முனைவர் க .நாகராஜன்
[பச்சைக்கிளியே பறந்து வா ” மழலையர் பாடல்கள் – பாவண்ணன் ,அகரம் வெளியீடு ; தஞ்சாவூர், , பக்: 70; ரூ. 50]
எத்தனை வயதானாலும், ஒன்றாம் வகுப்பில் படித்த குழந்தைப் பாடல்களை நம்மால் மறக்க முடிவதில்லை. “அம்மா இங்கே வா வா / ஆசை முத்தம் தா தா / இலையில் சோறு போட்டு / ஈயைத் தூர ஒட்டு”, “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு / சாயக்கிளியே சாய்ந்தாடு”, ” தட்டு நிறைய லட்டு/லட்டு மொத்தம் எட்டு ” போன்ற பாடல்கள் கால வெள்ளத்தில் நம்மோடு இணைந்து பயணிக்கின்றன.
“பச்சைக் கிளியே பறந்து வா ” என்னும் தலைப்பில் பாவண்ணன் எழுதிய குழந்தைப் பாடல்கள் தொகுப்பை அண்மையில் படித்தேன். மொத்தம் 61 பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒரு பக்க அளவே உள்ளது. மிக எளிய சொற்களில் இனிய சந்தத்தோடு ஒவ்வொரு பாடலும் திகழ்கிறது.
பாடல்களைப் படிக்கும் போது முழுக்க முழுக்க நாமும் குழந்தைகளின் உலகில் பயணம் செய்கிறோம். கிளி, காக்கை, குயில், வாத்து, மாடப்புறா, தும்பி, கோழிக்குஞ்சு போன்ற பாசம் மிக்க பறவைகளுடனும், நாய், பூனை, குரங்கு, ஆடு, பசு, அணில் என அன்பு மிக்க விலங்குகளுடனும், கொஞ்சும் அம்மா, விளையாட்டு காட்டும் அப்பா, ஊஞ்சல் ஆடும் அக்கா , பந்து விளையாடும் அண்ணன், தெருவிலே முறுக்கு விற்கும் வயதான பாட்டி, பட்டம் விடும் பக்கத்து வீட்டுப் பையன், கிழங்கு வேகவைத்துக் கொடுக்கும் அத்தை என்று நாமும் அவர்களுடன் பரவசத்தோடு துள்ளிக் குதிக்கிறோம்.
“பச்சைக் கிளியே பறந்து வா ” “எங்கள் தோப்பு மாம்பழம்/ இனிமையான மாம்பழம்” , “சின்னச் சின்ன பூனையே/ செல்லக் கூட்டிப் பூனையே” போன்ற பாடல்களை எந்தத் தயக்கமும் இன்றி மழலையர்ப் பள்ளி தமிழ்ப் பாட நூல்களில் உடனடியாகச் சேர்க்கலாம். நம் குழந்தைகள் பாடல்களைப் பாடி மகிழ்வார்கள்.
தொகுப்பில் நிறைய பாடல்கள் உரையாடல்களாக வருகின்றன. தம்பிப் பாப்பாவோ, செல்லக் குட்டித் தங்கையோ, பறவை அல்லது விலங்குகளோடு உரையாடுவது போல் அவை அமைந்துள்ளன. “சிறுவனின் விளக்கம்” “கிளியிடம் ஒரு வேண்டுகோள்” , “காக்கையுடன் ஒரு உரையாடல்” முதலிய பாடல்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இந்த உரையாடல்கள் இயற்கையையும், நம்மைச் சூழ்ந்துள்ள உயிர்களையும் நேசிக்கக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றன.
“உல்லாசப் பயணம்” பாடல் ஒரு நகைச்சுவையாக மலர்ந்து, உதட்டில் புன்னகையைப் பூக்க வைக்கிறது. “கால் முளைத்த சிறுவன்” எனும் பாடல் தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் குறும்புக்காரச் சிறுவர்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை வரைந்து அளிக்கிறது.
“அருவிக்குளியல்” குற்றால அருவியை நினைவூட்டுகிறது. “அண்டா பாலைக் கவிழ்த்தது போல” என்னும் அடி மிகச் சிறந்த கற்பனை. “பயணம்” பாட்டில் பட்டாம்பூச்சி மலரைத் தேடிச் செல்கிறது; முகிலைத் தேடிச் செல்கிறது வானம்பாடி; மாடப்புறா மணிக்கூண்டை நோக்கிப் பயணிக்கிறது; வண்ணக்கிளி வனத்தில் உலாவிச் செல்கிறது; குயிலோ தனிமையை நாடிச் செல்கிறது; பாடலைப் படிக்கும் நாமோ நிகழ்காலத்தில் இருந்து நம்முடைய மழலை வயதிற்குப் பயணிக்கிறோம்.
இந்தத் தொகுப்பு ஒரு மிகச்சிறந்த குழந்தைப் பாடல்களின் தொகுப்பு. ஒன்றே ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அமரர் அழ. வள்ளியப்பா ஒரு வேளை இந்தத் தொகுப்பைப் படித்திருந்தால் பெரிதும் மகிழ்ந்திருப்பார். பாவண்ணனை அழைத்துப் பாராட்டியிருப்பார்.
- “பச்சைக்கிளியே பறந்து வா” மழலையர் பாடல்கள் – பாவண்ணன் -நெஞ்சை அள்ளும் குழந்தைப் பாடல்கள்
- அழகர்சாமியின் குதிரை வண்டி !!
- தாவி விழும் மனம் !
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- இறுதிப் படியிலிருந்து – பீமன்
- கூடங்குள ரஷ்ய அணுமின் உலைகள் 3 & 4 கட்டுமான மாகி வருகின்றன.
- தூக்கத்தில் அழுகை
- ஊரடங்கு வறுமை
- வட்டி
- அருள்பாலிப்பு
- மகுடம்
- அதுதான் சரி !
- இறுதிப் படியிலிருந்து – பீஷ்மர்