இலக்கிய வட்ட உரைகள்: 12 பாரதி ஒரு தலைவன்

author
0 minutes, 28 seconds Read
This entry is part 15 of 17 in the series 1 பெப்ருவரி 2015

ப குருநாதன்

 

பாரதி ஒரு பன்முகம் கொண்ட விந்தை மனிதர் என்பது பாரறிந்தது. ஒப்பற்ற இலக்கியவாதியாக, மகாகவியாக, தேசியவாதியாக,  பத்திரிக்கையாளராக, சிந்தனையாளராக,  ஞானியாக, மனிதாபிமானியாக அவர் என்றும் அறியப்பட்டவர்; அறியப்படுகிறவர்.  ஆனால், அவர் ஒரு தன் நிகரில்லாதத் தலைவனாகவும் இருந்திருக்கிறார் என்பது வெகுவாக   அறியப்படாத, பேசப்படாத ஒன்று.

ஒரு சில கூறுகளை அளவுகோல்களாகக்கொண்டு நோக்கினால், வள்ளுவனுக்குப் பிறகு, தமிழ் இலக்கிய கர்த்தாக்களில் தலைவனாகவும் இருந்தவர் பாரதி மட்டுமே. இன்னும் சொல்லப் போனால், பாரதி இயற்கையாகவே ஒர் ஒப்பில்லாதத் தலைவர், அவரே ஒரு மற்றொப்பிலாதக் கவிஞராகவும் இருந்திருக்கிறார் என்று கருதுவதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.

ஒரு தலைவனின் தலையாயப் பண்புகளில் ஒன்று தன்னைச் சார்ந்தவர்களை வழி நடத்திச் செல்வதாகும். ஒரு சமுதாயம் நல்வழிப்பட அறிவுறுத்துவதும், அதை நல்ல பாதையில் இட்டுச் செல்லுவதும் அந்தச் சமுதாயத் தலைவனின் பண்பும் கடமையுமாகும்.  நாடு வளம்பெற, நாட்டுமக்கள் நலம்பெற, சமுதாயம் செம்மைப்பட, எம்மையும் சிந்திப்பதும் செயல்முறை வகுப்பதும் செயல்திறன் வளர்ப்பதும் முன்னின்று செயலாற்றுவதும் ஒரு தலைவனனின் தலையாயப் பணிகள்.

இந்தக் கூறுகளை அடிப்படையாகக்கொண்டு, இந்த நோக்கினில் நாம் பாரதியைப் பார்த்தோமானால், பாரதியும் ஒரு தன்நிகரில்லாத் தலைவன் என்பது நன்கு புலப்படும்! பாரதியின் எண்ணமும் எழுத்தும், சொல்லும் செயலும் தான் வாழ்கின்ற நாட்டினை, தான் சார்ந்த நின்ற சமுதாயத்தைத் திருத்தி, திசைத்திருப்பி, நெறிப்படுத்தி, நேர்வழிகாட்டி, குறிக்கோள் சுட்டி, வழிநடத்தும் வகையான அமைந்தனவே.

அவர் வாழ்ந்த காலம் நம் நாடு அடிமைப்பட்டுக் கிடந்த காலம். சமுதாயம் சீர்கெட்டு, சிறப்பிழந்து, சிதைந்துக் கிடந்த காலம்.  அந்த நேரத்தில் தேசத்தை, தேச மக்களை நெறிப் படுத்த வேண்டிய அவசியம், வழிகாட்டி நடத்திச் செல்ல வேண்டிய தேவை பாரதிக்கு இருந்தது. அதை அவர் உணர்ந்தார். அதற்காக என்னேரமும் உன்னினார், ஓய்வின்றி உழைத்தார்; உழன்றார்.  அந்தச் சமுதாயத்தை சீர்படுத்தி, செம்மையுறச் செய்கின்ற சகல சக்தியும் பாரதியிடம் நிறைந்திருந்தன. அந்தச் சக்திகளை முழுவதும் பயன்படுத்த முனைந்தார் பாரதி.  அதானால்தான், சுத்தானந்த பாரதியார், பாரதியின் படைப்புக்களை நம்முடைய பழைய உபநிடதங்களுக்கு ஒப்பிட்டு, அவைகளை ‘தேசோவுபனிஷத்’ என்று குறிப்பிட்டார்.

ஒரு தலைவனின் இன்றியமையாத இலக்கணமென்ன? இயல்பென்ன? அவைகள் உண்மையாகவே பாரதியிடம் இருந்தனவா? இன்றைய ‘Modern Management Science’ -ல் குறிப்பிடப்படும் ஒரு உன்னதமான தலைவனின் பல பண்புகள் பாரதியிடம் இயல்பாகவே இருந்தன. அதிலும், ஒரு தேசத்தை நல்வழிப்படுத்த முனைபவனுக்கு எந்தெந்த குணநலன்கள் அவசியம் இருக்க வேண்டுமோ அவையாவும் பாரதியிடம் அளவுக்கதிமாகவே இருந்தன.

ஒரு தேசத் தலைவனுக்கு தொலைநோக்கு பார்வை வேண்டும். சீரிய, தெளிவான சிந்தனை வேண்டும்; எண்ணம் வேண்டும். பரந்த மனதும் விரிந்த பார்வையும் வேண்டும். பாசாங்கில்லா நேயம் வேண்டும். எண்ணியதை சொல்கின்ற, செயல்படுத்துகின்ற துணிவும் திறனும் வேண்டும்.  சொல்லுவதைச் செய்ய வேண்டும். செய்வதை, செய்யக்கூடியதை மட்டுமே சொல்ல வேண்டும். சொல்லுவதை தானே செய்துகாட்ட வேண்டும்; கடைப்பிடிக்க வேண்டும். ஆக்கமும் ஊக்கமும் வேண்டும்.  பகுத்தறிவும் பட்டறிவும் கொண்டு திட்டம் தீட்டித் தருதல் வேண்டும். தன்னலமில்லா தன்மை வேண்டும். பின்னிருந்து தள்ளாமல், முன்னின்று வழி நடத்துதல் வேண்டும். துணிவு மட்டுமின்றி, பணிவும் கனிவும் கூடவே வேண்டும். வாய்மை வேண்டும்; தூய்மை வேண்டும். வாக்கு வண்மையும் வசீகரமும் வேண்டும். இத்தனையும் பாரதியிடம் மொத்தமாக, இயல்பாகவே இருந்தன.

தன் சமுதாயத்தை, தன் நாட்டை தன் உயிரினும் மேலாக நேசித்தவர் பாரதி. அவைகளின் மேன்மையை, மேம்பாட்டைப் பற்றியே எப்போதும் யோசித்தவர். அவைகளையே இறைவனிடம் எப்போதும் யாசித்தவர்.
முன்பே குறிப்பிட்டபடி, பாரதியின் காலம், இந்திய மக்கள் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலம். அவர்கள் அடிமைத்தனத்தை ஒரு குணமாக, கொள்கையாக, வாழ்க்கைமுறை யாகக் கொண்டொழுகிய காலம். மக்கள் அச்சத்தின் உச்சத்தில் இருந்த காலம். மக்களின் ‘இயலாமை எண்ணம்,’ அவர்களின் முயலாமைக்கும், இயங்காமைக்கும் அடிப்படைகளாக இருந்தன. (அச்சத்திற்கும் மருட்கைக்கும் உள்ள வேறுபாட்டினை இங்கே ஒருசில எடுத்துக் காட்டுகளுடன் விளக்கினேன்). மக்களின் இந்த அவலநிலையை மாற்றி, அவர்களை உயர்விக்க, உய்விக்க வேண்டிய கடமை பாரதிக்கு இருந்தது. நாடு மேம்பட வேண்டுமென்றால், சமுதாயம் சீர்பட வேண்டுமென்றால், புதிய பார்வை, புதிய நோக்கம், புதிய செயல் அவசியம் என்பதில் பாரதி மிகத் திண்ணமாக இருந்தார். எதையும் புதிதாக எண்ணுவதற்கும் சொல்வதற்கும் செய்வதற்கும், சிந்தனைத் தெளிவும் உள்ளத் துணிவும் வேண்டும். இந்த இரண்டும் பாரதியின் பிறவிக் குணங்கள்.

தம் மக்களின் அடிமைத்தனத்திற்கும் அவலநிலைக்கும் மூல காரணம், முழுக் காரணம் அவர்களின் அச்ச உணர்வே என்று கண்டறிந்தார் பாரதி. ‘அஞ்சியஞ்சிச் சாவார்,  இவர் அஞ்சாத பொருளில்லை,’ என்றும் ‘ஆவி பெரிதென்றெண்ணிக் – கிளியே அஞ்சிக் கிடந்தாரடீ; அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடீ,’ என்றும் தம் மக்களின் அவல நிலையக் கண்டு நொந்தார் பாரதி.

அச்சமே அடிமைத்தனத்திற்கும் ஆக்கமின்மைக்கும் ஆண்மையின்மிக்கும் அடிப்படைக் காரணம். அச்சமே அறிவு மயக்கத்திற்கும் ஊக்கமின்மைக்கும் ஊற்றுக்கண். அச்சம் இருந்தால் அங்கே தெளிவான சிந்தனை பிறக்காது; முயற்சி இருக்காது; சீரிய செயல் நடவாது. மக்கள் அஞ்சியஞ்சி வாழும் வரை, மாறுதல் என்பதும் வளர்ச்சி என்பதும் மறுமலர்ச்சி என்பதும் கிஞ்சித்தும் கிட்டாது. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் முன்னேற்றம் என்பது முற்றிலும் இருக்கது என்றெல்லாம் பாரதி உறுதியாக நம்பினார். அச்சமுடைமையே அழிவுக்கு ஆரம்பம் என்று உணர்ந்திருந்தார் பாரதி.

பாரதி அச்சத்தை, அதன் வீச்சை நன்கு அறிந்தவர்; உணர்ந்தவர். ஆனால், அதை முற்றும் துறந்தவர். அஞ்சாமையை தானே கடைப்பிடித்து, வென்று சாதித்து காட்டியவர். மக்களின் மனதில் இருக்கும் அச்சத்தை ஆணிவேரோடு பெயர்த்தெறிய விழைந்தார் பாரதி. தன்னைப் போலவே தான் பிறந்த தரணியும் அச்சத்தை முற்றிலும் விட்டுவிட முடியும், விட்டுவிட்டு வெற்றிபெற முடியும், அதுவே அதன் முன்னேற்றத்திற்கான முதல் படி என்று நம்பினார் பாரதி.  தன்னைப் போலவே தன் மக்களும் ‘அஞ்சாமையை’ ஒர் அடிப்படைக் குணமாக, ஒரு வாழ்க்கை நெறியாக, வாழ்க்கை முறையாகக் கொண்டொழுக வேண்டும் என்று எண்ணினார், எழுதினார், பேசினார், பாடினார் பாரதி. அச்சமின்மையை ஒரு தாரக மந்திரமாக தன் மக்களுக்கு உபதேசிக்கத் துவங்கினார் பாரதி.

வள்ளுவனைப் போலவே பாரதிக்கும் ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்று நன்றாகத் தெரியும். அதே

நேரத்தில், ‘அச்சமுடையாருக்கு அரணில்லை’ என்றும் தெரியும். மக்களின் அச்சவுணர்வை அடியோடு ஒழிக்க

விழைந்த பாரதி ‘அஞ்ச வேண்டியவகைகளுக்கு அஞ்சு’ என்று கூறக் கூட கூசினார் என்பது அவரை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு நன்கு புரியும்.

மாறிவரும் காலத்தின் தேவைக்கேற்ப புதிய ‘ஆத்திசூடி’ படைத்தார் பாரதி. கடவுள் மோஸசின் வழியாக

உலகிற்கு அளித்தவை என்று நம்பப்படுகின்ற ‘பத்து கட்டளைகள்’ போன்று, பாரதி நம் வாழ்வு மேன்மையுற 110 கட்டளைகளைத் தன் புதிய ஆத்திசூடியில் இட்டு இருக்கிறர். அதில், எடுத்த எடுப்பிலேயே, காப்புச்

செய்யுளுக்குப் பின் ‘அச்சம் தவிர்’ என்று போதிக்கிறார். அடுத்து ‘ஆண்மை தவறேல்’ என்கிறார். (இங்கு ‘ஆண்மை’ என்ற சொல் ‘ஆண்’ தன்மையைக் குறிப்பதல்ல. உறுதி, வீரம் என்ற பொருள்களைத் தருகின்ற சொல்). இந்த ஆத்திசூடியில் பாரதி சொல்கின்ற, வாழ்க்கையில் வெற்றிபெற அவசியமான மற்ற கட்டளைகளையெல்லாம் அச்சத்தை விட்டு, ஆண்மையுடன் இருந்தால்தான் பின்பற்ற முடியும். அதானால்தான் இவ்விரு கட்டளைகளயும் முதலில் வைத்தார் பாரதி.
அச்சம் என்பது மனிதனுக்கு இயற்கையிலேயே இருக்கும் ஒர் உணர்வு. அறிவின் துணையோடு,

ஊக்கத்துடன் முனைந்து முயன்றால் அவ்வுணர்வைத் தவிர்க்கலாம். அந்த உணர்வை வென்றுவிடலாம். எனவேதான், ‘அச்சம் தவிர்’ என்ற மாமந்திரத்தை நமக்கு அவர் தந்தார்.

தன் ஒப்பிலாப் பாடல்கள் மூலம் ‘அச்சம் தவிர்’ என்ற மாமந்திரத்தை மீண்டும் மீண்டும் போதிக்கிறார். அஞ்சுவதை பாரதி சாடியதுபோல், அச்சத்தைப் போக்க அவர் பாடியதுபோல் வேறு யாரும் சாடவில்லை, பாடவில்லை.’அச்சத்தை எரித்து அதன் சாம்பலையும் இல்லாமல் அழித்துவிட்டோம்,’ என்று

கொக்கரித்திருக்கிறார் பாரதி.

அச்சமில்லை, அமுங்குதலில்லை,
நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
பாவமில்லை, பதுங்குதலில்லை,
ஏது நேரினும், இடர்ப்பட மாட்டோம்.
அண்டஞ் சிதறினால், அஞ்ச மாட்டோம்.
கடல்பொங்கி எழுந்தால், கலங்க மாட்டோம்.
யார்க்கும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம்.
எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்.

-என்று முழங்கியிருக்கிறார்.

Shakespeare declared through Julius Caesar: ‘Cowards die many times before they die. Valiant never dies but once.’ பாரதி இன்னும் ஒரு படி மேலே போகிறார். “அஞ்சுதல் இலார், துஞ்சுதல் இலார்,” என்று உறுதியாகக் கூறுகிறார்.

பரம ஞானிகள் எல்லாம் ‘யானும் எனதும் வேறாக, யாதும் எவரும் தானாக’ நினைத்துச் செயல்படுகிறவர்கள். தனக்கு ‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்று பரம ஞானியாகிய பாரதி பாடுவதெல்லாம், தன்னைத் தன் மக்களில் கண்டு,  அம்மக்களும் தன்னைப் போலவே அச்சமின்றி செயல்பட வேண்டும் என்பதற்காகவே. இந்தக் கருத்தை மனதில் வைத்துக்கொண்டே பாரதியின் பாடல்களை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும். (இங்கே ‘ஆற்றுப்படுத்தல்’ என்ற முறையில் பாரதியின் பாடல்களைப் நாம் பார்த்தல் வேண்டும் என்று குறிப்பிட்டேன்)

இதற்கெல்லாம் உச்சமாக இருப்பதுதான் பாரதியின் ‘அச்சமில்லை, அச்சமில்லை’ என்னும் பண்டாரப் பாட்டு. இது பாரதி ஒர் அதீத, அநுபூதி நிலையிலிருந்து பாடிய, எழுச்சியூட்டும் பாடல்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

எதற்கும் எப்போதும் அஞ்சாதே! அச்ச உணர்வைத் தூக்கியெறி! அஞ்சாமையை மேற்கொள்! ஆண்மையுடன் இரு! தொடர்ந்து, உறுதியாக நின்று, குறிக்கோளில் வெற்றி பொறும்வரை முயன்றுகொண்டே இரு. இதுதான் பாரதி திரும்பத் திரும்ப உபதேசிக்கும் தாரக மந்திரமாகும்.

‘மந்திரம்’ என்ற சொல்லே ஒரு மிகச் சிறந்த சொல். மந்திரங்களை, உண்மையாக, முழு நம்பிக்கையுடன், கருத்தும் உணர்வும் ஒன்றி தொடர்ந்து உச்சரித்தால், ஓதினால், புத்துணர்ச்சி பிறக்கும்; புத்தி தெளிவடையும்; புதிய சக்தி பிறக்கும். இது அனுபவத்தில் பலர் கண்ட உண்மை. இந்தக் கருத்து சமயம் சார்ந்த ஒன்றல்ல. மூடநம்பிக்கையுமல்ல.ஆய்ந்தறிந்த விஞ்ஞான உண்மை. மந்திரத்தின் சக்தி அதை உச்சரிக்க, உச்சரிக்கக் கூடும். அதை உணர, உணர ஊக்கமும் உத்வேகமும் அதிகரிக்கும். அதன் சாரத்தை அனுபவிக்க, அனுபவிக்க ஆக்க சக்தியும் ஆன்ம இன்பமும் பெருகும். பாரதியின் கட்டளைகளின் முழுப்பயன்களை நாம் பெற, நம் வாழ்வு சிறக்க நாம் அவைகளை மந்திரங்களாகக் கருதி ஓதுதல் வேண்டும்; ஒம்புதல் வேண்டும்.

முன்பே குறிப்பிட்டபடி, பாரதி சொல்வதைச் செய்தவர்; செய்வதை, செய்யக் கூடியதை மட்டுமே சொன்னவர். ஒரு தலைவனாக, தான் பிறருக்கு உபதேசித்தது போலவே தானும் வாழ்ந்து காட்டி, வழி நடத்தியவர் நம் பாரதி. அவர் பிறவிக்கு அஞ்சவில்லை; தன் பிறவியை ஒரு பெருங்கொடையாகக் கருதினார். வாழ அஞ்சவில்லை; வாழ்க்கையை ஒரு தவமாகக் கொண்டார். பொருள் இழப்பிற்கோ, புகழ் இழப்பிற்கோ அஞ்சவில்லை; அவைகளைத் துச்சமாகக் கருதினார். ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அடக்குமுறைகளுக்கும் அஞ்சவில்லை. தானும் அச்சமின்றி வாழ்ந்து, தன் மக்களும் அது போலவே வாழ விழைந்து, அதற்காக அருட்கொடை நல்கி, அயராது உழைத்தவர் அவர்.

அறிவு என்னும் ஆயுதம் கொண்டு அச்சத்தை அடியோடு விலக்க வழிகாட்டியவர் நம் பாரதி. ‘அச்சம் தவிர்’ என்ற தாரக மந்திரத்தை தம் மக்களுக்கு வார்த்தைகளாலும், வாழ்ந்து காட்டியும் போதித்தத் தலைவர் நம் பாரதி. அவரின் முதல் மந்திரம் தன்னம்பிக்கை வளர்ப்பது; தளர்ச்சியையும் தயக்கத்தையும் ஓட்டுவது; ஊக்கமளிப்பது; உயர்வின் உச்சத்திற்கு நம்மை இட்டுச் செல்ல வல்லது. நம் அன்றாட வாழ்க்கையில், நாம் அறிவின் துணைகொண்டு அச்சமின்றி எடுத்த முடிவுகள், ஈடுபட்டச் செயல்கள் நமக்கு வெற்றியை ஈட்டித் தந்திருக் கின்றன என்பது மெய்யல்லவா? உலகின் எண்ணற்ற சாதனையாளர்களின் வெற்றியின் ஆதாரம் துணிவல்லவா?  பாரதி நமக்களித்த அந்தத் தாரக மந்திரத்தின் சக்தியை நாம் நம் வாழ்வில் கண்டும், கேட்டும், அனுபவித்தும் அறிந்துணர்ந்திருகின்றோம் அல்லவா? பாரதி தந்தது – a panacean practical solution to success and salvation.

எனவே, பாரதி என்ற தலைவன் பாருக்களித்த ‘அச்சம் தவிர்’ என்ற தாரக மந்திரத்தை நாம் நாளும் தொடர்ந்து உச்சரிப்போம். அந்த மந்திரத்தின் உட்பொருளை, உயிர்ப்பை, மகா சக்தியை நாம் நாளும் உணர்வோம். அதை நம் அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிப்போம். நம்மை நாமே உயர்த்திக் கொள்வோம். உய்வு பெறுவோம்!

வாழ்க பாரதி! வாழ்க அவர் புகழ்!!

guru@nhcl.com.hk

(ஜனவரி 3, 2005 அன்று நடந்த ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ‘பாரதி விழா’ கூட்டத்தில் பேசியதன் சுருக்கம்)

********

 

(ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள், தொகுப்பு: மு.இராமனாதன், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)

 

Series Navigationமழையின் சித்தம்கயல் – திரைப்பட விமர்சனம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *