அன்று இவ்வுலகம் அளந்தாய்

This entry is part 4 of 13 in the series 28 ஜனவரி 2018

 

அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி

பொன்றச் சகட முதைத்தாய் புகழ் போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்

இது திருப்பாவையின் இருபத்து நான்காம் பாசுரமாகும். கடந்த பாசுரத்தில் ஆய்ச்சிகள் ”இங்ஙனே போந்தருளி” என்று வேண்டினார்கள். “இரண்டு படைகளுக்கும் நடுவே கொண்டுபோய் என் தேரை நிறுத்துவாயாக” என்று போர்க்களத்தில் அருச்சுனன் சொல்ல அப்படியே அதைக்கேட்டு செய்தான் அன்றோ? அதேபோல இந்த அன்புடைய ஆயர் சிறுமிகள் சொல்லைக் கேட்டுக் கட்டுப்பட்டான் கண்ணன். தன்னுடைய திருப்பாயலிலிருந்து அவன் புறப்பட்டான். சீரிய சிங்காதனம் நோக்கித் தளர் நடையிட்டான்.

அதைக்கண்ட ஆயர் சிறுமிகள் வருந்தினார்கள். தம்மை மறந்தார்கள். அவன் காலுக்கு நோவு வருமே என்று எண்ணினார்கள். பெரியாழ்வாரைப் போலத் தன்னை மறந்தார்கள். அப்படி நடக்கும் அவன் திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள். தந்தை பெரியாழ்வாரை ஒட்டி ஆண்டாள் நாச்சியாரும் இப்பாசுரத்தில் பல்லாண்டு பாடுகிறார். இப்பாசுரத்தையே மங்களாசாஸனப் பாசுரம் என்பார்கள்.

அப்படிப் பாடும்போது அவனுடைய பழைய அருஞ்செயல்களை எல்லாம் நினைத்துப் போற்றுகிறார்கள். அச்செயல்களெல்லாம் புரிந்த எம் கண்ணனுக்கு என்ன நேர்ந்திடுமோ என்றெண்ணிப் பல்லாண்டு பாடுகிறாள் ஆண்டாள். எப்பொழுதோ கண்ணன் நிகழ்த்திய திருவிளையாடல்களை எல்லாம் இப்போது நினைவு கூர்கிறார்கள். நஞ்சீயர் இதை “கதே ஜலே சேதுபந்தம் தகப்பனருக்கும் மகளுக்கும் பணி” என்பார். அதாவது ஆற்றிலே தண்ணீர் சென்ற பிறகு அணை கட்டுவதுபோல முன்பு செய்த செயல்களை எண்ணி எண்ணி அதற்கு இப்போது பல்லாண்டு பாடுவது ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வாருக்கும் அவர் மகளான ஆண்டாளுக்கும் தொழில் என்பதாக நஞ்சீயர் மொழிகிறார். கண்ணபிரான் மீது இவர்கள் கொண்ட அன்பின் மிகுதியால் ஏற்பட்ட கலக்கமே காரணமாக இவர்கள் பல்லாண்டு பாடுவதாகக் கொள்ளலாம்.

கடந்த பாசுரத்தில் இவர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கேற்ப கண்ணனெம்பெருமான் சீரிய சிங்காசனத்தில் அமர நடந்து வருகிறான். அவன் நடையழகைக் கண்டு களிக்கிறார்கள். அவன் திருவடிகள் நொந்துபோகுமே என்று அன்பினால் மனம் வருந்தி அத்திருவடிகளுக்கு “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று பாடுகிறார்கள். வாமன அவதாரமாய்த் தோன்றி திருவிக்ரம அவதாரமாய் வளர்ந்த விருத்தாந்தத்தைப் போற்றுகிறார்கள்.

திருப்பாவையில் மூன்று இடங்களில் நாச்சியார் உலகம் அளந்த பெருஞ்செயலை நினைவு கூர்கிறார். மூன்றாம் பாசுரத்தில், “ஓங்கி உலகளந்த” என்றும், பதினேழாம் பாசுரத்தில், “அமபரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த” என்றும், இப்பாசுரத்தில் அன்று இவ்வுலகம் அளந்த” என்றும் அருளிச் செய்கிறார்.

எம்பெருமானின் திருவடி பிராட்டிமார் தொட்டாலே சிவக்கும்படியான மென்மை பொருந்தியது. அத்திருவடியானது காடு மேடுகளையெல்லாம் அக்காலத்தில் அளந்தது. அன்று அத்திருவடிகளுக்கு யாரும் பல்லாண்டு பாடவில்லை. தேவேந்திரனோ தனக்கு ராஜ்ஜியம் கிடைத்தது என்றதும் போய்விட்டான். மகாபலியோ பாதாளலோகம் போய் அமர்ந்து விட்டான். அவ்வளவு பெரிய அருஞ்செயல் புரிந்த உன் திருவடிகளுக்கு யாருமே அன்று பல்லாண்டு பாடவில்லை. எனவே இன்று நாங்கள் பாட வந்தோம் என்கிறார்கள் ஆய்ச்சியர் சிறுமிகள்.  அந்தக் காலத்தில் உலகத்தை எல்லாம் அளந்து எடுத்துக் கொண்டு உன் பரத்துவத்துதைக் காட்டினாயே. அந்தத் திருவடிக்குப்போற்றி என்று பாடுகிறார்கள்.

“மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை

மலர்புரையும் திருவடியை வணங்கினேனே”

என்பார்  திருமங்கையாழ்வார். கண்ணன் பிருந்தாவனத்தில் தன் திருவடிகளைப் பதித்து விளையாடி வருகின்றானாம். அப்பொழுது மணலில் அவன் திருவடிகளில் உள்ள சங்கு சக்கர ரேகைகள் படிகின்றனவாம். இதைப் பெரியாழ்வார்,

”ஒருகாலிற்சங் கொருகாலிற் சக்கரம்

உள்ளடி பொறித்தமைந்த,

இருகாலுங் கொண்டங்கங் கெழுதினாற்போல்

இலச்சினை படநடந்து”

[பெரியாழ்வார் திருமொழி 1.8.6]

என்று அருளிச் செய்வார்.

”மகாபலியால் அபகரிக்கப்பட்ட உலகம் நோவுபட்டுக் கிடந்ததே அன்று; உன்னைப் பிரிந்ததால் நோவுபட்டுக் கிடக்கிறோம் இன்று; உலகை மகாபலியின் பிடியிலிருந்து மீட்டாய் அன்று; எங்களை ஸ்தீரி அபிமானத்திலிருந்து மீட்பாய் இன்று; உலகை அளந்து இந்த உலகுக்கெல்லாம் திருவடிகளைத் தூளிதானம் செய்தாய் அன்று; உன்னுடைய அழகையும், குணத்தையும் தூளிதானம் செய்வாய் இன்று” என்றெல்லாம் போற்றுகிறார்கள்.

மேலும் ”பெருமானே! அன்று இவ்வுலகை அளந்த காலத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்றில்லாமல் எல்லார் தலையிலும் உன் திருவடிகளை வைத்து அருள் செய்தாய். உன்னிடத்தில் தலைசாய்க்க மாட்டோம் என்றிருந்தவர்கள் தலையிலே கூட பலாத்காரமாக உன் திருவடிகளை வைத்தாயே! இன்று உன்னையே வேண்டி நோன்பு நோற்கும் எம் தலையிலே உம் திருவடிகளை வைத்தால் ஆகாதோ?” என்று கேட்கிறார்கள்.

இவ்வுலகம் வன்மையானது. உன் திருவடியோ மென்மையானது. “வன்மா வையமளந்த வாமனா” என்கிறார் ஆழ்வார். உன்மீது அன்புள்ளவர்கள், “படிக்களவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கணியாய்” என்றும் “அடிச்சியோம் தலைமிசை நீயணியாய் ஆழியங்கண்ணா உன் கோலப்பாதம்” என்றும் அன்றோ விரும்புகின்றார்கள்! ஆனால் உன்னை விரும்பாதவர்க்கும் உன் திருவடி சம்பந்தம் ஏற்படுத்தினாயே? அது சரி; தாய் தன் குழந்தையின் விருப்பத்தை எதிர்பார்த்தா அணைக்கிறாள்? இந்த உன் செயலைத்தான் நம்மாழ்வார்,

”கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்றோர்

எண்தானு மின்றியே வந்தியலுமாறு

உண்டானை உலகேழும் ஓர் மூவடி

கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே”

என்று அருளிச் செய்கிறார்.

”செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்று தம் தந்தையான பெரியாழ்வார் பாடியபடியே நாச்சியாரும் பல்லாண்டு பாடுகிறார். அன்று உலகை அளந்தபோது கூட நீ இரண்டடிகள்தாம்  இட்டு நடந்தாய்; ஆனால் இன்று எங்களுக்காக பத்தெட்டடி நடக்கவேண்டியதாயிற்றே என்று சிறுமிகள் கலங்குகிறார்கள். குழந்தைக்குத் தாய்முலை போல உன் திருவடியானது உன்னுடைய அடியார்களுக்கு உரியதென்று முதலில் அத்திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள்.

அடுத்து, “சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி” என்கிறார்கள். இராமாவதார விருத்தாந்தத்தை இப்போது கூறுகிறார்கள். திரிவிக்ரம அவதாரத்தில் எம்பெருமானின் பரத்துவம் தெரிந்தது. ஆனால் மனிதனாகவே வந்து படாத துன்பங்கள் பட்டதை இப்போது பாடுகிறார்கள். மேலும் இலங்கையை வென்ற தோள்வலிமையைப் போற்றுகிறார்கள். கம்பர் இராமபிரானின் தோளழகை “தோள் கண்டார் தோளே கண்டார்’ என்று பாடுவார். அவனுடைய தோளழகுக்கு ஆட்படாதவர் யாருமில்லை. அப்படி அவன் தோளழகுக்கு இலக்காகாதவரை அவன் அம்புக்கு இலக்காக்குகிறான்.

உலகளந்த செயலானது இருந்த இடத்திலேயே செய்த அருளிச் செயலாகும். ஆனால் இலங்கையை வெல்லக் காடு மேடெல்லாம் நடந்த அவதாரத்தைக் கூறுகிறார்கள்.  கொடிய கானகத்தில் “பரல் பாய மெல்லடிகள் குருதி சோர” நடந்துதானே இலங்கைக்குச் சென்றான்? அதை நினைத்து இப்போது கூட இந்த ஆயர் சிறுமிகள் “எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ?” என்று வருந்துகிறார்கள். ’சென்றங்கு’ என்பது புலியின் குகையினுள்ளேயே சென்று அப்புலியை வெல்வதுபோல இராவணனின் இலங்கைக்குச் சென்று அவனை வென்றதைக் குறிக்கும். அங்கு சென்று என்பது  வெல்ல முடியாத கர, தூஷணர்களை வென்று, கடக்க முடியாத கடலை கடந்து இலங்கைக்குச் சென்றதைக் குறிக்கும்.

அப்படிப்பட்ட இலங்கைக்குச் சென்று அவ்விலங்கையை வென்ற திறலைப் போற்றிப் பல்லாண்டு பாடுகிறார்கள். ஏனெனில் அவன் திறலைக் கண்டு அனைவருமே வியந்துள்ளனர். “வ்யக்தமேஷ மஹாயோகீ” என்று மண்டோதரியே அவன் திறலைப் பார்த்து அதிசயிக்கிறாள். மேலும்,

”கல்லாதரிலங்கை கட்டழித்த காகுத்தனல்லால் ஒரு தெய்வம் யானிலேன்” என்று திருமழிசையாழ்வாரும்,

”சிலையினால் இலங்கை செற்ற தேவனை தேவனாவான்” என்று தொண்டரடப்பொடியாழ்வாரும் அவன் பெருமையைப் போற்றுகின்றனர். ”நல்லதோர் பகையை நானே தேடிக்கொண்டேன்” என்றல்லவா இராவணனே கூறுகிறான்.  திருமங்கையாழ்வார்,

“இலங்கை மன்னன் முடியொருபதும் தோளிருபதும் போயுதிரத் தாள் நெடுந்திண் சிலை வளைந்த தயரதன் சேய் தனிச்சரண்” என்று போற்றுகிறார். பொய்கையாழ்வாரோ,

“நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரணழிய முன்னொருநாள் தன் வில் அங்கை  வைத்தான் சரண்” என்று அருளிச் செய்கிறார்.

“ஈரைந்தலையான் இலங்கையை ஈடழித்த கூரம்பனல்லால்—இலைதுணை” என்று திருமழிசையாழ்வாரும், “தயரதற்கு மகன்தனையன்றி மற்றிலன் தஞ்சமாகவே” என்று நம்மாழ்வாரும் அருளிச் செய்கின்றனர். எனவே பிராட்டிகாகப் பாடுபட்ட உன் திறலுக்கு எந்த்த் தீங்கும் நேர்ந்துவிடக் கூடாது எனப் பல்லாண்டு பாடுகின்றனர்.

இதைக்கேட்டு கண்ணன் வருத்தம் அடைந்தான். ஏன் தெரியுமா? எப்போதோ நடந்தவற்றுக்குப் பல்லாண்டு பாடுகிறார்களே? நான் இந்த அவதாரத்திலே ஒன்றும் செய்ய வில்லையா என நினைத்தானாம். உடனே இவர்கள் கண்ணனே! அதை சொல்லத்தானே நாங்கள் வந்திருக்கிறோம் என்று கூறி விட்டு கிருஷ்ணாவதார அருளிச் செயல்களை இப்போது பாடுகிறார்கள். முதலில், ”பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி! என்று பல்லாண்டு பாடுகிறார்கள்.இவ்விடத்தில் நஞ்சீயர் பட்டரிடம் ஓர் ஐயம் கேட்டதாகக் கூறுவார்கள்.

”நம்முடைய ஆழ்வார்கள் யாவருமே இராமாவதாரத்தைக் காட்டிலும் கிருஷ்ணாவதாரத்திலேயே அதிகமாக ஈடுபட்டு மங்களாசாசனம் செய்திருகிறார்கள். ஏன்? இதற்குக் காரணம் யாதோ?”

அதற்கு “இராமவதார காலத்தில் அவருக்குத் தந்தையாக  வாய்த்தவர் தசரத மகா சக்ரவர்த்தி; மகா சமர்த்தர். பத்துத் திக்கிலும் ரதமோட்டியவர். ஊரோ அயோத்தி; நம்மாழ்வார் நற்பால் அயோத்தி என்பார். குலகுருவோ மகாவசிட்டர்; குடிமக்களோ நல்ல குணம் மிக்கவர்கள்; ஆனால் கிருஷ்ணாவதாரத்திலோ தந்தையோ மிகவும் சாது. அதுவும் இடையர்; ஊரோ இடையர் சேரி; எதிரிகள் உண்டு; தொட்ட தெல்லாம் கன்று காலிகள் விளாமரங்கள், பறவைகள் எல்லாம் ராட்சஸர்கள். இங்கே மங்களாசாசனம் கண்டிப்பாய்ச் செய்தாக வேண்டும். எனவேதான் ஆழ்வார்கள் இங்கேயே ஆழ்ந்து ஈடுபட்டனர்” என்று பட்டர் விடையிறுத்தாராம்

அதனால் பெரியாழ்வார் ”பிறந்த எழுதிங்களில்” என்று அதிசயித்தபடி மிகச்சிறுவனாய் இருந்தபோது உண்டான ஆபத்துக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள்.

இந்த சகடாசூர வதத்தைப் பூத்தாழ்வார்

”வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்

வழக்கென்று நீமதிக்க வேண்டா—குழக்கன்று

தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே

பார்விளங்கச் செய்தாய் பழி”

என்று அருளிச் செய்வார். ’கள்ளச்சகடம் அழித்தொழியக் காலோச்சி’ என்று ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் பாடுவார். இதற்குப் பொருள் கூறவந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் “மார்விலிருக்கிறவளோடு மண்ணில் கிடக்கிறவர்களோடு வாசியற பழிகேடன் என்று சொல்லும்படியிறே செய்த தீம்பு” என்று அருளிச் செய்வார்.

இராமாவதாரத்திலே இராவணன் எதிரி என நேரே வந்தான். அதுவும் இராமன் இளைஞனாக இருக்கும்போது வந்தான். ஆனால் இங்கோ கிருஷ்ணன் சிறு குழந்தையாக இருக்கும்போதே சகடாசூரன் வண்டிச் சக்கரமாய் வந்தான். அதுவும் தாயே காப்பாய் வைத்த சகடம். அதுவே கண்ணனுக்குத் தீம்பு நினைக்கக் கண்ணன் தன் திருவடிகளால் அதை உதைத்துத் தள்ளினான். அப்போது அத்திருவடிகளுக்கு யாரும் பல்லாண்டு பாடவில்லை. எனவே இவர்கள் இப்போது பாடுகிறார்கள். ’பொன்ற’ என்பதற்கு’ இராமாவதாரத்தில் சூர்ப்பநகையையும், மாரிசனையும் குற்றுயிராக விட்டது போல அன்றி அச்சக்கரம் பொடிப் பொடியாகப் போகும்படிக்கு உதைத்துத் தள்ளினாராம். இது பின்னாலே கம்சனை உதைக்க முன்னாலே எடுத்துக் கொண்ட சோதனையாம்.

திருவாய்மொழியில் இது “ தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாய்ப் பிளந்து  வீயத்திருக்கக் காலாண்ட பெருமாளே!” என்று கூறப்படும். அதுவும் தனக்கு அன்று பால்குடிக்க நேரமாயிற்றாம். அதனால் முலைவரவு தாழ்த்ததென்று உதைத்த உதை இவனை முடித்ததென்றாயிற்றாம். உதைத்தபோது திருவடிகளில் தழும்பு உண்டாயிற்றாம். இராமாவதாரத்தில் வில் பிடித்து தழும்பு உண்டானதுபோல கிருஷ்ணாவதாரத்தில் சகடம் உதைத்துத் தழும்பு உண்டாயிற்றாம். அது என்ன புகழ் போற்றி என்றால் பெற்றதாயும் கூட உதவாதபோது தானாகவே உதைத்துத் தள்ளிய புகழ். அதனால்தான் தலைவி மடலேறும்போது இதைப் பாடுகிறாள். “ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் என்னை  நிறைகொண்டான்” என்பது அவள் குரல். இப்படி பிறருக்குப் பாதுகாப்பாய் இருக்கக் கூடிய அவன் திருவடி அவனுக்கே பாதுகாப்பாய் ஆயிற்று.

இந்த இடத்தில் பயங்கரம் அண்ணங்காச்சாரியார் சுவாமி ஒன்று கூறுவார். கண்ணன் சகட பங்கம் செய்ததைப்போல் ஆச்சாரியாரும் செய்வார் என்பது அவர் விளக்கம். அதாவது சகடம் என்பது ஓரிடம் கொண்டுபோய் சேர்க்கக் கூடியது. ஆனால் அது எல்லாரையும் ஒரே மாதிரிதான் சேர்க்கும். ஆனால் ஆச்சாரியாரோ அவரவர்க்குத் தக்கபடி கொண்டுபோய்ச் சேர்ப்பார். ஆக இவரும் சகட பந்தம் செய்வார் என்பது சுவாமிகளின் விளக்கம்.

மேலே சொன்ன சகடாசூர வதம் ஒன்றும் அறியாத சிறு குழந்தையாக இருந்த போது செய்ததாகும். கண்ணன் வளர வளர அவனுக்கு ஆபத்துகளும் வந்து கொண்டே இருந்தன. அடுத்து வந்த ஆபத்தை நீக்கியதை ஆய்ச்சிமார்கள் “கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி” என்று மங்களாசாசனம் செய்கிறார்கள்.

அப்போதாவது ஒருவன் வந்தான்; இப்போது கண்ணனை மாய்க்க இரண்டு அசுரர்கள் வந்தார்கள். ஒருவன் பெயர் கபித்தாசுரன்; மற்றொருவன் வத்ஸாசுரன். இவர்களில் கபித்தாசுரன் என்பவன் ஒரு விளாமரமாய் நின்றிருந்தான். வத்ஸாசுரனோ ஒரு பசுங்கன்றாக மாறி பசுக்கூட்டத்தில் கலந்துசென்று காலம் பார்த்திருந்தான். கண்ணன் இவர்களை அறிந்தான். எனவே அவன் இருவரையும் ஒருங்கே முடிக்கத் தீரமானித்தான். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல அவர்களில் ஒருவரைக் கொண்டே மற்றொருவரை அழித்து இருவரையும் மாய்த்தான். அதாவது அந்தக் கன்றாய் இருந்த வத்ஸாசுரனைத் தூக்கி விளாமரத்தின் மேல் எறிந்தான். அதுவும் எப்படி எறிந்தானாம். ’குணிலா’ என்றால் எறிதடி என்று பொருளாகும். ஒரு எறிதடிபோல் அந்தக் கன்றினை எறிய அதுவும் மாண்டு மரமும் முறிந்தது.

இந்த வரலாற்றை ஆழ்வார்கள் பலரும் அனுபவித்துள்ளனர். நம்மாழ்வார்,

”வானோ மறிகடலோ மாருதமோ தீபகமோ

கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால்—ஆனீன்ற

கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்

வந்துயரை ஆவா மருங்கு”

என்று அருளிச் செய்கிறார்.   பெரியாழ்வாரோ,

”கன்றினுருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரர் தம்மைச்

சென்று பிடித்துச் சிறுகைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்

என்றுமென் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்ஙனமாவார்களே”

என்று போற்றுகிறார். பூதத்தாழ்வார்,

”விளவின்காய் கன்றினால் வீழ்ந்தவனே! என்றன்

அளவன்றால் யானுடைய அன்பு” என்று அருளுகிறார். பொய்கையாழ்வார் இன்னும் ஒருபடி மேலேபோய் நரக வாசலில் புகாமல் இருக்க இச்செயலை அனுபவிப்பார்.

‘இனியார் புகுவார் எழுநரக வாசல்

முனியாது மூரித்தான் கோமிந்—கனிசாயக்

கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு”

என்பது அவர் அருளிச் செயலாகும். இங்கு ஓர் ஐயம் எழலாம். கன்றினைத் தூக்கி அடித்ததோ திருக்கையாகும். ஆனால் ஆண்டாள் நாச்சியார் கண்ணனின் திருக்கரங்களுக்கு மங்களாசாசனம் செய்யாமல் ‘கழல் போற்றி’ என்று திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடுகிறார்களே? இது சரியா?  சரியாம். ஏனென்றால் கன்றுக்குட்டியைத் தூக்கிச் சுழற்றியபோது வளைத்துக் கொண்டு நின்ற அந்தத் திருவடியின் அழகுக்குக் கண் பட்டு விடுமே என்று பல்லாண்டு பாடுகிறார்கள். ”எப்போதும் நம் நோக்கு பெருமானின் திருவடியிலேயே இருக்க வேண்டும் என்பது ஆண்டாளின் அபிப்பிராயம்” என்று முக்கூரார் மொழிவார். அதுவமன்றிக் கழல் என்பது பெருமானின் காலில் அணிந்திருக்கும் ஆபரணமாகும். அதற்குப் பல்லாண்டு பாடுவதாகவும் கொள்ளலாம்.

அடுத்து கோவர்த்தன கிரியைத் தூக்கிய விருத்தாந்தத்தைப் போற்றுகிறார்கள். உலகை அளந்தது தேவர்களுக்காக; தென்னிலங்கை செற்றது தன் தேவியை மீட்பதற்காக; ஆனால் குன்று குடையாய் எடுத்தது ஆயர்களையும் அவர்களின் கன்றுகாலிகளையும் காப்பதற்காக. பகவான் தம் சர்வாத்ம பாவத்தைக் காட்ட ஆயர்கள் இந்திரனுக்கிடும் சோற்றைக் கோவர்த்தன மலைக்கிடச் செய்து  தானே அம்மலையினுள் மறந்திருந்து இந்திரனுக்கிடும் சோற்றைத் தானே உண்டான். அவனுடைய பொருளைத்தானே அவன் உண்டான் என்று இந்திரன் சும்மா இருக்காமல் கோபம் கொண்டான். தொடர்ந்து ஏழு நாள்கள் ஆயர்பாடியில் கல்மழை பெய்வித்தான்.

ஆயர்கள் நடுங்க அவர்களைக் காக்க கோவர்த்தன மலையை ஒரு குடைபோல் பிடித்தான் கண்ணன். இந்திரன் கை சலித்துக் கல்மழையை நிறுத்தும்வரை அந்த மலையைக் குடையாகப் பிடித்த குணத்திற்குப் பல்லாண்டு பாடுகிறார்கள். என்ன குணம் தெரியுமா?

”பாவம் இந்திரன். அவனுக்குக் கோபம் ஏன் வந்தது? அவனுக்குச் சோறு கிடைக்க வில்லை. எனவே பசியால் கோபம் வந்தது. அதனால் மழை பெய்தான். இவன் உணவைக் கொண்ட நாம் இவன் உயிரையும் கொள்ளக் கூடாது” என அவனை மன்னித்தான். அந்த குணத்திற்குப் பல்லாண்டு பாடுகிறார்கள். “குன்றெடுத்துப் பாயும் பனிமறைந்த பண்பாளா” என்றும்,

”வெற்பை ஒன்றெடுத்து ஒற்கமின்றியே

நிற்கும் அம்மான்சீர் கற்பன் வைகலே” என்று ஆழ்வார்கள் இக்குணத்தில் ஈடுபடுகின்றனர்.

திருமங்கை மன்னன் இதை விசித்திரமாய்க் கூறுவார். ”மென்முலைகள் பொன்னரும்ப நைவேற்கு…….வரைஎடுத்த தோளாளா என்றனுக்கோர் துணையாளனாகாயே” என்பார் அவர். அதாவது ”ஒரு மலையைப் போடச் செய்து அதிலும் கனத்த இரண்டு மலைகளைக் கையிலே கொடுக்க ஆசைப்படாதே அவனுக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள்” என்பார் உ.வே கி. ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமிகள்.

இந்தக் கோவர்த்தனகிரி விருத்தாந்தத்தை நாராயண பட்டத்ரி நாரயணீயத்தில் இப்படி அனுபவிக்கிறார். “கிருஷ்ணா! நீ ஒரு கரத்தால் கோவர்த்தனகிரியைத் தூக்கிக் கொண்டிருந்தாய்; மற்றொரு கையால் அங்கிருக்கும் பசுக்களையும் கன்றுகளையும் ஆதரவாகத் தடவிக் கொண்டிருந்தாய்; உன் திருவாயோ உன் பக்கத்திலே இருந்த கோபிகாஸ்தீரிகளிடம் வாய்வார்த்தை பேசிக் கொண்டிருந்தது. இந்த அதிசய கோலத்தைக்கண்டு அவர்கள் மெய்மறந்திருந்தனர்”

அடுத்து, “வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி” என்று போற்றுகிறார்கள். மழை நின்று விட்ட்து. இப்போது அவன் கையில் வேலைப் பிடித்துக் கொண்டுவிட்டான். எனவே அந்த வேலுக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள். எல்லாப் பெருமைகளையும் வெற்றிகளையும், புகழையும் கண்ணனென்பெருமானுக்கே ஏற்றிச் சொன்னால் கண்ணேறு பட்டுவிடுமே என்று அவனது வெற்றியை அவன் வேலின் மேல் ஏற்றிப் பாடுகிறார்கள். அவனே அழகன். அவன் கையில் வடிவழகான வேலிருந்தால் மங்களாசாசனம் செய்யாமலிருக்க முடியுமா? எல்லா அரசர்களுக்கும் வில் ஆயுதமாகும். ஆனால் இடையர்களுக்கு வேலே ஆயுதமாகும்.

இவன் தந்தையாரே, கூர்வேல் கொடுந்தொழிலன் என்று அல்லவா குறிப்பிடுகிறார். “வேலைப்பிடித்தென் ஐமார்கள்” என்று அல்லவா ஆயர்குடிப்பெருமக்கள் குறிப்பிடுகிறார்கள். வேலைத் திருவாழி என்றும் கொள்ளலாம். எப்பொழுது அவன் திருவாழியை எடுப்பான் என்று ஆறாயிரப்படி கூறும். “தன்னை உணராதே அசத்தியப்ரதிஜ்ஞனாய்ச் சீறினபோது காணும் ஜன்மாந்தரம் மேற்பட்டுத் திருவாழியை எடுப்பது” என்பது அதன் கூற்று. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தன் வார்த்தையைப் பொய்யாக்கி பீஷ்மரை நோக்கிக் கண்ணன் தன் திருவாழியை எடுத்ததை இந்த இடத்தில் கூறுவார்கள்.

பெரியாழ்வார் பெருமாளைக் கண்டவுடன் “சுடராழியும் பல்லாண்டு” பாடினார். அதேபோல இவர்கள் வேல் போற்றி என்கின்றனர். கண்ணன் வேல் ஆகாயம் அளவுக்கு வளர்ந்தது. அதைக் கண்டவுடன் எதிரிகள் முடிந்து விடுவார்களாம். “வெற்புடைய நெடுங்கடலுள் தனிவேலுய்த்த வேள் என்றான்” என்பது வேலின் பெருமையைக் குறிக்கும். இந்த இடத்தில் வேள் என்பது முருகனைக் குறிக்கும். எனவே வேலனையும் வென்ற வேலுக்குப் பல்லாண்டு பாடுகிறார்கள்.

இந்த ஆயர்குடியைச் சேர்ந்தவர்கள் தினம் தோறும் அறுசுவை உணவை உண்ணுவார்களாம். அறு சுவைகள் எது தெரியுமா? இப்பாசுரத்தில் வரும் “அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி” என்பவையே அவை. இப்படி எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்து அவன் சௌக்கியமாய் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பதே இவர்களின் சேவகமாகும். அந்தச் சேவகமே போதும் என்ற மனம் உடையவர்கள் இவர்கள்.

”கண்ணா! நீ ஒருவனன்றோ எம் எதிரிகளை அகற்றும் வீரமுடையவன்; அதை ஏத்திப் பறை கொள்ள வந்தோம்” என்கிறார்கள். அதாவது ஏத்துவது இவர்களுக்குப் பலன்; பறை கொள்வது ஊரார்க்குப் பலனாகும். இன்று யாம் வந்தோம் என்கிறார்கள். ”இன்றுதான் வர எமக்கு இசைவு தந்தார்கள். நாளை வர விடுவார்களோ? தெரியாது. நீ உறங்கிக் கொண்டிருக்க நாங்கள் உறங்காத நாளாம் இன்று வந்தோம். உறவினரும் மற்றவரும் நெடுநாள்கள் எம்மைத் தடுத்திருந்தனர். இப்போதும் எம்மை வாட்டும் குளிரும் விரகதாபமும் நீங்க வந்துள்ளோம்” என்கிறார்கள். ”வந்தோம் என்பதே கண்ணா! உன்னைப் புண்படுத்தியது போலாகும் ஏனென்றால் நான் சென்று அடையத் தக்கவர்களைத் தேடி நான் செல்லாமல் அவர்கள் வந்து சேரும்படி இருந்து விட்டேனே என்று நீ கூறினாயல்லவா? நாங்கள் செய்தது உன்னைப் புண்படுத்தினாலும் நீ எமக்கு இரங்க வேண்டும்” என்று இந்தப் பெண்கள் வேண்டுகிறார்கள். அதாவது இதுவரை தாங்கள் பட்ட துன்பமெல்லாம் அவன் கிருபை கிடைத்தால் தீரும் என வேண்டுகிறார்கள்.

இப்பாசுரத்தில் எம்பெருமானின் அறுவகை செயல்கள் மொழியப்படுகின்றன.  ”கண்ணா! நீ இப்படி ஆறுவகை செயல்கள் புரியும் ஆற்றலுள்ளவன். எங்கள் ஆன்மா ஆறுவகைகளில் துன்பப்பட்டுக் கிடக்கிறது. நீ இதைக் கண்டிஎம்மேல் இரங்கி அருள வேண்டும்” என்கிறார்கள் என்றும் கொள்ளலாம்.

அப்படி நம்மைத் துயருள்ளாக்கும் ஆறுவகை விரோதிகளாக இங்கே பலர் காட்டப்படுகின்றனர்

  1. அகங்காரம்—மாபலிச்சக்ரவர்த்தி
  2. மோகம்——- சகடாசுரன்
  3. மாச்சரியம்—-கபித்தாசுரன்
  4. காம்ம்————இராவணன்
  5. லோபம்———-வத்ஸாசுரன்
  6. குரோதம்——-இந்திரன்
  7. இப்படிப்பட்ட ஆறு விரோதிகளிடமிருந்து எம்மைக் காத்து அருள் புரிய வேண்டுமென்று ஆயர் சிறுமிகள் இந்த இருபத்து நான்காம் பாசுரத்தில் வேண்டுகிறார்கள்.
Series Navigationவைரமுத்துவும், முடித்து வைக்கப்பட வேண்டிய ஆண்டாள் ஆராய்ச்சியும்.மகாத்மா காந்தியின் மரணம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *