முனைவர் சி.சேதுராமன்,
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை.
E-mail: Malar.sethu@gmail.com
நாம் செய்யும் செயல்களுக்கேற்ப பிறவிகள் என்பது தொடரும். இது அனைத்து மக்களாலும் நம்பப்படுகின்ற ஒன்றாகும். மேலும் அவரவர் வினைகளுக்கு ஏற்ப அவர்களின் இறப்பிற்குப் பின்னர் நற்கதி அல்லது நரக கதி என்பது கிடைக்கும். நல்லது செய்தால் நல்ல கதியும் தீயது செய்தால் நரக கதியும் கிடைக்கும். இங்கு கதி என்பது உயிர்கள் அடைகின்ற நிலையைக் குறிக்கும். சிந்தாமணியில் நரககதி, விலங்கு கதி, மக்கள் கதி, தேவ கதி என்ற நாற்கதிகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இக்கதிகள் அனைத்தும் சமண சமயத்தின் உயிர்நாடியாக விளங்கும் நம்பிக்கைகளாகும்.
நரககதி
கொலைத்தொழிலை நிலையாகச் செய்பவர்களுக்கும் உள்ளத்தால் கொடியவர்களுக்கும் மறுபிறப்பு என்பது இல்லை. நல்வினை, தீவினை என்பது இல்லை, தானமும் தவமும் பயன் தராது என்று கூறுபவர் நரக கதியை அடைவர்(2776). தீச் செயல்களைச் செய்பவர்கள் தீவைனையை விதைத்து அதன் விளைவை நுகர்வதற்காக நரகத்தில் கொடுந்துன்பம் அனுபவிப்பர். ஐம்பொறிகளை அடக்காமல் தீவினை உடையவராய் இருந்தவர்களை நரகர், பொங்கி எழுந்து ஈட்டி, வேல், குந்தம், கூர்வாள், சுரிகை ஆகியவற்றை நட்டு வைத்துள்ள நிலத்தில் ஊனை எல்லாத் திசைகளிலும் சிதறிக்கிடக்குமாறு செய்வர்(2763,2764). முற்பிறவியில் விரும்பிய ஊனைக் கொன்று தின்றவர் நரகத்தில் தன் ஊன் கொடிய நெருப்பில் பட்டு உடைந்து போகும்வண்ணம் கொடுந் துன்பத்தை அனுபவிப்பர்((2765).
உயிரைக் கொன்ற பாவத்திற்குத் தண்டனையாக வயிரமாகிய முள்ளை மரத்தில் நிறைத்து வைத்து அம்மரத்தில் அவர்களை ஏறுமாறு செய்வர்(2766). கழுவில் ஏற்றிக் கொள்வர்(2766). கொன்ற விலங்கின் மயிருக்கு ஒன்றாக ஊனை அரிந்து தீயில் இடுவர்(2766). உடும்பினத்தை வேட்டையாடியவர்களைப் பெரிய வாயையை உடைய செந்நாயைக் கொண்டு குதறச் செய்வர்(2767). வாளை மீன்களைத் தின்றவர்களின் வாயினைத் திறந்து உருக வெந்த செப்புத் துண்டைத் திணிப்பர்(2768). இக்கொடிய துன்பத்தைப் பொறுக்காமல் ஓடுபவர்களின் பாதையில் கூரிய ஊசிகளை நட்டு வைப்பர். அவ்வூசிகளில்கால் பதித்து ஓட முயலும்போது ஊசிகள் காலில் குத்தி அவர்களை ஓடவிடாமல் பெரும் துன்பத்தைச் செய்யும்(2768).
பிறர் மனைவியை அடைதல் எளிதென்று வினைத்துப் பிறனில் விழைந்தவர்களை அப்பெண் வடிவில் செய்த உருக வெந்த செப்புப் பாவையைத் தழுவுமாறு செய்வர்(2769). அதை அவர்களும் தழுவித் துயராற்றாமல் அலறுவர். வில்லால் விலங்குகளைக் கொன்றும் வைலகளைக் கொண்டு மீன்களைப் பிடித்தவர்களையும் கொடிய நெருப்பில் அழுத்தித் நாள்தோறும் சுட்டுப் பொசுக்குவர்(2770).
இவ்வுலகில் தீவினைகளைச் செய்தவர்களின் உடல் தசைகளை முழுவதும் அறுத்துப் பெரிய இரும்புச் சட்டியில் பொரிப்பர்(2771). சிலரின் கண்களைக் சுரிகை என்ற ஆயுதத்தைக் கொண்டு குத்துவர்(2771). சிலரைக் கூரிய முள்ளைக் கொண்டு நெஞ்சில் குத்திப் பிளப்பர்(2771). இவ்வாறு தீவினையின் பயனை நுகரும்போது நா நீர் வறட்சியுற்றுப் பொய்கை நீரை அருந்துவதற்காகக் கையால் நீரை அள்ளுவர். அப்போது அது குடிக்கும் நீராக இல்லாமல் புண்ணிலிருந்து வடியும் சீழல் உண்டாகிய குழம்பாகி வருத்தும்(2772).
தீவினை செய்த நரகர்களை வெந்து உருகிய செப்புக் குழம்பில் அழுத்தியும் தொட்டிலில் ஊசல் ஏற்றிக் கீழே நெருப்பை மூட்டியும் செக்கில் அரைக்கப்பட்டும், சுண்ணாம்பாக நுணுக்கப்பட்டும் துன்புறுத்துவர்(2774). நரகத்தில் பலரும் தாம் செய்த தீவினையால் வயலில் உழுத் எருதுகளைப் போல வலிமையற்றவர்களாகக் காட்சி தருவர்(2775) என்று நரககதியை அடைந்தவர் நிலைமைகளைச் சிந்தாமணி எடுத்தியம்புகிறது. அதனால் பிறருக்குத் துன்பந் தராமல் தீவினைகளைச் செய்யாமல் இருத்தல் வேண்டும் என்று நரகத் துன்பத்தை எடுத்துரைத்து வாழ்வியல் தத்துவத்தை திருத்தக்கதேவர் இதன் வழி தெளிவுறுத்துகிறார்.
விலங்குகதி
நல்வாழ்க்கை வாழாது பிறருக்குத் துன்பந்தரும் செயல்களில் ஈடுபடுவோர் விலங்குகளாகப் பிறக்கும் நிலையை அடைவர். இவ்வாறு விலங்குகளாகப் பிறந்து துன்புறும் நிலையையே விலங்கு கதி என்று சமணசமயத் தத்துவங்கள் குறிப்பிடுகின்றன. தவ வேள்வி செய்வோரைப் பழித்தோரும் உணவைப் பகுத்துண்ணாமல் தனித்து உண்போரும் தம் உடம்பை விலைகூறி விற்கும் பரத்தையரும் விலர்குகளாகப் பிறப்பர்(2789) என்று விலங்கு வாழ்க்கைக்கு உரியவர்களையும் விலங்குகளாகப் பிறந்து அவர்கள் பெறும் துன்பத்தையும் விலங்குகதி துன்பம் என்று சிந்தாமணி குறிப்பிடுகிறது.
விலங்குகளாகப் பிறந்த உயிரினங்கள் காட்டில் வாழும் புலியின் குரலைக் கேட்டுக் கொடுந்துன்பத்தை அடையும்(2778). கொலைத்தொழிலில் வல்ல நாய்கள் மயில்களைக் கொல்லப் பாயும்போது மயில்கள் தன் தலையைச் சிறகுகளுக்கு உள்ளே மறைத்துக் கொள்ளும்(2779). கண்ணுக்கினிய ஆட்டுக்குட்டியை மக்கள் நன்கு குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, மலர் சூட்டி, அதன் கழுத்தை வெட்டுவர். வெட்டிய கழுத்திலிருந்து ஒழுகும் குருதியைப் பிடித்து வானவர்களுக்குப் பலிப்பொருளாக அளிப்பர்(2780).
மென்மையான சூலினையுடைய உடும்பையும் வரால் மீன்களையும் வாளை மீன்களையும் பொறிக்கறியாகச் சமைப்பதற்கு அவற்றைத் துண்டு துண்டாக வெட்டுவர்(2781). எருதுகள் உழைப்பை முழுமையாக வாங்கிக் கொள்வதற்காகத் தாற்றுக் கோலில் குத்தி உழைப்பை வாங்கிக் கொள்வர். பின்னர் அது உழைப்பிற்குத் தகுதியற்ற நிலையை அடையும்போது கைவிடப்பட்டு, உடலில் புண்கள் மலிந்து காக்கைகள் கொத்திப் புழுக்கள் வைத்து காப்பவர் யாரும் இல்லாமல் இறந்து போகும்.(2783). கூரிய தோட்டியால் குத்தி யானைகளின் நெற்றி பிளக்கப்படும்(2785). காட்டில் சிங்கம் வளைத்துக் கொள்வதால் பல யானைகள் உயிரை விடும்(2786). நீரிலிருக்கும் சங்கை எடுப்பதற்கும், சிப்பியில் இருக்கும் முத்தைப் பெறுவதற்கும், அவற்றைக் கொல்வர்(2786). விருந்தினர்களுக்கு விருந்திடுவதற்காகப் பல விலங்குகளைக் கொன்று சமைப்பர்(2786). பெண்கள் கிளிகளையும், குருவிகளையும் அவற்றின் சுற்றத்திடமிருந்து பிரித்துக் கூண்டுக்குள் அடைத்துத் துன்புறுத்துவர்(2788) எனப் பல்வேறு வகைகளில் மனிதர்களாலும் விலங்குகளாலும் துன்புறும் இழிந்த பிறவிகளாக விலங்கு கதி அமைந்திலங்குகின்றது என்று சிந்தாமணி தெளிவுறுத்துகின்றது.
மக்கட் கதி
எல்லாப் பிறப்பும் பிறந்த பின்னர் இறுதியாகப் பிறப்பது மனிதப் பிறப்பாகும் என்பர். இதுவே உயர்ந்த பிறப்பு என்று சமயங்கள் எடுத்தியம்புகின்றன. நல்வினை செய்ததாலேயே உயிர்கள் மக்கட் பிறப்பை எய்துகின்றன. இம்மக்கட்பிறப்பில் தீவினைகள் செய்கின்றபோது மீண்டும் பிறப்பு என்பது ஏற்படுகின்றது.
மக்கட் கதியில் பிறந்தவர்கள் என்னென்ன துன்பங்களை அடைவர் என்பதை சீவகசிந்தாமணி தெளிவுறுத்துகின்றது. மக்கள் தம் உருவத்தைக் கண்ணாடியில் கண்டு தம் அழகில் மயங்கி மார்பில் வாசனைக் கலவைகளைப் பூசிக்ாெக்ணட, இளமை அழகு மிகுந்த பெண்களின் தோள்களைத் தழுவி மகிழும் மனித வாழ்க்கைத் துன்பம் தரக்கூடியது(2791).
இம்மனிதப் பிறவி அன்னையின் வயிற்றுக்குள் இருக்கும்போது அவ்விடத்தில் உள்ள புழுக்கள் சூழ இருப்பர். அவளின் குடலை மாலையாகச் சூடி இருப்பர். பிறக்கும் காலத்தில் அருவருக்கத்தக்க நீரிலும் தூய்மை செய்ய முடியாத இரத்தக் குழம்பிலும் அருவருப்பான வழயிலும் பிறப்பர்(2792). இத்தகைய இழிந்த நிலையில் பிறந்தவர்கள் பெண்களின் மீது கொண்ட காமத்தால் நெஞ்சில் பெரும் துன்பத்தை ஏற்கின்றனர்(2792). அவர்களுக்குப் பொருள் கொடுக்கக் களவு செய்து கழுவேறுகின்றனர்(2792).
பொருள் ஈட்டுவதற்காகக் கப்பல்களில் ஏறி வாணிகம் செய்வதற்குச் செல்லும்போது புயல்காற்றால் கப்பல் கவிழ்ந்து நீரில் மூழ்கிக் கொடுந்துன்பம் அடைகின்றனர்(2793). பகைவர் நாட்டில் உள்ள செல்வர்களை அரசனுக்குப் பொருள்தருக என்று கூறி அவர்களுடைய முன் கையைக் கட்டுவர். சாட்டையால் அடிப்பர். பல்விழ அவர்களை அறைவர். கைகால்களை வெட்டி வீழ்த்துவர். கண்களைத் தோண்டுவர். தீப்புகையில் வீழந்து துன்பமடையச் செய்வர்(2794,2795).
மன்னனுக்கு நிலத்தை விரிவாக்கித் தரவேண்டும் என்பதற்காக வீரர்கள் மிகப்பெருந் துன்பமடைவர். பெற்ற பெரும் நிலப்பரப்பைப் பகைவரிடமிருந்து காப்பதற்கு மிகப் பெருந்துன்பமடைவர். விரும்பிய மகளிரைத் தழுவாமல் இருப்பது கடல்போல் துன்பம் தரும்(2796). இனிய உடலைப் பிணி சேர்ந்து அழகு இழக்குமாறு செய்யும். கூனலாகவும் குறளராகவும் சிந்தராகவும் சீழ் நிளைந்து நோய் வருந்த அடையும் துன்பம் சொல்லில் கூற முடியாத துன்பமாகும்(2797,2798).
மக்களுக்கும் விரும்பியவற்றைப் பெறாவிட்டால் துன்பம் பெற்றுப் பிரிதல் அதனினும் துன்பம். மூப்படைதல் துன்பம். கண்ணொளி மங்குதல் முதலிய செயல்கள் துன்பம் தரும்(2799). மனிதப் பிறவியில் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையிலும் வாழ்கின்ற வாழ்க்கை மிகப்பெரும் துன்பத்தைத் தருகின்ற வாழ்க்கையாக அமைவதால் மனிதப் பிறப்பு துன்பமயமானதாகும் என்று திருத்தக்கதேவர் மனிதன் தம் வாழ்க்கையில் அடையும் பிறவித் துன்பங்களை குறிப்பிட்டு மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதை வலியுறுத்துகிறார்.
தேவகதி
ஒவ்வொரு பிறப்பும் துன்பம் தரக்கூடியதே. தேவராகப் பிறந்தால் எந்தவிதமான துன்பமும் வராது என்று கூறிவிட முடியாது. அத்தேவகதியிலும் உயிர்கள் துன்பத்தை அடைகின்றன. தேவகதியில் உயிர்கள் பிறக்கின்றபோது அவை அடைகின்ற துன்பத்தைச் சீவகசிந்தாமணி தெளிவுறுத்துகின்றது.
தேவகதி துன்பம் என்பது தேவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தைக் குறிப்பிடுவதாகும். தேவர்கள் பெண் வயிற்றில் சென்று பிறக்கமாட்டார்கள். அவர்களது கால்கள் நிலத்தில் தோயாது. அவர்களது உருவம் எழுத முடியாத அழுகுடையதாகும். அவர்களது உடல் ஞாயிற்றைப் போல ஒளிவீசி திகழும். அவர்கள் அணிந்த மலர் மாலைகள் வாடாது இருக்கும்(2800). தேவமகளிரின் கை, கால்,கண்கள் ஆகியவை தாமரை மலர்போன்று இருக்கும். வாய் பேரொளி பொருந்திய பவளத்தைப் போன்று இருக்கும். அவர்கள் திருமகளைப் போன்று பேரழகு நிரம்பியவர்களாக விளங்குவர்(2801). குவளைக் கண்களையும் நெற்றி மாலையினையும் ஒளிமிகுந்த வயிரக் கீரிடத்தையும் அழகிய காதுகுழையினையும் நிலவைப் போன்ற மார்பணிகளையும் மின்னலைப் போன்ற ஒளிமிகுந்த உடலினையும் கொண்டவர்கள்(2801).
இவர்கள் கற்பக மரத்தின் நிழலில் நின்று நால்வகை இசைக்கருவிகளோடு நிகழும் கூத்தினைக் கண்டும் பல விளையாட்டுக்களை நிகழ்த்தியும் வெள்ளையானை முகிலுடன் போர் செய்யுமாறு ஏவியும் அதன்மீது அமர்ந்து விளையாடியும் பொழுதைக் கழிப்பர்(2806). தேவர்கள் இத்தகைய அழகும் ஆற்றலும் மிகுந்தவர்கள். இவர்கள் உணவாக அமிழ்தத்தை விரும்பினால் அதை உண்ணுவது மத்தாலேயாம்(2802). காம இன்பத்தில் மயங்கும் வாழூக்கையினைக் கொண்டவர்கள்(2804,2805). தமக்குள்ள ஆயுளை வீணாகக் கழித்து ஒளியிழந்த ஞாயிற்றைப் போன்று அழகு இழந்து காணப்படுவ.
தேவர்கள் உயிர்விட பதினைந்து நாட்கள் இருக்கும்போது இமையாத கண்கள் இமைக்கும். வாடாத மலர்மாலைகள் வாடத் தொடங்கும். நஞ்சோடு கலந்த அமுதத்தை உண்டவர்கள் போலத் துன்புறுவர்(2810). இன்பம் நுகர்தற்கு வேண்டிய பொருள்களையெல்லாம் தரக்கூடிய கற்பகச் சோலையைக் கண்டிருந்தும் அது நிலையானதல்ல என்பதை உணர்வர்(2808). இவ்வாழூக்கை இழிந்தது என்று கருதி வருந்துவர். தேவர்களாக இருந்து வாழும் வாழ்க்கையில் பிற தேவர்களால் சபிக்கப்பட்டும் அவர்கள் இட்ட குற்றேவல்களைக் கீழ்ப்படிந்து செய்தும் அவர்களுக்கு அணிமணிகள் செய்து கொடுத்தும் துன்பமடைவர்((2811) என்று தேவ வாழ்க்கையும் துன்பமுடையது என்று சிந்தாமணி எடுத்துரைக்கின்றது.
உயிர் நரக கதியிலும் மனித கதியிலும் விலங்கு கதியிலும் தேவ கதியிலும் அடையும் துன்பங்கள் மிகப்பெருந் துன்பங்களாகும். அதனால் எடுத்த இம்மனிதப் பிறிவியிலேயே பிறவா யாக்கைக்குரிய வாழ்க்கையை அடைவது உயர்ந்த பண்பாகும் என்றும் சிந்தாமணி பிறவாத் தன்மைக்குரிய வழிவகையைக் குறிப்பிடுகின்றது.(தொடரும்….6)
- பெண்கள் நிலை – அன்றும் இன்றும்!
- அணுமின்சக்தி -பிரச்சனைகள் & மெய்ப்பாடுகள்
- 19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்
- முரசொலி மாறனை மறந்த திமுக.
- ‘முசுறும் காலமும்’
- அம்மா நாமம் வாழ்க !
- பழைய கள்
- தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் முறைகள்
- தொடுவானம் 121. சிங்கப்பூரில் நேதாஜி.
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்ற கலைத்துவப் படைப்புகள் -6
- காப்பியக் காட்சிகள் 5.சிந்தாமணியில் நாற்கதிகள்
- உதயணனின் ‘பின்லாந்தின் பசுமை நினைவுகள்’