அமிர்தம் சூர்யா என் நெடு நாளைய நண்பர். எங்கள் இலக்கிய நட்பிற்கு வயது இருபது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். அனேகமாக அவரின் தொடக்க கால இலக்கியச் செயல் பாடுகளில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன். அவரின் அண்மைக்காலக் கவிதைகளில் குறிப்பாக காதல் சார்ந்த கவிதைகளைத் தொகுத்து ,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, என்னும் நூலினை வெளியிட்டிருக்கிறார்.
வெற்றியாளர்கள் பெரும்பாலும் வித்தியாசமாக யோசிக்கக் கற்றவர்கள். நூலின் தலைப்புக்குக் கீழே,’காதலியக் கவிதைகள்’, என்று குறிப்பிட்டிக்கிறார். ’காதல் கவிதைகள்’, என்பது அறிந்தது. அதென்ன காதலியக் கவிதைகள்? அதுபற்றிப் பேசாமல் நூலுக்குள் செல்வது எப்படி? காதல் கவிதைக்கும் காதலியக் கவிதைக்கும் வித்தியாசம் என்னவெனில் சமையல் காரருக்கும் ஊட்டச் சத்து நிபுணருக்கும் உள்ள வித்தியாசம் தான்.
சமையல் காரர் சுவையா இருக்கு சாப்பிடுங்கன்னு சொல்வார்.
ஊட்டச் சத்து நிபுணர், எப்படி சாப்டணும் எவ்வளவு சாப்டணும் எப்பவெல்லாம் சாப்பிடலாம் இடைவெளி விடுறது பத்தியெல்லாம் சொல்வார்.
காதல் என்னும் பதத்திற்கு அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், ஆர்வம் என்று மனத்தின் பல்வேறு உணர்வுக் கூறுகளின் சிதறல்களைத் தொகுத்து மலர்ந்த ஒற்றைப் பூவெனக் கொள்ளலாம்.அது மானுடத்தின் அறம் பிழைக்கச் செய்கிற காரணி. இழக்கச் செய்கிற காரணியாகவும் மாறிவிடுவது புரிதலில் விளைகிறச் சிக்கல் என்பதற்கு வரலாறு எத்தனையோ உதரணங்களைப் பதிவு செய்திருக்கிறது.
காதலைத் தொல்காப்பியம் மூன்று பிரிவுகளாய் வகுக்கிறது.
அன்பின் ஐந்திணை என்று நம் இலக்கணம் கூறும். இதை அன்புடைக் காமம் என்றும் கூறுவதுண்டு. அன்பின் ஐந்திணை என்பது ஐந்திணைகளான குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை ஆகிய ஐவகை நிலங்களுக்கேற்ப ஒட்டிய சூழல் சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் ஆகியனவாம். இவையாவும் இயற்கையோடு ஒட்டி நிகழ்வன.
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம். (கை – பக்கம், கிளை – உறவு). இதை ஒவ்வாக் காமம் என்றும் கூறுவர். கைக்கிளை புணரா நிகழ்ச்சியாகும். கைக்கிளைக்கு நிலம் ஒன்றும் ஒதுக்கப்படவில்லை. ஏனெனில் இது மலராக் காதல், எங்கும் காணப்படலாம். எவ்விடத்தும் நிகழக்கூடியது. பரஸ்பரப் புரிதலற்றது. வன்முறைக்கு வழிகோலும் மனமுடையதுவென சமகால சம்பவங்களை அடையாளம் காட்டகூடிய தன்மை கொண்டது. இருபுறமும் உணர்வும் புரிதலும் பகிர்தலுமின்றி அதைக் காதலென்றுக் கருதவியலாது தானே?
பெருந்திணை என்பது ஒருவனும் ஒருத்தியும் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் முறையாகும். இதைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுவர். பெருந்திணை புணர்ந்த பின்னான நிகழ்ச்சியாகும். எனினும் மனம் கலக்காத உடல் சேர்வாழ்க்கையாய் சமூகத்தின் பார்வைக்கு வாழும் வாழ்வெனச் சமகாலத்திற்குப் பொருத்திப் பார்க்கலாம்.
எப்படியாகினும் அன்பு, நட்பு, பாசம், உறவு எனக் காரணிகள் பலவாயினும் மனம் ஒத்துப் போதலின் நிமித்தமே காதல்.
முத்தம் என்பது பிரியத்தின் திறவுகோல். காதலின் கதவு. காமத்தின் நுழைவாயில். முத்தம் உள்ளத்தின் சந்தோஷத்தை உதடுகளால் எழுதிப் பார்க்கிற கவிதை. முத்தத்தைத் தவிர்த்து விட்டு காதலில் முன்னேறவே முடியாது. எனில், எவ்வளவு முக்கியமானதெனப் புரியும்.
முத்தம் இல்லாத காதல் இயலாது.முத்தம் இல்லாத காதல் கவிதைச் சாத்தியமில்லை. முத்தம் பற்றி எழுதுவது காதல் கவிதை. முத்தம் கொடுப்பதற்கு முன் ஏற்பாடுகளை எழுதுவது காதலியக் கவிதை. அமிர்தம் சூர்யா காதலியக் கவிதை எழுதுகிறார்.
ஒரு வீடு பார்க்கிறோம். பிடித்திருக்கிறது. குடியேற முடிவு செய்கிறோம். அதற்குமுன் அதில் உள்ள தூசிகளைத் துடைக்கிறோம். ஒட்டடை அடிக்கிறோம். வாய்ப்பும் வசதியும் இருக்குமாயின் வண்ணம் கூட பூசுகிறோம். குடியேறும் வேளையின் குதூகலத்திற்கான தயாரிப்பு. முத்தம் தருவதற்கு முன்னும் அவ்விதமான மனத் தயாரிப்பு தேவையல்லவா? ஆனால் எத்தனை பேருக்கு அது புரிகிறது?
’முத்தத்திற்கு ஒப்பனையிடுவது எப்படி?’, என்றொரு கவிதை .
குளத்தை மூடிக்கவ்விக்கொள்ளும்
வெங்காயத் தாமரையென
முத்த சிந்தனையை இதழ் முழுக்கப் பரவ
திட்டமிடு….அதற்குமுன்…
இல்லம் பிடித்துவிட்டதா? குடியேற மனம் சம்மதிக்கிறதா? தயாராகி
விட்டாயா? அவ்விதமாயின் அதற்கான திட்டமிடலைத் தொடங்கு. எப்படி?
அதரரேகையில் இருக்கும் அவளின்
ஆதிகால சிராய்ப்புகளின்மீது
நிபந்தனையற்ற அன்பிலிருந்து
எடுத்த களிம்பைப் பூசு.
அவள் உதட்டுக்கரையோரம் ஒடுங்கி
பழையகாதலில் செத்துக் கரையொதுங்கிய
உறுத்தல் சிப்பிகளைக்
கூச்சமின்றி அப்புறப்படுத்து
காதல் என்றவுடன், உலகின் வெளியெங்கும் இருவர் மட்டுமே வாழும் புனித வெளியாகப் பாவித்துப் பேசும் இலக்கியங்கள். ஆனால் மனமென்பதும் வாழ்வென்பதும் காலமென்பதும் அப்படி எளிதில் விட்டு விடுவதில்லையே.
சந்திக்கிறோம். நட்புக்கொள்கிறோம். காதல் கொள்கிறோம். உள்ளம் கலக்கும் நாளின் பிசிறாய் உதடு கலக்கிறோம். ஆனால் அதற்கு முன் அவளின் வாழ்க்கை அல்லது அவனின் வாழ்க்கை எவ்வித காதல்வயப் பாட்டிற்கும் உட்படாததாக இருக்க வேண்டும். குறிப்பாக அவளுக்கு. இது தான் எல்லா ஆண்களும் விரும்பவது. இலக்கியமும் விரும்புவது. அதற்கு முன் ஒரு காதல் அவளின் வாழ்வில் கடந்து போயிருப்பது மிக இயல்பானது என்பதை ஏற்க மறுக்கும் சமூக மனம். இப்போது இந்தக்கவிதையைப் படியுங்கள்.
அதரரேகையில் இருக்கும் அவளின்
ஆதிகால சிராய்ப்புகளின்மீது
நிபந்தனையற்ற அன்பிலிருந்து
எடுத்த களிம்பைப் பூசு.
அவள் உதட்டுக்கரையோரம் ஒடுங்கி
பழையகாதலில் செத்துக் கரையொதுங்கிய
உறுத்தல் சிப்பிகளைக்
கூச்சமின்றி அப்புறப்படுத்து
பழைய காதலின் எஞ்சிய உறுத்தல்கள் ஏதும் அவளுக்கு இருக்குமாயின் முத்தமிடுமுன் உன் நிபந்தனையற்ற அன்பால் அதனை கூச்சமின்றி அப்புறப்படுத்து. உன் பிரியத்தால் அந்தக் காயத்திற்கு களிம்பு பூசு.
மேலும் முத்தமிடும் பாடம் சொல்லும் வரிகள் இருக்கும் கவிதை இது. அவற்றை விடுங்கள்.
இது ஒரு காதல் கவிதையா? இது ஒரு காதலியக் கவிதையா? ஏற்கனவே , காதலில் தோற்றுப் போன பெண்ணொருத்தியை, ஒரு ஆணின் காதல் மனம் எப்படி அணுக வேண்டும் என்பதைப் பேசும் ஆகச் சிறந்த பெண்ணியக் கவிதையல்லவா? அதுவும் நேர்மறையாய்ச் சுட்டும் பெண்ணியக் கவிதையல்லவா?அப்படியல்லாமல் பெண்ணின் மனத்தை ஒழுக்கத்தின் பேரால் குத்திக் கிழிக்கும் ஆண்களுக்குச் சொல்லும் பாடமல்லவா? நண்பர்களே இந்தக்கவிதை முத்தம் கொடுக்கச் சொல்லிக் கொடுப்பது போல் எழுதப்பட்ட, ஆனால் முத்தம் கொடுக்கத் தகுதியான மனத்தை ஓர் ஆண் பெறுவதற்கான பாடம் சொல்லித் தருகிற கவிதை.
பறவையை ஸ்தாபித்தல் என்னும் கவிதை
பெயரிடப் படாத ஒரு பறவையைப் பிடித்துவந்து
அடைத்தேன் ஒரு பெயரில்.
அது பெயரைத் துறந்து பெயரின்மைக்கு ஓடியது
பெயரில் என்ன இருக்கிறது? பெரில் தான் யாவும் இருக்கிறது. பெயர் தான் அடையாளம். பெயர் தான் ஊக்க சக்தி.பெயர் பெறத்தான் எல்லாம். பெயரின்மைக்கு ஓடும் மனோபாவம் மேலதிகச் சிந்தனையைத் தூண்டுவது . இருக்கட்டும்.பெயரின்மைக்குப் பறவை ஓடியதும் கவிமனம் ஓடிய பறவையை விட்டு விட்டு பெயரின் மீது அக்கறை கொள்கிறது.
பௌதிக இருப்புத் தேடி
அலைந்துகொண்டிருந்த அந்தப் பெயரைப் பிடித்துவந்து
கூட்டில் அடைத்து பறவையாகப் புனைந்தேன்.
ஸ்தூலப் பொருளுக்குச் சூட்டிய பெயரை நிராகரித்துப் போன பின் அரூபமாய் இருக்கும் பெயரின் பௌதீக இருப்பினைச் சமன் செய்ய பெயரையே பறவையாய்ப் புனைவது கவிமனத்தின் உச்சம். பறவையாய்ப் புனைவதென்பது பறவையாய்ப் புனைவதன்று. சிறகுகளைப் புனைவது. சிறகுகளுக்கான வானத்தைப் புனைவது. எல்லைகளைப் புனைவது. அப்புனைவை உண்மையாக்கும் பொருட்டு எழுத்துகளால் கட்டமைக்கிறது. அதை தன் புனைவாற்றலால் பறவையென நம்ப வைக்கவும் முடிகிறது. எல்லாம் சரி. ஆனால் புனைவென்பது வாழ்க்கையல்ல. பெயர் மட்டும் பறவையல்ல.
நீங்கள் அதைப் பறவையென
நம்பத் தொடங்கிய பொழுது தான்
என் அழுகை உங்களுக்குக் கேட்காமல் போனது.
தன் புனைவால் பெயரைப் பறவையென நம்ப வைக்க இயலுமாயினும், உள்ளூர சோகம் அப்பிக் கிடக்கிறது. புனைவால் மறக்கமுடியும்;மறக்க முடியாது.
கவிதைகளில் சொல்லப் படும் விஷயங்களை கவிஞனோடும் அவனைச் சார்ந்தவர்களோடும் இணைத்துப் பார்க்கிற இன்னும் சொல்லப்போனால் வாசக மனம் கவிதைக்கு வெளியே பல ஊர்களுக்கும் பயணம் செய்து அதற்கான நபர்களைப் பொருத்தி விடும் பொருட்டு துப்புத் துலக்குகிற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதனாலே தான் சங்கப் பாடல்களில் தலைவன் தலைவி தோழி என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள் போலும். அனுபவம் கவிதையாகும் போது அனுபவமாகவே எதிகொள்ளப் பட வேண்டும். ஆட்களாகக் கூடாது. நிலைத்துப் பெயர் பெற்று இருக்கிற சிற்பங்கலைச் செதுக்கிய சிற்பிகள் தம் பெயரையா முன்னிறுத்தினார்கள். அஜந்தா ஓவியம் கலையாக இருகிறதேவல்லாமல் வரைந்தவனையும் வரையப்பட்டவர்கள் யாரெனவுமா வண்ணம் கொண்டிருக்கிரது. அலைகள் தனக்கென பெயர் சூட்டிக் கொள்ளத் துடிக்கின்றனவா? நாம் தான் சொல்கிறோம் ஆண் அலை பெண் அலை என்றெல்லாம். இப்படியெல்லாம் கேட்கிற அமிர்தம் சூர்யாவின்,’பெயரை ஏன் சொல்லணும்?’, என்கிற கவிதை
நீ மட்டும் ஏனடா
சுருக்குப் பையில் இல்லாத ஒற்றைப் பாக்கைத் தேடும்
ஆயாவின் விரல்போல எழுதும் கவிதையில் எல்லாம்
என் இயங்கு சக்தியின் பெயரைத் தேடி துழாவுகிறாய்
என்னும் எரிச்சலுற்ற சூழலை எதிர்கொள்கிற கேள்வியோடு முடிகிறது.
இன்றைக்கு இருக்கிற சூழலில் எத்தகைய இக்கட்டையும் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டியதன் தேவையைப் பேசுகிற கவிதை,’எக்கணமும் தயாராயிரு’, என்னும் கவிதை. அதற்காக அவர் அடுக்கிப் போகும் சூழல்கள் மிகுந்த தனித்துவமானவை. எல்லா தளங்களிலும் எல்லா நிலைகளிலும் இருந்து பேசப் படுபவை.
உன் கொஞ்சல் போதையை உணவாக்கினாய்
நீ மென்று தந்த எச்சிலை எனதாக்கினாய்
கூடே சுகமென உன் மார்புச் சூட்டில்
குளிர் காய்ந்திருந்த கணங்களில்
உறக்கத்திலிருந்து உருவியெடுக்கும் கனவென
கூட்டின் மெத்தை இறகுகளை மாயமாக்கினாய்
என்று காதல் வெளியைப் பாடலெனப் பாடும் மனமும் இவருக்கு வாய்க்கிறது.
கோலம் போடுதல் என்னும் கவிதை முக்கியமானது.
என்னையே வரைகிறேன் நீ
அதைக் கோலம் என்று புனைப் பெயர் சூட்டுகிராய்
என்ன அபத்தம் பாரேன்
என் அகப்பைகளில் நீ தடுக்கிவிழுந்து
காமக் கோடுகளில் சிக்கிக் கொள்ளாத
உன் காதல் சந்தேகத்திற்குரியது கருப்பா
கோலப்பொடியால் கோலாகலத்தை
சாலையில் செதுக்கும் சாதுர்யம் ரசி
பெறுவதின் சங்கடம் துறந்து
எடுத்துக் கொள் நீயே இந்த மாக்கோல உணவையென
எறும்புகளைக் கௌரவப்படுத்தும்
என் செயலின் உள் அர்த்தம் புரிகிறதா
அப்படியே என்னை நடத்து
காதலின் ருசி தெரிய
ஆண் வெட்கம் கலைத்து
என்னோடு வாசல் வந்து
என் வெள்ளைக் கோலத்துக்கு
வண்ண ஆடை பூட்டு
கோலாகலமாலாம்.
ஒரு பெண்ணின் குரலில் பேசும் கவிதை.ஆண் என்பவன் வீரத்தின் அடையாளமாகவும் பெண் என்பவள் வெட்கப்படக் கூடியவளாகவும் இருக்கும் கருத்தை எவ்வித பிரயத்தனமுமின்றி உடைக்கிறார். ’ஆண் வெட்கம் கலைத்து’, என்னும் ஒரு பெண்ணின் பேச்சு எல்லா உணர்வுகலும் இருபாலருக்குமுரியதே இயல்பென்பதை கருத்தியல் தளத்தில் நின்று பேசாமல் இயல்பு மொழியில் பெண் குரலில் பதிவு செய்து போவது சிறப்பு.ஒரு பெண் தன்னை ஆண் எப்படி நடத்த வேண்டுமென்றால் மாக்கோலமிட்டு எறும்புகளைத் தாமாகவே எடுத்துக்கொள்ளச்சொல்லி கௌரவப் படுத்துவது போல தன்னியல்பாய் இருக்க வேண்டுமாம்.
இந்தக் கவிதையில் அந்தப் பெண் கணவனை இழந்த விதவையோ என்று எனக்கு தோன்றியது. விளையாட்டாகச் சொன்னாலும் காதலில் ஐயமுற்றுக் கதைப்பது தன்னை ஆட்கொள்ள வேண்டிக் கேட்பதில் இருக்கிற கௌரவ முனைப்பு கொள்ளும் மனம் ஆகியனவற்றால் அப்படி தோன்றியிருக்கக் கூடும்.
என்னோடு வாசல் வந்து
என் வெள்ளைக் கோலத்துக்கு
வண்ண ஆடை பூட்டு
கோலாகலமாலாம்
வெள்ளைக்கோலத்துக்கு வண்ண ஆடை பூட்டச் சொல்வது அதை மேலும் அந்தப் பாத்திரத்தின் மேல் படிய வைத்தது.
நீ என்கிற கவிதையில் என்ன்வாக வெல்லாம் மாறிவிட வேண்டும் என்கிறார். இறுதியில்,
சாகாமல் இருக்க வேண்டுமானால்
அவளாக மாறிப்போ
நீ
என்று முடிகிறது கவிதை.ஆன்மீகப் பற்றாளரான வெற்றியின் சூத்திரமாக இதனைச் சொல்வது இயல்பானதுதான்.
தத்வமஸி என்பதன் பொருள் இது தான்.தத்வமஸி= தத்+த்வம்+அஸி.தத் என்றால்,’அத்’, த்வம் என்றால் ‘நீ’ அஸி என்றால் அறிவாயாக. அதாவது, அதுவே நீயென்று அறிவாயாக’, ‘அவளே நீ யென்று அறிவாயாக.
மொழியில் பரிசோதனை முயற்சிகள் செய்து பார்ப்பதில் எப்போதும் அமிர்தம் சூர்யாவுக்கு ஆர்வம் உண்டு. கவிதையை தொழில் நுட்பத்திர்குள் கொண்டு சாத்திய்ஙளைச் செய்பவராக அவரின் கவிதைகளை வாச்சிக்கிற போதுஅறிய முடியும்.இத்தொகுப்பில் சிறந்த படிமங்களும் உவமைகளும் பலவற்றைச் சொல்ல லாம்.
அம்மாவைப்போல் அழகாய் இருக்கும் குழந்தையின் உதடுகளை
கவ்வ மாராப்பிடம் கெஞ்சுகிறது காற்றின் அதரம்
****** ****** *******
கவிச்சி வாசம் வீசும் உன் குறுஞ்செய்தியைக்
கவ்விக் கொள்ளவே கண்கள் கொக்கென
மாறி தவம் செய்கிறது கனவுக்குளத்தில்
*********** ******* ******
இப்படி நிறைய மேற்கோள்களைக் காட்ட முடியும்.
மருந்தை உள்ளே வைத்து இனிப்புத் தடவிக் கொடுக்கும் மாத்திரை போல காதலைப் பேசினாலும் காதலியம் பேசினாலும் அவற்றை முன் மொழிந்து ஊடாகவே வாழ்வியலை வழி மொழிவதே கவிதைகளின் நோக்கமாய் இருப்பதை தேர்ந்த வாசகன் கண்டடைவான் என்பதில் சந்தேகமில்லை.
காதலியம் என்பதும் வாழ்வியலின் கூறென்பதால் அதன் வாயிலாக வாழ்வியலின் நுட்பமான இடங்களையெல்லம் இயல்பு வழி சாத்தியமாக்கியிருக்கிறார்.
அமிர்தம் சூர்யாவுக்கு எப்போதும் என் அன்பும் வாழ்த்தும்.
- விளக்கேற்றுபவன் – சிறுகதை
- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் : 42 சங்கப் பெண்கவிகளின் கவிதைகள் ஆங்கிலத்தில்
- நமது சூரிய மண்டல எல்லை தாண்டிய நாசாவின் இரண்டு விண்கப்பல்கள் அடுத்த பரிதி மண்டலம் நோக்கிப் பயணம்.
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !
- கவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)
- தொடுவானம் 181. பதிவுத் திருமணம்
- தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …
- வார்த்தைகளின் புனிதம் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில் மொழிபெயர்ப்பில் வெளியீடு
- பெருந்துயர்
- கவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)