பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைச் செய்வதில் தமிழ்நாடு சளைத்ததில்லை என்பதினை அறிந்திருந்தாலும் சமிபகாலத்தில் கேள்விப்படும் செய்திகள் என்னை நிலைகுலைய வைக்கின்றன. ஐம்பதாண்டுகால கலாச்சாரச் சீரழிவின் அடையாளம் இது. ஆபாச சினிமாக்களும், எப்படியும் வாழலாம் எனத் தூண்டுகின்ற தொலைக்காட்சி சீரியல்களும், அவற்றின் அர்த்தமற்ற பிதற்றல்களும், வகைதொகையின்றி இளம் வயதினருக்குக் காணக்கிடைக்கின்ற ஆபாசப் படங்களும், ஃபேஸ்புக், வாட்ஸப் போன்ற சோஷியல் நெட்வொர்க்குகளும் இந்தச் சீரழிவைத் துரிதப்படுத்தியிருக்கின்றன.
பெண்கள் கோவிலுக்கோ அல்லது கூட்டமான இடங்களுக்கோ போய் வருவதில் உள்ள சிரமங்களை நம்மைச் சுற்றியுள்ள பெண்களே கூறுவதனைக் கேட்கையில் எனக்கு வரும் துயரத்திற்கு அளவில்லை. வயது வித்தியாசமின்றி தொடுவது, தடவுவதும், கிள்ளுவதும், கேலி பேசுவதுமென தமிழகம் கேடுகெட்டு நிற்கிறது இன்றைக்கு. மொத்த தமிழ்நாடும் ஒரு விறைத்த ஆண்குறியைப் போல நிமிர்ந்து பாலியல் வேட்கையுடன் அலைகிறது என எழுத்தாளர் சாரு நிவேதிதா ஏதோவொரு சந்தர்ப்பத்தில் கூறியது நினைவுக்கு வருகிறது.
இந்தக் கேவலத்தில் வயது வித்தியாசம் எதுவுமில்லை. முன்பெல்லாம் வயதானவர்கள் விவேகத்துடன் இருந்தார்கள். அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எத்தனையோ இருந்தது. அவர்கள் மீது நமக்கு மரியாதையும், மதிப்பும் இருந்தது. ஆனால் இன்றைய வயதானவன் நடந்து கொள்கிற, பேசுகிற விதம் உண்மையிலேயே காறி உமிழத்தக்கதாகத்தான் இருக்கிறது. ஃபேஸ்புக்கிலே இதுபோன்ற ஜந்துக்கள் நிறைய உலவுவதனையும் பார்க்கிறேன். தன்னுடைய நட்பில் இருக்கும் பெண்களுக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்புகிற கிழட்டுப்பயல்களைக் குறித்துக் கேள்விப்படுகையில் ஆச்சரியம் ஒருபக்கமிருந்தாலும் துக்கம் இன்னொரு பக்கம் வருகிறது. இவர்களே இப்படியென்றால் சிறிய வயதுடையவனெல்லாம் எப்படி நடந்து கொள்வான் என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
பொதுவில் தமிழகப் பெண்கள் கொஞ்சம் அசமஞ்சமானவர்கள். வெளியுலகம் அதிகம் தெரியாதவர்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். டி.வி. சீரியல் பார்த்துக் கண்ணீர்விடுகிற தமிழ்ப் பெண்மணிக்கு என்ன உலகம் தெரிந்திருக்கப்போகிறது? அவளைப் போலத்தான் அவளது மகளும் இருப்பாள். எட்டாவது படிக்கிற பள்ளிக்கூடத்துப் பையனும், பெண்ணும் காதலிப்பது போல டி.வி. சீரியல் வருவதை தாயும், பெண்ணும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பதனையும் நான் கண்டிருக்கிறேன். இது தவறு என்று அந்தத் தாய் அவளது மகளிடம் சொல்லவில்லை.
கேடுகெட்ட சினிமாப்படங்களில் கேடிகளையும், பிக்காலிப் பயல்களையும் வீரனாகவும், அவன் பின்னே பெண்கள் சுற்றுவதாகவும் பார்த்துப் பார்த்து வளர்கிற பெண் அப்படியாப்பட்ட ஒருத்தன் தன்னப் பின் தொடர்ந்தால் அவன் வலையில் விழவே செய்வாள் என்கிறேன். அவன் கையில் சிக்கிய அவளை அவன் சின்னாபின்னப் படுத்தாமல் விடமாட்டான். அவனிடம் சிக்கிய ஒற்றைப் புகைப்படம் அவளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் என அவளுக்குச் சொல்லிக் கொடுக்கவும் ஆளில்லை. பள்ளிகளிலும் அதனைச் சொல்லித் தருவதில்லை.
வளருகிற வயதில் வாழ நினைப்பது தவறானது என எடுத்துச் சொல்ல ஆளில்லாத காரணத்தால் பல இளம்பெண்கள் பொள்ளாச்சியில் சிக்கியதனைப் போலச் சிக்கிச் சீரழிகிறார்கள். இந்த நிகழ்வு பொள்ளாச்சியுடன் மட்டுமே நின்றுவிடும் என நான் நினைக்கவில்லை. தமிழகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் இன்றைக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதனை நான் உறுதியாகச் சொல்வேன். பல்லாயிரக்கணக்கான இளம்பெண்கள் அயோக்கியர்களின் கையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பார்கள், கொண்டிருக்கிறார்கள் என்கிறேன் நான். அவர்களின் கண்ணீர்க் கதைகள் இன்னும் வெளிவரவில்லை என்பது என்னுடைய அசைக்க முடியாத எண்ணம். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். மெல்ல, மெல்ல அவையும் வெளிவரும்.
ஃபேஸ்புக்கில் உத்தமனாக நடிப்பவனெல்லாம் உத்தமனாக இருப்பான் என்று நினைப்பதுபோன்ற கேணத்தனம் வேறெதுவுமில்லை.
ஃபேஸ்புக்கில் உலவும் கேடுகெட்ட நபும்சகர்களைக் கண்டதன் காரணமாக நான் கணக்கு ஆரம்பித்து பல ஆண்டுகள் வரைக்கும் பெண்களை என்னுடைய நட்பில் சேர்த்துக் கொள்ளவில்லை. இன்றைக்கும் மிகத் தயக்கத்துடனேயே அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன். உரையாடுகிறேன். என்னிடமிருந்து அவர்கள் ஏதேனும் கற்றுக் கொள்ளக்கூடும் என்கிற எண்ணத்துடன் மட்டுமே அவர்களைச் சேர்த்துக் கொண்டேன். அதேசமயம் தனிப்பட்ட முறையில் (நல்ல எண்ணத்துடன்தான்) அவர்கள் மெசேஜ் அனுப்பினாலும் அதனைப் பொருட்படுத்துவதில்லை. ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள் பெண்களைப் பொறுத்தவரை பேராபத்து கொண்டவை. அவர்களின் வாழ்வினைச் சிதைத்து அவர்களைப் படுகுழியில் தள்ளும் எனப் புரிந்து கொள்ளாத பெண்கள் அற்பர்களின் வலையில் சிக்கி அழிந்துபோவார்கள் என்று அறிந்து கொள்வார்களாக.
பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு இப்போதெல்லாம் ஃபெமினிசம் ஒரு ஃபேஷனாகியிருக்கிறது. ஆண்களைப் போல உடையணிவது, தலைமுடியைக் கத்தரித்துக் கொள்வது, குடிப்பது, எவனுடன் வேண்டுமானாலும் படுக்கத்தயாரக இருப்பதுதான் பெண் சுதந்திரம் என்கிற தவறான எண்ணத்தில் உலவும் அந்தப் பெண்களை எந்தவொரு ஆணும் மிக எளிதாக உபயோகித்துத் தூக்கியெறிவான். அதுபோன்ற பெண்களும் ஃபேஸ்புக்கில் உலா வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அது அவரவர் விருப்பம் என விட்டுவிட வேண்டியதுதான்.
அமெரிக்காவில் பெண்களெல்லாம் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்லும் பெண் உண்மையான அமெரிக்காவை அறியாதவள். அமெரிக்கா ஒரு கட்டுப்பெட்டி நாடு. ஆம்; பெண்கள் குடிப்பார்கள். அரைகுறையாக உடையணிவார்கள். அதேசமயம் அந்தப் பெண்ணின் விருப்பமில்லாமல் எந்தவொரு ஆணும் அவளின் சுட்டுவிரலைக் கூடத் தொடமுடியாது. தொட்டவன் வாழ்நாள் முழுக்க ஜெயில் கிடப்பான். அவன் எப்பேற்பட்ட கொம்பனாக இருந்தாலும் கூட. அமெரிக்கச் சட்டங்கள் அதுமாதிரியானவை. அமெரிக்க நீதிபதிகள் பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றத்தையும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். சிக்கினவனைச் சட்டினியாக்கிவிட்டுத்தான் ஓய்வெவார்கள். இந்தியாவில் எந்த நீதிபதி அப்படி நடந்து கொள்கிறான்?
அமெரிக்காவில் ஆனந்த் ஜான் என்கிறதொரு பிரபல இந்திய ஃபேஷன் டிசைனர் இருந்தான். அவன் டிசைன் செய்கிற உடைகளைப் போட்டு ஃபேஷன் ஷோவில் கலந்துகொள்ளப் பல பெண்கள் போட்டியிட்டார்கள். பதினைந்து வயதுப் பெண்களும் அதில் அடக்கம். அதனை உபயோகித்துக் கொண்ட இந்த ஆனந்த் ஜான் பல இளம் பெண்களை, பதினைந்து வயதுப் பெண்கள் உட்பட, இரக்கமேயில்லாமல் கற்பழித்தான். கடைசியில் சிக்கிக் கொண்டான். அமெரிக்காவில் டீனேஜ் பெண்களைக் கற்பழிப்பதுபோலப் பெருங்குற்றம் எதுவுமில்லை. ஜட்ஜின் முன் அந்தப் பெண்கள் கதறி அழுதார்கள். ஆனந்த் ஜான் தங்களை எப்பெடியெல்லாம் செக்ஸுவலாகத் துன்புறுத்தினான் என்று விளக்கினார்கள். அமெரிக்கா அதிர்ந்து போனது. இப்படிக் கூட ஒருத்தன் இருப்பானா என்று. நீதிபதி ஆனந்த் ஜானுக்கு நூறாண்டு தண்டனை விதித்தார்.
அதாகப்பட்டது சாகும் வரை அவன் வெளியே வரமுடியாது. அவன் பிணம் மட்டும்தான் ஜெயிலை விட்டு வர முடியும். ஆனந்த் ஜான் கதறி அழ, அழ அவனை இழுத்துக் கொண்டு போனார்கள். இன்னமும் அவன் ஜெயிலில்தான் இருக்கிறான்.
அதேபோல பெண்களுக்கு எதிராக ஒருவன் குற்றம் செய்து எத்தனை காலமானாலும் அவனைச் சட்டம் சும்மாவிடாது. பில் காஸ்பி என்கிற அமெரிக்கப் பிரபல காமெடியன் இன்னொரு உதாரணம். மிகப் பெரும் புகழ் பெற்றவரான பல்துறை வித்தகர் இளவயதில் பல பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்த கற்பழித்த விவகாரம் சமிபத்தில் வெளிவந்தது. 81 வயதான பில் காஸ்பியைத் தூக்கி ஜெயிலில் போட்டார்கள். அவர் சம்பாதித்த பெயரும், புகழும், மானமும், மரியாதையும் காற்றில் பறந்துவிட்டது.
இதனை எதற்குச் சொல்கிறேன் என்றால், இந்தியா அமெரிக்காவல்ல. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் எதுவும் இங்கு இல்லை. இருந்தாலும் அதனை அமல்படுத்த எந்த நீதிபதியும் துணிவதில்லை.
இதற்கு எனக்குத் தெரிந்த ஒரே தீர்வு, உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள் என்பதுதான். அவர்களிடம் நடப்பதைச் சொல்லி விளக்குங்கள். எச்சரிக்கை செய்யுங்கள். கண்காணியுங்கள். வளரும் வயதில் வரும் காதல் எதற்கும் உதவாதது என்று எடுத்துச் சொல்லுங்கள். வாழ்க்கையில் நன்கு படித்து முன்னேறிய பிறகு, தன் சொந்தக்காலில் நின்ற பிறகு வானமே அவர்களின் வசப்படும் என உணர்த்துங்கள். இல்லாவிட்டால் வாழ்க்கை நாசமாகும் என அவர்களுக்கு உணர்த்துவது ஒன்று மட்டுமே எனக்குத் தெரிந்த ஒரே வழி.
வேறு ஏதேனும் யோசனைகள் இருந்தால் இங்கு பகிருங்கள். பலருக்கும் பலனளிக்கலாம்.
- 2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்
- தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)
- கேள்வி
- அறுந்த செருப்பு
- காத்திருப்பு
- புல்வாமா
- பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்
- தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.
- ”ரிஷி”யின் மூன்று கவிதைகள்
- தமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்