடனும் எழுதியிருக்கிறார்.
அந்தரங்க அகத்தின் மொத்த அருவமும் ரூபமாக இருப்பதாலும், கட்டுரையில் வரும் களம் அனைவருக்கும் சமம் என்பதாலும் ஒருவரது சுயம் சார்ந்த அனுபவங்கள் என்ற சிந்தனையிலிருந்து விடுபட்டு பொதுமையான ஓர் பிரதியை வாசகனுக்கு க.மோ.கொடுக்க தவறவில்லை. அதை இந்த நூலின் கனமாக கருதுகிறேன்.
க.மோ. தேர்ந்த எழுத்தாளர். அதைவிடவும் கூர்மையான விமர்சகர். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் க.மோ.வைப் பார்த்திருக்கிறேன். ஆனால், பேசவில்லை. அவரது நூல்களை வாசிக்காத காரணத்தினால் பேசுவதில் ஒரு சிறிய தயக்கம் இருந்தது. அ.ஐ- தற்போது அதை விலக்கியிருக்கிறது.
எனக்குத் தெரிந்த வரையில் இலக்கியத்தில் அன்பின் ஐந்திணை விரிவாகவும், பரவலாகவும் பேசப்படவில்லையென்று தோன்றுகிறது. கவனிக்கப்படாத நூல்களில் ஒன்றாக இதை எடுத்துக்கொள்ளலாம். மேலும், முக்கியப் படைப்புகளிலும் ஒன்று.
தேர்ந்த வாசகர்களும், எழுத்தாளர்களும் இந்த நூலுக்கு அவர்களின் பார்வையில் எதிர் வினைகளை எழுதலாம். சாதாரண வாசகனுக்கு இது ஒரு முக்கியமான நூலாக கருதுகிறேன். விமர்சகரின் நூலுக்கு விமர்சனம் எழுதுவதில் தேர்ச்சியடைய வேண்டியிருந்தாலும், கட்டுரைகளின் கருவும், சலனமும் எழுதுவதற்கு உந்துதலாக அமைந்ததால் தெரிந்ததை எழுதிவிட்டேன். அதில் 10 சதவிகிதம் நிறைவு அடைந்திருப்பதாக இருந்தாலும் கூட கூடுதல் மகிழ்ச்சிதான்.
புத்தகங்களை ஆன் லைனில் வாங்கும்போது ஒரு புத்தகம் கூடுதலாக வாங்கினால் இலவசமாக அனுப்பி வைப்பதற்கான தொகையைஎட்ட வேண்டி அன்பின் ஐந்திணையைத் தேர்ந்தெடுத்தேன். தெரிவு செய்யும் பட்டியலில் இல்லாவிட்டாலும் ஒரு அலசலில்அதிர்ஷ்டமாக எடுத்த புத்தகம் இது. இல்லையென்றால் அகத்தின் வேறு சில கூறுகளை உணர தவறவிட்டிருப்பேன்.
- ஜெயந்தன் விருது அழைப்பிதழ்
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 20
- ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்
- மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்
- குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..
- சேவை
- க.மோகனரங்கனின் அன்பின் ஐந்திணை –
- முக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34
- தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !
- ஆன்மீகக் கனவுகள்
- அப்பா ஒரு நாய் வளர்க்கிறார்
- சிவகாமியின் சபதம் – நாட்டிய நாடகம்
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்
- பேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28
- ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி
- நீங்களும்- நானும்
- திண்ணையின் இலக்கியத் தடம் – 1
- விஸ்வநாதன், வேலை வேண்டாம்…..?
- அகநாழிகை – புத்தக உலகம்
- அருளிச்செயல்களில் மச்சாவதாரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்
- கற்றல்
- கவிஞர் தமிழ் ஒளி 90 அழைப்பிதழ்
- புகழ் பெற்ற ஏழைகள் 25