நேர்ப்பக்கம் – அழகியசிங்கரின் கட்டுரைத்தொகுதி

This entry is part 11 of 16 in the series 21 பெப்ருவரி 2016

writer azhagiyasinger

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ‘நவீன விருட்சம்’ என்ற சிற்ரிதழை நடத்திக்கொண்டுவருபவர் எழுத்தாளர் அழகியசிங்கர். ( இயற்பெயர் சந்திரமௌளி) முதலில் விருட்சம் என்ற பெயரில் மாத இதழாக வெளிவந்தது பின்னர் நவீன விருட்சம் என்ற பெயரில் காலாண்டிதழாக வரத் தொடங்கியது. இதன் இணையதளமும் இப்போது தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் குறும்பேட்டிகளை காணொளி வடிவில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகிறார். மேலும், ’விருட்சம் வெளியீடு’ சார்பில் கணிசமான எண்ணிக்கையில் சக எழுத்தாளர்களின் படைப்பாக் கங்களைத் தொடர்ச்சியாக நூல் வடிவில் பிரசுரம் செய்கிறார் அழகியசிங்கர். மாதா மாதம் இலக்கியக் கூட்டங்களும் தொடர்ச்சியாக நடத்திவருகிறார். பேசும்போது விளையாட்டுத்தனமாகக் கருத்துரைப் பார் எனினும் உண்மையிலேயே நுட்பமான மனிதர்.

writer asokamitran speaking about the book

 

சமீபத்தில் அவருடைய கட்டுரைத்தொகுதி நேர்ப்பக்கம் என்ற தலைப்பில் கவிஞர் வைதீஸ்வரனின் அழகிய ஓவியத்தை முகப்பட்டையாகக் கொண்டு வெளியாகியது. தான் அறிந்த இலக்கியவாதிகள் 15 பேருக்கும் மேற்பட்டவர்களைப் பற்றிய (ஆத்மாநாம், ஸ்டெல்லா ப்ரூஸ், என) எண்ணப்பதிவுகள் அடங்கிய அழகியசிங்கரின் கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் அறிமுகக் கூட்டம் இலக்கிய வாசல் அமைப்பின் சார்பில் சமீபத்தில் சென்னையில் நடந்தேறியது. எழுத்தாளர் அசோகமித்திரன், கவிஞர் கிருஷாங்கினி, இன்னும் சிலரோடு நானும் நூல் குறித்தும், அழகியசிங்கர் குறித்தும் எங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம். கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் இலக்கிய ஆளுமைகள் குறித்த இன்னொரு பக்கத்தைத் தனக்கேயுரிய நகைச்சுவையுணர்வோடு முன்வைத்தார் எழுத்தாளர் அசோகமித்திரன். இந்த நூலில் இடம்பெறாத இன்னும் பல இலக்கியவாதிகள் குறித்த தனது எண்ணப்பதிவுகளை உள்ளடக்கியதாய் இன்னொரு நூல் வெளியாகும் என தனது ஏற்புரையில் தெரிவித்தார் அழகியசிங்கர்.

 

நூல் வாங்க விரும்புவோர் இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளவும். navina.virutcham@gmail.com

 

 

 

 

 

நவீன விருட்சம்

7.1.16

மறக்க முடியாத 2015………..

 

 

அழகியசிங்கர்

 

 

(சென்னை வெள்ளம் அழகியசிங்கர் பதிவுசெய்துள்ள காணொளிக்காட்சி பார்க்க:  https://youtu.be/lA3V8Zq2BGI )

 

 

கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் கொண்ட வாழ்க்கை சூழ்நிலையில் நான் மறக்க முடியாத ஆண்டு 2015.  அது தொடர்பான பல நிகழ்ச்சிகளை இப்போது நினைக்கும்போதும் கதி கலங்குகிறது.

 

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் இருக்கும் நான், மற்றவர்களுடன் பேசக் கூட முடியாமல் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்டு போய்விடுவேன் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை.

 

தீபாவளி அன்று பெய்த மழையில் எங்கள் தெருவில் எந்த மழை நீரும் வரவில்லை.  மழை பெய்து கொண்டே இருந்தது.  ஆனால் சினிமா போவதற்காக என்னுடைய நானோ காரை எடுத்துக்கொண்டு வந்தேன்.  பக்கத்தில் உள்ள உதயம் தியேட்டருக்கு நானே எடுத்துக் கொண்டு போவது மனைவிக்குப் பிடிக்கவில்லை.  மழையில நனையாமல் போகலாம்  என்று எடுத்துக்கொண்டு வந்தேன்.  மேலும் மழை பெய்தாலும் என் கார் ஓட்டும் திறமையை  காட்ட நினைத்தேன்.

 

நல்லபடியாகத்தான் ஓட்டிக்கொண்டு போனேன்.  ஆனால் தியேட்டரில் கார் வைக்கும்போது பிரச்சினையாகி விட்டது.  இன்னொரு காருக்கு இணையாக என் காரை நிறுத்தச் சொல்லி காரைப் பார்த்துக் கொள்பவன் சொல்ல, நானும் முயற்சி செய்தேன்.  ஆனால் காரை நெருக்கமாக இன்னொரு காருடன் நிற்க வைக்க முடியவில்லை. அப்போது உதயம் தியேட்டர் ஸ்டாலில் இருப்பவன், üகொடுங்கள் சார் நான் காரை நிறுத்துகிறேன்,ý என்று காரை வாங்கிக்கொண்டு, ஓட்டுகிறேன் பேர்வழி என்று என் காருக்கு முன்னால் நிற்கும் காரின் பின் பகுதியில் பயங்கரமாக இடித்து விட்டான்.  அவன் பிரேக் பிடிப்பதற்குப் பதில் ஆக்ஸிலேட்டரை அழுத்தி விட்டான். அந்தக் கார் முன்னால் யாராவது நின்றிருந்தால் பெரிய விபத்து நடந்திருக்கும். என் கார் இதுதான் சாக்கென்று சப்பையாகி விட்டது.  இதுமாதிரியான அதிர்ச்சி சம்பவம் நடந்தால், நான் ஸ்தம்பித்துப் போய்விடுவேன்.  அன்றும் அப்படித்தான் நடந்தது.

 

பின் கார் இடித்ததால் ஏற்பட்ட சேதத்திற்கு ரூ 5000 எனக்கும், அந்தக் கார் வைத்திருப்பவருக்கும் கிடைத்தது.  எனக்குத்தான் சேதம் அதிகம்.

 

வண்டியை எடுத்துக்கொண்டு டாடா ரீச்சிற்குப் போனேன்.  வண்டியை சோதித்தவர் ரூ25000 வரை ஆகுமென்றார்.  வேற வழியில்லாமல் வண்டியைக் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். கார் கிடைக்க ஒரு வாரம் மேல் ஆகும் என்றும் சொல்லி அனுப்பி விட்டார்.

 

அடுத்தவாரம் டிசம்பர் 1 ஆம்தேதி என் பிறந்தநாள்.  நேர்பக்கம் என்ற பெயரில் அவரசமாக தயாரித்தப் புத்தகத்தை கட்டுக் கட்டாக கீழே உள்ள அறையில் கொண்டு வந்து  பெஞ்சில் வைத்திருந்தேன்.  மழையால் யாரையும் பார்க்க முடியவில்லை.

 

அன்று இரவு ஒரு கனவு.  பயங்கர கனவு.  ஒரு கருப்பு நாய் என் தொடையைக் கவ்வுவது போல.  அந்த நாய் என்னைக் கடிக்கவிலலை.  கவ்வும்போது நான் கத்துகிறேன்.  யாரும் உதவிக்கு வரவில்லை. ஏன் இதுமாதிரி ஒரு கனவு வந்து தொல்லை செய்தது என்று யோசித்தேன்.  பொதுவாக இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தால் நான் யாருக்கும் சொல்லமாட்டேன்.  முதலில் கேட்பவர் பயந்து விடலாம்.  அல்லது இன்னொரு முறை நானே சொன்னால் நானே திரும்பவும் பயப்படலாம்.  கனவுக்கு பெரிய அர்த்தம் இல்லை.  அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றுதான் நினைத்தேன்.

 

ஆனால் நம் நிஜ வாழ்க்கைக்கும் கனவுக்கும் மெல்லிய கோடுபோல் ஏதோ சம்பந்தம் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் விளக்க முடியாத தொடர்பு அது.

 

அடுத்த நாள் மழை வெள்ளம் எங்கள் தெரு வாசலில் எட்டிப் பார்த்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  நான் கீழே இறங்கி என் டிஜிட்டல் காமெராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தேன்.  அப்போது வெள்ள நீர் எதிர் வீட்டில் கீழே குடியிருப்போர் வீட்டிற்குள் சென்று விட்டது.  அப்போதே அவர்கள் வீட்டு டீவி, பிரிட்ஜ், கட்டில் எல்லாம் நாசமாகி விட்டது.  எங்கள் வீடு மேடாக இருப்பதால் தெருவில் உள்ள அத்தனைப் பேர்களும் எங்கள் வீட்டில் டூ வீலர்களையும், கார்களையும் வைத்துக் கொண்டார்கள்.  என் காரோ டாடா ரீச்சிலிருந்து எடுத்துக் கொண்டு வரவில்லை.

 

அப்புறம் அடித்த வெள்ள நீர் என் வீட்டையும் சூழ்ந்துகொண்டு கீழ் அறையில் உள்ள புத்தகங்கள், பின் கார்கள், டூ வீலர்கள் என்று எல்லாம் மூழ்கி எங்கள் மாடிப்படி வழியாக முதல் மாடிக்கு அழையாத விருந்தாளியாக வர முயற்சி செய்தது.  புத்தகம் கீழே இருந்தாலும், நாங்கள் முதல் மாடியில்தான் குடியிருந்தோம். தண்ணீர் தெரு முழுவதும் ஆறடிக்கு மேல் போய்க் கொண்டிருந்தது.  கோவிநதன் ரோடில் கங்கையில் செல்லும் வெள்ளம் போல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.  பீதியில் தெருவில் உள்ள எல்லோரும் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தோம்.  எதிர் வீட்டில் குடியிருப்பில் உள்ள சில வீராதி வீரர்கள் ஏதோ ஆற்றில் நீச்சலடிப்பதுபோல் நீச்சல் அடித்துக்கொண்டு தெருவில் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  சென்னையில் மற்ற பகுதியில் உள்ள எல்லோரிடமும் போன் பேசமுடியாமல் துண்டிக்கப்பட்டு மனதில் பயத்துடன் இருந்தோம்.  என் பையன் அமெரிக்காவிலிருந்து பேசினான். டிரான்சிஸ்டர் என்ற கருவியின் உபயோகத்தை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். பிலிப்ஸ் டிரான்சிஸ்டரை பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி வைத்திருந்தேன்.  ஆனால் பயன் படுத்தியதே இல்லை.   முன்பு இதை ஏன் வாங்கினேன் என்று கூட யோசிப்பேன்.

 

உண்மையில் என் வண்டி டாடா ரீச்சில் இருந்ததால் வெள்ளம் பாதிப்பு இல்லாமல் காப்பாற்றப் பட்டு விட்டது. ரிப்பேர் செய்த நிலையில் வெள்ளம் பாதிப்பு இல்லாமல் அங்கு பத்திரமாக இருந்தது.   மறறவர்கள் வண்டிகள் எல்லாம் நாசமாகி விட்டது.  கார் வைத்திருந்தவர்கள் எல்லோருடைய காரும் நாசம்.  டூ வீலர்கள் நாசம். நான் என் புதிய புத்தகமான நேர் பக்கத்தை எடுத்துக்கொண்டு வரும்போது, ஆட்டோ டிரைவர் ஒரு கட்டை எடுத்து உள்ளே வைக்கும்போது, அந்தக் கட்டு கை தவறி உடைந்து புத்தகங்கள் எல்லாம் சிதறி விட்டன.  என்னடா இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறதே என்று அப்போது நினைத்தேன்.  அதன் பலாபலன்தான் வெள்ளத்தால் என் அத்தனை புத்தகக் கட்டுகளும் கீழே விழுந்து விசிறி அடிக்கப்பட்டு விட்டன.

 

கொஞ்சம் யோசிக்கும்போது அபத்தமான உதயம் தியேட்டர் விபத்து, கருப்பு நாயின் கவ்வின கனவுக் காட்சி, முன் கூட்டியே புததகக் கட்டு விழுந்து நொறுங்கியது என்றெல்லாம் யோசித்துப் பார்க்கிறேன்.  என் கார் வெள்ளத்தில் மாட்டியிருந்தால் நாசமாகிப் போயிருக்கும் காரே காணாமல் போயிருக்கும்.  இந்த அபத்தமான சிறு விபத்துதான் காரை காப்பாற்றி விட்டது.

கறுப்பு நாயின் கனவுக் காட்சி பெரிய ஆபத்தை சுட்டிக் காட்டி என்னை விட்டு விலகிப் போய்விட்டது.  புத்தகம் விற்பதில்லை என்று நான் அடிக்கடி முணுமுணுப்பதால் புத்தகம் கடுப்பாகி வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு விட்டதாக தோன்றுகிறது.  இதில் எந்த சம்பவத்திற்கு எந்தத் தொடர்பு ஏற்படுத்தி விட முடியாது.  ஆனால் நான் சும்மா தொடர்பு பண்ணி பார்க்கிறேன். உண்மையில் நான் சொல்ல வருவது இதுதான். கனவுக்கும் நிஜமான சம்பவத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதா?  முன்பே இதுமாதிரி நடக்க வாயப்புண்டு என்று சொல்ல முடியுமா?

 

வெள்ளத்தைப் பற்றி இதுவரை 3 கட்டுரைகளும் ஆறு கவிதைகளும் எழுதி விட்டேன்.    இதைப் பாராட்டி எனக்கு ஒரு இலக்கிய அமைப்பு பரிசு அளிக்க உள்ளது.  இது கனவுமல்ல, நிஜமுமில்லை சும்மா கற்பனை.  எந்த இலக்கிய அமைப்பு அப்படி அல்ல.

 

மொத்தத்தில் என்னால் மறக்க முடியாது ஆண்டு 2015தான்.

 

 

 

 

அழகியசிங்கரின் கவிதைகள் சில

1. அவசர கோலம்...

கிடுகிடுவென்று
கீழே இறங்கி அவர்
வேகமாக ஓடி விட்டார்
இன்று காரோ
டூ வீலரோ
நானும் அவரும் பக்கத்தில்
பக்கத்தில் குடியிருந்தாலும்
சந்திப்பது இல்லை.
இதுதான் வாழ்க்கையின் அவசரம்
என்று நினைக்கிறேன்
தெருவில் உள்ள எல்லோரும்
அவசரம் அவசரமாகக்
கிளம்புகிறார்கள்
யாரையாவது பார்த்து
புன்னகைப் புரியலாமென்றால்
ஓட்டமாக ஓடி விடுகிறார்கள்..
பேச நேரம்கூட இல்லை
சரி திரும்பி வரும்போது
சந்திக்கலாமென்றால்
மௌனமாக வீட்டிற்குள்
நுழைந்து கதவைச் சாத்திக்
கொண்டு போய் விடுகிறார்கள்.
வழக்கமாக வரும் வாரவிடுமுறையில்
யாரும் படுக்கையை விட்டு
எழுந்து கொள்வதில்லை….
வாரம் முழுவதும் சுற்றிய
அலுப்பை அன்றுதான்
தீர்த்துக் கொள்கிறார்களா…..
ஓஹோ……

28.2.13

பீட்டர்ஸ் சாலையும் பெசன்ட் சாலையும்
                                                       

    தூரத்தில் வண்டி வருகிறது
வேகமாகவும்
மெதுவாகவும
சுற்றி சுற்றி பல வண்டிகள்
வந்தவண்ணம் உள்ளன.
ஹாரன் அடித்தபடி
வண்டிகள் கிடுகிடுக்க   வைக்கின்றன

பீட்டர்ஸ் சாலை
காலை நேரத்தில் அதிர்கிறது
ஸ்கூட்டரில் பள்ளிச் சிறார்கள்
அலுவலகம் போக
அவசரம் அவசரமாக
வண்டி பறக்கிறது.
மெதுவாக பீட்டர்ஸ் சாலை
பெசன்ட் சாலையாக மாறுகிறது.
பல்லவன் பஸ்கள் நிற்க
கூட்டம் எல்லா இடத்திலும்
நானும் நிற்கிறேன் மேலே நகராமல்
அழுக்கு வண்டிகளும் அழுக்கில்லாத
வண்டிகளும் பொறுமை இல்லாமல்
கதற கதற ஹாரன் அடிக்கின்றன
காலையில் அலுவலகத்தில்
கூடும் கூட்டத்தை
மனம் எண்ணி எண்ணி  படபடக்கிறது…..

  1. சீரியல் மகத்துவம்

    அலுக்காமல்
    சலிக்காமல்
    தினமும்
    சீரியல் பார்க்கும்
    குடும்பம்
    எங்கள் குடும்பம்

    நானும்

    அதில் ஒருவனாக
    மாறிவிடுவேனோ
    என்று பயமாக இருக்கிறது

    சீரியலே வாழ்க.

 

 

Series Navigationஒற்றையடிப் பாதைஅனைத்துலக பெண்கள் தின விழா
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *