பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன் இருவருக்கும் 2018ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

author
2
1 minute, 28 seconds Read
This entry is part 6 of 7 in the series 24 நவம்பர் 2019

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 23வது (2018) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். எழுத்தாளர் பாவண்ணன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன.

1996 ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது அளிக்கப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் (புனைவற்ற எழுத்து), எழுத்தாளர் பாவண்ணன் (புனைவெழுத்து), ஆகிய இருவரையும் எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட  நடுவர் குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் சென்னை அல்லது தமிழகத்தின் வேறொரு நகரில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும்.. விழா பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

(விருதாளர்களைப் பற்றிய குறிப்புகளும், அவர்களின் படைப்புகளும் அடுத்த பக்கத்தில்)

ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன்

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக சமூகவியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டியல், மானிடவியல் துறைகளில் இயங்கி வரும் ஆய்வாளர். தென் தமிழகத்தின் நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், வழக்காறுகளை ஊர் ஊராக அலைந்து சேகரித்தவர். சமூகப் பண்பாட்டு ஆய்வுகளைக் கூட கள ஆய்வுகள் மூலம் செய்த தனித்தன்மை கொண்ட ஆய்வாளர் இவர். மேலும் தனது குறுநூல்கள் மூலம் ‘சமபந்தி போஜனம்’ போன்ற சர்ச்சைகளில் கலந்து கொண்டு தீர்த்து வைத்தவர்.

ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் நெல்லை மாவட்டம் ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் 09.04.1943 இல் பிறந்தவர்.  இவரது தந்தையாரின் பணி நிமித்தம் காரணமாக இவரது இளமைக் காலமும் பள்ளிக் கல்வியும் ஓட்டப்பிடாரம், சென்னைச் சூளைமேடு, திருநெல்வேலி என்று தமிழகத்தின் பல ஊர்களில் அமைந்தது.  1963-67 நான்கு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துப் படித்து, புலவர் பட்டம் பெற்றார்.

1967 இல் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி.  கல்லூரியில் தமிழ்த்துறையில் ஆசிரியராக இணைந்தார். 2001 ஏப்ரல் மாதம் வரை இவர் இதே கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அப்போது இவருக்கு பொதுவுடைமைக் கொள்கைகளில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக பேராசிரியர் நா.வானமாமலையுடன் ஏற்பட்ட நட்பு இவரை ஒரு சமூகவியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளராக மாற்றியது.

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் கட்டுரைகளும் நூல்களும் தமிழகத்தில் அறியப்படாமல் இருந்த வரலாற்றின் பக்கங்களை வெளிக்கொண்டு வந்தன. ஆஷ் கொலை குறித்தும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. குறித்தும் இவர் எழுதியுள்ள ஆய்வுரைகள் தமிழ்நாட்டு அறிஞர்களால் பெரும் வரவேற்பைப் பெற்றவை. நெல்லை மாவட்டத்தின் கிராமப் புறங்களிலும் கடற்கரைப் பகுதிகளிலும் மக்களிடையே இருந்த வாய்மொழி வழக்காறுகளைத் தொகுத்து, தமிழகத்தின் மக்கள் வரலாறு எழுதுவதற்கு முன்னோடியாகச் செயல்பட்டவர். எழுதுவதும் பேசுவதும் இவரின் இயல்பாக உள்ளது. பேராசிரியர் அவர்களின் உரைகள் புத்துணர்ச்சியும் புத்தறிவும் வழங்குபவை.

தமிழில் சமூகவியல், நாட்டுப்புறவியல், பண்பாட்டியல், மானிடவியல் துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வரும் ஆய்வாளரும் தெந்தமிழக நாட்டுப்புற வாய்மொழி இலக்கியங்களின் சேகரிப்பாளருமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2018ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

.சிவசுப்பிரமணியன் படைப்புகள்

அ.  நூல்கள்

1.      பொற்காலங்கள் – ஒரு மார்க்சிய ஆய்வு (1981)

2.      அடிமை முறையும் தமிழகமும் (1984)

3.      வ.உ.சியும் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும் (1986,2012)

4.      ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் (1986, 2009)

5.      மந்திரமும் சடங்குகளும் (1988,1999,2010,2013)

6.  பின்னி ஆலை வேலைநிறுத்தம் (1921,1990) (இணையாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி)

7.      எந்தப் பாதை (2000)

8.      வ.உ.சி. ஓர் அறிமுகம் (2001)

9.      கிறித்தவமும் சாதியும் (2001,2001,2003,2006,2011)

10.    தமிழ் அச்சுத்தந்தை அண்டிரிக் அடிகளார் (2003)

11.    தமிழகத்தில் அடிமை முறை (2005,2007, 2010,2012)

12.    நாட்டார் வழக்காற்றியல் அரசியல் (2006)

13.   பஞ்சமனா பஞ்சயனா (2006)

14.   தோணி (2007)

15.   கிறிஸ்தவமும் தமிழ்ச்சூழலும் (2007,2012)

16.   கோபுரத் தற்கொலைகள் (2007)

17.   வரலாறும் வழக்காறும் (2008,2010)

18.   ஆகஸ்ட் போராட்டம் (2008)

19.   வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-ஓர் அரிச்சுவடி (2008)

20.   உப்பிட்டவரை…(2009)

21.   இனவரைவியலும் தமிழ் நாவல்களும் (2009)

22.   பண்பாட்டுப் போராளி- நா.வானமாமலை (2010)

23.   படித்துப் பாருங்களேன்….(2014)

24. பனை மரமே! பனை மரமே! (2016)

ஆ. சேகரித்துப் பதிப்பித்த நூல்கள்

1.      பூச்சியம்மன் வில்லுப்பாட்டு (1989, 2013)

2.      தமிழக நாட்டுப்புறப் பாடல்களஞ்சியம் (தொகுதி 10) (2003)

3.      தமிழக நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் (தொகுதி10) (2004)

4.      உபதேசியார் சவரிராய பிள்ளை 1801 -1874 (2006)

5.      கல்லறை வாசகப்பா – கூத்து நாடகம் (2007)

6.      பெரியநாயகம் பிள்ளை தன்வரலாறு (2008)

இ. குறு நூல்கள்

1.      எந்தப் பாதை (1992)

2.      தர்காக்களும் இந்து இஸ்லாமிய ஒற்றுமையும் (1997)

3.      பிள்ளையார் அரசியல் (2000)

4.      பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் (2014)

5.      மதமாற்றத்தின் மறுபக்கம் (2002)

6.      விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டத்தின் அரசியல் (2003)

7.      புதுச்சேரி தந்த நாட்குறிப்புகள் (2006)

8.      இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள் (2012)

9.      தமிழ்ச் சமூகத்தில் சீர்திருத்த சிந்தனைகள் (2012)

10.   தர்காக்களும் இந்து இசுலாமிய ஒற்றுமைகளும் (2014)

11.   இந்தியாவில் சாதிமுறை: அம்பேத்கரும் காந்தியும் (2014)

12.   அம்பேத்கரும் மனுஸ்மிருதியும் (2014)

ஈ. நூல் மதிப்புரை

இனவரைவியலும் தமிழ் நாவலும்: சித்திரவீதிக்காரன்

எழுத்தாளர் பாவண்ணன்

பாவண்ணன்

1980களில் தமிழில் மிக முக்கியமான சிறுகதை எழுத்தாளராக அறியப்பட்ட பாவண்ணன் தொடர்ந்து ஓயாமல் இயங்கிவரும் அபூர்வமான படைப்பாளிகளில் ஒருவர் ஆவார். சிறுகதை, நாவல், கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு என 50க்கும் மேற்பட்ட நூல்களை வழங்கியிருக்கும் மிக முக்கியமான படைப்பாளி பாவண்ணன்.

பாவண்ணன் புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் உள்ள வளவனூர் என்னும் சிற்றூரில் அக்டோபர் 20, 1958 அன்று பிறந்தார். தாயார் பெயர் சகுந்தலா; தந்தையார் பெயர் பலராமன். அவரது இயற்பெயர் பாஸ்கரன். பள்ளிக்கல்வியை வளவனூரிலும் புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசுக்கல்லூரியிலும் பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்துத் தேறினார். தொடக்கத்தில் ஓராண்டுக்கும் மேலாக புதுச்சேரி தொலைபேசி அலுவலகத்தில் பணிபுரிந்த பிறகு, இளம்பொறியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடகத்துக்குச் சென்றார். தற்சமயம் பணி ஓய்வு பெற்று பெங்களூரில் குடும்பத்தாரோடு வசித்து வருகிறார்.

ஒரு எழுத்தாளன் தன் மொழிக்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் தனது வாழ்க்கை முழுவதும் செய்து கொண்டுவரும் அபூர்வமான படைப்பாளி பாவண்ணன். கடந்த 35 ஆண்டுகளில் அவர் எழுதாத நாளே இல்லை என்று சொல்லலாம். இதுவரையிலும் 20 சிறுகதைத் தொகுதிகள், ‘வாழ்க்கை ஒரு விசாரணை’, ‘சிதறல்கள்’, ‘பாய்மரக் கப்பல்’ என மூன்று நாவல்கள், இரண்டு குறுநாவல்கள் 18 கட்டுரைத் தொகுப்புகள் என 50-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன.
பணியின்பொருட்டு கர்நாடகத்தில் வசிக்கத் தொடங்கிய நாளிலேயே கன்னடத்தைக் கற்றுக்கொண்ட பாவண்ணன், கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்தவை மொத்தம் 19 நூல்கள். தொன்ம நிலங்களாக காவிரி நதியால் ஒன்றிணைந்தே இருக்கும் கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான இலக்கிய உறவுக்கான முக்கியமான பாலமாக பாவண்ணன் விளங்குகிறார்.

‘பலிபீடம்’, ‘நாகமண்டலம்’ போன்ற கிரீஷ் கர்நாட்டின் நவீன நாடகங்களையும், லங்கேஷ், வைதேகி, விவேக் ஷன்பாக் போன்றவர்களின் சிறுகதைகளையும், பைரப்பாவின் ‘பருவம்’, ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’, தேவனூரு மகாதேவாவின் ‘பசித்தவர்கள்’, ‘ஓம் நமோ’, ராகவேந்திர பாட்டீலின் ‘தேர்’ உள்ளிட்ட நாவல்களையும் அக்கமாதேவி, பசவண்ணர் என கன்னடத்தின் ஆதி கவிகள் தொடங்கி இன்றைய நவீன கவிஞர்கள் வரையிலும் தமிழில் வாசிக்கும் வாய்ப்பு நமக்கு பாவண்ணனின் மொழியாக்கத்தின் வாயிலாகவே சாத்தியமானது. கன்னடத்தின் முன்னணி எழுத்தாளரான கிரீஷ் கர்நாட்டின் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கோரும்போது, பாவண்ணன் மொழிபெயர்ப்பதாய் இருந்தால் மட்டுமே அனுமதி தர முடியும் என்று நிபந்தனை விதிக்குமளவுக்கு அவரது மொழிபெயர்ப்பின் மேல் பெரும் மரியாதை வைத்திருக்கிறார் கிரீஷ் கர்நாட்.

தமிழில் தலித் எழுத்துக்களுக்கான தொடக்கத்தை ஏற்படுத்தியவை பாவண்ணனின் மொழிபெயர்ப்புகளே. 1996-ல் வெளியான ‘புதைந்த காற்று’ என்கிற தலித் எழுத்துகளின் தொகை நூலும், சித்தலிங்கய்யாவின் ‘ஊரும் சேரியும்’ மற்றும் அரவிந்த் மாளகத்தியின் ‘கவர்மென்ட் பிராமணன்’ எனும் தன்வரலாற்று நூல்களும் தமிழ் இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளையும் பாதிப்புகளையும் உருவாக்கின. இந்த நூல்களின் வருகைக்குப் பின்பே தமிழில் தலித் இலக்கியம் பற்றிய உரையாடல்கள் தொடங்கின.

பாவண்ணன் கவிதையிலிருந்து தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ் மரபிலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கபிலர் தொடங்கி ஆவுடையக்காள் உள்ளிட்ட பல கவிஞர்கள் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். அதேபோல, கன்னடத்தின் முக்கியமான பக்திக் கவிஞரான அக்கமாதேவியின் கவிதைகளைத் தமிழின் ஆண்டாள் பாசுரங்களோடு ஒப்பிட்டு எழுதிய ‘பாட்டும் பரவசமும்’ என்கிற கட்டுரை மிக முக்கியமானது.

ஒரு வாசகனாகத் தான் ரசித்தவற்றைத் தன் வாசகர்களுக்கு அடையாளம் காட்டுவது. தமிழில் எழுதும் புதிய கவிஞர்களின் கவிதைகளை முன்வைத்து அவர் எழுதிய ‘மனம் வரைந்த ஓவியங்கள்’ எனும் புத்தகமும், சிறுகதையாளர்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட ‘எனக்குப் பிடித்த கதைகள்’ தொகுப்பும் புதிய வாசகர்களுக்கு முக்கியமானவை. அவரது கட்டுரைத் தொகுப்புகள் பலவும் வாழ்வின் பல்வேறு தருணங்களில் நாம் உணர நேரும் அபூர்வ கணங்களைச் சுட்டி நிற்பவை.

பிற இலக்கிய வகைமைகளைப் போலவே கவிதைகளையும் அவர் தொடர்ந்து எழுதுகிறார். இதுவரையிலும் மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர் பாவண்ணன். வியப்பும் உற்சாகமும் கும்மாளமும் மிக்க குழந்தைகளின் உலகைச் சுற்றி அவர் எழுதிய பாடல்கள் மூன்று தொகுதிகளாய் வெளியாகியுள்ளன.

தமிழில் சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் எனத் தொடர்ந்து ஓயாமல் இயங்கி வரும் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2018ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருதுக் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.

பாவண்ணன் படைப்புகள்

அ. கவிதைகள்

  1. குழந்தையைப் பின்தொடரும் காலம் (1997 விடியல் பதிப்பகம்)
  2. கனவில் வந்த சிறுமி (2006 அகரம் பதிப்பகம்)
  3. புன்னகையின் வெளிச்சம் (2007 சந்தியா பதிப்பகம்)

ஆ. சிறுகதைகள் 

  1. வேர்கள் தொலைவில் இருக்கின்றன (1987 ‍ காவ்யா பதிப்பகம்)
  2. பாவண்ணன் கதைகள் (1990 அன்னம் பதிப்பகம்)
  3. வெளிச்சம் (1990 மீனாட்சி பதிப்பகம்)
  4. வெளியேற்றம் (1991 காவ்யா பதிப்பகம்)
  5. நேற்று வாழ்ந்தவர்கள் (1992 காவ்யா பதிப்பகம்)
  6. வலை (1996 தாகம் பதிப்பகம்)
  7. அடுக்கு மாளிகை (1998 காவ்யா பதிப்பகம்)
  8. நெல்லித் தோப்பு (1998 ஸ்நேகா பதிப்பகம்)
  9. ஏழுலட்சம் வரிகள் (2001 காவ்யா பதிப்பகம்)
  10. ஏவாளின் இரண்டாவது முடிவு (2002 தமிழினி பதிப்பகம்)
  11. கடலோர வீடு (2004 காவ்யா பதிப்பகம்)
  12. வெளியேற்றப்பட்ட குதிரை (2006 அகரம் பதிப்பகம்)
  13. இரண்டு மரங்கள் (2008 புதுமைபித்தன் பதிப்பகம்)
  14. முத்துகள் பத்து (2011,தேர்ந்தெடுத்த சிறுகதைகள், அம்ருதா பதிப்பகம்)
  15. பொம்மைக்காரி (2011 சந்தியா பதிப்பகம்)
  16. பச்சைக்கிளிகள் (2014 சந்தியா பதிப்பகம்)
  17. பாக்குத்தோட்டம் ( 2014, உயிர்மை பதிப்பகம் )
  18. கண்காணிப்புக் கோபுரம் (2016, சந்தியா பதிப்பகம்)
  19. பிரயாணம் ( தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- 2016, காலச்சுவடு பதிப்பகம்)

இ. நாவல்கள் 

  1. வாழ்க்கை ஒரு விசாரணை (1987 புத்தகப்பூங்கா)
  2. சிதறல்கள் (1990 தாகம் பதிப்பகம்)
  3. பாய்மரக்கப்பல் (1995 காவ்யா பதிப்பகம்)

ஈ. குறுநாவல்கள் 

  1. இது வாழ்க்கையில்லை (1989, சரவணபாலு பதிப்பகம்)
  2. ஒரு மனிதரும் சில வருஷங்களும் (1989, 2005 அகரம் பதிப்பகம்)

உ. கட்டுரைகள் 

  1. எட்டுத்திசையெங்கும் தேடி (2002 அகரம் பதிப்பகம்)
  2. எனக்குப் பிடித்த கதைகள் (2003 காலச்சுவடு பதிப்பகம்)
  3. ஆழத்தை அறியும் பயணம் (2004 காலச்சுவடு பதிப்பகம்)
  4. தீராத பசிகொண்ட விலங்கு (2004 சந்தியா பதிப்பகம்)
  5. வழிப்போக்கன் கண்ட வானம் (2005 அகரம் பதிப்பகம்)
  6. எழுத்தென்னும் நிழலடியில் (2004 சந்தியா பதிப்பகம்)
  7. மலரும் மணமும் தேடி (2005 சந்தியா பதிப்பகம்)
  8. இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள் (2006 சந்தியா பதிப்பகம்)
  9. நதியின் கரையில் (2007 எனி இந்தியன் பதிப்பகம்)
  10. துங்கபத்திரை (2008 எனி இந்தியன் பதிப்பகம், 2017, சந்தியா பதிப்பகம்)
  11. ஒரு துண்டு நிலம் (2008 அகரம் பதிப்பகம்)
  12. உரையாடும் சித்திரங்கள் (2008 புதுமைபித்தன் பதிப்பகம்)
  13. வாழ்வென்னும் வற்றாத நதி (2008 அகரம் பதிப்பகம்)
  14. ஒட்டகம் கேட்ட இசை (2010 காலச்சுவடு பதிப்பகம்)
  15. அருகில் ஒளிரும் சுடர் (2010 அகரம் பதிப்பகம்)
  16. மனம் வரைந்த ஓவியம் (2011 அகரம் பதிப்பகம்)
  17. புதையலைத் தேடி (2012 சந்தியா பதிப்பகம்)
  18. கனவுகளும் கண்ணீரும் (2014, என்.சி.பி.எச். வெளியீடு)
  19. படகோட்டியின் பயணம் (2017, என்.சி.பி.எச். வெளியீடு)
  20. வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள் (2017, சந்தியா பதிப்பகம்)
  21. சிட்டுக்குருவியின் வானம் (2018, சந்தியா பதிப்பகம்)

ஊ. குழந்தைப் பாடல்கள்

  1. பொம்மைக்கு ஓர் இடம் வேண்டும் (1992 கலைஞன் பதிப்பகம்)
  2. பச்சைக்கிளியே பறந்துவா (2009 அகரம் பதிப்பகம்)
  3. யானை சவாரி (2014, பாரதி புத்தகாலயம்)
  4. மீசைக்காரப் பூனை (2016, பாரதி புத்தகாலயம்)
  5. எட்டு மாம்பழங்கள் (2017, பாரதி புத்தகாலயம்)
  6. கன்றுக்குட்டி (2019, பாரதி புத்தகாலயம்)

மொழிபெயர்ப்புகள்

அ. கன்னடத்திலிருந்து

  1. கன்னட நவீனக் கவிதைகள் (1992, கனவு)
  2. பலிபீடம் (1992 நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்)
  3. நாகமண்டலம் (1993 நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்)
  4. மதுரைக்காண்டம் (1994 நாடகம், காவ்யா பதிப்பகம்)
  5. வினைவிதைத்தவன் வினை அறுப்பான் (1995 நாவல், என்பிடி)
  6. புதைந்த காற்று (1996 தலித் எழுத்துகளின் தொகைநூல், விடியல் பதிப்பகம்)
  7. ஊரும் சேரியும் (1996 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
  8. கல்கரையும் நேரம் (1998, லங்கேஷ் சிறுகதைகள், சாகித்திய அகாதெமி)
  9. கவர்மென்ட் பிராமணன் (1998 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
  10. பசித்தவர்கள் (1999 நாவல், என்பிடி)
  11. வடகன்னட நாட்டுப்புறக்கதைகள் (2001, சாகித்திய அகாதெமி)
  12. அக்னியும் மழையும் (2002 நாடகம், காவ்யா பதிப்பகம்)
  13. பருவம் (2002 நாவல், சாகித்திய அகாதெமி)
  14. ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் (2004 நவீன கன்னட இலக்கிய எழுத்துகள் தொகைநூல், அகரம் பதிப்பகம்)
  15. நூறு சுற்றுக்கோட்டை (2004 நவீன கன்னட சிறுகதைகள் தொகைநூல்)
  16. ஓம் நமோ (2008 நாவல், சாகித்திய அகாதெமி)
  17. அக்னியும் மழையும் (2011 ஆறு நாடகங்களின் தொகைநூல், காலச்சுவடு பதிப்ப‌கம்)
  18. தேர் (2010 நாவல், சாகித்திய அகாதெமி)
  19. வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் (2013 கட்டுரை, காலச்சுவடு பதிப்ப‌கம்)
  20. வாழ்வின் தடங்கள் (தன்வரலாறு, 2017, காலச்சுவடு பதிப்பகம்)
  21. சிதைந்த பிம்பம் (நாடகம், கிரீஷ் கார்னாட், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
  22. அஞ்சும் மல்லிகை (நாடகம், கிரீஷ் கார்னாட், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
  23. அனலில் வேகும் நகரம் (நாடகம்,  கிரீஷ் கார்னாட், 2019, காலச்சுவடு பதிப்பகம்)
  24. திருமண ஆல்பம் (நாடகம், கிரீஷ் கார்னாட், 2018, காலச்சுவடு பதிப்பகம்)

ஆ. ஆங்கிலத்திலிருந்து

  1. நீர்யானை முடியுடன் இருந்தபோது (1998 ஆப்பிரிக்க வனவிலங்களைப்பற்றிய கதைகள், என்பிடி)
  2. காட்டின் கதைகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
  3. வியப்பூட்டும் பாலூட்டிகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
  4. மரங்கள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
  5. கஸ்தூர்பா – ஒரு நினைவுத்தொகுப்பு (2019, சந்தியா பதிப்பகம்)
Series Navigation‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்பூகோளத்தில் அனுதினம் அளவுக்கு மீறும் கரிவாயு சேமிப்பைக் குறைப்பது எப்படி ?
author

Similar Posts

2 Comments

  1. பஞ்சமனா? பஞ்சயனா? – ஆ. சிவசுப்பிரமணியன் – சிவானந்தம் நீலகண்டன் says:

    […] பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனின் நூல்கள் அனைத்தும் ஆய்வு அடிப்படையிலானவை. சில ஆண்டுகட்குமுன் அவரது ‘புத்தகத்தின் பெருநிலம்‘ வாசித்திருந்தேன். அதன்பிறகு அவரது ‘கிறித்தவமும் சாதியும்’ வாசித்தேன், ஆனால் முழுமையாக வாசிக்காததால் அந்நூலைக் குறித்து ஏதும் எழுதவில்லை. அண்மையில் ‘தமிழரின் தாவர வழக்காறுகள்‘ வாசித்தேன். ஆசிரியரைக் குறித்த சுருக்கமான அறிமுகத்தையும் அவரது நூல்களைக் குறித்த சில விவரங்களையும் அவருக்கு 2018ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது அறிவிக்கப்பட்டதை ஒட்டி எழுதப்பட்ட இப்பதிவில் காணலாம்.. […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *