பொன்பாக்கள்

This entry is part 8 of 17 in the series 1 பெப்ருவரி 2015

 

[ வளரி எழுத்துக் கூடம் வெளியிட்டுள்ள “பெண்பாக்கள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து]

ஆண் படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்கையில் அதில் அப்படைப்பாளரை உள் நிறுத்திப் பார்க்காத வாசக உலகம் பெண் படைப்பாளி என்றால் அவரை அப்படைப்பின் மையமாக நிறுத்திப் பார்ப்பது இலக்கிய உலகின் மிகப்பெரிய அவலம். ஒரு படைப்பின் ஓட்டத்தில் வரும் உறுப்பு வருணனைகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை அப்படைப்பின் கருவைக் கொண்டே உணர வேண்டும். எழுத்தாளர் தன் கூற்றாக வெளியிடும் படைப்பில் கூட ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறி எழுதுவதைச் சங்க கால இலக்கியங்களும் பக்தி இலக்கியங்களும் காட்டி உள்ளன.

ஆண்களைவிடப் பெரிய சவால்களைச் சந்தித்துத்தான் பெண்கள் இலக்கிய உலகில் உலாவருகிறார்கள் என்பது வெள்ளிடை மலையாகும். அதுவும் திருமணமானபிறகு பெண்கள் இலக்கியத்துக்கு மிகவும் அந்நியமாகி விடுகிறார்கள். எண்பதுகளில் என்னுடன் பட்டி மன்றம் பேசிய பல பெண் பேச்சாளர்கள் திருமணம் முடிந்த கையோடு இலக்கியத்தை மறந்துவிட்ட அனுபவத்தை நான் நேரிடையாகவே சந்தித்திருக்கிறேன். அப்படித் திருமணம் செய்து கொண்ட பின்பு தங்கள் கவிதை ஆற்றலை வெளிப்படுத்த இயலாத சூழலில் உள்ள எட்டுப் பெண் கவிஞர்களின் கவிதைகளைக் கொண்ட தொகுப்பை வெளியிட்டு அதையும் பெண் உரிமையை வலியுறுத்திய தந்தை பெரியாருக்குச் சமர்ப்பித்து வளரி வெளியிட்டகம் பெருமைப்பட்டிருக்கிறது.  .   தெளிவான எழுத்தில் நேர்த்தியான அமைப்பில் நூலை வெளியிட்டுள்ள அருணா சுந்தரராசன் பாராட்டுக்குரியவர். தொகுப்பில் இயற்கை மற்றும் சமூகம் சார்ந்த கவிதைகள் அதிகம் இருப்பது கவனத்துக்குரியது.

அரசியல் சார்ந்த கவிதை ஒன்று. மலர்மகள் எழுதி உள்ளது. அதில் அழகான ஒரு பொம்மலாட்டக் காட்சியை அவர் படம் பிடிக்கிறார். பொம்மலாட்டத்தில் ஆட்டப்படும் மரப் பொம்மைகள் ஆடி முடித்த பின்னர் மூட்டை கட்டப்படும் போது அவற்றின் நிலை மிகவும் பரிதாபமாகத்தான் இருக்கும். அப்பொம்மைகள் பின்புலத்தில் உள்ள வேறொருவரால் ஆட்டப்பட்டாலும் ஆட்டுபவரை யாரும் பார்க்க முடியாது. மேலும் பொம்மைகள் என்றும் பொம்மைகள்தானே. அரசியல்வாதிகளை ஆட்டி வைப்பவர்களாகவும் வாக்காளர்களைப் பொம்மைகளாகவும் காட்டும் கவிதை அடிகள் இவை:

”வறுமையில் தள்ளப்பட்டு / வாழ்தலுக்கான முறையீடுகளின்றி / பரிதாபமாக வஞ்சிக்கப்படும் / வாக்காள மரப் பொம்மைகள்”

ஆண்களைவிடப் பெண்களுக்கே இல்லறத்தில் அதிகமானக் கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன. அவற்றை முடித்த பின்னரே அவர்கள் இலக்கியம் பற்றிச் சிந்திக்க முடிகிறது. அவர்களிடம் இலக்கிய மனம் குடிகொண்டிருக்கிறது. ஆனால் கவிதை எழுத சொற்கள் வந்து விழும்போது கடமைகள் ஆக்கிரமிக்கக் கவிதை காணாமல் போய்விடுகிறது. மனம் சொற்களைத் தேர்ந்தெடுத்து அதைக் கவிதையாக ஆக்குமுன் அச்சொற்கள் மரணிக்கின்றன என்கிறார் மலர்மகள்.

”புணர்ச்சிகளின்றிக் கருத்தரிக்கும் / உயிர்ப்புமிகு சொல் முட்டைகள் / மரணித்துப் போகின்றன / எழுதுகோலின் / அணைப்புச் சூட்டைப் பற்றுமுன்”

நான் யார் என்பது ஒரு முக்கியமான கேள்வி. ரமணர் இதைக் கேட்டுக்கொண்டதால்தான் மகரிஷியானார். இந்தக் கேள்வி நமக்குத் தெரியாமல் ஒவ்வொரு பெண்ணும் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். ஒவ்வொரு முறையும் அவளுக்கு வேறு வேறு விடைகள் வந்து விழுகின்றன. ஆனால் அவள் அதை மூடி மறைக்க வேண்டி உள்ளது. உண்மையை மறைத்து அவள் பொய் முகமூடி அணிந்துகொண்டு காட்சியளிக்கிறாள். உண்மை அழகானது எனத் தெரிந்தும் அவள் ரகசியங்களில்தான் ஒளிந்து கொண்டிருக்க வேண்டி உள்ளது. சௌந்தரி கணேசனின் ’மனிதக்குரல்’ கவிதையில் இதைக் காண முடிகிறது.

“எனது உண்மையும் பொய்யும் / எனது காயத்தின் வலிகளும் / நான் சேகரித்த துயரங்களும் / எனக்கான ரகசியங்கள் / இரகசியங்கள் பகிரப்பட்டால் / ஆபத்துகள் விதைக்கப்படும் / ஆதலால் பொய்கள் வளர்கின்றன”

மனிதகுலப் பண்புகளைப் பற்றி அதிகமாக நவீன கவிதை பேசுவதில்லை. அது மரபு சார்ந்த சிந்தனை என்றே ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளது. ஆனால் சௌந்தரி கணேசன் நட்பைப் பற்றி எழுதுகிறார். தாயிடமும் மனைவியிடமும் கூற முடியாதவற்றை எல்லாம் நண்பரிடம் கூறலாம் என்பார்கள். இந்தக் கவிதாயினி நட்பைப் பலவிதமாகப் பிரிக்கிறார். இந்தப் பிரிவுகள் உலகியலில் அனைவரும் காண்பதுதான். எல்லா நண்பர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை. சிலர் அற்ற குளத்து அறு நீர்ப் பறவைபோல இருப்பர். சிலர் அதே குளத்தின் கொட்டியும் ஆம்பலும் போல் இருப்பர். ஆனால் எல்லாருமே தேவை என்கிறது இக்கவிதை

“சிலர் தோடி சிலர் பைரவி / சிலர் முட்டி மோதி ஒட்டும் குணம் / சிலர் கட்டியணைத்து மகிழும் குணம் / சிலர் பேசிப் பேசித் துளைத்தெடுப்பர் / சிலர் கவசமாகக் காத்து நிற்பர்”

புதுவை சுமதியின் ‘நிர்வாணப் புரிதலில் ஒளிர்விடும் நிஜங்கள்’ ஒரு அற்புதமான கவிதை. பெண்ணுக்கு மேலாடை என்பது நாகரிகத்தின் சின்னம். துப்பட்டாவை கழுத்தை ஒட்டிப் போடும் இக்காலத்திலும் அது தேவையாய் இருக்கிறது. விலக்க முடியவில்லை. அதை எப்படி அணிந்து கொள்வது என்பது அவர்களின் உரிமைதான். குமரி மாவட்டத்தில் மார்சீலைப் போராட்டம் எனும் ஒன்று நடந்தது இந்த நேரத்தில் நினவுக்கு வருகிறது. ஆனால் இக்கவிதை கூறும் மேலாடைகள் என்பது வேறு. வீணான சம்பிரதாயங்களையும், தேவையற்ற நம்பிக்கைகளையும் பெண் தன் மேலாடையாகச் சுமக்கிறாள் என்கிறார் சுமதி. அவை கிழியும் போது அப்பெண் வெட்கம், அச்சம், வேதனை எனும் ஒட்டுப் போட்டுக்கொள்கிறாள். நாளடைவில் இந்த மேலாடையே தோலாடையாகிறது எனும்போது கவிஞரின் நயம் இன்கு புலப்படுகிறது. அந்த மேலாடைகள் அவளுக்குச் சுமையாக மாறிவிடுகிறது என்பதனால் அவர் இப்படி எழுதுகிறார்.

“பற்றி இறுக்கும் உன் கரங்களை விலக்கி / ஒவ்வொரு மேலாடையாகக் / கழற்றி எறிந்துவிடு / இந்த மேலாடைகளைத் துறக்கத் துறக்க / ஏற்படும் நிர்வாணப் புரிதலில் ஒளிர்விடும் / உன் நிஜங்கள்”

அதேநேரத்தில் இவரின் ‘நான்’ எனும் கவிதை வெற்று அடுக்குகளால் அமைக்கப்பட்ட சொற்கூட்டணியாக இருக்கிறது என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

செ. சண்முகசுந்தரம்மீனாவின் “வேண்டாம்……இத்தனை பெரிய சின்னம்” எனும் கவிதை அழகான ஒரு குறியீட்டுக் கவிதை. யானை மிகப் பெரியது. அதை மறைமுகமாக ஒரு பெண்ணுடன் கவிதை ஒப்பிட்டுக் காட்டுகிறது. யானை வலுவானது. கம்புக்கோ, இரும்புக்கோ கட்டுப் படாதது. ஆனால் அது அவனுக்குக் கட்டுப்படுவதுபோல் இருக்கிறது. தன் வயிற்றுக்கு அவன் போடும் தீனியை வேண்டி நிற்பதால்தான் அது அவ்வாறு நிற்கிறது. அதற்கும் அரிதாரம் பூசி ஆடைகள் மாட்டி அவமானப்படுத்திவிட்டனர் என்கிறார் கவிஞர்.

“அரையடிக் கம்பை உடைப்பதற்கும் / அடிமைச் சங்கிலி அறுப்பதற்கும் / அரை நிமிடம் ஆகுமா எனக்கு?”

என்று அந்த யானைப் பெண் கேட்கும்போது நமக்கு “அல்லல் மாக்கள் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்” என்று சீதை இலங்கையில் சொன்ன சொற்கள் நினவுக்கு வருகின்றன. சாதாரண நிகழ்ச்சியையும் இவர் கவிதையாக்கும் கலையில் தேர்ந்தவர் என்பதை ‘அமைதியைத் தேடி’ கவிதை காட்டுகிறது. காலையில் எழுந்தவுடன் பசியுடன் ஓர் ஆட்டுக்குட்டி நிற்கிறது. தாய் ஆட்டிடம் மடி நிறையப் பால் இருக்கிறது. ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்தத் தாய் ஆட்டை வாங்கியவர் அதை இழுத்துப் போக குட்டி ஆடு கத்துகிறது.

“ஆயிரம் கொடுத்தவருடன் அனுப்பி வைத்து விட்டார் / அன்னையைக் கூட்டிச் சென்றார் / கையில் குழம்பு மசாலாவோடு / கால்கள் நான்கு கொடுத்த கடவுள்– எனக்குக் / கைகளைக் கழித்து விட்டதால் / கட்டிய கயிற்றுக்குள்..கத்தியபடி..நான்”

இதுதான் கவிதை. பாடிய கவிஞரின் உணர்ச்சி வாசகனின் உண்ர்வோடு ஒன்றும் போது கவிதை வெற்றி பெறுகிறது. பாரி மகளிர் பாடிய ‘அற்றைத் திங்கள்’ எனும் கவிதை இன்றும் நிற்பது இதனாலன்றோ?

நவீன கவிதை என்பது எல்லாத் தளங்களையும் தொட்டுவிட்டுச் செல்வது. குப்பை வண்டிக்காரரைப் பற்றிக் கவிதை ஒன்று எழுதி அதற்கு ‘ராஜகுமாரன்’ என்று அழகான முரண் தலைப்பைச் சூட்டியிருக்கிறார் மு. முருகஜோதி. தினம் தோறும் காலையில் அவர் நகர் வலம் கிளம்புகிறார். வழியிலெங்கும் விசாரிப்புகள்; கடையில் தேனீர் உபசரிப்புகள். ஒவ்வொருவரும் வீட்டுவாசலில் வந்து வரவேற்கிறார்கள். வராதவர்களைத் தம் அதிகாரக் குரலால் அழைக்கிறார் அவர். எப்பொழுதும் அவரைப் பார்த்துக் குலைக்கும் நாய்களைக் கண்டால் அவருக்குப் பிடிப்பதில்லை. கடைசியில் கவிதை இப்படி முடிகிறது.

“அழுகல்களையும், அசிங்கங்களையும் / அருவருப்பின்றி அள்ளிக் கொட்டிவிட்டு / ஊரைத் தூய்மைப் படுத்திய உற்சாகத்தில் / குப்பை வணடித் தேரேறி / குதூகலமாய்த் திரும்புகிறர் நம் ராஜகுமாரன்”

அவர் ராஜகுமாரன் என்றால் நாம் யார் எனும் கேள்வியைக் கவிதை எழுப்புகிறது. எள்ளல் பாணியில் அமைந்த ஒரு நல்ல கவிதை இது.

குழந்தை மனம் என்பது மிகவும் மென்மையானது. வெகுளியானது. கள்ளம் கபடமில்லாதது. மேலும் அந்தப் பருவத்தில் படும் அனுபவம் மன ஆழத்தில் படிந்து வாழ்நாள் வரும் வரை வந்துகொண்டே இருக்கும். பாசத்தையும் அன்பையும் சொல்லி வளர்க்கப் பட வேண்டிய அக்குழந்தையிடம் போய் உனக்கு அப்பாவைப் பிடிக்குமா? அல்லது அம்மாவைப் பிடிக்குமா என்று விளையாட்டுக்குக் கேட்டால் கூட அம்மனம் குழம்பித் தடுமாறுகிறது. யாரேனும் ஒருவரை மட்டும்தான் பிடிக்க வேண்டுமா? என்று அதை நாம்தான் நினைக்க வைக்கிறோம். சிறிய கவிதை எனினும் ”கேள்வி” எனும் தலைப்பில் அமைந்துள்ள முக்கியமான கவிதை இது.

”எல்லாவற்றையும் விட / எப்போதும் குழந்தையை / அச்சுறுத்துவதாகவே உள்ளது / உனக்கு அப்பா வேணுமா… / அம்மாவேணுமா../ என்ற கேள்வி”

சுபஸ்ரீமோகனின் ‘தேவதூதன்’ மற்றும் ‘வரலாற்றாசிரியர்’ கவிதைகள் கவித்துவம் ஏதுமுன்றி வெற்றுச் செய்திகளாகவே அமைந்து விடுகின்றன. ஆனால் இவரின் ‘தனிமையில்’ கவிதை சிறப்பான ஒன்று. தலைவனைப் பிரிந்த தலைவி தன் தனிமையில் சொல்லும் கூற்றாக அமைந்துள்ள கவிதை இது. அவள் தன்னை மீனாக உருவகப்படுத்திக் கொள்கிறாள். அவனது இதய ஆற்ற நீந்திக் கடக்கிறாள். இக்கவிதையின் சிறப்பு என்னவென்றால் இதில் புதைந்திருக்கும் இல்பொருள் உவமையாகும் மீன் எப்போதும் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளாது. அது தன் நீச்சலைத் தானாக நிறுத்தும் காலம் வராது. அதைக் காட்டி அது போல அவள் தானும் உலா வருவதாகச் சொல்கிறாள்.

“தன் இயக்கத்தைத் / தன்னால் இயலாத போது / நிறுத்திக் கொள்ளும் மீனைப் போல / நானும் உன் அன்புச் சூழலில் பரிதவித்து / உலாவருகின்றேன்

எஸ். ரெஜினாவின் ‘வானவில்’ மற்றும் ’பொய்க்குளம்’ கவிதைகள் உரைநடைபோல் அமைந்து விட்டன. கவிஞர் மறு வாசிப்பில் இவற்றை மீட்டுருவாக்கலாம். இவரின் ‘யதார்த்தம்’ கவிதைக் கரு மிகப் பழையது எனினும் படித்தவுடன் தோன்றும் பரிதாபமான உணர்ச்சியால் கவிதை வெற்றி பெறுகிறது.

சத்யபிரியாவின் ‘இருட்டு’ கவிதை வெற்று அடுக்குகளாக நிற்கிறது. இவரின் ‘காத்திருப்பு’ கவிதை பாலியல் தொழிலாளியைப் பற்றிப் பேசுகிறது. அவள் அன்றைய இரவில் காத்திருக்கிறாள். வருபவன் ராட்சசனாகவும் இருக்கலாம். ரட்சகனாகவும் இருக்கலாம் என்கிறது கவிதை. மேலும் அவளது இழிவாழ்வை அகற்ற எச்செயலும் இச்சமுதாயம் செய்யவில்லை. ஆனால் அவள் குழந்தை உண்டாகாமல் இருக்க வழியையாவது சொல்லித் தந்திருக்கிறதே என்று சமூகத்தை வஞ்சகமாகப் புகழ்கிறது இக்கவிதை.

“உலகின் / பழைய தொழிலாளிதான் என்றாலும் / அவள் கருப்பை நிறையாமல் / காப்பாற்றி விட்டது / முன்னேறிவிட்ட / இன்றைய சமூகம்”

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதைக் காட்டுகிறது இக்கவிதை “கோவிலில் சத்தம் போட்டு / விளையாடிக் கொண்டிருந்த / குழந்தைகளை / பூசாரி துரத்த / அவர்களோடு சேர்ந்து விளையாடிய / கடவுளும் வெளியேறினார்”

இத்தொகுப்பில் எழுதி உள்ள கவிதாயினிகளின் முகவரி வெளியிட்டிருந்தால் சிற்றிதழ்கள் அவர்களைத் தொடர்புகொண்டு மீண்டும் கவிதைகள் எழுதத் தூண்டவசதியாய் இருந்திருக்கும். ஒருவேளை அவர்கள் முகவரி தர விரும்பவில்லையோ? மொத்தத்தில் இவை பெண்பாக்கள் மட்டுமல்ல. “பொன்பாக்கள்”.

[பெண்பாக்கள்—பெண்கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு-வளரி வெளியீடு-32, கீழரத வீதி—மானாமதுரை—630 606—பக்-99 விலை : உரு 75 பேசி ; 91 78715 48146]

 

Series Navigationசுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்புவேற என்ன செய்யட்டும்வர்ணத்தின் நிறம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *