மனோரமா ஆச்சி

This entry is part 1 of 23 in the series 11 அக்டோபர் 2015

manorama_1110_tஆச்சி என்று – அதாவது அம்மா எனும் பொருளில் – அனைவராலும் அழைக்கப்பட்ட மனோரமா அவர்கள் நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி திரைப்பட ரசிகர்களையும் அவரை அறிந்தவர்களையும் உலுக்கியிருக்கும். பள்ளத்தூர் இவரது சொந்த ஊர் என்பதாய் மிகச் சிறு வயதிலேயே பள்ளத்தூரில் வசித்து வந்த என் ஒன்றுவிட்ட அக்காள் வாயிலாகக் கேள்விப்பட்டதுண்டு. பள்ளத்தூர் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது பாட்டுப் போட்டிகளில் முதல் பரிசு வாங்கியவர் அவர் என்பதும் என் அக்காள் மூலம் அப்போதே தெரியும்.

நேற்றைய தினமணியில்தான் அவர் ஒரு பேட்டி அளித்திருந்தார். தமக்கு உடல் நிலை சரியாகிவிட்டதாகவும் விரைவில் நடிப்பைத் தொடர இருப்பதாகவும் கூறியிருந்தார். அடுத்த பிறவியிலும் தாம் மனோரமாவாகவே பிறக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அதற்குள் அடுத்த பிறவிக்கான ஆயத்தத்தில் இறைவனடி சேர்ந்து விட்டார்.

தமிழகத்தின் ஐந்து முதலமைச்சர்களுடன் அவர் நடித்திருப்பதும், அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் அவர்கள் எழுதிய வசனங்களைப் பேசி நாடகங்களில் நடித்தவர் என்பதும் பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆந்திர முதலமைச்சர் என். டி. ராமராவ் அவர்களுடனும் அவர் தெலுங்குப் படத்தில் நடித்துள்ளாராம். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர் என்கிற தகுதியின் அடிப்படையில் கின்னஸ் ஆவணம் பெற்றவர் மனோரமா என்பதும் பலருக்கும் தெரியும். தில்லானா மோகனாம்பாளில் “ஜில்லு” வாக அவர் நடித்ததை மறக்க முடியுமா என்ன?

இந்த விவரங்களை யெல்லாம் அறிந்த பலருக்குத் தெரியாமல் இருக்கக் கூடிய ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரையை எழுதலானேன். அவர் மகன் திரு பூபதி என்னோடு பகிர்ந்துகொண்ட செய்தி அது.

நான் எழுதியிருந்த ஒரு நாடகம் தொடர்பாக என் தோழி ஹேமா என்னை வற்புறுத்தி மனோரமா அவர்களிடம் ஒப்புதல் வாங்கிய பின் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் போன நேரத்தில் எங்களை வரவேற்று உபசரித்த பூபதி தன் அம்மா ஒப்பனை செய்துகொண்டிருப்பதாகவும் விரைவில் வந்து சந்திப்பார் என்றும் தெரிவித்த பின் தம் வாழ்க்கை, தன் அம்மாவின் வாழ்க்கை ஆகியவை பற்றிய சில விஷயங்களைப் பற்றி மனம் விட்டுப் பேசினார். அவற்றைப் பற்றியெல்லாம் இங்கே கூறுவது சரியாக இராது. மனோரமா அவர்களின் மனிதாபிமானம், மனச்சாட்சிக்குப் பயந்த நியாய உணர்வு ஆகிய இரண்டும் சம்பந்தப்பட்ட வற்றை மட்டுமே இங்கே நினைவு கூர்தல் முறையாக இருக்கும்.

நாங்கள் அங்கு இருந்த நேரத்தில் பெட்டி படுக்கைகளைச் சுமந்த வண்ணம் ஏழெட்டுப் பேர் எங்களைக் கடந்து வீட்டுக்குள் போனார்கள். பூபதி அவர்களைச் சுட்டிக்காட்டி, “இவங்க எல்லாம் பள்ளத்தூரு, செட்டி நாடு பக்கத்துலேர்ந்து வர்றவங்க. அடிக்கடி வந்து இங்கே ஒரு வாரம் பத்து நாள்னு டேரா போடுவாங்க. எல்லாரும் ஏழைங்க. அம்மா அவங்களுக்கு நல்ல சாப்பாடு போட்டு வேண்டிய உதவி பண்ணித் திருப்பி அனுப்புவாங்க. இது தினமும் நடக்கிற விஷயம். அடி மட்டத்துலேர்ந்து மேல் தட்டுக்கு வந்ததை அம்மா மறக்கல்லே. அதுதான் அவங்க இரக்கத்துக்குக் காரணம்,” என்று தெரிவித்தார்.

அவர் தெரிவித்த இன்னொரு முக்கியமான செய்தி அவரோடு பல திரைப்படங்களிலும் ஜோடியாக நடித்துக்கொண்டிருந்த பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகும். அந்த நகைச்சுவை நடிகரின் நெருங்கிய உறவினர் ஒருவர் மீது காவல்துறை கொலை வழக்கு ஒன்றைச் சுமத்தியிருந்தது. கொலைசெய்யப்பட்டவரோடு அந்த உறவினருக்கு இருந்த முன் விரோதம் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டதாம். அந்த உறவினரைக் காப்பாற்ற விரும்பிய நகைச்சுவை நடிகர், கொலை நடந்த நேரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட அந்த நபர் தம் வீட்டில் இருந்ததாய் மனோரமா சொல்லவேண்டும் என்று வேண்டினாராம். ‘பொய் சாட்சி சொல்லுவது பெரிய பாவம்’ என்ற தன் தாயின் கருத்தின்படி மனோரமா அந்த நடிகரின் கோரிக்கையை நிராகரித்து விட்டாராம். அந்த ஜோடி நடிகரை விரோதித்துக் கொண்டால் தன் திரையுலக எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது தெரிந்தும் அவர் தமது மனச்சாட்சியின் படி எடுத்த முடிவாகும் அது என்று பூபதி பெருமையுடன் தெரிவித்தார். மனோரமா தன் வேண்டுகோளை ஏற்காததில் அந்த நடிகருக்கு எரிச்சலாம். எனவே, மனோரமா தமக்கு ஜோடியாக நடிக்கக் கூடாது என்று நிபந்தனை போடத் தொடங்கினாராம். அவர் மிகப் பிரபலமானவர் என்பதால் படத்தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவரது நிபந்தனைக்குக் கட்டுப்படவே மனோரமா பட வாய்ப்புகள் பலவற்றை இழக்க நேர்ந்ததாம். பின்னர், சிலரது தலையீட்டால் அந்நடிகரின் மனக் கசப்பு அகன்றது என்றும் அவர் தெரிவித்தார்.

மனோரமா காலமாகிவிட்டார் என்கிற செய்தியைப் படித்ததும், “பஞ்சமாபாதகங்களில்” ஒன்றான பொய்சாட்சி சொல்லுதலை நிராகரித்த அவரது அந்த நியாய உணர்வுதான் நினைவுக்கு வந்தது.

வாழ்க மனோரமா!

………

Series Navigationமிதிலாவிலாஸ்-17
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

2 Comments

  1. Avatar
    Jyothirllata Girija says:

    கட்டுரையில் ஒரு தவறு நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். ‘தமிழகத்தின் நான்கு முதலமைச்சர்களுடன்’ என்று திருத்தி வாசிக்கவும். ஐந்தாம் முதலமைச்சர் ஆந்திராவின் திரு. என்.டி. ராமராவ் அவர்கள்.
    ஜோதிர்லதா கிரிஜா

  2. Avatar
    BS says:

    சிவகங்கைச் சீமையெனதால் ஆச்சி என்றழைக்கப்பட்டார். வேறிடத்தில் இருந்து வந்திருந்தால் ஆச்சி என்ற பேர் வழங்கப்பட்டிருக்காது.

    நீங்கள் சொல்லும் வழக்கு பிரபலமானது நடிகர் யாரென்று தமிழகத்துக்கே தெரியும்.

    ஒருவேளை பொய்சாட்சி சொல்லியிருந்தால், படவாய்ப்புக்கள் வந்திருக்கலாம். ஆனால் நிம்மதி போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *