யாமினி கிருஷ்ணமூர்த்தி (5)

This entry is part 14 of 24 in the series 8 பெப்ருவரி 2015

 

பின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள் பாரம்பரிய பரத நாட்டியம் காலம் காலமாக எடுத்துக்கொண்டு வரும் பதங்கள் அல்ல. முதலில் அவை சிருங்காரம் சார்ந்ததாக இல்லை. சிருங்காரத்தை ஒதுக்கி விட்டால், நவரசங்களின் பாவங்களை தம் நடனத்தில் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை அந்த நடனம் தனக்கு மறுத்துக்கொள்வதாகும். யாமினிக்காக பேராசிரியர் தயாரித்துக் கொடுக்கும் பாடாந்திரம் ( repertoire) பெரும்பாலும் ஆண், பெண் தெய்வங்களின் குணங்களை அல்லது தெய்வச் செயல்களை விதந்து போற்றுவனவாக இருக்கும். அடுத்து, அந்த பதங்களின் ஒவ்வொரு சொல்லும் தெய்வங்களைப் போற்றுவனவாகவும் மிக நெருக்கமான அடுக்கடுக்கான குணசித்திர மகிமைகளைச் சொல்வனவாகவும் இருப்பதால், சாவகாசமான நீண்ட பரதக் கலை வெளிப்பாட்டுக்கு வாய்ப்பு தராதவையாக இருக்கும். இந்தப் பதங்கள் பெரும்பாலும் சங்கீத வெளிப்பாட்டுக்கெனவே இயற்றப் பட்டவையாக, முத்துசாமி தீக்ஷிதர், தியாகராஜர் போன்றோரின் கீர்த்தனைகளாகவும் ( உதாரணமாக நவரத்தினக் கீர்த்தனைகள், பஞ்சரத்தின கீர்த்தனைகள்) பின்னும் பாடுவதற்கென்றே இயற்றப்பட்ட தில்லானாக் களாகவும் இன்னும் சில வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளாகவும், ஆதி சங்கராச்சாரியாரின் பஞ்சாக்ஷர ஸ்லோகங்களாகவும் இருக்கும். சங்கீத வெளிப்பாட்டுக்கும், நடனவெளிப்பாட்டுக்கான பதங்களின் இலக்கணமும் தேவையும் வேறாக இருக்கும். ஆனால் யாமினியின் பார்வை வேறாக இருந்தது அது அவருடைய தந்தையாரின் பாண்டித்யத்தாலும், புதியவை நாடும் மனத்தாலும் உருவாக்கப் பட்டவை.. அது வரை வேறு யாரும் பார்வை செலுத்தாத விஷயங்களைத் தான் ஆராய்ச்சி மனம் கொண்ட பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் கண்கள் தேடும். ”நமது பாரம்பரியமும், இலக்கியமும் மிக அகண்டதும் விஸ்தாரமானதுமாகும். நம் கால்பதித்திராத, பார்வை பட்டிராதவை அனேகம். நாம் அவற்றில் தீவிர கவனம் செலுத்தினால், நாம் இன்று காணும் இன்றைய நவீன இலக்கியத்தைப் போலவே நவீன பார்வையும் சிந்தனையும் ஆழமும் கொண்டவையாக இருப்பதைக் காணலாம் என்று சொல்கிறார் யாமினி.

உதாரணமாக, “என்னடி நடந்தது?” என்று தான் தன் தலைவனிடம் செய்தியறிய தூதனுப்பிய தன் தோழியைக் கேட்கும் கேள்வியில் ஆயிரம் சந்தேகங்கள் இருக்கும் அந்த சந்தேகங்கள் எண்ணற்ற கற்பனைகளுக்கு இட்டுச் செல்லும். காதலன் சொன்ன நேரத்துக்கு, இடத்துக்கு வரக்காணோமே, என்ன காரணம் என்று அறிந்து வர அனுப்பிய தோழி, திரும்பி வந்தவள், கலைந்த தலையும், சிவந்த கன்னங்களும், அழிந்த குங்குமமும், கலைந்த உடையுமாக முன்னிற்கிறாள் என்றால், கேட்கும் கேள்வி, என்னடி நடந்தது? என்று இரு பதங்களே கொண்டதானாலும், ஒவ்வொரு முறையும் அந்த கேள்வி கேட்கப்படும் போதும், தன் ஒவ்வொரு சந்தேகத்துக்குமான சஞ்சாரி பாவத்தில் எத்தனை ரச உணர்ச்சிகளை அபிநயத்திலும், முக பாவங்களிலும் எவ்வளவு நேரம் வெளிப்படுத்தலாம் என்பது நடனமாடுபவரின் கற்பனையைப் பொருத்தது அல்லவா? முத்துசாமி தீக்ஷிதரின் “லலிதே சிம்ஹாஸன ஸ்திதே’ யோ அல்லது சங்கராச்சாரியாரின் “சிவ பஞ்சாட்க்ஷர ஸ்லோகமோ, தெய்வங்களின் குணங்களை, பராக்கிரம செயல்களைக் கோர்த்த வெறும் ஸ்துதி மாலையாக இருக்கலாம். ஆனால் அந்த ஒவ்வொரு குணத்திற்கும், பராக்கிரம ஸ்தோத்திரத்துக்கும் பின்னால், ஹிந்து புராணங்களில் ஒரு நீண்ட கதையே சொல்ல இருக்கும். அந்த கதையின் விஸ்தார வர்ணணை எத்தனை வித பாவங்களுக்கு இட்டுச் செல்லும் என்பது கற்பனை ஆற்றலும் கலை பூரணத்துவமும் கொண்ட ஒரு நடனமாடுபவரின் திறமையைப் பொறுத்தது. யாமினியின் சிருஷ்டி தாகத்துக்குத் தேவை ஒரு சின்ன இடம் தான் அது ஒரு மூலையின் நுனியில் இருந்தாலும் சரி, அது போதும் அந்த நுனியில் வைத்த கால் ஆகாயத்துக்குத் தாவும். அந்தத் தாவல் எத்தனையோ பாவங்களை அடுத்தடுத்து வெளிப்படுத்தி நம்மை நாம் எதிர்பார்த்திராத பரவசத்தில் ஆழ்த்தும். அதற்கு அவருக்குக் கிடைத்த பதமும் ஜதியும் எத்தனை வெகு சிக்கலான தாளமும் எத்தனை வேறுபடும் வேக ஜதிகளும் கொண்டதாக இருந்தாலும் சரி. நடன மேடையின் ஒரு மூலையில் தேவியின் பல அவதாரங்களில் தோன்றும் பல ரூபதரிசனங்களில் ஒன்றின் சிலாரூப படிமமாக யாமினி சமைந்து சலனமற்றுத் தோன்றுவார். இப்படி ஒவ்வொரு அவதாரச் சிறப்பையும் அவரது வேகமும் சிக்கலுமான ஜதிகளுடனான சலனமும் அபிநயமும் சட்டென மேடையின் ஒரு மூலையில் முடிவுபெற்று அம்மனின் சிலையென உறைந்து நிற்கும்போது அது மூன்று வெவ்வேறு வெளிப்பாடுகள் அவற்றின் முடிவில் ஒன்றிணைந்து முழுமை பெற்ற தோற்றமாவது ஒரு அழகு. ஒரு வியாக்கியானத்தின் வெளிப்பாடுமாகிறது. அந்த வியாக்கியானம் நடனம் மூலமான வெளிப்பாடுமாகிறது. அது ஒரு தாளம், சங்கீதம், ஆங்கீகம், ஜதி எல்லாம் ஒருமித்த சலனமும் ஒன்றிணைந்த சலனமுமாக முடிவை நோக்கிச் சென்று சலனம்   நின்று சமைதல் பாலே என்று சொல்லத் தக்க வடிவம் பெற்றதாகிறது. அது வேகமான ஜதிகள் கொண்டது மட்டுமல்ல, குறிப்புணர்த்தும் அபிநயங்கள் மூலம் தேவியின் மகிமையும் குணச்சிறப்பும் சொல்லும் கதையைச் சொல்வதுமாகிறது. இதைப் பற்றி, ஒருவிமர்சகர் தான் யாமினியின் நடனத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, தன் உணர்வு களையும் கருத்துக்களையும் பின்னர் மறைந்து தேயும் நினைவுகளிலிருந்து அரையும் குறையுமாக எழுதுவதைத் தவிர்க்க அப்போதே குறித்துக் கொண்டவற்றிலிருந்து எழுதியதை மேற்கோளாக காட்ட விரும்புகிறேன்.

“The entire sequence of movement could not have lasted more than a minute or two in real time. The waving arm described the earth flooded by the titanic force of the Ganga, sweeping human and mammal life in its wake destroying all it touched. Then the prayer for redemption. Shiva raising an arm to twist his matted locks into a citadel, the Ganga rushing impetuously into its confines, finding itself contained, regathering its strength and then flowing at a steadily decelerating pace, suggesting unforgettably by the wave of one arm across the dancer”s seated form a la Vishnu slumbering, the other upraised towards Shiva.” (Hindustan Times, 15.8.1983).

இன்னொரு கலை விமர்சகர்,, L’ Aurore பத்திரிகையில்

“Yamini combines the interpretative charm of our own grand Yvette Chauvire and the personality and power of Rudolf Nureyev. She is more than that. She is the Goddess of Dance. A Goddess who invites her audience to worship her.”

என்று எழுதியது வியப்பளிக்கவில்லை.

நம் புராணங்களில் நாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அமிழ்ந்து வந்துள்ள, நம் கலைகளின் தெய்வீகத்தன்மையை நம்பியே வாழ்ந்து வந்துள்ள நாம் இம்மாதிரியான பரவசத்தின் உச்சகட்டத்தில் சொல்மழையாக அதீதம் என்று சொல்லத் தக்க பாராட்டுக்களைச் சொரிந்தால் அதில் ஆச்சரியப்படத்தக்கது ஏதுமில்லை. ஆனால் ஒரு மேற்கத்திய கலை மனது, மத உணர்வுகளை மீறிய, மதச்சார்புகளையே அறவே துடைத்தெறிந்த கல்வியிலும், அறிவு சார்ந்த மனப் போக்கையும் உலக பார்வையையும் வளர்த்தெடுத்துள்ள நாகரீகத்திலும் பண்பாட்டிலும் தோய்ந்த ஒரு மேற்கத்திய விமர்சன மனது, தன் கல்விக்கும் பண்பாட்டுக்கும் பார்வைகளுக்கும் முற்றிலும் மாறான ஒரு சமுதாயத்திலிருந்து எழுந்துள்ள ஒரு கலை வெளிப்பாட்டைப் பற்றி மேற்கண்டவாறு எழுதுவது மிகவும் அசாதாரணமான நிகழ்வுதான்.

“No doubt European imagination is exhorbitantly taxed” (Ulrike Wohning).

இருப்பினும்,

“She is dance itself. A Goddess who invites her audience to worship her.” (L’ Aurore). (தொடரும்)

Series Navigationமூன்றாம் பரிமாணம்விடாது சிகப்பு
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *