மீனாட்சி சுந்தரமூர்த்தி
(28.04.18 அன்று முத்தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற உலக புத்தக நாள் விழாவில் ,`நான் விரும்பும் நூல்`என்ற தலைப்பில் பேசியது.)
முன்னுரை
இளங்கோவடிகளின் சிலம்பில் இடம் பெற்ற சிறப்பு நீலமலைக்கு (நீலகிரி) உண்டு. இது தமிழும் மலையாளமும், கன்னடமும் கூடுமிடம் எனவும் சொல்லலாம்.இங்கு வாழும்
மலையின மக்களில் பெரும்பான்மையினரான படகர்களின் வாழ்வில் இந்திய விடுதலைக்கு முன்னும் இந்திய விடுதலைக்குப் பின்னுமான ஐந்து குறிஞ்சி கால அளவில் ஏற்பட்ட மாற்றங்களை (அதாவது அறிவியல் முன்னேற்றம், அருளியல் பின்னேற்றம்)அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறது இராஜம் கிருஷ்ணனின் இந்நூல்.
கலைமகள் இதழில் தொடர்கதையாக வந்தது இது.அதன் பின்னர் அவர்களே நூலாக்கம் தந்தனர் டாக்டர் மு.வ. அவர்களின் முன்னுரையோடு.
டாக்டர்.ந. சஞ்சீவி தமது ஆய்வுரையில், `மானுடவியல் செய்திகள் நிறைந்தது,ஆய்வாளர் எட்கர் தாட்சனின் ஆய்வு நூலில் இடம் பெற்ற படகர்களின் சொற்கள் பலவற்றின் பொருள் மற்றும் தமிழோடு அவற்றின் உறவு இந்நூலால்தான் அறியக் கிடக்கின்றன.’ என்கிறார்.
பண்பாட்டு மாற்றங்களைக் கண்டு படகர்கள் சிலர் உள்ளம் குமுறுவதை நாவலாசிரியர் காட்டும் போது 7000 அடிக்கு மேல் வாழும் அந்த நீலமலை மக்கள் சிலரின் நெஞ்சமோடு நம் நெஞ்சும் கரைகின்றது.பன்னீராண்டுக்கு
ஒருமுறை மலையெல்லாம் குறிஞ்சி பூத்திருக்கும் வேளையில் மரங்களின் கொம்புகளிலும் பாறைகளின் இடுக்குகளிலும் தேனடைகள் நிறைந்திருக்கும்.கிடைத்தற்கரிய அத்தேனின் சுவையே இந்நூல் என்பதை அறிவிக்கும் வகையில்,`குறிஞ்சித்தேன்`எனும் பெயர் பொருந்தி உள்ளது.
நூலாசிரியர்;
பெண் எழுத்தாளர்களின் வரிசையில் முன் வைத்து எண்ணக் கூடியவர்,பல புதினங்களைச் சிறுகதைகளை எழுதியவர்.ஒவ்வொரு நூலுக்கான தரவுகளையும் கள ஆய்வு மேற்கொண்டு சேகரிப்பவர். சம காலப் பிரச்சனைகளைக் கையிலெடுப்பவர். இவரது,`வேருக்கு நீர்` சாகித்ய அகாடமியின் விருது பெற்றது. இவரது நடை தெளிந்த நீரோடை போன்றது.குறிஞ்சித் தேன் பல்கலைக்கழக மாணவர்களின்
பாடமாகவும் அமைந்தது பற்றி ஒரு இலக்கியப் படைப்பாளிக்கு வேறென்ன வேண்டும் எனப் பெருமிதம் கொண்டார் நாவலாசிரியை.
கதைப் போக்கும் கதை மாந்தரும்;
சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் மைசூரிலிருந்து பண்டிப்பூர் காடுகளின் வழியாக நீலகிரி மலையில் வந்து குடியேறியதாகச் சொல்லப்படுபவர்கள் படகர்கள்.தொழிலுக்கு ஏற்றபடி சில பிரிவுகள் இவர்களிடம் இருந்தது.
ஹரிவர்,உடையர்,கணக்கர்,அதிகாரி,கடக்கர்,தொரியர் என்பனவே அவை.
வெளியுலகச் சந்தடிகளும்,போலி மினுக்கல்களும் இவர்களை எட்டாத போது இவர்கள் வாழ்க்கை இன்பமும் கருணையும் ,நிறைவும் ,ஒற்றுமையும் உடையதாக இருந்தது. ஒருவருக்கொருவர் உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் வாழ்ந்தனர்.உணவான கிழங்கு விளைத்த போது இருந்த பண்பாடு, பணமான தேயிலை பயிரிட்டபோது மங்கத் தொடங்கியது.படகர் வாழ்வில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றத்தையே கதையின் கருவாக்கி உண்மையும் உணர்ச்சியும் மிகுந்த புதினம் படைத்துள்ளார். இவர்.
ஜோகி (ஒரு குறிஞ்சி நிரம்ப மூன்றாண்டுகள் உள்ளவன்) என்னும் படகனின் அறிமுகத்தோடு அவன் பிறந்த இடம் இப்படி அறிமுகமாகிறது.மூன்று பக்கங்களிலும் மரகதக் குன்றுகள் சூழ்ந்திருக்க,தெற்கினில் சோலைகள் நிறைந்த கானகங்கள் நீண்டு நீண்டு மீண்டும் குன்றுகளால் சூழப்படுகின்றன.அவன் மரகதமலை ஹட்டியில் (குடியிருப்பு) இருப்பவன்.அவனுக்கு அன்பான அம்மையும் (மாதி) சீலமே உருவான அப்பனும் (லிங்கையா) உண்டு. கதைகள் சொல்ல ஹெத்தையும் (பாட்டி) இன்பமாகப் பொழுது போக்க மேய்ச்சலுக்கு மாடுகளும் உண்டு. இன்றும் அப்படிதான் மாடுகளை மேயவிட்டு தோழர்களோடு விளையாடிக் களைத்து மலைச் சரிவில் வானத்தைப் பார்த்தபடி சாய்ந்திருக்கிறான். வசந்தத்தின் வாசலில் நிற்கும் வேளையில் மலை அன்னையின் அழகு சொல்லி மாளாது. அதோடு குறிஞ்சியும் பூத்திருக்கிறது.தன் மணாளன் வானவனின் நீலம் வாங்கிப் பன்னிரண்டு ஆண்டுகளாக நெய்த நீலப் பட்டாடையை
உடுத்திக் கொண்டிருக்கிறாள்.விளையாடிக் கொண்டே அருவிக்கரை சென்றவர்கள் வந்து விட்டார்கள்.பகலில் சூரியன் இருப்பதால் வெளிச்சம் இருக்கிறது. ஒரு நாள் சூரியன் வராது போனால் என்ன செய்வோம் என்கிறான் ஜோகி? பெள்ளி(அண்டை வீட்டு காகையின் மகன்.) இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்குவோம் என்கிறான்.
இரிய உடைய ஈசரின் கண்தான் சூரியன் அவர் கோவிலில் எப்போதும் நெய்தீபம் எரிகிறதே அவர் தூங்கவே மாட்டார் என்கிறான் கிருஷ்ணன்.(ஹட்டியிலேயே செல்வாக்கு மிக்க கரிய மல்லரின் பெண் வயிற்றுப் பேரன், புதுமையாக கீழ் மலை மிஷன் பள்ளியில் படிப்பவன்.) ரங்கன் (ஜோகியின் பெரியப்பன் மாதனின் மகன்,அவர்கள் எல்லோரையும் விடப் பெரியவன்,முரடன்) உடனே, `சூரியன் கோவிலில் இருந்தா வருகிறது? மலையும் அருவியும் எப்படியோ அப்படியே இருப்பது`என்றான். `மலையெல்லாம் நகருகிறதா இல்லையே ஆனால் சூரியன் காலையில் இரட்டை மலைக்கு அப்பாலிருந்து வந்து பகலெல்லாம் நகர்ந்து தேவர் பெட்டாவுக்குப் (தொட்ட பெட்டா) பின்னால் போகிறதே என்றான் கிருஷ்ணன். உடனே ரங்கன் பேச்சை வளைத்து,` சூரியன் வராது போனால் வீட்டில் விளக்கு வைப்பது போல் பெரிய பெரிய விளக்குகளை வைத்துக் கொள்வோம்` எனறான்.ஜோகி ,`அதற்கு எவ்வளவோ நெய் வேண்டுமே!` என்றான்.சட்டென்று கிருஷ்ணன்,`அருவித் தண்ணீரையெல்லாம் எண்ணையாக்குவோம்` என்றான்.ஜோகியின் வட்டக் கண்கள் விரிந்தன.ரங்கன்,` போடா முட்டாள் அருவித் தண்ணீரை எண்ணையாக்க முடியுமோ` என்றான். கிருஷ்ணன்,`சூரியன் வராமலிருக்குமோ போடா முட்டாள் மட்டி` என்றான். ரங்கன் `ஒல்லிப் பயலே`என்று அவன் மீது பாய்ந்தான் இருவரும் அடித்துக் கொண்டு கட்டிப் புரண்டார்கள்.இந்த நேரத்தில்,`ரே ஜோகியண்ணா! என்ற இளங்குரல் ஒன்று கேட்டது.குரல் கேட்ட மாத்திரத்தில் கிருஷ்ணன் சண்டையை விடுத்து தலைத் துணியை நன்றாக சுற்றிக் கொண்டு மேலே ஓடினான். ஜோகி முன்னரே மேலே ஏறத் துவங்கி விட்டான்.ஐந்து வயது சிறுமி ஒருத்தி, சிவந்த குண்டு முகம்,கருவண்டு விழிகள் சுருட்டை முடி தோளிலும் நெற்றியிலும் புரள கைகளில் பளபளக்கும் புதிய வெள்ளிக் காப்புகள் பெரிய வளையமாக ஆட ஓடி வந்தாள். வெள்ளை முண்டு உடுத்து பெரிய மனுஷியைப் போல மேல் முண்டும் போர்த்திருந்தாள். `ஜோகியண்ணா தங்கைப் பாப்பா`வந்திருக்கிறது,அம்மா, மாமி,அத்தை எல்லாரும் வந்திருக்கிறாங்க,பொறி உருண்டை,கடலை,ஆரஞ்சி எல்லாம் கொண்டு வந்திருக்கிறாங்க வாங்க,வாங்க என்று கைகளை வீசி அழைத்த வேகத்தில் ஒரு வெள்ளிக் காப்பு நழுவி குத்துச் செடிகளின் இடையில் உருண்டது.இதை இருந்த இடத்தை விட்டு நகராமல் கிருஷ்ணனைக் குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ரங்கனைத் தவிர யாரும் பார்க்கவில்லை.பெள்ளியும் ராமனும் கூட வீட்டிற்குச் சென்று விட்டனர்.
மாதியின் அண்ணன் மனைவி தாய் வீட்டில் பிரசவித்து மணிக்கல்லட்டி செல்லும் வழியில் ஜோகியின் வீடு வந்திருக்கிறாள்.ஹட்டியே அங்கே கூடியிருந்தது.
மணியக்காரரின் மகள் கிருஷ்ணனின் தாய் குழந்தையை கையிலேந்திக் கொண்டிருந்தாள்.
ஜோகி குழந்தையைப் பார்க்கிறான்.குழந்தை சிரிக்கிறது, உடனே, மாமி எனக்கு பாப்பா வேணும்` எல்லோரும் சிரிக்கின்றனர்.` உனக்கு இல்லாமலா மாமன் மகள்` ஆயிரம் பொன் தர வேண்டும்` என்கிறாள் மாமி.ஐயனிடம் சொல்லி வாங்கித் தருவேன் என்கிறான் ஜோகி.இதற்குள் பாருவின் கரங்களிலிருந்த காப்பு ஒன்றைக் காணாமல் பாருவின் அம்மா `காப்பு எங்கேடி` என பாட்டி நீ ஊரிலிருந்து வரும்போது இருந்ததா என கிருஷ்ணன் `அங்கே வரும்போது காப்பு ஆடியதை நான் பார்த்தேன் என்கிறான்.சட்டென்று நினைவு வந்தவளாய் மாதி ரங்கன் எங்கே என்றாள்.காப்பைத் தேடிச் செல்கிறார்கள்.
இதனிடையில் தனியே நின்ற ரங்கன் பாரு தன்னை அழைக்கவில்லை தானும் அவளுக்கு மாமன் மகன்தானே எனப் பொருமுகிறான்.(ரங்கனின் அன்னை, மாதியின் தமக்கைதான் ஆனால் அவள் இவன் பிறந்ததும் இறந்து விட்டாள்,இப்போது இருப்பவள் நஞ்சம்மை இவனின் சிற்றன்னை)வீட்டில் எந்த நேரமும் அவனுடைய தந்தைக்கும் சிற்றன்னைக்கும் சண்டைதான். அவனுடைய தந்தை மண்ணில் பொருந்தி உழைப்பவர் இல்லை.எப்படியோ எல்லாம் நடந்து விடும் என்று எண்ணுபவர்.லிங்கையா அண்ணன் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டார்.அருகில் கிழப்பருவம் கோலமிட
புல்லைக் கடித்துக் கொண்டிருந்த எருமையைக் கண்டதும் பொங்கிய ஆத்திரத்தில் கீழே கிடந்த குச்சியை எடுத்து அதன் முதுகில் வீறு வீறு என்று விளாசினான். மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்கும்படி கத்திக் கொண்டே சரிந்தது அது. ரங்கன் முன்னேறி குத்துச் செடிகளின் கீழிருந்த காப்பை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான்.அருவிக்கரைப் பக்கம் நடந்தான்.சரிவில் உருண்ட எருமை பாறையில் முன்னிரு கால்கள் முட்ட கத்திக் கொண்டேயிருந்தது.
ஏமாற்றமும்,பொறாமையும் சேர்ந்த ரங்கனின் உள்ளம் எப்படியாவது எல்லோரையும் விட வசதியானவனாக வேண்டும்,ஒத்தைக்குச்( ஒத்தை-ஊட்டி(உதகமண்டலம்)சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் ஹட்டியில் என்ன இருக்கிறது? என்றது. அருவியைத் தாண்டி இறங்கி கிழக்குப் பக்கம் இன்னும் இறங்கி காட்டுக்குள் புகுந்தான்.இடுப்பில் இருக்கும் காப்பை கொடுத்தால் ஒரு முழு வெள்ளி கிடைக்கும் ஒத்தையில் காசுக்கடை இருக்காதா என்ன? காசு பார்க்கும் வழிகள் நிறையவே உண்டாம் மூன்றாம் வீட்டு தருமன் சொல்லியிருக்கிறான்.`ரே ரங்கா எங்க வந்தே`விறகு சேகரிக்க வந்த பெண்களில் பெள்ளியின் தமக்கை கேட்டாள்.மாட்டிக் கொண்ட ரங்கன், `விளையாடிக் கொண்டே வழி தெரியாமல் வந்து விட்டேன்`என்று சொல்லி அவர்களைத் தொடர்ந்தான். நன்றாக இருட்டி விட்டது,வீடு செல்லாமல் காவற் பரணில் ஏறித் தங்குகிறான்.விடிந்ததும் பயணம் தொடர. காப்பு கிடைக்காமல் ரங்கன் வீட்டு எருமையும் காலொடிந்து கிடக்க லிங்கையா அதன் காயத்திற்கு பச்சிலை போட்டு ஜோகியிடம் புல்லை வைக்கச் சொல்லித் தன் பால் மனை புகுந்து பால் கறந்து அண்ணன் வீட்டிற்கும் எடுத்துச் செல்கிறான். நஞ்சம்மை,`வீட்டுத் தலைவனும் சரியில்லை,பிள்ளையும் சரியில்லை, இருந்த ஒரு எருமையும் காலொடிந்து போச்சே,சேருகிற வீட்டில் எல்லாம் சேருது`எனப் புலம்ப ,லிங்கையா அண்ணிக்கு சமாதானம் சொல்லி வீட்டிற்கு வந்து குளிரில் எங்கோ வாடும் ரங்கனை நினைந்து உண்ணாமல் தன் முறைக் காவலுக்கு மல்லனுடன் காவற் பரணுக்கு வருகிறார். உறக்கத்திலிருந்த ரங்கனைக் கண்டு`எருமையை அடித்துப் போட்டதால் சின்னம்மைக்குப் பயந்து பிள்ளை இங்கே படுத்து விட்டான் `என நினைந்து அவனை எழுப்ப முயல இடுப்பிலிருந்த காப்பு கைகளில் தட்டுப் படுகிறது, அதனை எடுத்த லிங்கையா ரங்கா இது எப்படி? என்றதுமே ரங்கன் கீழே கிடந்தது எடுத்தேன், உங்கள் வீட்டில் திருடினேனா என்ன?என்கிறான்.`நான் வளர்த்த பிள்ளை நீ அப்படிச் செய்யமாட்டாய் அப்பா` என்று சொல்லி அவனை வீட்டிற்கு அழைத்து வந்து,தானே வட்டிலில் களியும் குழம்பும் எடுத்து வைத்து ரங்கனுக்கும், விழித்து எழுந்து வந்த ஜோகிக்கும் உணவூட்டி தானும் உண்டு இருவரையும் ஒன்றாகப் படுக்க வைத்து `இன்று போல் என்றும் ஒன்றாக இருக்க வேண்டும்` என்று சொல்லி காவலுக்குச் சென்றார் லிங்கையா.
அண்ணன் வீட்டில் பசுவும் எருமையும் இல்லாவிட்டால் என்ன தன்னிடம் இருக்கிறதே,நல்ல நாளில் ரங்கனுக்கு பால் மனை புகும் விழா நடத்த வேண்டும்,அவனை இரிய உடைய ஈசர் கோவிலின் நெருப்பைக் காக்கும் பணிக்கு விட வேண்டும், அவன் நல்லவனாகத் திருந்தி மிளிருவான் என எண்ணுகிறார் லிங்கையா. அதன்படி ரங்கனுக்கு பால்மனை புகும் விழா விமரிசையாக நடத்தும் நாளில் ரங்கன் தனது ஒத்தைக் கனவு நனவாக சிற்றப்பன் பால்மனையில் சேர்த்து வைத்திருந்த வெள்ளிப் பணத்தைத் திருடிக் கொண்டு எவரும் அறியாது ஒத்தைக்கு ஓடுகிறான்.
கதைமாந்தர் உணர்த்தும் குறிப்பு;
- ஜோகி;
புல் மேட்டில் சாய்ந்திருக்கும் ஜோகியின் பெற்றோர் அறிமுகம்(அன்பான……….ஹெத்தை உண்டு) என்றதிலேயே அவன் ஒழுக்கமும் நற்பண்புகளும் உடையவனாவான் என்பது உணர்த்தப் படுகிறது.
2.ரங்கன்:
பெற்றோரிடம் அன்பு காணாதவன் என்பதும் எப்படியும் முன்னேறத் துடிப்பவன்,(கிருஷ்ணனைக் குரோதத்துடன்……..)பின்னாளில் கிருஷ்ணனுடன் வலுச்சண்டைக்குப் போவான்,தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவான் (சிற்றப்பனிடம் திருடியது)என்பதுவும் அறியலாகிறது.
கிருஷ்ணன்;
(`அருவித் தண்ணீரை எண்ணையாக்குவோம்`)
அவன் அவர்கள் இனத்திலேயே முதன்முதலில் படித்தவன் ஆவான் என்பதும்,பாருவின் குரல் கேட்டதும் சண்டையை விடுத்து ஓடியதில் அவளின் மனம் கவர்ந்தவன் ஆவான் என்பதும் அறியலாகிறது.
பாரு;
அவளின் அறிமுகம் அன்பானவள்,அழகானவள்(பொறி உருண்டை………வாங்க.)பகிர்ந்து வாழ்பவள். தியாகத்தின் வடிவமாவாள் என்பதும் காட்டப்படுகிறது.
லிங்கையா;
பாசத்தின் மொத்த உருவம், (காப்பைத் தான் கீழே கண்டெடுத்ததாகச் சொல்வது.அண்ணன் குடும்பத்திற்கும் உழைப்பது)கதைப் போக்கில் திருப்பம் இவரால் நிகழுமென அறியப்படுகிறது.
- புதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது ?
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் – 4 – தி ஹேன்ட் மெய்டன்
- ”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா
- சிலம்பு சித்தரிக்கும் அரசியல்
- இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 1
- உயிர்ப்பேரொலி
- செய்தி
- உடைந்த தேங்காய் ஒன்று சேராது
- மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்
- அந்தி
- நம்பிக்கை !
- சமையலும் பெண்களும்
- தொடுவானம் 220. அதிர்ச்சி
- கண்ணகி தேசம்
- மருத்துவக் கட்டுரை – மூளைக் கட்டி
- மேடம் மெடானா !