தோள்வலியும் தோளழகும் – வாலி

This entry is part 15 of 16 in the series 31 ஜனவரி 2021

                    

                  இந்திரனின் அம்சமாகத் தோன்றியவன் வாலி. “நான் தசரதன் மதலையாக அயோத்தி வருகிறேன்நீங்கள் எல் லோரும் பூமிக்குச் சென்று வானரர்களாக அவதாரம் செய்யுங்கள்என்று திருமால் கட்டளையிட தேவர்கள்  எல்லோ ரும் பூமிக்கு வந்தார்கள். அப்படி இந்திரனின் அம்சமாக வாலியும் சூரியனின் அம்சமாக சுக்கிரீவனும் பிறக்கிறார்கள்.

              கிட்டுவார் பொரக்கிடக்கின் மற்றவர்

                                        பட்ட நல்வலம் பாகம் எய்துவான்.

          [கிஷ்கிந்தா காண்டம்]   [நட்புக்கோட் படலம் 40]

                  வாலியோடு யாராவது நேருக்கு நேர் போர் செய்ய வந்தால் அவர்களுடைய தேக பலம் வர பலத்தில் பாதி வாலிக்குப் போய்ச் சேர்ந்து விடும்!

                                   இதை அறிந்திருந்ததால் இராவணன் வாலியின் முன் செல்லாமல் பின்புறமாகச் சென்று தாக்க நினைக்கிறான். ஆனால் வாலி, இராவணனைத் தன் வாலில் சுற்றிக் கொண்டு திரியலானான். வாலியின் வலிமையை உணர்ந்த இராவணன் வாலியோடு சமாதான உடன்படிக்கை செய்து கொள்கிறான்.

மாயாவியின் தோல்வி

                    வாலியின் வலிமையை உணராத மாயாவி என்ற அசுரன் வாலியை எதிர்க்கிறான். தன் வலிமை குறை வதைக் கண்ட அசுரன் ஒரு பிலத்துவாரத்திற்குள் நுழைகிறான்.

இதைக் கண்ட வாலியும் தன் சகோதரன் சுக்கிரீவனை பிலத்து வாரத்தின் வாயிலில் காவலாக நிறுத்திவிட்டு உள்ளே நுழை கிறான். மாயாவியும் வாலியும் வெகுகாலம் போர் செய்கிறார்கள். உள்ளே சென்ற வாலி, வெளியே வராததைக் கண்ட சுக்கிரீவன் தானும் உள்ளே சென்று அண்ணனுக்கு உதவ நினைக்கிறான்.

ஆனால் வாலிக்கு என்ன நேர்ந்தது என்று நிச்சயமாகத் தெரியாத நிலையில் சுக்கிரீவனை  பிலத்துவாரத்தின் உள்ளே செல்ல அமைச்சர்களும் மக்களும் அனுமதிக்கவில்லை.                                     வேறுவழியில்லாமல் அரை மனதோடு ஆட்சியை ஏற்றுக் கொள்கிறான் சுக்கிரீவன். ஒரு வேளை மாயாவி வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தால் பிலத்து வாரத்தைப் பாறைகளைக் கொண்டு மூடி விடுகிறார்கள். ஆனால் மாயாவியைக் கொன்றுவிட்டுத் திரும்பிய வாலி, சுக்கிரீவன் மேல் அடங்காத சீற்றம் கொள்கிறான்.

                            எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் சுக்கிரீவனை ஓட ஓட விரட்டிய வாலி சுக்கிரீவன்  ருச்யமுக பர்வதம் சென்றதும் அவன் மனைவி ருமையையும் ஆட்சியையும் கைப்பற்றிக் கொள்கிறான்.

                            ஒரே ஒரு காண்டம் [கிஷ்கிந்தா காண்டம்] ஒரே ஒரு படலத்தில் மட்டுமே இடம் பெற்றிருந்தாலும் வாலியின் தோள்வலி நம்மை பிரமிக்க வைக்கிறது! அமுதம்பெறுவதற்காகத் திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்த சமயம் எல்லோரும் தளர்ந்த போது வாலி எல்லோரையும் ஒதுங்கியிருக்கும்படி சொல்லிவிட்டு தனி ஒரு வனாகவே நின்று கடைகிறான்! கயிலை மலையைத் தூக்க முயன்ற இராவணனைத் தன் வாலில் சுற்றித் திரிந்தவன் வாலி இவ்வளவு பலம் பொருந்திய வாலியின் தோள்வலியைப் பார்ப்போம்.

                            சுக்கிரீவனுக்கும் இராமனுக்கும் அனுமன் மூலமாக நட்பு ஏற்பட்டபின், சுக்கிரீவன் இராமனுக்கு விருந்தளிக்கிறான். விருந்தில் சுக்கிரீவனே உபசரிப்பதையும், சுக்கிரீவன் மனைவி வராததையும் கண்டு, “நீயும் என்னைப்போல் மனைவியைப் பிரிந்துளாயோ? என்று கேள்வியெழுப்ப சமயம் பார்த்திருந்த அனுமன், வாலியையும் அவன் வலிமையையும் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறான்.

கடலைக் கடையும் தோள்——திருப்பாற் கடலைக் கடைந்த தோள்

                       ஏராளமான வரங்களும் வலிமையும் பெற்ற தேவர்களும் அசுரர்களும் தளர்ந்து போகிறார்கள். மந்தர மலை தேய,  வாசுகி விஷத்தைக் கக்க,அவர்கள் அனைவரையும் விலகியிருக்கும்படி சொல்லிவிட்டு வாலி தனி யொருவனாகவே கடலைக் கடைந்தான்!

         கழறு தேவரோடு, அவுணர் கண்ணின் நின்று

         உழலும் மந்தரத்து உருவு தேய முன்

         அழலும் கோள் அரா அகடு தீ விட

         சுழலும் வேலையைக் கடையும் தோளினான்

         [கிஷ்கிந்தா காண்டம்} [நட்புக் கோட் படலம் 38]

அவ்வளவு வலிமை பொருந்திய தோள்கள்! நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் என்ற நான்கு பூதங்களின் ஆற்றலைத் தான் ஒருவனே பெற்றவன். பெரிய சக்கரவாள கிரி என்னும் மலையி லிருந்து இங்குள்ள மலைக்குத் தாவும் வலிமை பெற்றவன்

         நிலனும், நீருமாய் நெருப்பும் காற்றும் என்று

         உலைவு இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான்;

         அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா

         மலையின் நின்றும் இம் மலையில்  வாவுவான்

               நட்புக் கோட் படலம் 39]  3824

வாலியின் பருத்து உயர்ந்த தோள்களில் மேகமும் சூரிய சந்திரர் களும் மறைந்து விடுவார்களாம்! அந்த அளவுக்கு அவன் தோள் கள் பருத்து உயர்ந்திருக்கும்!வாலி இடம் பெயர்ந்து எழுந்தால் மேரு முதலிய மலைகள் எல்லாம் வேரோடும் இடம் பெயரும்!

பெரியதோள் உருண்டு திரண்டு பருத்த தோள்.

               மேருவே முதல்கிரிகள் வேரொடும்

                பேருமே, அவன் பேருமேல் நெடுங்

                காரும், வானமும், கதிரும் நாகமும்

             தூருமே அவன் பெரிய தோள்களால்

       [கிட்கிந்தா காண்டம்] [நட்புக் கோட் படலம் 41] 3827

தார் கிடந்த தோள்——மாலையணிந்த தோள்                             

                   வாலியின் மாலையணிந்த தோள்கள் பூமியைப் பெயர்க்கும் ஆற்றலும் மலையைத் தாங்கும் வன்மையும் திறலும் கொண்டவை! முன்பு பூமியைத் தன் கொம்பில் தூக்கிய வராகத் தையும், திருப்பாற்கடல் கடைந்த பொழுது, மந்தரமலைஅமிழ்ந்து போகாமல் காத்த ஆமையையும் இரணியன் மார்பைப் பிளந்த நர சிங்கமே வந்தாலும் வாலியை அடக்கக் கூடிய வலிமை உண்டோ? [கிடையாது] மேலும் காற்றும் அவன் வேகத்திற்கு முன் செல்லாது. முருகப்பெருமானுடைய வேலும் அவன் மார்பைத் துளைக்க முடியாது. வாலியின் வால் செல்லும் இடத்தில் இராவணன் கோல் செல்லாது

         பார் இடந்த வெம்பன்றி, பண்டைநாள்

         நீர்கிடந்த பேர் ஆமை, நேர் உளான்

         மார்பு இடந்த மா எனினும், மற்றவன்

         தார் கிடந்த தோள் தகைய வல்லதோ?

        [கிஷ்கிந்தா காண்டம்]   [நட்புக்கோட் படலம் 43]

.           கால் செலாது அவன் முன்னர், கந்தவேள்

         வேல் செலாது அவன் மார்பில் வென்றியான்

         வால் செலாத வாய் அலது,இராவணன்

         கோல் செலாது; அவன் குடை செலாது அரோ.

          [கிஷ்கிந்தா காண்டம்] [நட்புக்கோட் படலம் 41]

இது மட்டுமா? பூமியைத்தாங்கும் ஆதிசேடன் கிடந்து தாங்கும் இந்த பூமியை வாலி நாளெல்லாம் நடந்தே தாங்குவான்!

                          வாலி சுக்கிரீவனோடு பகைமை கொண்ட காரணத்தை விரிவாகக் கூறுகிறான். வாலியின் பகைவனான மாயாவி வாலியைப் போருக்கழைத்தான். ஆனால் தான் தோற்று விடுவோம் என்ற பயத்தில் ஒரு பிலத்து வாரத்தில் நுழைந்து ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறான். இதைக் கண்ட வாலி சுக்கிரீவனை பிலத்துவாரத்தின் வாயிலில் காவலுக்கு வைத்து விட்டு உள்ளே நுழைகிறான். வெகு காலமாக பிலத்துவாரத்தி லிருந்து ஒருவரும் வெளியில் வரவில்லை இந் நிலையில் அமைச்சர்களின் ஆலோசனையின் படியும் வானரர்களின் விருப் பப்படியும் சுக்கிரீவன் அரசுரிமையை ஏற்றுக் கொள்கிறான்.

பூண்நிலாவு தோள்——அணிகள் அசைந்து விளங்கும் தோள்.                               மாயாவியைக் கொன்ற திரும்பிய வாலி நடந்ததை அறிந்து அடங்காத சீற்றம் கொள்கிறான். சுக்கிரீவன், வாலியிடம்,எவ்வளவோ எடுத்துச் சொல்கிறான். வானரர்களின் கட்டளைக்கு அஞ்சியே அரசாட்சியை ஏற்றுக் கொண்டதாகவும் தன் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் படி யும் மன்றாடினான்

              ஆணை அஞ்சி,இவ்வரசை எய்தி வாழ்

              நாண் இலாத என் நவையை நல்குவாய்

              பூண் நிலாவு தோளினை! பொறாய்!

               [கிஷ்கிந்தா காண்டம்] நட்புக் கோட் படலம் 63]

.                             ஆனால் வாலியோ மனம் மாறுபட்டு  சுக்கிரீவனைத் தாக்கினான். வாலியிடமிருந்து தப்பிக்கவே சுக்கிரீவன் இங்கு வந்தான். இந்த மலைக்கு வாலி வர முடியாத

 படி ஒரு சாபம் இருப்பதால் அவன் இங்கு வர முடியவில்லை என்று அனுமன் நிகழ்ந்தவற்றைக் கூறினான்.

                     வாலி இருக்குமிடம் செல்லும் வழியில் துந்துபியின் வறண்ட உடலைப் பார்த்த இராமன் விபரம் கேட்க

சுக்கிரீவன் துந்துபியின் வரலாற்றை சொல்லத்தொடங்கினான்.

குலவு தோள்——-திரண்ட வலிய தோள்                            

                                  துந்துபி என்ற அசுரன் தன்னுடன் போர் செய்ய திருமாலை அழைத்த போது உனக்கு சரியானவன் கங்காதரனே என்று சொல்ல, அவன் ஈசனிடம் சென்றான்.அவர் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் போர் செய்வது தான் உனக்குப் பெருமை தரும் என்று சொல்ல துந்துபி தேவேந்திர னிடம் சென்றான். நீண்டகாலம் போர் செய்ய வேண்டு மென்றால் அதற்குத் தகுந்தவன் வாலியே என்று அவனை ஊக்குவிக்க அவன் வாலியிடம் சென்று எதிர்த்தான்.

        கொற்ற வாலியும்,அவன் குலவு தோள் வலியொடும்

        பற்றி, ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து,

        எற்றினான்; அவனும்,  வான் இடியின் நின்று உரறினான்

                   [கிஷ்கிந்தா காண்டம்]  [துந்துபிப் படலம் 10]

துந்துபியும் வாலியும் உக்கிரமாகப்  போர் செய்யும் போது வாலி துந்துபியின் கொம்புகளைப் பிடுங்கி அடிக்க, அவன் வலி பொறுக்க முடியாமல் அலறினான். துந்துபியைக் தூக்கி கையால் சுழற்றினான். துந்துபி உயிர் பிரிய உடல் கீழே விழுந்தது என்று அவன் வரலாற்றை சொன்னான்.

                            இராமன் சொன்னபடி இலக்குவன் அந்த உடலைத் தன் கால் விரல்களால் தள்ள அந்த உடல் பிரம்ம லோகத்தை அடைந்து திரும்பி வந்து வீழ்ந்தது.

வரைத்தடந்தோள்

                  இராமன் சொன்னபடி சுக்கிரீவன் வாலியைப் போருக்கழைக்கிறான். பாற்கடல் கிடந்ததுபோல் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வாலியின் செவிகளில் இந்த அறைகூவல் விழு கிறது.எதிர்த்துவந்த தம்பி சுக்கிரீவனை நினைத்து ஏளனமாகச் சிரிக்கிறான்.அச்சிரிப்பொலி பதினான்கு உலகங்களையும் கடந்து திசைகளின் எல்லைக்கு அப்பாலும் அஞ்சி ஓடும்படி செய்தது                               

                                    எதிர்ந்து இளவல் உற்றமை,

         ரைத்தடந்தோளினான் மனத்தின் எண்ணினான்

         சிரித்தனன்;  அவ்வொலி திசையின் அப்புறத்து

         இரித்தது, அவ்வுலகம் ஓர் ஏழொடு ஏழையும்

         [கிஷ்கிந்தா காண்டம்]   [வாலிவதைப் படலம் 14]

=======================================================================

                       வாலி( பகுதி 2)

                 சுக்கிரீவனின் அறைகூவலைக் கேட்டு வாலி

எழுந்து ஊழிக்காலத்தில் கடல் பொங்குவது  போலக் கிளம்பு கிறான். அவன் எழுந்த வேகத்தில் கிட்கிந்தை மலை தரையில் அழுந்துகிறது. அவன் தோள்களை அசைக்க அந்தக் காற்றில்

அருகில் இருந்த மலைகள் விழுந்தன! அவ்வளவு பலம், ஆக் ரோஷம்!

            எழுந்தனன், வல்விரைந்து இறுதி ஊழியில்

            கொழுந்திரைக்கடல் கிளர்ந்தனைய கொள்கையான்

           அழுந்தியது அக்கிரி, அருகில் மால் வரை

           விழுந்தன, தோள்புடை விசித்த காற்றினே

         [கிஷ்கிந்தா காண்டம்]  வாலிவதைப் படலம் 15]

 வடித்த தோள் வலயம்——-சிறந்த தோள் வளை

         .                   வந்தனன், வந்தனன் என்று அவன் பதிலளித்த சப்தம் திசை எட்டும் கேட்டது. வாயிலிருந்த தீப்பொறி கள் வெளிப்பட்டன! அவன் தோள்தட்டி ஆர்ப்பரித்ததில் அவன் தோள் வளைகளில் பதித்திருந்த இரத்தினங்கள் மின்னல்கள் போல் தெறித்து வீழ்ந்தன!

         கடித்தவாய் எயிறு உகு கனல்கள்  கார் விசும்பு

         இடித்தவாய் உகும் உரும் இனத்தின் சிந்தின;

         தடித்து வீழ்வன எனத் தகர்ந்து சிந்தின,

         வடித்த தோள்வலயத்தின் வயங்கு காசு அரோ  

             [கிஷ்கிந்தா காண்டம்]  வாலிவதைப் படலம்  20]

குவவுத் தோள்——–பெருமை மிக்க திரண்ட தோள்                            

                   வாலி தோள் தட்டி கொதித்தெழுந்ததும், அவன் மனைவி தாரை அவனைத் தடுத்து விலக்குகிறாள். “என்னை வலியப் போருக் கழைத்தவனின் உடலைக் கடைந்து உயிர் குடிப் பேன்” என்கிறான் வாலி. தாரை அமைதியாக,”மன்ன! முன்பு உன் னுடைய வலிமைக்கு முன் நிற்கமுடியாமல் வலி இழந்து சென்ற சுக்கிரீவன் மீண்டும் போருக்கழைக்கிறான் என்றால் அவனுக்குப் பெரிய துணை கிடைத்திருக்க வேண்டும்” என்கிறாள் உறுதியாக.

       “கொற்றவ! நின் பெருங் குவவுத்தோள் வலிக்கு

       இற்றனன், முன்னை நாள்; பெயர்த்தும் போர் செய்ய

       உற்றது, நெடுந்துணை உடைமையால்

           [கிஷ்கிந்தா காண்டம்] [வாலிவதைப் படலம் 24]

                                       ஆனால் தன் தேகபலத்திலும் வரபலத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்ட வாலி, யமனும் என் பேரைக் கேட்டாலே நடுங்குவான். மேலும் என்னை எதிர்த்தவர் களின் தேக, வரபலத்தில் பாதி என்னைச் சேர்ந்து விடும் என்பது நீ அறியாததா? என்று சமாதானம் செய்கிறான்.

                       போரை விரும்பி உயர்ந்து கிளர்ந்து ஓங்கிய இரண்டு தோள்களோடு, கிழக்குத் திசையில் தோன்றும் சூரியன்போல் மலையின் மேல் வந்தான்

வன்புயஓங்கல்—–வலிய தோள்களாகிய மலைகள்.              

         ஒல்லை செருவேட்டு, உயர் வன் புய ஓங்கல் உம்பர்

        எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும்

        மல்லர் கிரியின் தலை வந்தனன் வாலி—

         [கிஷ்கிந்தா காண்டம்]  [வாலிவதைப் படலம் 37]

தகை மால் வரை சாலும்—–சிறப்பு மிக்க பெரிய மலையை ஒத்து

                                                              விளங்கும்

தோள்வலி——தோள்களின் வலிமை

                  , மிகப் பெரிய மலையை ஒத்து விளங்கும் தோள்களை உடைய வாலி குன்றின் மேல்வந்து நிற்கிறான்.

தூணிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றிய நரசிங்க மூர்த்தி போல யாவரும் அஞ்சும் படியாக அம்மலையின் இடையே நிற்கிறான்.

     நின்றான், எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச,

     தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி,

     குன்றூடு வந்து உற்றனன்-கோள் அவுணன் குறித்த

     வன் தூணிடைத் தோன்றிய நரசிங்கம் என்ன

         [கிஷ்கிந்தா காண்டம்]  [வாலிவதைப் படலம் 38]

இருவர் தோள்வலி

                      வாலி,சுக்கிரீவன் இருவரும் போர் செய்வது . இரண்டு திசை யானைகள் ஒன்றோடு ஒன்று முட்டிப் போர் செய்வது போலிருந்தது!இருவரும் தோளோடு தோள் தாக்கு வதாலும் தாளோடு தாள் தேய்ப்பதாலும் உண்டான நெருப்புப் பிழம்பு மின்னல் போல் ஓடின.

     தோளோடு தோள் தேய்த்தலின் தொல் நிலம் தாங்கல்

                                                           ஆற்றாது

    தாளோடு தாள் தேய்த்தலின் தந்த தழல் பிறங்கல்

    வாளோடுமின் ஓடுவ போல் நெடுவானின் ஓடும்—

    கோளொடு கோள் உற்றென ஒத்து அடர்ந்தார், கொதித்தார்

         [கிஷ்கிந்தா காண்டம்]  [வாலிவதைப் படலம் 47]

                                 இரண்டு கோள்கள் முட்டி மோதிக் கொண்டது போலவும் இருந்ததாம்.அவ்விருவரும் ஆர்ப்பரிக்கும் ஒலி ஏழு கடல்களும் ஒன்று சேர்ந்தது போலவும் அவை பத்துத்திசைகளிலும் பரவி மோதும் போது எழும் ஓசை போல பலமடங்கு அதிகரித்து ஒலிக்கிறது.

பாழித்தடந்தோள்——-வலிமை பொருந்திய பெரிய தோள்

.இருவரும் ஒருவரை ஒருவர் தோளிலும் மார்பிலும் குத்தும் ஓசை, யுக முடிவில் எழும் கருமேகங்களின் இடி முழக்கம்

போலிருந்தது

     ஏழ் ஒத்து, உடனாம் திசை எட்டோடு இரண்டும் முட்டும்

     ஆழிக்கிளர் ஆர் கலிக்கு ஐம்மடங்கு ஆர்ப்பின் ஓசை;

       பாழித்தடந்தோளினும் மார்பினும் கைகள் பாய

     ஊழிக் கிளர் கார் இடி ஒத்தது குத்தும் ஓதை

          [கிஷ்கிந்தா காண்டம்[ [வாலிவதைப் படலம் 52]

                                                                                                 ஒரு கட்டத்தில்சுக்கிரீவனை மேலே தூக்கிப் பிடித்துத் தரையில் மோத வாலி தயாரானபோது  ராம பாணம் வாலியின் மார்பில் பாய. வீழ்கிறான் வாலி. காற்றும், கந்தவேள் வேலும் புக முடியாத நார்பில் ராமபாணம் நுழைந்து

வாலியை வீழ்த்தி விடுகிறது..  வாலி,

     கலங்கி வல் விசைக்கால் கிளர்ந்து எறிவுற கடைக்கால்

     விலங்கல் மேருவும் வேர் பறிந்தாலென, வீழ்ந்தான்    

                     [வாலிவதைப் படலம் 67] 2001

.                                தன்னை இவ்வாறு மறைந்து நின்று தாக்கியவர் யார் என்று அறிந்து கொள்ள எண்ணி, தன் மார்பை ஊடுருவும் அம்பைப் பிடுங்கிப் பார்க்கிறான்.சற்றும் எதிர்பாராத விதமாக அந்த அம்பில் ராமநாமம் இருப்பதைக் கண்டு ஆச்சரிய மும் ஆத்திரமும் அடைகிறான்”அறம் வளர்க்கும் கண்ணாளனான இராமனா இப்படிச் செய்தான்?”பொறுக்கமுடியவில்லை அவனால்.

நாணம் ஒருபுறம். கிரீடத்தைச் சாய்க்கிறான், வெடிபடச் சிரிக்கி றான். இதுதான் தருமமோ என்று புழுங்குவான். மதயானை படு

குழியில் வீழ்ந்தது துயர்படுவது போலத் துவண்டு போகிறான்.

         வெள்கிடும்; மகுடம் சாய்க்கும் வெடிபடச் சிரிக்கும்

                                                    மீட்டும்

         உள்கிடும்; இதுவும் தான் அறமோ? என்று உன்னும்

இப்படிப் பல்வேறு மனநிலைகளால் அலைக்கழிக்கப் படுகிறான் வாலி. அதே சமயம்

              கண்ணுற்றான் வாலி, நீலக் கார்முகில்

                       கமலம் பூத்து

              மண்ணுற்று, வரிவில் ஏந்தி, வருவதே போலும்

வருகின்ற இராமனைக் காண்கிறான். ஆத்திரம் மூளுகிறது. உண்மை, மரபு என்ற இரண்டையும் கடைப்பிடித்து வாய்மைக் காகவே உயிர் விட்ட தூயவன் தயரதன் மகனே! நீ பரதனுக்கு முன் அவன் அண்ணனாகப் பிறந்தாய். மற்றவர்கள் தீமைசெய்வ தைத் தடுக்கும் நீ தீமை செய்தால் அது நன்மையாகி விடுமா?

     வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்

     தூயவன் மைந்தனே! நீ பரதன்முன் தோன்றினாயே!

      தீமைதான், பிறரைக்காத்து, தான் செய்தால்

                                 தீங்கு அன்று ஆமோ?

                  [[வாலிவதைப் படலம் 84] 4018

                ஓவியத்தில் எழுதமுடியாத உருவம் உடையவனே! உன் தேவியைப் பிரிந்த பின் என்ன செய்கிறோம் என்பது தெரியா மல் ஏதேதோ செய்கிறாய் அரக்கர்கள் உனக்கு ஓர் தவறு செய் தால் அவர்களை தண்டிக்க வேண்டும் ஆனால் நீயோ குரங்கு

 களைப் பழி வாங்குகிறாய். இப்படிச்செய்ய எந்த மனுதர்மம் கூறு கிறது? உன் இரக்கம் எங்கு போயிற்று? என்னிடம் என்ன பிழை கண்டாய்?

     அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல், அதற்கு வேறோர்

     குரக்கினத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று

                                                            உண்டோ?

     இரக்கம் எங்கு உகுத்தாய்? என்பால் எப்பிழை கண்டாய்?

                  [வாலிவதைப்படலம் 86] 4021

என்று கேள்விக்கணை தொடுக்கிறான். இருவர் போர் செய்யும் போது ஒருவருக்காக மற்றவரைக் கொல்வது தருமமாகுமா? இது

வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின் வாரம் அன்று நின்

மண்ணினுக்கு என் உடல் பாரம் அன்று பகை அன்று, என் செய்த வாறு அரோ? என்று கேள்விமேல் கேள்விகள் கேட்டு இராம னைத் திணறடிக்கிறான்.

         வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்

         வாரம் அன்று;நின் மண்ணினுக்கு என் உடல்

         பாரம் அன்று; பகை அன்று பண்பு அழிந்து

         ஈரம் இன்றி, இது என் செய்தவாறு அரோ?

                  [வாலிவதைப்படலம் 92] 4026

இராமன் சொன்ன பதில்களால் திருப்தியடையாத வாலி எதிர்வாதம் செய்கிறான்.

                     ஒரு கட்டத்தில், மன அமைதியடைந்து

”நாயடியனேன், ஆவி போம் வேலைவாய் அறிவு தந்தருளினாய்.

எம்பி வெற்றரசு எய்தி வீட்டரசு எனக்கு விட்டான், எம்பி தீமை செய்தபோதும் என் மேல் ஏவிய பகழியை அவன் மேல் ஏவி விடாதே! என்று வேண்டிக் கொள்கிறான். இவன் சுற்றத்தோடும் உன் அடைக்கலம் என்று தன் மகன் அங்கதனையும் ஒப்படைக் கிறான். அனுமனை, உன் கோதண்டம் என்று கொள் என்றும் உறுதியளிக்கிறான்,

                      இந்தச் சிறியன சிந்தியாதான்  (வாலி). வானுலகுக்கு அப்புறத்தன் ஆனான்!

=======================================================================                 

Series Navigationதோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)சத்திய சோதனை
author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *