மனித மனம் மிக விசித்திரமான பரிமாணம் கொண்டது. உணர்ச்சிகளின் விருப்புகளும், வெறுப்புகளும் மனித மனத்தை அலைக்கழிக்கின்றன. உண்மை என்று நாம் நம்பும் ஒன்று, ஒரு கட்டத்தில் உண்மை அல்ல, அது நமது கற்பனையே என்று உணரும் போது அந்த உணர்வின் பாதிப்பு மனித மனத்தைச் சீண்டுகிறது. இதன் செல்வாக்கு ஆண் பெண் உறவுகளின் நிலைப்பாட்டில் தீவிரம் கொள்ளும் போது ஏற்படும் காயங்கள், வலிகள் உறவின் உன்னதத்தைச் சீரழிக்க முனைகின்றன. குறிப்பாகக் குடும்ப உறவுகளில் இயங்கும் கணவன் மனைவியிடையே அவர்களது அன்னியோன்னியம் அல்லது பிளவுபடுதலில் முக்கியத்
துவம் பெறுகிறது. நான் பெரியவனா,நீ பெரியவளா, நான் முக்கியமா, நீ முக்கியமா என்ற பேதங்களின் மோதலில் வாழ்க்கை சிதைக்கப்
படுகிறது.
இந்தக் கதையின் கதாநாயகனுக்குப் பெயரில்லை. ‘அவன்’ என்றுதான் கதை முழுவதும் குறிப்பிடப்படுகிறான். ஆனால் இந்த அவன் தனது எண்ணங்களில் செயல்களில் மிகவும் தெளிவாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். 1970களில் வந்த ‘அவன்’ ‘இவன்’ கதைகளின் நெருடல்கள் இப்போது நினைவுக்கு வருகின்றன. அக்கதைகளை படித்து விட்டு அக்கால எழுத்தாளர் ஒருவர் சினமுற்று “இந்த அவன் இவன் கதைகளை படிக்கும் போது, ‘அவன் விரை பெரிசு என்னும் அன்னியோன்யம் உனக்கு எப்படி அய்யா ஏற்பட்டது?’ என்று எழுத்தாளரிடம் கேட்க வேண்டும் போல இருந்ததாக” எழுதினார். எம்.வி.விக்குத் தன் எழுத்தின் மீதும் சிந்தனைகளின் மீதும் இருக்கும் நம்பிக்கையும், குழப்ப எழுத்துக்
களிலிருந்து விடுபட்டு நிற்கும் மனப்பான்மையும் இருப்பதை
இந்தக் கதையில் வரும் ‘அவன்’ சுட்டிக் காண்பிக்கிறான்.
கதாநாயகன் மேடையில் நன்றாகப் பேசுகிறவன். கதை, கவிதைகளை எழுதுபவன். ‘நெஞ்சிலுள்ள நுணுக்கமான மர்மங்களையும் அலசுகின்ற ஆற்றல் பெற்றவன்’ என்று அவனைப் பற்றி விமரிசகர்கள் கூறுகிறார்கள். அழகன். கம்பீரமானவன். நல்ல குணசீலன். மிகவும் பொறுமைசாலி. மனைவி மீது உயிரை வைத்திருக்கிறான். ஆனால் அவள் அவனுக்கு அவன் எதிர்பார்க்கும் மரியாதை, அன்பு, காதல் ஆகியவற்றைத் தருவதில்லை. அவன் கெஞ்சிப் பேசும் போதும் அவள் அவனை உதாசீனம் செய்வது போல நடந்து கொள்கிறாள்.
ஏன்?
கதை அவன் அறிவாளிகள் நிறைந்த சிறிய கூட்டத்தில் மிகவும் அழகாகப் பேசிவிட்டான் என்று ஆரம்பிக்கிறது. கற்பனைக்
கோடான பூமத்திய ரேகையை ஒருவன் உண்மைக் கோடு என்று நினைத்து, அது காலப் போக்கில் விரிந்து கொண்டே போகும் என்று எண்ணினால்? அப்படியே விரிந்து பூகோளம் முழுவதையும் அது ஆக்கிரமித்துக் கொள்ளும் என்று கற்பனை செய்தால்? மனிதனுள்
பூமத்திய ரேகை “நான்” என்னும் உணர்ச்சி. அது மனித முன்னேற்
றத்துக்கு, அமைதியான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்தான்.
ஆனால் மனிதன் அதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துத்
தன்னுடைய ஆன்மீக வீழ்ச்சிக்கு வழி செய்கிறான். இதை அவன் கூட்டத்தில் சொல்லும் போது வரவேற்பு பலமாக இருந்தது. கூட்டத்தில் தரப்பட்ட மாலையையும் சென்டையும் எடுத்துக் கொண்டு நிலத்தில் கல் பாவாமல் வீட்டுக்கு வருகிறான்.
அந்த வீடு எப்படி அவனை வரவேற்கிறது? தாழிடாமல் சார்த்தியிருந்த கதவு, வீட்டு முன் கூட்டில் வெளிச்சம் தரும் விளக்கு போடப்பட
வில்லை. ராஜம் என்று மனைவியை அழைக்கிறான். பதில் எதுவும் வரவில்லை. அப்போதுதான் அவன் பூமத்திய ரேகையிலிருந்து வீட்டுக்கு வருகிறான் ! மறுபடியும் மனைவியைக் கூப்பிட்டபடி வீட்டின் உள்ளே செல்கிறான். இரண்டாம் கட்டில் இருந்த இருட்டை விலக்கினான். ராஜம் அங்கே இருந்தாள். கிடந்தாள்; ஆடை அலங்கோல
மாய்த் தலையை கவிழ்த்து கொண்டு
அவன் பதறிப் போய் அவளை விசாரிக்க, அவள் ஒன்றுமில்லை என்கிறாள். சாப்பிட என்று அவன் கேட்கும் போது நான் சமைக்கவில்லை என்கிறாள். முன்பே சொன்னால் வெளியேயிருந்து வாங்கிக் கொண்டு வந்திருக்கலாமே என்கிறான். அவள் ஒன்றும் பதிலளிக்கவில்லை. அவன் அந்த இரவில் வேறு ஏதும் கிடைக்காமல் மிஞ்சிப் போயிருந்தவற்றைக் கிளப்பில் இருந்து கொண்டு வருகிறான். அவள் அதை சாப்பிடாமல் அப்புறம் பார்த்துக் கொள்கிறேன் என்கிறாள்.இம்மாதிரி சந்தர்ப்பங்களில் தான் அதிகம் பேசக் கூடாது என்று அவனுக்குத் தெரியும். ஆனால் ராஜத்துக்கு ஏன் இத்தனை அலட்சியம்?
தனது அறையிலிருந்து ஜன்னலுக்கு அருகில் சென்று வெளியே பார்க்கிறான். ஒய்யாரமாக உறங்கும் இரவு. இந்த அழகான இரவில்
கவலையோ வேதனையோ இல்லை என்று கூற முடியுமா? ஆனால் இரவும் வானும் எல்லாவற்றையும் போர்த்து விட்டன.ஆகையால்
எங்கே பார்த்தாலும் ஒரே அமைதி. அமைதி ! அவனுக்குக் கிட்டாத ஒன்று ! அவன் மறுபடியும் மனைவியைத் தேடிச் செல்லுகிறான்.
“அங்கு விளக்கு முன்போலவே எரிந்து கொண்டிருந்தது. ராஜம் அங்கேயே பழைய இடத்திலேயே முடங்கிக் கிடந்தாள். தூக்கம் வந்திருக்கும் என்று தோன்றியது. அவன் கொண்டு வந்த டிபனும்
வைத்தது வைத்தபடி இருந்தது.
“ராஜம்!”
அவளைத் தொட்டு எழுப்பினான்.
“சாப்பிடவில்லையா நீ?”
“எனக்குப் பசி இல்லை.”
“முதலிலேயே சொல்லியிருந்தால்…?”
“சொல்லவில்லை.”
“விளக்கை அணைத்து விட்டாவது தூங்கக் கூடாதா?”
“அணைக்கவில்லை.”
கணவனுக்கும் மனைவிக்குமிடையே மற்றொரு சம்பாஷணை இம்மாதிரிப் போகிறது:
“நீ முகம் சுண்டிப் படுத்திருக்கிறாயே, உன் மனசுக்கு வருத்தம் உண்டாகும்படி அங்கே…”
“ஒன்றுமில்லை.”
“என்னிடம் சொல்லக்கூடாதா?”
“என்ன சொல்ல?”
“இத்தனை நாட்கள் என்னுடன் பழகியும் நீ என்னைப் புரிந்துகொள்ள
வில்லையா ராஜம்? என்னிடம் உன் குறையைச் சொல்லக் கூடாதா?”
“எனக்குத் தூக்கம் வருகிறது.”
….”ஆனால் உன்னுடைய வாடிய முகமெல்லாவற்றையும் கவிழ்த்து விடுகிறது.என்னால் பிறகு எழுத முடியவில்லை.”
“நான் தடுக்கவில்லையே?”
“அமைதி இழந்த குடும்ப வாழ்க்கை எழுதுவதற்கு முட்டுக்கட்டைதானே?”
“எனக்குப் புரியவில்லை, நீங்கள் பேசுவதெல்லாம்.”
“எத்தனை எத்தனையோ பேர் என்னை எத்தனையோ புகழுகிறார்கள். என்னைக் காண்பதையே பாக்கியம் என்கிறார்கள். எனக்குக் கிடைக்கும் இந்தப் பெருமை உனக்கு இல்லையா?”
“உம்.”
இந்தச் சிறுகதை முழுவதிலும் பரவிக் கிடக்கும் பேச்சு வார்த்தைகள், மற்றும் வருணனைகள் சாதாரணமானவை எனத் தோற்றமளிக்கும்,
ஆனால், அசாதாரணமானவையாக இருக்கின்றன. பொதுவான
அர்த்தத்தில் புழங்கும் “கதை” என்னும் ஒன்று இந்தச் சிறுகதையில் இல்லை என்பது எம்.வி.வி தனது எழுத்தில் எத்தகைய விற்பன்னர் என்று வாசகனுக்கு எடுத்துக் காட்டுகிறது. ராஜம் அலட்சியமாக அவளது கணவனைத் தள்ளுவது எதனால்? அவள் அவன் தனது பொலிவுகளை அவளிடம் காண்பிப்பதை அவள் வெறுக்கின்றாளா? அவன் எவ்வளவு தூரம் நேரடியாகத் தன்னைப் பற்றி உயர்வாக அவளிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறானோ, அந்த அளவு அவள் தன் சிறு செய்கைகளிலும் , சம்பாஷணை என்று கூற முடியாத பேச்சுக்களிலும் அவற்றை நிராகரிக்கிறாளா? அவன் தன்னைத்
தானே கொண்டாடிக் கொள்வது போல மனைவியைக் கொண்டாடும் வார்த்தைகளை ஏன் உதிர்க்கவில்லை?
அவன் தன் மனைவியிடம் காட்டும் பரிவில், அதன் இயல்பை மீறிய அர்த்தங்களை ராஜம் உணருகிறாள் என்று நாம் நினைக்கும் போது இருவரில் யார் கெட்டிக்காரர்கள் என்ற வியப்பு நமக்கு ஏற்படுகிறது. இந்தக் கெட்டிக்காரத்தனம்தான் அவர்களின் விரிசலுக்கு அடிப்படை என்பதை வெங்கட்ராம் வெளிப்படையாகச் சொல்லாமல் விட்டு விடுகிறார். மௌனியின் அடர்த்தியும் ஜானகிராமனின் லாகவமும் சேர்ந்த கலவையாக இக்கதை தோற்றமளிப்பதை நாம் காண்கிறோம்.
இறுதியில் அவன் ராஜத்திடம் சொல்கிறான்:”என்னுடன் வாழ உனக்கு விருப்பம் இருக்கிறதா, இல்லையா?” என்றான் உள்புகுந்து.
(உள்புகுந்து !!)
அவளுடைய மௌனம் அவனைக் குதறியது. பூமத்திய ரேகைக்குப் பக்கத்திலுள்ள சூரியனின் வெம்மை தன்னைச் சுட்டுக் கருக்குவது போலிருந்தது.
“உயிருடன் என்னைப் புதைக்கவா என்னை மனம் செய்து புரிந்தாய்?”
அதற்கும் அவள் பேசவில்லை. புதையுண்டு போன தன் சவத்தின் துர்க்கந்தத்தைத் தானே சுவாசிப்பது போல அவனுக்குத் தோன்றியது. மூச்சு தவிதவித்தது.
“நான் ஆணாய்ப் பிறந்ததே என் குற்றம் !” என்றான் ஆற்றாமையுடன்.
“இல்லை, நான் பெண்ணாய்ப் பிறந்ததுதான் குற்றம் !”
முற்றுப்புள்ளி வைக்காத கதையாக பூமத்திய ரேகை வாசகரைத் தொந்திரவு செய்கிறது.
- அபிநயா ஸ்ரீகாந்தின் ஏழு ராஜாக்களின் தேசம் – நூல் விமர்சனம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 240 ஆம் இதழ் – வங்கச் சிறப்பிதழ்
- சொல்லாய் அர்த்தமாகும் கல்
- வெறியாடல்
- திருமணக் கவிதைகள்
- உலக நடை மாறும்
- பெய்யெனப் பெய்யும் மழை – வெண்பாக்கள்
- ஒரு கவிதை எழுத வேண்டும் !
- எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதை உலகம் – 2 – பூமத்திய ரேகை
- தடகளம்
- கணக்கு வாத்தியார்
- மைதீனின் கனவு
- கவிதையும் ரசனையும் – 11