26. மாலே மணிவண்ணா
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய்
இது திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் ஆகும்.
இப்பாசுரத்திற்குப் பூர்வாச்சாரியார்கள் மிகச்சிறப்பான அவதாரிகை
அருளியிருக்கிறார்கள். கண்ணன் இச்சிறுமிகளிடம் பேசுகிறானாம்.
”சிறுமிகளே! வியாசர் ’சாரீரகமீமாம்ஸை’ என்று பெரிய சாஸ்திரம் எழுதினார். அதுவே பிரம்ம சூத்திரம் ஆகும். அதில் அவர் நான் காரண பூதன் என்று இரு அத்தியாயங்களில் பேசினார். நான் ஆசைப்பட்டு இங்கு வந்து பிறந்ததைப் பற்றிப் பேசவில்லை. புராணங்கள் எழுதிய மகரிஷிகளும் ஏதேதோ சொன்னார்கள்.
நம்மாழ்வார் ஒருவர் மட்டும்தான் தொடங்கும்போதே “உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா” என்று என் பிறப்பு பற்றிப் பேசினார். அதன் பின்னர் நீங்கள்தாம் என் பிறப்பு பற்றிப் பேசினீர்கள். நீங்களும் ஆரம்பத்தில் “யசோதை இளஞ்சிங்கம், நந்தகோபன் குமரன், பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே” என்றீர்கள்.
நேற்றுதான் ’ஒருத்தி மகனாய்ப் பிறந்து’ என்றீர்கள். அதிலும் ஒளித்து வளர என்றீர்கள். நான் கம்சனுக்கா பயந்தேன். அது யசோதை நினைவு; தனியாய்ப் போகாதே என்பாள். அவள் “பொருதிறல் கஞ்சன் கடியன், காப்பாருமில்லை; கடல் வண்ணா உன்னை; தனியே எங்கும் திரிதி” என்பாள். நான் உங்களோடு பொழுது போக்க என் பெருமைகளெல்லாம் ஒளித்து வளர்ந்தேன். தீங்கு செய்த கஞ்சன் என்று சொல்லாமல், தீங்கு நினைந்த கஞ்சன் என்றீர்கள். தீங்கு செய்பவர் வாயினால் அபராதம் செய்தாலோ, கைகளால் அபராதம் செய்தாலோ நான் தண்டிப்பதில்லை. அவன் இதயத்தால் நினைத்திருக்கிறானா என்று ஆராய்வேன். ஆனால் நல்ல காரியம் மட்டும் நெஞ்சால் நினைக்காமல் வாயால் சொன்னாலே போதும்.
மேலும் ‘உன்னை அருத்தித்து வந்தோம் என்றீர்கள். இது நான் கேட்டறியாத பெரிய வார்த்தை; என்னிடத்தில் வேறொன்றை அருத்தித்து வருவார்களே தவிர என்னையே அருத்தித்து வருவாரில்லை’ என்றெல்லாம் கண்ணன் அருளிச்செய்கிறான்.
இப்பாசுரத்தில் ஆயர்குலச் சிறுமிகள் தங்கள் விருப்பத்தைச் சொல்கிறார்கள். முதலில் “சீரிய சிங்காசனத்து வந்து இரு” என்றார்கள். பிறகு ”பறை தருதியாகில்” என்றார்கள். இப்போது தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள்.
கண்ணன் இவர்களிடம், “பெண்களே!, பறை தருதியாகில் என்றும், ஏத்திப் பறை கொள்வான் என்றும், உன்னை அருத்தித்து வந்தோம்” என்றும் சொன்னீர்கள்! உங்கள் பேச்சு குழப்பமாக இருக்கிறது. முதலில் நீங்கள் என்னைக் கேட்டீர்கள்; இப்பொழுதோ பறை வேண்டும் என்கிறீர்கள்; பறை என்றால் என்ன? நீங்கள் ஏன் அதைக் கேட்கிறீர்கள்? அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? பறையின் எண்ணிக்கை ஏதேனும் உண்டோ? அதற்கு என்னென்ன வேண்டும்?” என்றெல்லாம் கேட்டானாம்.
அதற்கு அப்பெண்கள், ”உன்னைக் கண்டால்தான் மழை பொழியும்; எனவே அதற்குக்காரணமாக ஒரு நோன்பை ஆயர்குடிப் பெருமக்கள் எங்களை அனுஷ்டிக்கச் சொன்னார்கள். நாங்கள் அந்த நோன்பை எடுக்க இருக்கிறோம். நம்முடைய முன்னோர்கள் அந்த நோன்பை ‘மார்கழி நீராட்டம்’ எனும் பெயரால் அழைத்துள்ளார்கள். அந்த நீராட்டத்தைச் செய்ய சில உபகரணங்கள் வேண்டும்; அதாவது சங்கங்கள், பறைகள், பல்லாண்டு பாடுவார், மங்களமான தீபங்கள், மேற்கட்டி முதலியன எங்களுக்கு வேண்டும். நீதான் எமக்கு அவற்றைத் தந்தருள வேண்டும்” என்று கேட்பதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.
முதலில் கண்ணனை ‘மாலே’ என்று அழைக்கிறார்கள். ’மால்’ என்பதற்குக் கருமை, பெருமை, அன்பு போன்ற பல பொருள்கள் உள்ளன. கண்ணன் கருப்பானவன்; அவன் கார்மேக வண்ணன்; அவன் மிக்க பெருமை உடையவன். என்ன பெருமை? அதாவது மூவேழு உலகிற்கும் நாதன் எனும் பெருமை அவனுக்கு உண்டு; அவன் பெருமையை யாராலும் அளவிடவே முடியாது. மேலும் அவன் அன்பே வடிவானவன்; தன் அன்பால் யாவரையும் தன் வசப்படுத்திக் கொள்ளும் தன்மையன்;
முதல் பாசுரத்தில் “நாராயணன்” அடுத்து “பையத் துயின்ற பரமன்” அதன்பின் ”தேவாதி தேவன்” என்றார்கள். அவை மேன்மையைக் குறிக்கும். அப்படிப்பட்டவன் இங்கு எளிமையாய் வந்துள்ளதைக் காட்டுவதற்கு ’மாலே’ என்கிறார்கள். கண்ணன் மிகவும் எளிவந்த தன்மை உடையவன்; அதனால்தான் ஆழ்வார் பெருமக்கள் “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” என்றார்கள்.
மேலும் ஆயர்குலச் சிறுமிகள், “கண்ணா, எம் அன்பு உம்மை எழுப்பி சீரிய சிங்காசனத்திற்கு வரச் செய்தது; நோன்பு நோர்க்கவும் இடம் தந்தது. ஆனால் உம் அன்போ உன்னை எழுந்திருக்கவும் செய்யாமல் மயங்கச் செய்ததே; நாங்கள் “நாராயணன்’ என்றும் ’தேவாதி தேவன்” என்றும், “பையத் துயின்ற பரமன்” என்றும் உன்னைக் காணாதபோது உன் மேன்மையைத்தான் நினைத்திருந்தோம். உன்னைக் கண்ட இன்றுதான் நீ அன்பின் திரு உருவம் என்பதை உணர்ந்தோம்;
எம்பெருமான் இராமாவதாரம் எடுத்த காலத்தில் அவரின் சிறந்த குணம் சரணம் அடைந்தோரைக் காத்தலாகும். அதனாலேயே பிராட்டி “சரணாகதவத்ஸல” என்றழைப்பார். ஆனால் மகாபாரத காலத்தில் கிருஷ்ணனாக வந்த போது பெருமானின் குணம் அடியாரைக் காத்தலான அன்பு காட்டுவதாக அமைந்தது. அதைத்தான் இந்தச் சிறுமிகள் ‘மாலே’ என்று காட்டுகிறார்கள். அதாவது அடியார்கள் அவரிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் அவர் பல ஆயிரம் மடங்கு அன்பை அவர்களிடம் செலுத்துவாராம்.
நம்மாழ்வார் முதலில், “காதல் கடலின் மிகப்பெரிதால்” என்பார். அவரே எம்பெருமானை அணுகியதும்,
”வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னையொழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்” என்றும்
”சூழ்ந்ததனில் பெரிய என் அவாவுறச் சூழ்ந்தாயே” என்றும்
அருளிச் செய்தார். அடியார்களின் அன்பெல்லாம் அவர் அருளாலும் அவர் அன்பாலும்தானே தோன்றியது; அதனால்தான் ஆழ்வார் பெருமக்கள்,
”மாலைக்கண்டு மாலுறுகின்றாளே” என்றும்
”மாலாய்ப் பிறந்த நம்பியை, மாலே செய்யும் மணாளனை” என்றும்
”மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்” என்றும்
அருளிச் செய்தார்கள். மேலும் ’மாலே’ என்பதற்கு ”எல்லா அதிகாரமும் படைத்தவனே” என்றும் ”எல்லாவற்றிற்கும் மூலமானவனே” என்றும் கூட பொருள் கொள்ளலாம். மால் என்பது திருமாலையும் குறிக்கும். அவர் திருமால்; அதாவது திருவை உடைய மால்; திருவிடம் மயங்கும் மால்; மால் என்பதற்கு பித்தன் என்றும் கொள்ளலாம். எம்மைப் போன்ற அடியார்களிடம் பித்தாகி அன்பு காட்டுபவன். இப்படி மால் என்பதற்கு நிகண்டு அருமை, பெருமை, மையல், வியோமோகம் என்றெல்லாம் பொருள் கூறுகிறது.
மால் என்பதற்கு ஆறாயிரப்படி எம்பெருமானின் பத்துப் பெருமைகளை விவரிக்கிறது. அவையாவன:
1. ‘உண்டு’ என உயிர் நிற்கை
2. உடையவர் காலிலே ஸர்வரும் விழும்படியாயிருக்கை
3. இழந்தார் பிழையாதொழிகை
4. கைபட்டார்க்குப் பூணலாயிருக்கை
5. பூணாதார்க்கு அழித்து உண்ணலாயிருக்கை
6. கிழிச்சீரையிலே அடக்கலாயிருக்கை
7. பிறர்க்கேயாயிருக்கை
8. அளவுபடாமல் உபகரிக்கை
9. வேறொன்றில் கண் ஒட்டாதொழிக்கை
10. “கொடுத்தோம்” என்று நினைந்திராதொழிக்கை
அதாவது இத்தனை காலம் ஆயர் குடிப் பெண்கள் தாங்களெல்லாம் இந்தக் கண்ணன் மீது ஆசைப்பட்டதாகக் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இவனைக் கண்டதும், இவன் அன்பின் முழு உரு என்பதைப் புரிந்து கொண்டார்கள். அதனால்தான் “பெருமானே! இவ்வளவு பேரன்பை எங்கள் மீது வைத்திருக்கிறாயே? இதை எப்படி அடக்கிக்கொண்டு பள்ளிகொண்டிருந்தாய்?” எனும்பொருளில் மாலே என்றழைக்கிறார்கள். மேலும் ”நாங்கள் உன்னிடம் வைத்துள்ள அன்பு எம்மை நோன்பு நோற்கச் செய்தது. ஆனால் நீ எம்மீது வைத்துள்ள அன்போ உன்னை எழவும் விடாமல் மயங்கச் செய்ததா?” என்று கேட்கிறார்கள்.
இவர்கள் இப்படியெல்லாம் சொன்னவுடன் கண்ணன், “நீங்களெல்லாம் என் பேரன்பை எப்படி அறிந்தீர்கள்” என்று கேட்கிறான். உடனே ”மணிவண்ணா” என்கிறார்கள். அதாவது உன் அன்பு உன்னுடைய வடிவழகால் வெளிப்படுகிறதன்றோ?” என்று சொல்கிறார்கள்.
அவன் மணிபோலும் அழகுள்ளவன்; அதுவும் இந்திர நீலமணிபோல் பிரகாசமான ஒளியை உடையவன்; அக்கல் மிக அழகானது; அதை உடைத்துப் பார்த்தால் உடைபட்ட பாகம் கூட அழகாய் மிளிரும். அதைபோன்றது அவனின் அழகு என்கிறார் ஸ்வாமி தேசிகன். அவர், தன் கோபால விம்சதியில் “ஹரிநீல சிலா விபங்க நீலா” என்று போற்றுகிறார். திருமங்கையாழ்வாரும் “கைம்மான மழகளிற்றைக் கடற்கிடந்த கருமணியை” [பெரிய திருவந்தாதி 5-6-1] என்று அருளிச் செய்கிறார்.
அவன் மணி போன்றவன். மணி போன்ற ரத்தினத்தை மிகச்சிறிய முந்தானையில் கூட முடிந்து கொள்ளலாம். விலை மதிக்கத்தக்க பெருமை உடைய அம்மணி நம் உள்ளங்கையில் அடங்கும். அதுபோல மிகப்பெருமை உடைய பெருமான் தன்னைத் தாழ்த்திக் கொண்டு நம்மிடம் உள்ளே வந்து தங்குகிறான்.
அவனை முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், “புஜங்க காருடமணி; த்ரைலோக்ய ரக்ஷாமணி :” என்று எல்லா லோகங்களையும் ரக்ஷிக்கும் மணி; கோபிஸ்திரீகளான சாதக பக்ஷிக்கு உயர்ந்த தீர்த்தமான மணி; ருக்மணிக்கு ஆனந்தத்தை அளிக்கும் மணி அவன். நம் தோஷங்களைப் போக்கும் சிறந்த ரத்தினம் அவன். அதனால் ‘மணிவண்ணா, என்றழைக்கிறார்கள்” என்று அருளுவார்.
பகவான் ரத்தினம் போன்று ஒளி வீசக் கூடியவன்; அதைபோல தானும் ஒளிர்ந்து பிறரையும் ஒளி பொருந்தியவராக்குவான். ரத்தினம் போன்ற மணியை முடியலாம்; தரிக்கலாம்; விற்கலாம் அனுபவிக்கலாம். அவ்வளவு எளிமையாக. பகவானும் அப்படியே. ரத்தினம் யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. பகவானும் பாக்கியவானுக்கே அருளுவார்.
ரத்தினத்தை வைத்துக்கொண்டிருப்பவருக்கு உறக்கம் வராது. பகவானை அடைந்தவர்க்கும் “உண்டோ கண்கள் துஞ்சுதலே” என்பார் ஆழ்வார். ரத்தினம் மீனவன் கையில் கிடைத்தால் வணிகனிடம் அற்ப விலைக்கு விற்பான். அந்த வணிகனோ அதை அரசனுக்கு உயர்ந்த விலைக்கு விற்பான். அரசனோ அதை போக்யமாக அணிந்து மகிழ்வான். அதேபோல பகவானிடம் சிலர் அற்ப பலன் களை விரும்புபவர்; வேறு சிலர் மோட்சம் போன்ற உயர்ந்த பலன்களை விரும்புபவர். ஆனால் ஒரு சிலர்தாம் அவனை “எனக்குப் பாலே! தேனே! கன்னலே! அமுதே” என்று போக்யமாக அனுபவிப்பர்.
அவன் அழகு எப்படிப்பட்டதென்றால் “பனிமலராள் வந்திருக்கும் மார்வன்; நீலமேனி மணிவண்ணன்” என்று பெரிய பிராட்டியையும் மயக்கும் வடிவழாகும். மேலும் யசோதைப்பிராட்டி “என் மணிவண்ணனைக் கன்றின் பின் அனுப்பினேனே” என்று இரங்குவதாகப் பெரியாழ்வார் அருளுவார்.
“என்றும் எனக்கினியான என் மணிவண்ணனைக்
கன்றின்பின் போக்கினேனே” [3-2-1] என்பது அவர் அருளிச் செய்வதாகும்.
இவற்றையெல்லாம் கேட்ட கண்ணன் கேட்கிறான். “சரி, நான் என் தாய்க்கு மணிவண்ணனாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் நான் உங்கள் வடிவழகுக்கு நேர் நிற்க இயலுமோ? நீங்கள் வந்த காரியம் என்னவென்று சொல்லுங்கள்”
உடனே அந்தப் பெண்கள் “மார்கழி நீராடுவான்” என்கின்றனர். அதாவது முதல் பாசுரத்திலியே “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்” என்று அந்த ஊருக்காகத் தாங்கள் செய்ய முனைந்த நோன்பைக் கூறுகின்றனர். இந்நோன்பே அவர்களுக்காக மட்டுமன்று. அந்த ஆயர்குடிக்காக; இன்னும் சொல்லப்போனால் இந்த வையகத்துக்காகவும் ஆகும்.
மார்கழி நீராடல் என்பது சாதனம் [உபாயம்]. அதனால் பெறும் பயன் சாத்யம் [கிருஷ்ணன்] அவனையே உபாயமாகப் பற்றினால் கூட ஒவ்வொருவரும் தத்தம் கருமங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பதைக் காட்டும் இடம் இது.
கண்ணன் இவர்கள் சொல்லும் வார்த்தையைச் சிறிது நேரம் கேட்க வேண்டுமென ஆசைப்படுகிறான். எனவே அவர்களுடன் வார்த்தையாடுகிறன்.
“இதென்ன புதிதாக இருக்கிறது? நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே? நீங்கள் கேட்டதற்குப் பிரமாணம் ஏதும் உண்டா? வேதங்களிலோ, சாஸ்திரங்களிலோ இது சொல்லப்பட்டிருக்கிறதா?”
உடனே இவர்கள், “கண்ணா! நீ சொன்ன வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றை விட மேலான பிரமாணம் ஒன்று உள்ளது. அதுதான் மேலையார் செய்வனகள் என்பது. அதாவது நீதி தர்மம் அறிந்த மேலோர்களின் ஆசாரமே பிரமாணமாகும். தர்மம் அறிந்த அறிந்த மேலையார்கள் என்ன நற்செயல்களை செய்கிறார்களோ, அதையே இந்த வையமும் செய்கிறது. ஞானவானின் வாசகத்தையும், கர்மங்களையும் பிரமாணமாகக் கொள்ளவேண்டும். ”சந்தேகம் வரும் இடங்களில் முன்னோர்கள் செய்ததைச் செய்யுங்கள். சிஷ்ட ஆசாரமே ஸ்திரப் பிரமாணம்” என்று அன்று தேர்த்தட்டில் சொன்னாயே! ஒரு விதிகொண்டு ஒரு கருமம் செய்தால் பலனடையும்வரை சந்தேகம் இருக்கும். ஆனால் சிஷ்ட ஆசாரம் என்று செய்து பிறர் பலன் அடைவதைக் கண்டிருப்பதால் சந்தேகமே இருக்காது. அதனால்தான் வேதமும் மனு சொன்னார்; வியாசர் சொன்னார்; என்றெல்லாம் சொல்கிறது” என்று தம் கருத்தை விண்ணப்பிக்கிறார்கள்.
”நமது முன்னோர்களாகிய பெரியவர்கள் செய்தவற்றை நாம் செய்ய வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அந்தந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் எதெது வழக்கமோ அதைச் செய்ய வேண்டும் அதற்குப் புறம்பாக எவற்றையும் செய்யக்கூடாது” என்பது இங்கு விளக்கப்படுகிறது.
”நீ சாஸ்திரத்தைக் கூடப் பின்பற்ற வேண்டாம். உன் பரம்பரையில் உனக்கு முன்னோர்கள் செய்ததை நீ செய்வாயாக” என்கிறார் ஆண்டாள் நாச்சியார். ஆனால் பெரியோர்கள் செய்த எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியுமா எனும் ஐயம் தோன்றலாம். பாஷ்யகாரர் கீதாபாஷ்யத்துக்கு உரை எழுதும்போது “யத் ப்ரமாணம்’ என்பதற்குப் பொருள் கூற வருகிறார். அப்போது அவர் நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதும் என்கிறார். அவரின் வியாக்கியானதிற்கு நாச்சியாரின் ‘மேலையார் செய்வன வேண்டுவன் கேட்டியேல்’ என்று திருப்பாவை அடியே உதவியது. வேண்டுவன என்றால் நம்மால் எவ்வளவு முடியுமோ அதைத்தான் செய்ய வேண்டும். அதனால் பெரியோர்கள் செய்ததற்கு முரண்பாடாக இல்லாமல் மிகவும் ஜாக்கிரதையாக யோசித்து அனுஷ்டாங்களை எல்லாம் பெரியோர்களை அனுசரித்தே செய்ய வேண்டும்.
ஏன் ”கேட்டியேல்” என்கிறார்கள். ”எம் நோன்பிற்காக என்னென்ன உபகரணங்கள் வேண்டும்? என்று நீ காது கொடுத்துக் கேட்பாயானால்” என்பது பொருளாகும். ஏன் கேட்கமாட்டான் என்ற சந்தேகமா? என்றால் ஆமாம்; அவன் இவர்களது வடிவழகில் ஈடுபட்டிருக்கிறான். அதனால் நீ கேட்பாயானால் என்றுறுரைக்கிறார்கள். மேலும் கொடுப்பவனே கேட்பது சிறப்பன்றோ? சற்று கூடக் கேட்கலாமே? ஐந்து லட்சம் ஆயர் குடிகளின் அன்பால் கட்டுண்டு மெய்மறந்து கிடந்தவன் இப்போதுதானே கேட்கிறான்.
அவன் இப்போது, “உங்கள் பேச்சு இனிமையானது; “மதுரா; மதுராலாயா” என்று புகழப்பெற்றவர்கள் நீங்கள். சரி; என்ன வேண்டும் சொல்லுங்கள்” என்று கேட்டு அருளுகிறான்.
முதலில் சங்கினைக் கேட்கிறார்கள். “கண்ணா! இந்த உலகமெல்லாம் நடுங்கி அதிரும்படியான முழக்கத்தை உடைய பால் போன்ற வெண்ணிற நிறத்தைக் கொண்ட உன் பாஞ்ஜசன்யம் போன்ற போன்ற பல சங்கங்கள் வேண்டும்” என்பது அவர்களின் வேண்டுதலாகும்.
குருக்ஷேத்திர யுத்த களத்தில் கண்ணன் தன் பாஞ்சன்யம் என்ற சங்கினை எடுத்து முழங்கியபோது துரியோதனாதியர் மனமெல்லாம் நடுங்கியதாம். அது மட்டுமன்று; அந்த ஒலியானது உலகில் உள்ள அசுரர்களுக்கெல்லாம் பயாக்னியை மூட்டியதாம். எம்பெருமானிடம் பற்று வைக்காதவரெல்லாம் நடுங்கினார்களாம். அதைத்தான் “பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை வாய் வைத்த போரேறே!” என்பார்கள் ஆழ்வார் பெருமக்கள்.
மேலும் “பூங்கொள் திருமுகத்து மடுத்துதூதிய சங்கொலியும் சார்ங்க வில் நாணொலியும் தலைப்பெய்வதெஞ்ஞான்றுகொலோ” என்று சங்கின் ஒலியைச் செவிமடுக்க அடியார்களெல்லாம் ஆசை வைத்திருப்பார்கள். நாச்சியார் நான்காம் பாசுரத்தில் ’வலம்புரிபோல் நின்றதிர்ந்து’ என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. மேலும் உலகங்கள் எல்லாவற்றிலும் பெரியது அவன் சங்கே! ’பாரதி பெரிதினும் பெரிது கேள்’ என்று சொன்னபடி இவர்களும் பெரிய சங்கினைக் கேட்கிறார்கள். சங்குதான் எம்பெருமானின் வாய்ச்சுவையை அறியும் பாக்கியம் பெற்றது. அதனால்தான் நாச்சியார் திருமொழியில்,
”கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!” என்று ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்கிறார். மேலும் கண்ண பெருமானின் எல்லா தேவிமார்களும் பார்த்திருக்க நீ அவனுடைய வாயமுதம் உண்கிறாயே?”என்று கேட்டு சங்கோடு ஊடுவதாகவும் ஒரு பாசுரம் உள்ளது.
”பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு செல்வப்பெருஞ்சங்கே” என்பது
நயமான பாசுரமாகும். நாச்சியார் திருமொழியில், சங்கினுக்குப் ‘பாஞ்சசன்யம்’ எனும் திருநாமம் ஏன் வந்தது என்பதைக் காட்டும் பாசுரம் இது:
”கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்து
இடரில் குடியேறித் தீய அசுரர்
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே”
”எந்தச் சங்கானது முழங்கும்போது சங்கரனுடைய சூலம் கையிலிருந்து கீழே விழுகிறதோ, பிரம்மதேவனும் நடுங்கி நாராயணனைத் துதிக்கிறானோ, அந்தப் பாஞ்சன்யம் நம்மைக் காப்பாற்றட்டும்” என்றபடிக்குப் பெருமை கொண்ட சங்கைக் கேட்கிறார்கள். அவன் அழகை மணிவண்ணன் என்று சொன்னதால் அவன் கையிலிருக்கும் சங்கின் வண்ணத்தைப் பால் வண்ணம் என்றுரைக்கிறார்கள். மேலும் அவன் சங்கினைக் கேட்டால் அவன் தனது பாஞ்சசன்யத்தினை எப்போதும் பிரிய மாட்டான் எனவே அவனும் வருவான் என்று அதைக் கேட்டார்களாம். “போய்ப்பாடுடையன” என்பதற்குப் பெரிய இடத்தை உடையது; புகழை உடையது என்று பொருள் கொள்ளலாம். இதைப் பறைக்கும் சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்து “எமக்குப் பெரிய பறை வேண்டும்” என்று கேட்கிறார்கள். முதலில் இவர்கள் தாங்கள் கிளம்பி வருவதைத் தெரிவிக்க முழங்க சங்கைக் கேட்டார்கள். அடுத்து போகும்போது ஒலித்துக் கொண்டே போக பறை எனும் வாத்யத்தை வேண்டுகிறார்கள். ’நமக்கே பறை தருவான்’ என்றும், ‘ஏத்திப் பறை கொள்வான், என்றும் முன்பு சொன்னதெல்லாம் ஊராருக்காகத் தாங்கள் பெற விரும்பிய பறை என்று காட்டுகிறார்கள்.
கண்ணன் மேலும் என்ன வேண்டும் என்று கேட்க, “வேதங்களையும் அருளிச் செயல்களையும் இசையோடு பாடக்கூடிய பாகவதர்களான பல்லாண்டிசைப்பவர்கள் வேண்டும்” என்கிறார்கள். நாங்கள் ஒருவரையொருவர் கண்டு மகிழ்வதற்கு மங்களகரமான தீபம் வேண்டுமென “கோலவிளக்கு” கேட்கிறார்கள். ”அருகில் இருப்பவரைக் கண்டுகொள்ள விளக்கு போதும்; தொலைவில் இருப்பவரும் நாங்கள் வருவதை அறிந்து கொள்ள எமக்கு முன்னே பிடித்துச் செல்லக் கொடி ஒன்று வேண்டும்” என்று கேட்கிறார்கள். “இது மார்கழி விடியற்காலம்; எனவே எம் தலைமீது பனிவிழாதபடி தடுக்கும் படியாய் ஒரு மேல் விதானம் வேண்டும்” என்று கேட்கிறார்கள்.
இப்படியெல்லாம் இவர்கள் கேட்ட பின்னர் கண்ணனெம்பெருமான், தம் பாஞ்சசன்னியத்தைக் கொடுத்தான். காமன் மகன் அநிருத்தனைத் தன் மகள் உஷை காரணமாக வாணாசூரன் சிறை வைத்தான். அவனின் ‘சோ’ எனும் நகரத்து வீதியில் குடக்கூத்தாடியபோது இடுப்பில் கட்டிக்கொண்ட பறையினை கண்ணன் அவர்களுக்கு அளித்தான். பிறகு ’பல்லாண்டு பல்லாண்டு’ என்று தன்னைப் பல்லாண்டு பாடி அருளிச் செய்த பெரியாழ்வாரையே அவர்களுக்கும் பல்லாண்டிசைக்கத் தந்தான். கோல விளக்கு கேட்டதற்குக் குலவிளக்கு என்று அவர்களால் கொண்டாடப்பட்ட நப்பின்னைப் பிராட்டியாரைத் தந்தருளினான். ”கொடி ஒன்று தந்தருருள வேண்டும்” என்று கேட்டதற்கு, “கருடக்கொடி ஒன்றுடையீர்’ என்னும்படியான கருடாழ்வாரைக் கொடுத்தான். விதானமென்னும் மேற்கூரை கேட்டதற்கு தனது விதானமான ஆதிசேஷனைத்தான் கொடுக்க எண்ணினான். ஆனால் அவன் தன்னைவிட்டு ஒரு கணமேனும் பிரியமாட்டான் என்பதால்,
”பெருமானரையில் பீதகவண்ண வாடை கொண்டென்னை வாட்டம் தணிய வீசிரே” என்றும் “உடுத்துக் களைந்த நின் பீதகவாடையுடுத்து” என்றெல்லாம் அருளிச்செய்தபடி இவர்கள் ஆசைப்பட்ட அந்தவாளமென்ற பெயர் பெற்ற போர்வையை அவர்களுக்கு விதானமாகக் கொடுத்தான்.
இவர்கள் இப்போது ஆறு பொருள்கள் கேட்டனர். அதாவது பெருமாளுக்குத் திருவீதி புறப்பாடு கண்டருள இவை தேவையாகும். புறப்பாட்டுக்குப் பூர்வாங்கம் சங்கொலியாகும். புறப்பாட்டுக்கு உபயோகம் பறையாகும். புறப்பட்டவுடன் “மெய்நின்று கேட்டருளாய்; அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்று பல்லாண்டு பாட பாகவதர் வேண்டும். பாகவதர் கோஷ்டிக்கு வெளிச்சம் காட்ட கோல விளக்கு அதாவது கரதீபிகை வேண்டும். பக்தர்கள் தொலைவிலிருந்து கண்டு களிக்க கொடி வேண்டும். பனித்தலை விழாதபடி காக்க விதானம் வேண்டும்.
இவற்றையெல்லாம் கொடுத்தபின்னும் இந்த ஆய்பாடிச் சிறுமிகள், “ஒவ்வொன்றிலும் ஒன்று போதாது; ஒவ்வொரு வகையிலும் பல வேண்டும்” என்றார்கள். “பல வேண்டுமா? என்னிடம் அவ்வாறு இல்லையே நான் எங்கு சென்று தேடுவது?” என்று கண்ணன் கேட்டான்.
அதற்கு இவர்கள், ”உன்னால் முடியாத காரியம் உண்டோ? உனக்கு அரிய செயல் ஒன்று உண்டோ? நீ எவ்வித ஆதாரமும் அற்ற ஆலந்தளிரிலே உலகை உண்டு பள்ளி கொண்டிருப்பவனன்றோ” என்கிறார்கள். ஆல இலையில் சயனித்திருக்கும்போது அந்த ஆலிலையையும் தாங்கினவன் அவன். இதை அகடிதகடநாஸாமர்த்தியம் என்பார்கள்.
திருமங்கையாழ்வாரும், “மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் வானகமும், மண்ணகமும், மற்றுமெல்லாம் எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேலோர் இளந்தளிரில் கண் வளரும் ஈசன்” என்று அருளிச்செய்வார். திருமழிசையாழ்வாரும் திருச்சந்த விருத்தத்தில், “வானகமும், மண்ணகமும் வெற்பும் ஏழ்கடல்களும், போனகம்செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே” என்பார். வில்லிபாரதத்தில் விதுரன், கண்ணனிடம், “நீ துயில்கின்ற இடங்கள் பாற்கடல், ஆதிசேஷன், ஆலிலை, நான்மறைகள்” என்று கூறுவதாக வில்லிபுத்தூரார் பாடுவார்.
”முன்னமே துயின்றருளிய முதுபயோத்தியோ
பன்னகாதிப் பாயலோ பச்சை ஆலிலையோ
சொன்ன நால்வகைச் சுருதியோ……………..”
என்பது அவர் பாடல் அடிகளாகும்.
பொய்கையாழ்வாரும், கண்ணனிடம் நீ சிறுவயதில் குன்று குடையாய் எடுத்ததைப் போன்றதே ஆலிலையில் கண் வளர்ந்ததும் என்று அருளிச்செய்தார்
”பாலன் தனதுருவாய் ஏழுலகுண்[டு] ஆலிலையின்
மேலன்று நீவளர்ந்த மெய்யன்பர்—ஆலன்று
வேலைநீ ருள்ளதோவிண்ணதோ மண்ணதோ
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு” என்பது அவர் பாசுரம்.
முதலில் மாலே என்று எளிமையைக் கூறியவர்கள், இப்போது அவன் பெருமையை ஆலினிலையாய் என்கிறர்கள்.
அப்படிப்பட்ட நீதான் எமக்கு எல்லாவற்றையும் அருள வேண்டும். நீயாக மனமுவந்து அருள வேண்டும் என்று இப்பாசுரத்தில் ஆயர் சிறுமிகள் வேண்டுகிறார்கள்
=====================
- ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் வழங்கும் விழா
- வைரமுத்து போட்ட அவதூறு- கூட்டல் கணக்கும், தமிழறிவைக் கழித்த கணக்கும்.
- ‘குடி’ மொழி
- சூத்திரம்
- தலையெழுத்து
- பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.
- அகன்ற இடைவெளி !
- மாலே மணிவண்ணா
- திருப்பூர் அரிமா விருதுகள் 2018
- சொந்த ஊர்
- சின்னச் சிட்டே !
- தொடுவானம் 208. நான் செயலர்.
- படித்தோம் சொல்கின்றோம் குரலின் வலிமையை பேசும் மற்றும் ஒரு குரல் அ.முத்துக்கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் ஃபிடல் காஸ்ரோவின் மறுபக்கம்
- மொழிபெயர்ப்பும் கவிதையும்
- சுவாசக் குழாய் அடைப்பு
- கவிதைத்திரட்டுகளும் கவிஞர்களும்
- கவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..
- பிரம்மராஜனின் இலையுதிராக் காடு
- பூதக்கன கழுகு ராக்கெட் டெஸ்லா ரோடுஸ்டர் காரை ஏந்திக் கொண்டு சூரியனைச் சுற்றிவர அனுப்பும் முதல் விண்வெளிச் சோதனை
- நேற்றைய நிழல் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்