தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

This entry is part 11 of 11 in the series 12 ஜூலை 2020

1 – கங்கா ஸ்நானம் 

றுபதினாயிரம் மனைவிகள் ஓர் அரசனுக்கு என்ற கதை பிரபலமான ஒன்று. அறுபதினாயிரம் குழந்தைகள் ஓர் அரசனுக்கு?இருந்திருக்கிறார்கள். சாகரா என்னும் அரசனுக்கு. (புராணத்தில் இந்த அறுபதினாயிரம் என்னும் எண் ஏன் வசீகரமாய் இருந்திருக்கிறது என்பதைத் தீர விஜாரிக்க வேண்டும்.)  சாகராவிடம் உள்ள ஒரு குதிரையை இந்திரன்   திருடிச் சென்று (அம்மாடி ! அகலிகையைத் திருடுகிறான், குதிரையைத் திருடுகிறான், இன்னும் வேறு ஏதாவது லிஸ்டில் சேர்க்க வேண்டுமா என்று தெரியவில்லை…) கபில முனிவரின் குடில் அருகே கட்டி வைக்க, குதிரையைத் தேடி வரும் அறுபதினாயிரம் புத்திரர்களும் அதைக் குடிலருகே பார்த்து முனிவர்தான் திருடினார் என்று அவரைத் துன்புறுத்துகிறார்கள். நிஷ்டையில் இருக்கும் முனிவர் கண்ணைத் திறந்து பார்த்து கோபம் கொண்டு அறுபதினாயிரம் பேரையும் எரித்து விடுகிறார். பேய்களாய் அலையும் அவர்களுக்கு முக்தி பின்னாளில் பகீரதன் பூமிக்கு கொண்டு வரும் கங்கையிடமிருந்து கிடைக்கிறது. இவ்வாறு பாபங்களைக் தீர்க்கும் தேவியாகக் கங்கை பார்க்கப்படுகிறாள். .ஆக, கங்கை புனிதம். கங்காதேவி கடவுள். கங்கையில் நீராடி கங்கா தேவியைப் போற்றி வணங்குபவர்கள் தமது பாவங்களைக் கரைத்து மோட்சத்தை அடைய வழி தேடுகிறார்கள்’ என்பது பொதுப் புத்தியில்  உறைந்து விட்ட பிம்பம்.

ஆனால் சின்னசாமியும் அவரது மனைவியும் காசிக்கு வருவதும் கங்கையில் நீராடுவதும் தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதற்கு அல்ல. வாஸ்தவத்தில் கங்கைக்கு வரும் பிரமேயமே அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. விதவையான பின் அவர்களுடன் வந்து தங்கும்  சின்னசாமியின் அக்கா, சாகும் தருவாயில் சின்னசாமியிடம்  தன் கணவனின் நிலத்தை விற்கச் சொல்லுகிறாள். நிலம் விற்று வந்த பணமான நாலாயிரத்தில் அவளது கணவன் ஊரில் துரையப்பா என்பவரிடம் வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதமிருப்பதைக் கணவனும் மனைவியுமாகக் காசிக்குச் சென்று அவள் நினைவாக கங்கா ஸ்நானம் செய்யுமாறு தனது விருப்பத்தைச் சொல்லுகிறாள்.  

துரையப்பா அவருடைய ஊரில் மகானென்றும் அன்னதாதா என்றும் கொண்டாடப்படும் பெரிய மனிதர். கடனைத் திருப்பிக் கொடுக்கச் செல்லும் சின்னசாமியிடம் அவரது அக்கா காலமான சேதியைக் கேட்டு வருந்துகிறார். அதன் பின் நடக்கும் சம்பாஷணை:

“எங்கே இப்படி இவ்வளவு தூரம்?”

“கணக்குத் தீர்க்கலாம்னு வந்தேன், மாமா.”

“ஆமாம்.பிரமாதக் கணக்கு”

“முத நாளைக்கு கூப்பிட்டு கணக்கெல்லாம் பார்க்கச் சொன்னா அக்கா. கடனோட போறமேன்னு அவளுக்குக்  குறைதான்.”

“த்ஸ…கடன் ! பிரமாதம்…! பிரமாதக் கடன் பாரு!”

“மூவாயிரத்து நாற்பத்தேழு ஆயிருந்தது அப்ப.”

“ம்.”

“அப்புறம் ஒரு மாசம் ஆயிருக்கே.”

“ஆமாண்டா. ஒரு மாச வட்டியிலே இன்னொரு கிராமம் வாங்கப் போறேன். அசடு!”

“பார்க்கலாமா இப்ப?” தயாராத்தான் வந்திருக்கேன்.”

“பணம் கொண்டு வந்திருக்கியா என்ன?”

“ஜாடா கொண்டு வந்திருக்கேன், மாமா.”

“இப்ப என்னடா? சிரமமாயிருக்கு.களத்திலே காலமே புடிச்சு நின்னிருக் கேன். பசிக்கிறது. தூக்கம் தூக்கமா வேறே வரது. காலமே வரவு வச்சுண்டா போறது…”

“சரி.”

“இதுக்காகவா வந்தே இவ்வளவு தூரம்? ரயில்லியும் பஸ்லியும், வெய்யிலியும்!” 

“வரத்தானே வேணும்?”

“போடா அசடு! ஒரு லெட்டர் போட்டா நான் வந்து வாங்கிண்டு போக மாட்டேனா…நன்னா அலைஞ்சே போ!”

“அழகாயிருக்கே. நான் வந்து கொடுக்கிறது, மரியாதையா?

“சரிடா சரி. காலமே வரவு வச்சிக்கலாம். போ!”

“அப்ப பணத்தை வாங்கி வெச்சுக்குங்கோ. காலமே வரவு வச்சுக் கலாம்.”       

 அதனால் இரவில் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார் துரையப்பா. தூங்கு முன் சின்னசாமியின் மனதில் துரையப்பாவின் பேச்சில் என்ன கனிவு ! பெருந்தன்மை ! எவ்வளவு மரியாதை ! என்று ஆச்சரியக் குறிகள் தோன்றுகின்றன. மறுநாள் சின்னசாமிக்குக் “காலையில் முறுக முறுக வார்த்துப்போட்ட தோசை நாலு. கடைசி தோசைக்குத் தயிர். ஏன் என்று கேட்கிற காப்பி” கிடைக்கிறது. அன்னதாதாவின் வீடு ஆச்சே !   ஆனால் காலையில் கணக்குப் புத்தகத்தைத் திறக்கும்  துரையப்பா முதல் நாள் இரவில்  பணமே தன்னிடம் கொடுக்கப்படவில்லை என்று சாதித்து விடுகிறார்.  “அன்னதாதா” விஷயத்தைக் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்ல, கடைசியில் சின்னசாமி தன்  சொந்தப் பணத்தை எடுத்துக் “கடனை”  அடைக்கிறார். மீதமிருக்கும் பணத்தில் அக்காவின் விருப்பப்படி   கணவனும் மனைவியுமாகக் காசிக்கு, கங்கையைத் தேடி. வருகிறார்கள்.  எப்படிப்பட்ட கங்கை அது? ‘முக்கால் தென்னை உயரமுள்ள கரை அதற்கு; ரெண்டு கும்மாணம் காவேரி இருக்குமா?’ என்று ஐயத்தை எழுப்புகிற கங்கை ! அங்கு வந்ததும் அவர்கள் தங்கியிருக்கும் அதே கட்டிடத்தில்தான்  முந்தின நாள் வந்த துரையப்பா  தங்கியிருப்பதாகத் தெரிந்து சின்னசாமி திடுக்கிடுகிறார். ‘தெய்வம் தான் என்ன பண்ணப் போறார், பார்ப்போம்னு விளையாடறதா?’ என்று சின்னசாமியின் மனம் அவரை அலைக்கழிக்கிறது.   

துரையப்பா என்னும் ஒரு போலி, ஏமாற்றுக்காரன், அன்னதாதா, மகான் என்று ஊரில் பெயரெடுத்து சமூகத்தில் நாடகமாடுபவன் – அவன் தன்  பாவங்களை, கறைகளைப் போக்கிக் கொள்ள  கங்கையைத் தேடி வருவது ஆச்சரியமான விஷயம் அல்ல. அதிலும் குறிப்பாக, கொடுத்த கடனைத்  திரும்பப் பெற்றுக் கொண்ட பிறகும் வாங்கவே யில்லை என்று சாதித்து மறுபடியும் ஒரு சாதாரண ஜீவனிடம் கொள்ளையடித்து விடும் போக்கிரி, கங்கையில்தான் புகலிடம் தேட வேண்டும். ஆனால் தான் வரும் நேரம் பார்த்து அவனும் வந்திருப்பது சின்னசாமியைத் தொந்திரவு படுத்துகிறது.   ‘அவன்  மூஞ்சியில் முழிக்க வேண்டுமா? இது யார் விஷமம்?’ என்று சின்னசாமி தவிக்கிறார்.

கங்கையில் மூழ்கி விட்டு எழுந்து திரும்பச் செல்ல முயலுகையில் சின்னசாமி மனைவியிடம் “இரு, நான் ஜபமே பண்ணவில்லை. துரையப்பாவை நினைத்து நினைத்து குரோதப்பட்டுக் கொண்டே இருந்தேன்” என்று மீண்டும் இறங்கி ஸ்நானம் செய்கிறார்.. கரையேறி வரும் போது அவரைப் பார்த்து “பழசெல்லாம் கிளற வேண்டாம். இத்தனை நாழி வந்திருந்தார்னா ‘உன் பாவத்துக்கும்  முழுக்குப் போட்டுட்டேண்டா’ன்னு நினைச்சிண்டு சாதாரணமாப் பேசுங்கள்” என்கிறாள் அவர் மனைவி.  

ஜானகிராமன் இந்தக் கதையில் துரோகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று ஒன்றுக்கும் மேற்பட்ட விமரிசனங்கள் கண்ணில் பட்டன. 

துரோகம்தான் பேசப்பட்ட பொருள் என்றால் தி.ஜா. “துரையப்பாவின் துரோகம்” என்று எழுதியிருக்கலாம். ஆனால் ஏன் கங்கா ஸ்நானம்? மேலே குறிப்பிட மனைவியின் சொற்கள் மூலம் எத்தகைய மனிதர் களைப் படைத்து ஜானகிராமன் தனது  எழுத்தின் தனித்தன்மையை  உருவாக்குகிறார் என்பதைக் காண்கையில் பிரமிப்பாக இருக்கிறது. எல்லோரும்  பாவத்தைப் போக்கும் ஸ்நானம் என்று நம்பி காசிக்கு வந்து  நடமாடுகையில் பகைவனையும் மன்னித்து விடு என்று இறைஞ்சும் இந்தக் கணவன்-மனைவியின் கங்கா ஸ்நானத்தில் கங்கை புனிதமடைகிறது போல ஒரு தோற்றம் நமக்குள் எழுகிறது.

‘கங்கா ஸ்நான’த்தில் தி.ஜா. கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. சின்னசாமி துரையப்பாவைப் பார்த்து விடுகிறாரா? அவன் எப்படி சின்னசாமியை எதிர் கொள்கிறான்? கங்கையில் பாவத்தைப் போக்கிக் கொண்டதன் எதிரொலியாக “மகான்”துரையப்பா மனிதனாக ,மாறி  சின்னசாமியின் காலில் விழுந்து விடுகிறானா? மூவாயிரத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று பர்ஸை எடுக்கிறானா?!  ‘முடிவு உங்கள் கையில்’ என்று நம்மிடம் திணித்து விட்டு ஹாயாக நடந்து போகிறார் ஜானகிராமன். 

Series Navigationஉண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *