வேழப் பத்து—11

This entry is part 16 of 20 in the series 4 செப்டம்பர் 2016

 

வேழம்னா ரெண்டு பொருள் உண்டுங்க; ஒண்ணு யானை; இன்னொண்ணு கரும்பு. பழைய தனிப்பாடல்ல ஒண்ணு வரும்; ஒரு பாணன் போயிப் பாடிட்டுப் பரிசு வாங்கிண்டு வருவான். அவன் மனைவி, “ நீ போயி என்னா வாங்கிண்டு வந்தே”ன்னு கேப்பா; அவன் யானைதான் வாங்கினு வந்திருப்பான்; ஆனா வேழம்னு பதில் சொல்வான்; ஒடனே அவ கரும்புன்னு நெனச்சுக்கிட்டு அப்படின்னா ஒடச்சித் தின்னும்பா; ஆனா இங்க வர்ற வேழம்றது ஒருவகையான புல்லுங்க. நாணல்னு சொல்லுவோம்ல; அது போல; உரையாசிரியர்லாம் இதுக்கு “கொறுக்கச்சி”ன்னு சொல்றாங்க; கரும்பு, மூங்கில் போல இதுவும் புல் வகையில்தான் அடங்குமாம். இனிமே வர்ற பத்துப் பாட்டுலயும் இந்த வேழம் வருமுங்க’ அதாலதான் இந்தப் பாட்டுகளுக்கு “வேழப்பத்து”னு பேருங்க. மொத பாட்டைப் பாப்போம்.

” மனைநடு வயலை வேழம் சுற்றும்

துறைகேழ் ஊரன் கொடுமை நாணி

நல்லன் என்றும் யாமே

அல்லன் என்னும்என் தடமென் தோளே”

அவன் தலைவியை விட்டுட்டு வேற ஊட்டுக்குப் போயிட்டாங்க; இப்ப தன் தோழனான பாணனைத் தூது விடறான்’ அப்ப அந்தப் பாணன்கிட்ட தலைவி சொல்ற பாட்டுங்க இது.

தலைவி சொல்றா, “அவன் ஊர்ல ஊட்ல எல்லாம் வாசல்ல இருக்கற வயலைக்கொடி[பசலைக் கொடி] என்னா செய்யும் தெரியுமா; போயி வேழன்ற மூங்கில் போல இருக்கறதை சுற்றிக்கிட்டிருக்கும். அவன் என்னை விட்டுட்டு பிரிஞ்சுபோன கொடுமையை வெளிய சொல்ல வெக்கப்பட்டுக்கிட்டு நான் அவனை நல்லவன்தான்ன்னு சொல்றன்; என்னா இருந்தாலும் அவனைக் காட்டிக் கொடுக்கலாமா? ஆனா அவன் போயிட்டதால இப்ப மெலிசா ஆயிட்ட என் தோளெல்லாம் அவனை நல்லவன் இல்ல காட்டிக்கொடுக்குதே”

===================================================================================

 

வேழப்பத்து—12

ரெண்டாவது பாட்டுல தலைவி தன் மனசுக்குள்ளேயே சொல்லிக்கறா; “ஒரு தண்ணித்துறைங்க; கொளமோ ஆறோ ஏதாவதுன்னு வச்சுக்கலாம்; அதன் கரைல வேழம்னு சொல்றமே அந்த வகைப் புல்லானது, கரும்பு போல அழகாப் பூ பூத்திருக்கு; இழிவான வேழம் அழகாப் பூ பூத்திருக்குங்க; அதப்போல எனக்கு செய்யற நல்லதெல்லாம் என் ஊட்டுக்காரன் அவன் போயி அவளுக்குச் செய்யறானே; என்னைக் கட்டினவன்தானேன்னு நானாவது பொறுத்துக்கலாம். ஆனா இங்க பாருங்க; என் தோளெல்லாம் அது பொறுக்காம எப்படி மெலிஞ்சு போச்சுங்க;”

”கரைசேர் வேழம் கரும்பில் பூக்கும்

துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்

ஆற்றுக தில்ல யாமே

தோற்க தில்லஎன் தடமென் தோள

வேழப்பத்து—13

அருமையான பாட்டுங்க இது; அவ தனக்குத்தானே சொல்லிக்கறா; “என்னை உட்டுட்டுப் போக மாட்டேன்னு சொன்னவன் இப்ப அங்க போயிட்டான். அவங்களோட சேந்திருக்கான். அவளுவ ஊரெல்லாம் தூங்கும்போது கூட தூங்கமாட்டாளுவ; அப்படி இருக்கச்சே அவன் எப்படி அவங்களுக்குத் தெரியாம இங்க வருவான்?”

ஏன் அவங்கள்ளாம் தூங்கமாட்டான்னு நெனக்கறா தெரியுமா? எங்க தன்னைப் பிரிஞ்ச மாதிரி அவங்களையும் உட்டுட்டுப் போயிடுவானோன்னு பயம் அவங்களுக்கு;  அதான்’;

”பரியுடை நன்மான் பொங்[கு]உளை அன்ன

அடைகரை வேழம் வெண்பூப் பகருந்

தண்டுரை ஊரன் பெண்டிர்

துஞ்சூர் யாமத்தும் துயிலறி அலரே”

 

இந்தப் பாட்டுல ’மான்’னு வர்றது குதிரைங்க; ’பரி’ன்னு வர்றது குதிரையோர நடை; ’உளை’ன்னா குதிரையோட தலையில கட்டற சாமரைன்னு ஒரு சுட்டி; இல்லன்னா குதிரையோட நெத்தியில அலையற தலைமயிருன்னு கூட வச்சுக்கலாம்ன்னு கூட வச்சுக்கலாம்; அதுதான் வேழம்ற கொடியிலஇருக்கற புல்லைக் காட்டுது. அதோட பூ குதிரையோட தலைமுடிக்கு உவமைங்க; அந்தப் பூ தலைமுடியைப் போல வெள்ளையா இருக்குமாம்;

நல்ல நடையைக் கொண்ட குதிரையோட தலைமுடியைப் போல வெள்ளையாப் பூ பூக்கற வேழம் இருக்கற குளிர்ச்சியான தண்ணி இருக்கற ஊரைச் சேர்ந்தவன்தாங்க அவன்;

குதிரயோட அழகான தலைமுடி குடும்பப் பொண்ணுக்கும், வேழப் பூ பரத்தைக்கும் உவமையாம்

======================

Series Navigationசிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் – சிறு குறிப்புகள் -1விழியாக வருவாயா….?
author

வளவ.துரையன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    BSV says:

    நான் எழுதியது வெளியிடப்படவில்லை. அதனால் கட்டுரையின் குறை எழுதியவருக்கும் மற்றவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இப்படி செய்வது சரியா என்று திண்ணை சிந்திக்கவேண்டும். எல்லாருக்கும் எல்லாம் தெரிய வேண்டுமென்ற பரந்த மனப்பான்மை அவசியம்:-(

    கட்டுரை பேச்சு வழக்கு நடை. இது தேவையில்லை. குறிப்பாக எல்லாருக்கும் நன்கு புரியும் நல்ல தமிழில் எழுத வல்லவரான வளவ. துரையனிடமிருந்து.

    சங்க இலக்கியம் எளிய மக்களால படித்து இரசிக்க முடியாததது. இற்றை நாளின்படி அது கடினமான தமிழில் யாக்கப்பட்டது. அன்று கூட அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்: கால்டுவெல், சங்ககாலத்தமிழர்கள், பேச்சுத்தமிழ், இலக்கியத்தமிழ் என்று பிரித்தே பார்த்து வந்தார்கள். என்னும்போது, அன்றும் இவ்விலக்கியம் மேட்டுக்குடியினரிடையேதான் புழங்கியிருக்க வேண்டும். இலக்கிய நுகரும் வர்க்கம் எக்குடிமக்கள்? பாட்டாளிகள் இவ்வர்க்கத்தைச்சேர்ந்தவர்கள் கிடையா. உ வே சாவுக்கு கிடைத்த ஓலைச்சுவடிகள் உழைக்கும் தொழிலாளிகள் நிறைந்த குடிசைகளில் இருந்து இல்லை. எங்கு கிடைத்தன என்பதை அவர் சரிதத்தில் வாசிக்கும்போது நான் மேலே சொன்னவை தெளிவாகும். முல்லைப்பாட்டு திருக்குறுங்குடி அக்ரஹாரத்தில், தமிழ் விடுதூது, மதுரை மீனாட்சி கோயில் தெருவில்வீட்டில். இப்படி!

    இக்கட்டுரை பேச்சு நடை – முதல்வரியையே பாருங்கள் – ஒரு பண்ணையாள் தன் பண்ணையார் கேட்க, குனிந்து கைகட்டிப்பேசும் அடிமை நடை. வாசகனான என்னை வருத்துகிறது. ஓர் அடிமையை நான் வற்புருத்தி என் மகிழ்ச்சிக்காக பேசவைப்பதைப் போல உணருகிறேன்.

    இதிகாசங்களை – இராமாயணம், மஹாபாரதம். கந்த புராணம் – மக்களுக்குச் சொல்ல காலட்சேபங்கள் நடைபெறும் போது அங்கு கூடியிருப்போர் பொது பாட்டாளி வர்க்கமென்றால், பேச்சு நடையையும் கலந்து சொல்வார்கள். அது சரி அங்கே. சங்க இலக்கியம் என்ன பாட்டாளி வர்க்கம் படித்து இரசிக்கவா? முடியுமா?

    (இதை வெளியிட ஆசிரியர் குழு விரும்பவில்லையாயின் வளவ் துரையனின் ஈ மெயிலுக்கு அனுப்புகிறேன். கொடுங்கள்)

  2. Avatar
    ஷாலி says:

    திரு.வளவ.துரையனார் அவர்கள் வேழப்பத்து என்று தலைப்பிட்டு அவரது தனித்தமிழில் அவர்பாட்டுக்கு விளக்கம் கொடுத்து விட்டார்.நல்லது!.இப்பாடல் எதில் உள்ளது.?பாடிய புலவர் யார்? என்ற எந்த குறிப்பும் இல்லாமல் “மொட்டை தாத்தான் குட்டையில் விழுந்தான்” என்றிருப்பது நன்றன்று!

    சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான ஐங்குறுநூறு சேரமன்னர் அவையில் தமிழ் வளர்த்த பாங்கைப் பற்றி விவரிக்கின்றது. இது கடைச்சங்க எட்டுத் தொகைநூல்களில் ஒன்றாகும். இந்த நூல் காதல் ஒழுக்கத்தைப் பற்றிப் பாடும் அகநூல். அதன்கண் இதனை மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற திணை வரிசையில் நூறு பாடல்கள் வீதம் ஐந்து திணைக்கும் மொத்தம் ஐந்நூறு பாடல்கள் அமைந்திருக்கின்றன. ஐங்குறு நூறு மூன்றடிச் சிற்றெல்லை முதல் ஆறடிப் பேரெல்லை வரை ஐந்நூறு பாடல்களைக் உள்ளடங்கியது.

    மருதம் நூறு பாடல்களை புலவர் ஓரம் போகியார் பாடியுள்ளார்.
    குறிஞ்சி நூறு பாடல்களை கபிலரும் ,
    நெய்தல் நூறு பாடல்களைஅம்மூவனாரும்,
    பாலைத் திணையில் உள்ள நூறு பாடல்களை ஓதலாந்தையாரும்,
    முல்லை நூறு பாடல்களை பேயனாரும் பாடியுள்ளனர்.
    மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும்..

    ஐங்குறுநூற்றில் மருதத்திணையைப் பாடிய புலவர் ஓரம்போகியார்.
    மருதத்திணையில் உள்ள பாடல்கள் பத்துப் பிரிவுகளாக தொகுக்கப்பட்டு உள்ளது அவை ஒவ்வொன்றிலும் பத்துபாடல்கள் வீதம் நூறு பாடல்கள் அமைந்துள்ளன.

    வேழப்பத்தில் இடம்பெறும் வேழம் என்பது பேக்கரும்பு,ஆற்றோரங்களில் வளர்ந்துகிடக்கும்,அக்காலத்தில் வீட்டு மனைகளிலும் வேலிக்காக இதனை வளர்த்தனர்.முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள் நல்லடக்கம் செய்த இடம் இராமேஸ்வரம் அருகில் உள்ள பேக்கரும்பு என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து இராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு கூறுவதாவது;

    ராமேஸ்வரம் அருகே 4 கி.மீ தொலைவில் பஞ்ச கல்யாணி ஆற்றையொட்டி எருவை என்ற செடியினத்தின் ஒரு வகை புல் வளர்கிறது.நாணல் செடி போல இது வளரும்.இந்த புல் கரும்பு போல காணப்பட்டதால் “பேக்கரும்பு” என்று அழைக்கப்பட்டது.(பே – என்றால் இல்லை என்று பொருள்) பின்னர் இப்பகுதியில் மக்கள் குடியேறியதால் இப்பகுதியை பேக்கரும்பு என்று அழைக்கின்றனர்.

    இந்த பேக்கரும்பு ( Fake கரும்பு) என்னும் வேழம் நாணலை ஓரம்போகியார் தனது மருத நிலப்பாடலில் வேழப்பத்தில் தலைப்பாக்கி பாடியுள்ளார்.

    “வேழம் என்பது ஆற்றங்கரையில் கரும்பு போல் வளரும் பேய்க்கரும்பு.
    வேழத்தை வயலைக் கொடி சுற்றும். வேழம் கரும்பு போல் பூக்கும். அதன் பூ வெண்குதிரையின் பிடரிமயிர் போல இருக்கும். வேழம் வளர்ந்து அருகிலுள்ள மாந்தளிரை மடக்கும். புனலாடும் மகளிர் புணர மறைவிடமாகி உதவும். அப்போது அவர்களின் நெற்றிக் குங்குமம் அதன் வேரில் ஒட்டிக்கொள்ளும். அதன் பூ வானத்தில் பறக்கும் குருகின் சிறகு போல் இருக்கும். செருந்திப் பூவோடு வேழம் மயங்கிக் கிடக்கும். உதிர்ந்த மாம்பூ புணர்ந்தோர் உடம்பு மணம் கமழ, அதன்மேல் வேழப்பூ உதிர்ந்து மணத்தை மறைக்கும்.மாம்பூவில் மொய்க்கும் வண்டின் சிறகு போல் பூக்கும்.”
    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81_-_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D#.E0.AE.B5.E0.AF.87.E0.AE.B4.E0.AE.AA.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *