ஸ்ரீ
நேற்றுத்தான் கிளம்பினாள் அக்கா
தனது நான்கு மாத தேவதையுடன்
அக்காவே ஒரு தேவதைதான்
தேவதைக்கு வேறு என்ன பிறக்கும்
இறங்கிய வயிற்றுடன் வந்து இறங்கிய
கர்ப்பவதியின் கர்ப்பக்கிரகமானது
வாசலை ஒட்டிய பத்துக்குப் பத்து அறை
அக்காவுக்கென்று ஒதுக்கிய அந்தத் தனியறையில்
முதலிரண்டு மாதம் ஒரேயொரு விக்கிரகமும்
அதைத் தொடர்ந்து
நேற்றுக் காலை வரையிலும்
இரண்டு விக்கிரகங்களும்
அருளாட்சி புரிந்தன
பிள்ளை வரம் கேட்போருக்குப்
பெருமாள் கோயிலில்
குழந்தைக் கண்ணன் விக்கிரகத்தை
மடியில் கிடத்துவதுபோல
யார் வந்தாலும்
பேத்தியை எடுத்துக் கொடுத்துப்
பெரிதாக மலர்ந்து சிரித்தாள் அம்மா
கர்ப்பக்கிரகத்தின் தீர்த்தப் பாத்திரம் போல்
பிளாஸ்க்கில் எப்போதும் இதமான வெந்நீர்
சடாரிபோன்று அக்காவுக்குக்
குளிர்காலக் கம்பளிக் குல்லாய்
பிரசாதம்….கேட்கவே வேண்டாம்
தட்டுத் தட்டாகப் பரப்பி விடுவாள் அம்மா
அர்ச்சனைச் சொற்களாய்
ஆரம்பத்தில் அக்காவின் முக்கல் முனகல்
அப்புறம் ராத்திரி பகல் எல்லாம்
குட்டி தேவதையின் பூபாள மழலை
திருவிழா முடிந்து
தேவதை இரண்டும் தேர் ஏறிவிட்டது
இதோ அந்த
பத்துக்குப் பத்து கர்ப்பக்கிரகம்
தேவதை இரண்டும் விட்டுச் சென்ற
வாசங்களின் மிச்சத்தோடு….
- கூண்டு
- அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?
- உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை
- பிரசவித்துச் சென்ற அக்காவின் அறை
- “ கோலமும் புள்ளியும் “
- தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்
- கதைச்சக்ரவர்த்தி கு.அழகிரிசாமி – நிகழ்வு
- ஆணவம் பெரிதா?
- சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும்
- பிம்பம்
- நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை”
- இலங்கையில் அகதிகள்