பா. தினேஷ் பாபு
துளிர்த்த பசுமை நிற இலைகளால் நிரம்பிய புங்கைமரம் அதன் பின்புறத்தில் முட்டை ஓட்டிலிருந்து வெளிவர முயலும் பறவை குஞ்சாய் உதய சூரியனின் இளஞ்சிவப்பு…
அதற்கு மேற்கே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கிழக்கு நோக்கி அமைந்திருந்தது. தளத்திற்கு 2 ஆக 6வீடுகளை கொண்ட குடியிருப்பின் முதல் தளத்தில் நின்று இக்காட்சிகளில் இனம்புரியாது இலயித்திருந்தான் கையிலைநாதன். அமைதியான குளத்தில் விழுந்த ஒற்றை கல்லாய் அவனது சிந்தை இலயிப்பை கலைத்தது ஒரு குரல்.
அப்பா கண்ணன் மாமா உங்களை காணவந்திருகிறார் என்றான் கையிலையின் மகன்.
கண்ணபிரான் அதே தளத்தில் எதிர் வீட்டில் வசிக்கும் கல்லூரி பேராசிரியர். கையிலையும் இவரும் ஒரே கல்லூரியில் பணிபுரிகின்றனர். இந்த குடியிருப்பில் இதே போல் பல சிறிய ஒற்றை அறை கொண்ட அடுக்கு மாடி வீடுகளும் அவற்றில் வசித்த பல குடும்பங்களும் அந்த குடியிருப்பிற்கு உயிர்ப்பூட்டினர்.
அடுக்கு மாடி குடியிருப்பின் எதிரில் விசாலமான அறைகளுடன் வீட்டை சுற்றிலும் ஓடிவிளையாடும் அளவு இடத்துடன் கூடிய தனி வீடுகள் மேற்கு நோக்கி அமைந்திருந்தன. கைலையின் குடியிருப்புக்கு நேர் எதிர் வீட்டில் சார்லஸ் என்ற மருத்துவரின் ஆங்கிலோ இந்தியன் குடும்பம் வசித்துவந்தது. சார்லஸின் உறவுக்காரர் ஜெர்ரி இங்கிலாந்தில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர் விடுமுறைக்காக முதல் முறையாக இந்தியா வந்திருந்தார்.
நுரை பொங்கும் கடல் அலையின் நீர் சாரலைப் போல் மெல்லிய மழைச் சாரலும் அகன்ற வாழை இலையின் சிறு நுனியைக் கூட கிழிக்காத அளவு இதமான தென்றல் காற்றும், பறவைகளும் அவற்றோடு உறவாடும் குஞ்சுகளின் சத்தமும் நிறைந்த மனோரஞ்சமான சூழலில் புங்கை மரத்தடியில் இருந்த கல் மேடையில் அமர்ந்தவாறு, இந்த இயற்கையும் நமது சமூக சூழலும் சொர்கமாய் இனிக்கிறது அல்லவா?
என்றவாறு மரத்தடியில் இருந்த தேநீர்க் கடையில் உடனிருந்த நண்பர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்குமாறு கேட்டுக்கெண்டார் கையிலை.
அது ஒரு நான்கு சக்கர தள்ளு வண்டி 4அடி க்கு 2 அடி
அளவுள்ள மேல்கூரையுடன் கூடிய வண்டி. அதை நடத்திய சுப்பன் சிறிதும் படிப்பறிவு இல்லாதவர். அந்தகுடியிருப்பின் வடக்கில் உள்ள குப்பத்தில் வசிப்பவர்.
அந்த குப்பத்தில் உள்ள பெரும்பாலான ஆண்கள் இந்த குடியிருப்பில் இது போன்று தேநீர் கடை, இஸ்திரி கடை, காய் கறி வண்டி கடை போன்ற பல தரப்பட்ட வேலை செய்தனர். குப்பத்தில் இருந்த பெரும்பான்மை பெண்கள் இந்த குடியிருப்பின் வீடுகளில் வீட்டுவேலை செய்தனர்.
ஜெர்ரி தனக்கு தேநீரில் சிறிது எழும்பிச்சை சேர்க்குமாறு ஆங்கிலம் கலந்த தமிழில் கூற, சுப்பனோ கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாய் மாறுவதை முதல் முறையாக பார்க்கும் குழந்தை போல் விழிக்க… கையிலை சுப்பனுக்கு மொழிபெயர்த்தார்.
அங்கும் இங்கும் தேங்கி நிற்கும் நீர் நிறைந்த சாலை, காகத்தின் கத்தலும் எச்சமும் நிறைந்த மரத்தடி,எளிமையான ஆங்கிலத்தை தவிர்த்து எங்கு நோக்கினும் உச்சரிக்கவே கடினமான தமிழ் இதுவா இனிமை? என்றார் ஜெர்ரி.
காகத்தின் கத்தல் சத்தம் அல்ல அது. காகத்தின் கரைதல் ஒலி என்றார் கண்ணன்.
ஜெர்ரி என்னவென்று புரியாமல் ஒரு குழப்ப பார்வையை உதிர்த்தார்.
தமிழுக்கே உண்டான அழகு.
காகம் கரையும்.
குயில் கூவும்.
மயில் ஆகவும
ஆந்தை அலரும்…
இவ்வாறு அனைத்தையும் வேறுபடுத்தும் அழகு தமிழ் என்றார் கண்ணன்.
இவை அனைத்தும் ஒரே விதமான குரல் எழுப்பினால் தான் நான் தமிழை இலகுவாக கற்கமுடியுமோ எனவோ? என்றவாறு சிரித்தார் ஜெர்ரி.
அவர்களது கவனத்தை திசை திருப்பும் வகையில் வடக்கில் இருந்து பறை ஒலியுடன் இறந்தவர் உடலை சுமந்து கொண்டு ஒரு கூட்டம் அந்தகுடியிருப்புக்கு தெற்கேயுள்ள மின் மயானத்திற்கு சென்றது.
அதை பார்த்த கையிலை சாலையில் சிறிது குழி இருக்கலாம் ஆனால் இந்த சமூகம் மேடு பள்ளங்கள் அறுத்து வாழ்கையின் ஏற்ற இறக்கத்தை சமமாக பார்கும் மனம் கொண்ட பல மகான்களை உருவாக்கி உள்ளது. அவர்கள் அதை மக்களுக்கும் போதித்துள்ளனர். இதோ இதை போன்ற ஒரு காட்சியை பார்த்து தான் சித்தார்த் என்பவர் மனம் வெறுத்து வீட்டை விட்டு வெளியேறி உண்மையை தேடி தவம்புரிந்து வீடுபேரடைந்து புத்தர் என்ற உன்னத நிலைக்கு சென்றார்.
ஆம் ஆம்… ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்னவர் தானே நானும் படித்திருக்கிறேன் என்றார் ஜெர்ரி.
நான் ஒரு மருத்துவர் இதை போன்று பலவற்றை பார்த்து இருக்கிறேன் ஆனால் எனக்கு வருத்தம் சிறிதும் இல்லையே. ஆரம்பத்தில் சிறிது பயம் இருந்தது ஆனால் இப்போது அதுவும் குறைந்துவிட்டது. நான் புத்தர் ஆகவில்லையே ஏன் ? ஆசையால் எனக்கு இதுவரை ஒன்றும் பெரிய துன்பம் ஏற்படவில்லையே? என்றார் சார்லஸ்.
சுப்பன் அப்போது இரு வேறு விதமான கோப்பையில் தேநீரை அனைவருக்கும் கொடுத்தார்.
சமீபத்தில் உங்களது உறவினர் இங்கிலாந்தில் இறந்த பொது அதற்கு செல்லமுடியாது ஒரு நாள் முழுவதும் சாப்பிடாது நீங்கள் வருந்தியது எதனால்? ஆனால் இந்த மரணத்தை நீங்கள் அந்நியராய் விலகி நின்று பார்பதனால் உங்களுக்கு வலி தெரியவில்லை.
மரணம் இயற்கையே ஆனால் நமது மனவேதனைக்கு காரணம் நாம் அவர்கள் மீது வைக்கும் பாசமும் ஆசையுமே…
“ஆசையே துன்பத்திற்கு காரணம்”
அது தான் புத்தரின் போதனை என்றார் கையிலை சார்லஸை நோக்கி.
அந்த நேரத்தில் சாரல் மழை அடை மழையாக தொடங்கியது. இவர்கள் இருந்த இடத்தில் இருந்து தெற்கே 500 அடியில் இருந்தது மின் மயானம் இருப்பினும் அந்த கூட்டம் வலது(மேற்கு) புறம் திரும்பி மீண்டும் இடது (தெற்கு) திரும்பி ஒரு “ப” வடிவ பயணத்தை முன்னெடுத்து இவர்கள் கண்களிலிருந்து மறைந்தது.
இந்த சமுதாயம் அத்தகைய துன்பத்தில் இருந்து விடுபட எத்தகைய வழியை போதிக்கிறது என்றார் ஜெர்ரி.
ன்ற
தாமரையிலை மேல் நீர் போல வாழ வழி காட்டுகிறது. நிலையின்மையின் பிடிப்பை கைவிட்டு நிலையானதை பற்ற போதிக்கிறது என்றார் கையிலை.
இவற்றை பரிசோதனை செய்து வெற்றி கண்ட யாரும் உண்டா என்றார் ஜெர்ரி.
அதற்கு கண்ணன், “பலர் பெயர்களை சொல்ல முடியும் ஆயினும் நாங்கள் குறிப்பிட விரும்புவது அவர்களின் கொடையான பலதரப்பட்ட கோட்பாடுகள். உலகாயதத்தில் இருந்து விடுபட்டும் வழி பற்றி பலவிதமான கோட்பாடுகள் வகுக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு,விமர்சிக்கப்பட்டு இன்னும் எவ்வளவு விவாதத்திற்கும் தயாராக இருக்கிறது.
யார் எதை விரும்புகிறார்களோ அந்த பாதையை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு சுதந்திரமும் உரிமையும் இங்குள்ளது என்ற அதே நேரத்தில் சுப்பன், அவர்கள் தேநீர் அருந்திய பாத்திரங்களை சுத்தம் செய்து இரு வேறாக பிரித்து அடுக்கினார்.
ஓரளவு இந்த சமூகத்தின் மேன்மை புரிய தொடங்குவதாகவும் மேலும் இதைப் பற்றி படித்து தெரிந்துகொள்வதாகவும் கூறினார் ஜெர்ரி.
நமது சமூகத்தின் பெருமையை ஒரு ஆங்கிலோ இந்தியருக்கு எடுத்துக் கூறி ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கொண்டுசென்றதை பெருமையாக நினைத்தனர் கண்ணனும் கையிலையும்.
அப்போது மின் மயானத்தை நோக்கினார் சுப்பன் இறந்த உடலை சுமந்து சென்ற அந்த கூட்டம் ஒரு வழியாக மின் மயானத்தை அடைந்திருந்தது.
–