பிராந்தியவாதம், சிவசேனா, திமுக பாஜக – சில குறிப்புகள்

This entry is part 1 of 11 in the series 15 அக்டோபர் 2017

சின்னக்கருப்பன்

631181-mns-attackபிராந்திய வாதிகளின் அரசியல் பெரும்பாலும் போலி இனவாதத்திலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக அரசோச்சிக்கொண்டிருக்கும் பார்ப்பன எதிர்ப்பு போலி இனவாதம் நமக்கு எல்லாம் பழக்கப்பட்ட ஒன்று. இதன் உப விளைவாக கர்னாடகத்தில் வாட்டாள் நாகராஜின் கன்னட போலி இனவாதம் மொழிவாதமும் நாம் அறிந்ததே. இதில் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், கன்னடர்கள் மத்தியில் பரவிக்கொண்டிருந்த தமிழர்கள் எதிர்ப்பு போலி இனவாதத்தை அங்கிருக்கும் பெரும் கட்சிகள் கூட கண்டிக்காமல் இருந்ததுதான். மகாராஷ்டிரத்தில், பாஜகவால் ஓரம் கட்டப்பட்டுவிட்ட சிவசேனா கட்சியும் (உத்தவ் தாக்கரே) , மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனை (ராஜ் தாக்கரே ) கட்சியும் மராத்தியர்கள் அல்லாதவர்கள் மீது வன்முறை செலுத்துவது, மராத்திகள் வேலைஇல்லாமல் ஏங்குகிறார்கள் என்பது போன்ற போலி இனவாத, பலியாடுவாதத்தை முன்வைப்பது சில மாதங்களாக என்று இறங்கியிருக்கிறார்கள்.

மகாராஷ்ட்ராவில் பாஜக வெற்றி பெற்றதிலிருந்து தவிப்புக்குள்ளாகியிருக்கிற சிவசேனை கட்சி, எம் என் எஸ் கட்சி இதில் இறங்குவது என்பது எதிர்பார்க்கக்கூடிய விஷயம் என்றாலும், கடுமையான நடவடிக்கை எடுக்காமல் தேவேந்திர பட்னாவிஸ் நடத்தும் பாஜக அரசு இந்த விஷயத்தை தள்ளிப்போடுவதும் உதாசீனம் செய்வதும் நல்லதல்ல. இளையதாக முள் மரம் கொல்லவேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

மகாராஷ்டிரம் இந்தியாவிலேயே அதிக தொழில்சாலை மயமான மாநிலம். மக்களின் வாழ்க்கைத்தரமும் அதிகம். ஆகையால் அது உருவாக்கிய காஸ்மபோலிடன் மனநிலையும் அதிகம். ஆகவே பழைய நினைவுகள் காரணமாக சிவசேனைக்கு தற்போதைக்கு வாக்குகள் விழுந்தாலும் நீண்டகாலத்துக்கு அது பாஜக மாநிலமாகத்தான் இருக்கும். சிவசேனை,எம் என் எஸ் போன்ற குறுகிய பிராந்திய இன வாத, மொழிவாத கட்சிகளின் காலம் முடிந்துவிட்டது. அதனால்தான் credible alternative வாக, காங்கிரஸுக்கும், சிவசேனாவுக்கும் எதிராக பாஜக தன்னைநிறுத்திகொண்டபோது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அது மகாராஷ்டிரத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் அதே போல அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாற்றாக தன்னை credible alternative ஆக பாஜக தன்னை நிறுத்திகொள்ளுமோ, அதன் பக்கம் மக்கள் சாய்ந்துவிடுவார்களோ என்ற அச்சம் திமுகவையும் அதிமுகவையும் பிடித்து ஆட்டுவதை விட அதிகமாக சீமான், கம்யூனிஸ்டு கட்சிகளை பிடித்து ஆட்டுகிறது. இந்த கட்சிகள் உதிரியிலும் உதிரி கட்சிகளாக இருந்தாலும், அவற்றின் குரல் மிகவும் எடுப்பாகவே தொலைக்காட்சிகளில் ஒலிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு பாஜகவும் தன்னை ஒரு credible alternative ஆக கருதிகொள்ளவில்லை, அதிமுக ஆதரவில் இரண்டு மாநில அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கருத்தில்தான் அது ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால், சிவசேனையையும் திமுகவையும் ஒரே பிராந்திய வார்ப்பில் உருவானாலும் ஒப்பிட முடியாது. சிவசேனையை விட ஸ்டாலின் கீழ் வந்துள்ள திமுக ஒரு காஸ்மபோலிடன் கட்சியாக தன்னை உருவாக்கி கொண்டிருக்கிறது. தீவிர பிராந்திய வாதத்தையும், தீவிர இந்து எதிர்ப்பு வாதத்தையும் விட்டிருக்கிறது. இது திமுகவுக்கும் நல்லது தமிழ்நாட்டுக்கும் நல்லது.

பிராந்திய வாதம் முழுக்க முழுக்க போலி இனவாதத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லமுடியாது. தெலுங்கானா, ஆந்திரா பிரிவு பிராந்திய வாதம் என்றாலும், அது மொழி அல்லதுபோலி இனவாதத்தில் கட்டமைக்கப்படவில்லை. ஒரு பகுதி தெலுங்கு மக்கள் பிரதேசம் முன்னேறவில்லை என்ற அடிப்படையில் அந்த கோரிக்கை உருவானது. அது சரியானதுதான் என்பது என் கருத்து. ஜனநாயகத்தில் பல்வேறு கோரிக்கைகள், பல்வேறு காரணங்களால் உருவாகின்றன. அது பொருளாதார அடிப்படையில் உருவானால், அது சரியான திசை நோக்கித்தான் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியை முக்கியமாக வைத்த கோரிக்கைகள் தங்கள் கோரிக்கையின் ஆதரவை அதிகரிக்க, போலி இனவாதத்தையோ மொழி வாதத்தையோ எடுத்துகொள்ளும்போது, அந்த போலி இனவாதமும் மொழி வாதமும் தனியே உயிர் பெற்றுவிடுகின்றன. அவை அந்த பொருளாதார கோரிக்கைகளின் தேவை தீர்ந்த பின்னாலும் உயிர் வாழ்கின்றன. அது இன்னும் பல நீண்ட கால பிரச்னைகளை உருவாக்குகின்றன.

தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டின் பிராந்திய நலத்தை உதாசீனம் செய்ததால், தமிழ்நாட்டு ஆட்சியை இழந்தது. அல்லது அது போன்ற ஒரு பிம்பத்தை பக்தவச்சலம் கொடுத்ததால், பக்தவச்சலத்துக்கு ஓட்டுபோடுவதை விட அண்ணாவுக்கு போடலாம் என்று மக்கள் திரும்பினார்கள். ஆனால், அண்ணாவுக்கு விழுந்த ஓட்டு என்றைக்கும் தனித்தமிழ்நாட்டு கோரிக்கைக்கு ஆதரவாக விழுந்த ஓட்டு அல்ல என்பதை மக்களும் அறிந்திருந்தார்கள், அதே போல திராவிட முன்னேற்ற கழக தலைவர்களும் அறிந்திருந்தார்கள். ஆனால், பொருளாதார கோரிக்கைகள் அதற்கான தேவைகள் தீர்ந்த பின்னாலும், திமுக உருவாக்கிய போலி இனவாத கோஷங்கள் சீமான் போன்ற போலி இனவாதிகளின் வார்த்தைகளில் உயிர்வாழ்கின்றன.

நீண்டகால நோக்கில் தமிழ்நாட்டில் சிவசேனை போன்ற கருத்துக்களை கொண்ட திமுக திக போன்ற இயக்கங்கள் நசிவதும், பாஜக காங்கிரஸ் போன்ற தேசிய ஆனால், பிராந்திய நலன்களை மனதில் கொண்ட இயக்கங்கள் வளர்வதும் நல்லது. ஆனால், தமிழ்நாட்டு காங்கிரஸ், பாஜக இரண்டுமே தமிழ்நாட்டு கட்சிகள் என்ற அடையாளம் இல்லாமல் டெல்லியிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு அதற்கேற்றபடி பேசும் கட்சிகளாகவே இன்றும் இருக்கின்றன. ஆகையால், பிராந்திய நலனை மனதில் கொண்ட, ஆனால் ஓரளவுக்கு காஸ்மபாலிடனாக ஆகிவிட்ட ஸ்டாலினின் திமுகவும், அதிமுகவுமே இன்றைக்கும் எதிர்காலத்துக்கும் தமிழ்நாட்டின் முக்கியகட்சிகளாக இருக்கும்.

எம் என் எஸ் தாக்குதல் செய்தி

சிவசேனா செய்தி

Series Navigationதொடுவானம் 191. சீனியர் ஹவுஸ் சர்ஜன்
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *