தொற்று தந்த மாற்று வழிக் கல்வி

author
1 minute, 15 seconds Read
This entry is part 14 of 18 in the series 21 ஜூன் 2020
 
 கண்ணம்மா 
 
மனித குல வரலாறு பல நூறாயிரம் ஆண்டுகளை தன்னகத்தே கொண்டது. இதில் மனிதன் என்பதும் அவன் கொண்ட செயல் என மார்தட்டிக் கொள்வதும் மிக மிக குறுகியது. நூற்றாண்டு நிகழ்வுகள் என மனித இனம் நினைகூறுவது, அறிவியல் கண்டுபிடிப்புகள், மாபெரும் சமுதாய மறுமலர்ச்சி, பேரழிவுகள் ஆகியவனவற்றையே. பேரழிவுகளில், ஊழிப்பேரலை, பஞ்சம் மற்றும் நோய்தொற்று ஆகியவை புரட்டிப் போட்டிருக்கிறது. ஒவ்வொரு பேரழிவிற்குப் பின்னும் மனிதர்களின் வாழ்க்கை முறை மாறுவது திண்ணம். அதிலும் தோற்று நோயால் ஆட்கொள்ளப்படும் சமுதாயம் தனது வாழ்க்கை முறையை பெரிய அளவில் மாற்றிக் கொண்டுள்ளது. ஆனால் இந்த புதிய இயல்பானது (New Normal) பெரும்பாலும் நோய் மற்றும் அதன் வீரியம் இருக்கும் காலம் வரை மட்டுமே இருந்துள்ளது.

தொழிற்புரட்சி, கல்விப்புரட்சி, விவசாய புரட்சி, மருத்துவ மற்றும் சுகாதார புரட்சி இவற்றுடன், தகவல் தொழில் நுட்ப புரட்சியும் இணைந்து வீச்சு மிக்கதாய் வருடம் இரண்டாயிரத்திற்கு பிந்தைய காலம் மாறியுள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி கல்வியில் குறிப்பாக இந்த நோய்த்தொற்று காலத்தில் மிகப்பெரும் பங்காற்றி வருகிறது. இணையம் (இன்டர்நெட்) இதற்கு இணைப்புச்சங்கிலியாகத் திகழ்கிறது.

2G , 3G , 4G , 5G என இணைய செயல்திறன் அதிகரித்ததன் பலன் ஆக்கபூர்வமாகப் பயன்படுகிறது. ஒரு ஒளிக்காட்சியினை (வீடியோ) கைபேசியில் பார்க்கப் போராடியதும் மிக சில ஆண்டுகள் முன்புவரை நடந்தது. ஆனால் இன்று இணையத்தின் சக்தி கல்வி கற்பிப்பதிலும் கற்பதிலும் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24  ஆம்  தேதியிலிருந்து பொது முடக்கம் (LOCKDOWN) செய்யப்பட்ட போது முழு தேசமும் திக்குமுக்காடித்தான் போனது. இதில் மாணவர்கள் இயல்பாகவே மகிழ்ச்சி அடைந்தாலும் இடையில் நின்ற வகுப்புகள், பருவத் தேர்வுகள் போன்றவை என்னவாகும் எனப் பல கேள்விகளும் அவர்தம் மனதிலும் தொக்கி நின்றன. இந்நிலையில் இணையம் மற்றும் கணினி வழிக்கல்வி பற்றிய சிந்திப்பு தவிர்க்கமுடியாதது ஆனது.

இதற்கு முன்பிருந்தே  பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணையதளம் அல்லது கைபேசி செயலிகளைப் (Mobile  applications) பயன்படுத்தியே வந்துள்ளன. ஆனால் இவை பெரும்பாலும், பொதுவான அறிவிப்புகள்,  தேர்வு அட்டவணைகள், கல்விக்கட்டணம் குறித்த விபரங்கள்  மற்றும் வீட்டுப் பாடங்கள் போன்ற விபரங்களை மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோருக்குப் பகிரவே பயன்படுத்தப்பட்டது. கற்பித்தல் மற்றும் கற்றல் போன்ற நடைமுறைகள் பெரிய அளவில் நடந்ததில்லை. மிகச் சில கல்வி நிறுவனங்கள், MOODLE என்ற இலவச  கற்றல் மேலாண்மை முறையை    (Learning  Management  System ) பயன்படுத்துகின்றன. ஆனால் இந்த  பொது முடக்க காலம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனம் நடத்துபவர்கள் ஆகியோரை காலத்தின் கட்டாயமாக மாற்று வழிக் கல்வி பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது. மின்னஞ்சல் (E-mail) மற்றும் வாட்சப் (Whatsapp)  மூலம் ஆசிரியர்களின் பாடங்களை காணொளியாகவும் (video), கையடக்க ஆவண வடிவமைப்பு (pdf -printed  document  format ) மற்றும் பரத்தீடு காட்சியளிப்பு அளிக்கையாகவும் (powerpoint  presentation ) அளித்தனர்.பொது மக்களில் குறிப்பாக பெற்றோர் மத்தியில் வாட்சப் போன்ற பொதுவெளி தகவல் பரிமாற்ற செயலிகளின் மேல் படர்ந்திருந்த கேளிக்கை பிம்ப காரணத்தால் இதனை கல்வி நிறுவனங்களும் சிறு தயக்கத்துடனே பயன்படுத்தின. 

வகுப்புகளை நேரலையாக (Live  classes ) நடத்துவது  குறித்த  பரீட்சார்த்தமாக சில தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் முயற்சியில் இறங்கின. இந்த சேவைகளை வழங்குவதற்கான உள்கட்டமைப்பு இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சற்று சிரமமானது. அதிலும் பொது  முடக்க காலத்தில் மேலும் சிரமமானது. அதற்கான மென்பொருள் தளங்கள்  குறித்து ஆலோசிக்கத் துவங்கினர். பெரும் உற்பத்தித் தொழிற்துறையினரும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் தங்களுக்குள் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் காணொளி கலந்துரையாடல் மென்பொருட்களை (video  conferencing software நல்லதொரு தேர்வாக அமையும் என முடிவு செய்தனர். ஜூம்   (ZOOM ), ஸ்கேய்ப்  (SKYPE ),  கோ டு  மீட்டிங் (GoTo  மீட்டிங்) மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft  Teams), சிஸ்கோ வெபெக்ஸ்  மீட்டிங்ஸ் (CISCO  Webex  Meetings ) மற்றும் கூகிள்  மீட்டிங் (Google  Meeting ) போன்றவை அவற்றுள் சில.

இதற்கான பயிற்சியினை   இதில் முன்பே பரிட்சயம் கொண்ட ஆசிரியர்கள் அல்லது வல்லுநர்களைக் கொண்டோ ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தனர். இன்று  இணைய வழிக்கற்றல் சில மாநில அரசுப் பள்ளிகளிலும் பல தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கடும் உழைப்பு மற்றும் மெனக்கெடலினால் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்  பண்டிட் மதன் மோகன் மாளவியா பெயரிலான நேஷனல் மிஷன் ஆன் டீச்சர்ஸ் அண்ட் டீச்சிங் (Pandit Madan Mohan Malaviya National Mission on Teachers and Teaching ) அளித்து வருகிறது. இணைய வழி இரன்டு வார காலப் பயிற்சியான இது இந்த பொதுமுடக்கத்தின் போது இரு முறை நடத்தப்பட்டுள்ளது. வரும் காலத்திலும் தரப்படவுள்ளது. இதற்கான விவரங்களை www.nmtt.gov.in/event என்ற இணைய முகவரியில் இருந்து பெறலாம்.

பெரும் எண்ணிக்கையிலான பயனர்கள் கற்கும் வகையில் (massive  open   online  learning ) உள்ள இணைய இயங்குதளங்களை, ஆழ்ந்த அறிவு மற்றும்  கற்றல் பெறும் ஆர்வம் மிக்கவர்கள் தங்கள் தகுதி மேம்பாட்டுக்காக கடந்த சில ஆண்டுகளாகவே பயன்படுத்தி வருவது அதிகரித்து வந்தது .    இதற்காக கோர்ஸ்இரா  (coursera ) எட்எக்ஸ் (edX ) மற்றும் உடெமி (udemy)   போன்ற இயங்குதளங்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்தியாவில்  ஐ ஐ டி (IIT) போன்ற உயர்கல்வி நிறுவங்களின் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும் NPTEL (National Programme on Technology Enhanced Learning )  படிப்புகளும் MOOC வகையைச் சேர்ந்தவையே.

இதனிடையே இத்தகைய இணைய இயங்குதளங்களைக் கொண்டு மெய்நிகர் மாநாடுகள் (virtual  conference ) கருத்தரங்குகள் (webinar), வினாடி வினா (e-குய்ஸ்) நூற்றுக்கணக்கில் நடைபெற்றுவருகிறது. பிரபலமான கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி சிறு சிறு கல்வி நிறுவனங்களும் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் கற்றல் மேம்பட்டுள்ளது. கணிதம் , இலக்கியம், வேதியியல், இயற்பியல், கணினி மற்றும்  மென்பொருள் தொழிற்நுட்பம், இயந்திரவியல், மின்னணு மற்றும் மின்னியல் கட்டிடவியல், பொருளாதாரம், சட்டம் என எண்ணில் அடங்காத துறைகளில் இத்தகைய நிகழ்ச்சிகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளது துறை சார்ந்த அறிவு வளர்ச்சிக்கு மிகப் பெரும் பங்காற்றுகிறது. இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் பெரும்பாலான இணைய வழி கருத்தரங்குகள் பதிவுக்கட்டணம் (registration  fee) எதுவும் பெறுவதில்லை. பெரும்பாலான கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் இதனை ஒரு எளிய விளம்பரமாகப் பார்ப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இவை பொது முடக்கம் வரை மட்டும் அதிக அளவில் நடக்கும் என எதிர் பார்க்கலாம். இயல்பு வாழ்கைக்குத் திரும்பும் பொது இணைய வழி கற்றல் குறையலாம். ஆனால் இதன் பரிட்சயம் மற்றும் இவை  தந்த கற்றல் அதன் பலன்கள்   மேலும் மேலும் இதனை முயற்சித்துப்  பார்க்கும் உத்வேகத்தைத் பலருக்கும் தரும் என்பதில் ஐயமில்லை. எல்லா நிகழ்வுகளிலும் மாற்றங்களிலும் புது முயற்சிகளிலும் நிறை குறை இருக்கும். அந்தவகையில் இணைய வழி கற்றல் முறையிலும் சில அசௌகரியங்கள், சங்கடங்கள், பிரச்சினைகள் என்பதை மறுப்பதற்கில்லை. பள்ளி மற்றும் உயர்கல்வியை  இணையவழியில் வழங்குவதில் சிரமங்கள் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வழியில் இருப்பினும் அனுபவங்கள், அது தரும் படிப்பினைகள் கொண்டும் மென் மேலும் சீர் படுத்த முடியும். தாராளமயமாக்கப்படும் கல்வி முறைகள் இத்தகைய  மாற்று வழி கல்வி முறையை பயன்படுத்தும் பொழுது நாட்டில் தற்போது நிலவும் வேலைத்திறன் குறைபாடு ( lack  of  employability  skills )  பெரிதும் குறையும் மற்றும் கற்றலில் உள்ள கட்டுப்பெட்டித்தனம் மற்றும் செலவுகளும் குறையும். இத்தகைய புதிய முயற்சிகள்   தொற்றுக்காலம் முடிந்த பின்னும் இவை தொடர நம் அனைவரின் புரிதலும் ஆதரவும் தேவை.   

                                                                                                   -கண்ணம்மா
Series Navigationகம்போங் புக்கிட் கூடாதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *