அடியார்கள் போற்ற ஆடிர் ஊசல்

This entry is part 4 of 14 in the series 29 ஏப்ரல் 2018

 

பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரனான கோனேரியப்பனையங்கார் தாம் அருளிச் செய்த “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஏழாம் பாடலில் அடியார்கள் திரண்டு வந்து நாயகியாரை வாழ்த்தியதைச் சொல்கிறார். இதற்கு முந்தைய ஆறாம் பாசுரத்தில் ஆழ்வார்கள் எல்லாரும் வந்திருந்து சீரங்கநாயகியாரைப் போற்றியதைப் பாடினார்.

நாதமுனி தவமாக மாறன் பாட

நயந்தெழுத வேதன்எழுத் தழிந்த வாறும்

போதன் எதிராசன் வளையாழி மண்ணோர்

புயத்தெழுதக் கூற்றினெழுத் தழிந்த வாறும்

ஏதமில் கூரத்தாழ்வான் பதக்குண் டென்றே

எழுதிட வாதியர்கள் எழுத்தழிந்த வாறும்

தீதில் குணத்தடியார்கள் திரண்டு வாழ்த்தச்

சீரங்க நாயகியார் ஆடிர் ஊசல்

 

“அன்னையே! நம் முதல் ஆச்சாரியரான நாதமுனிகள் நம்மாழ்வாரைத் தியானித்துத் தவம் செய்து அதனால் நம்மாழ்வார் நாலாயிரப் பிரபந்தப் பாசுரங்களைத் தந்தருளினார். அதனால் பிரம்மன் இம்மண்ணுலக மக்களின் தலையில் எழுதிய எழுத்து அழிந்து அவர்கள் எல்லாரும் நல்ல கதி அடைந்தனர். ஞானத்தின் வடிவான ஸ்ரீமத் இராமானுஜர் சங்கு சக்கரங்களை உலக மக்களின் தோள்களில் எழுத அதனால் எமனின் எழுத்து அழிந்தது. குற்றமேதும் இல்லாத கூரத்தாழ்வான் ‘பதக்கு’ உண்டு என்று எழுதியதால் புறச் சமய வாதங்களைச் செய்து வந்தோர் அழிந்தனர். குற்றமே இல்லாத இப்படிப்பட்ட அடியார்கள் தங்களின் இருபுறமும் சூழ்ந்து திரண்டு நின்று போற்ற ஊசல் ஆடுவீராக” என்பது இப்பாடலின் பொருளாகும்.

 

ஆச்சார்யர்களுள் தலையானவர் நாதமுனிகள் ஆவார். அப்பெருமகனார் வீர நாராயணபுரத்தில் அவதரித்தார். அங்கு ஒரு நாள் பாகவதர்கள் திருவாய்மொழி 5-ஆம்பத்து 8-ஆம் திருமொழியைச் சேவித்து யாத்திரையாக வந்தனர். “ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே” என்று தொடங்கி, “…..குருகூர் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் மழலை தீர வல்லார் மானேய் நோக்கியர்க்கே” என முடித்தனர். அவர்களைப் பார்த்து நாதமுனிகள், “ஓராயிரம் வருமோ?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள் ‘தெரியாது” என விடையிறுத்தனர். பின்னர் நாதமுனிகள் திருக்குருகூர் சென்று பராங்குசதாசர் என்பவரிடம் கேட்டார். அவர், “கண்ணி நுண் சிறுத்தாம்பு” என்னும் மதுரகவியாரின் 11 பாசுரங்களையும் 10000 முறை ஓதினால் அவர் காட்சி அருளுவார். பின்பு அவர் அருளால் நம்மாழ்வார் காட்சி கிடைக்கும்” என்று கூறினார். அவ்வாறே நாதமுனிகள் செய்தார். நம்மாழ்வாரும் காட்சியளித்து நாலாயிரம் அருளிச்செயல்களையும் நாதமுனிகளுக்கு உபதேசித்து அருளிச் செய்தார் என்பது வரலாறு. அதைத்தான் கோனேரியப்பனையங்கார் இப்பாசுரத்தின் முதல் அடியில், “நாதமுனி தவமாக மாறன் பாட” என்று அருளிச் செய்தார்.

 

வேதன் என்பது பிரமனைக் குறிக்கும். பிரமனை வேதம் அனைத்தும் ஆய்ந்து உணர்ந்தவர்.  ”ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன்” என்பார் பேயாழ்வார், [மூன்.77] இவ்வுலக உயிர்களைப் படைத்து, அவர்கள் பிறக்கும்போதே அவர்களின் வாழ்வுமுறை குறித்து அவர்தம் தலையில் அவர் எழுதி விடுகிறார் என்பர். நம்மாழ்வாரால் நாலாயிரம் பாசுரங்கள் ஓதப்பெற்றதால் இவ்வுலக மாந்தர் பிரமனால் தம் தலையில் எழுதப்பெற்ற எழுத்து அழிந்து அவர்கள் எல்லாரும் நற்கதியடைந்தனர்.

ஞானமே வடிவாய் இவ்வுலகில் அவதரித்த ஸ்ரீமத் இராமானுஜர் திருமந்திரத்தை உபதேசித்து எல்லா உலகமக்களின் தோள்களிலும் சங்கு சக்கரப் பொறிகளை எழுதினார். அதன் காரணமாக எமன் என்னும் காலன் மக்களுக்கு எழுதி இருந்த எழுத்தும் அழிந்தது. காலனைப் படைத்ததே திருமால்தான் என்பார் பெரியாழ்வார்.

 

”வைய மனிசரைப் பொய்யென்று எண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்” [4-10-5] என்பது அவர் அருளிச்செயல் ஆகும்.  ஸ்ரீஇராமானுஜர் திருக்க்கோட்டியூர் நம்பியிடம் பெற்ற திருமந்திர உபதேசத்தை அனைவரும் அறிய அவர் எடுத்துக் கூறினார். அதனால் காலனாகிய எமன் எழுதிய எழுத்து அழிந்து அனைவரும் பரமபதம் பெற்றனர் என்னும் வரலாறுதான் இரண்டாம் அடியில் எழுதப்பட்டுள்ளது.

 

மூன்றாம் அடியில் காணப்படும், “கூரத்தாழ்வான் பதக்கு உண்டென்றே எழுதிட வாதியர்கள் எழுத்தழிந்தவாறும்” என்பது ஒரு வரலாற்றை உணர்த்துகிறது. திருவரங்கம் உட்பட்ட சோழநாட்டை ஒரு சமயம் முதற் குலோத்துங்க சோழன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் சிவமே உலகில் உயர்ந்த தெய்வம் என எண்ணினான். எனவே பாகவதர்களிடம் ‘சிவமே உயர்ந்தது’ என எழுதிக் கைச்சாத்து வாங்கினான். ”ஸ்ரீமத் இராமானுஜர் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டால்தான் அது நிலைக்கும்” என்று அனைவரும் கூற, அவன் இராமானுஜரை அழைத்து வர ஆள் அனுப்பினான். நிலைமையை உணர்ந்த கூரத்தாழ்வான் இராமானுஜர் போல வந்தார். அவரிடம் கையெழுத்திட ஓலையைக் காட்டினான்.

 

அவர் ஓலையை வாங்கி அதில், “குறுணிக்கு மேல் பதக்கு உண்டு” என எழுதிக் கையெழுத்திட்டார். அதாவது சிவத்திற்கு மேல் திருமால் உண்டு என்பதை உணர்த்தினார். அவ்வாறு அவர் எழுதியதால் மன்னன் கூரத்தாழ்வார் கண்களை எடுக்கச் சொல்ல அவரோ தாமே தம் கண்களைப்  பிடுங்கி எறிந்தார் என்பது வரலாறு. அவ்வாறு கூரத்தாழ்வார் எழுதியதால் அந்த எழுத்தால் புறச்சமய வாதிகள் அழிந்தனர் என்று இப்பாசுரம் கூறுகிறது.

 

இவ்வாறு அடியார்களின் பெருமையைப் போற்றும் அருமையான பாசுரம் இதுவாகும்.

வளவ. துரையன், 20, இராசராசேசுவரி நகர், கூத்தப்பாக்கம் கடலூர். 6007 002

பேசி: 93676 31228 valavaduraiyan@gmail.com

Series Navigationதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

  1. Avatar
    வ. கோபாலகிருஷ்ணன் says:

    மதிப்பிற்குரியீர்
    வணக்கம். மிக அமிர்தமாக விளங்குகின்றது இக்கட்டுரை. இதுபோன்ற ஆய்வுச் சிந்தனையான கட்டுரைகளை மேன்மேலும் வெளியிட வாழ்த்துக்கள் ஐயா.
    *******************************************************
    திரு வ.கோபாலகிருஷ்ணன் M.A., M.Phil.,(Ph.D.,) HDCS.,
    உதவிப் பேராசிரியர்
    தமிழாய்வுத்துறை
    எம்.ஜி.ஆர் கல்லூரி
    ஓசூர் – 635130
    கைபேசி – 9488181733
    மின்னஞ்சல் – rasaigopi@gmail.com
    *******************************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *