This entry is part 4 of 23 in the series 14 ஜூன் 2015

பிச்சினிக்காடு இளங்கோ

முகம்
நூல்தான்

திறந்தே
இருக்கும்
ஆனால்
திறந்த நூல்
அல்ல

எப்போதும்
படிக்கலாம்
எளிதில்
படிக்கமுடியாது

புரிவதுமாதிரி
இருக்கும்
புரிந்தது
குறைவாக இருக்கும்

ஆழமானவற்றின்
அறிகுறிகள் தெரியும்
மறைத்தாலும் முடியாது
மறைபொருளை
அறிந்துகொள்ளமுடியும்

பக்கம் மாறுவதில்லை
பாடங்கள்
மாறிக்கொண்டே இருக்கும்

மையிட்டு
எழுதுவதில்லை
மனமிட்டு எழுதுவது

நாடக ஓவியங்களை
ஓவிய நாடகங்களை
ஒருசேரக் காணலாம்

அலங்கார நூல்களும்
அமைதியான நூல்களும்
ஆழமான நூல்களும்
வெறுமையும் வறுமையும்
வறுத்தெடுத்த
வாட்டி எடுத்த
நூல்களும் உண்டு

பளிங்குபோல் காட்டும்
சில
பதுங்கிக்கொண்டும்
இருக்கும்

முகநூல்கல்வி
அனைவருக்கும்
முக்கியம்

நயத்தக்க நாகரீகத்திற்குக்
கைகொடுக்கும்

முகம் நூல்தான்
அது
ஒருநூல் அல்ல

திறந்தே இருக்கும்
அது
திறந்த நூல் அல்ல

( 8.05.2015 அன்று மாலை தோன்றியது.இரவு 10 மணிக்கு
எழுதியது)

Series Navigationஇங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்