தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 8 of 12 in the series 15 மே 2022

 

                   

 

                                       பாச்சுடர் வளவ. துரையன்

 

                   மாகலக்கமூள் வாரணங்கள்முன்

                  பாகலப் பசாசுகள் பரக்கவே.                         531

 

[மா=மிகுந்த; கலக்கம்=துன்பம்; வாரணம்=யானை; பாகலம்=யானைகளுக்கு வரும் நோய்]

 

யானைகளை வருத்திக் கொள்ளும் பாகலம் எனும் நோய்க்கு ஆளானவை போல எதிரிகளின் யானைப்  படைகள்  மிகவும் துன்பத்திற்கு ஆளாயின.

                   

                   வெள்ளி வாய்மதிக் குடைவிளிந்த ஓர்

                  கொள்ளிவாய் நெடும்பேய் கொளுத்தவே.                 532  

 

[மதி=நிலவு; விளந்த=வந்த; கொளுத்த=எரிக்க]

 

வெண்ணிற நிலவுபோல் உள்ள வட்டக்குடையின் நிழலில் வந்த தேவர்களை ஒரு கொள்ளிவாய்ப்பேய், கொளுத்தி எரித்தது

                   

                   விரவி வெள்ளியின் தெரி விபஞ்சியில்

                  புரவி வெள்ளம் முற்றும் புரட்டவே.                       533

 

[விரவி=கலந்து; வெள்ளி=வித்யாதரர் மலை; விபஞ்சி=யாழ்; புரவி=குதிரை]

 

யாழ் மீட்டிப் பாடுவதில் வல்லவரான வித்யாதரர் மலையான வெள்ளிமலையில் சென்று கலக்கும்படி குதிரைகள் கூட்டம் முழுவதையும் புரட்டிப் போட்டு எடுத்து வீசின.

                                    

                   மாக்க கணங் கொள்படை வானநாடரை

                  தாக்கணங்குகள் தரைப் படுத்தவே.                       534

 

[மா=பெரிய; கணம்=கூட்டம்; வானநாடர்=தேவர்; தாக்கணங்கு=அறைந்து கொல்லும் ஒரு தேவதை]

 

மிக்கபெரிய கூட்டமான படைகளோடு கூடிய வானுலகத் தேவர்களை தாக்கணங்குகள் தரையில் போட்டுத் தேய்த்தன.

             

             அடப்படப் பொருது அமரர் தம்படை

            படப்படப் ரசாபதி படைக்கவே.                             535     

 

[அடல்=வலிமை; பட=அழிய; பொருது=போரிட்டு; அமரர்=தேவர்; ப்ரசாபதி=; பிரஜாபதி; படக்கவே=உண்டாக்க; ஏ என்பது அசை]

 

வலிமையான படையுடன் போரிட்டு தேவர் படை அழியப் பிரமதேவன் அவற்றைப் புதியதாகப் படைக்கலானான்.

                      

                   பள்ளிக் குன்றும் விற்குன்றும் ஒழியச்சிறகு

                        அறுப்புண்டு பாழ்

                  வெள்ளிக் குன்று பொற்குன்று கற்குன்று

                        அடைய வீழ்ந்தவே.                             536

 

பள்ளி=இருக்கை; விற்குன்று=மேருமலை;  வெள்ளிக்குன்று=வித்தியாதரர் மலை]

 

சிவனின் இருக்கையான கயிலாய மலை, சிவன் வில்லாக வளைத்த மேருமலை, தவிர்த்து மற்ற வெள்ளிமலை, பொன்மலை, கல்மலை, எனும் பலவகை மலைகள் தம் சிறகு அறுபட்டு வந்து விழுந்தன.

                    

                 

                  வெள்ளிக் குலக்குன்று பொற்குன்று கல்லின்

                        விழுக்குன்று எனப்பட்ட குன்றியாவும் வீழக்

                  கிள்ளிச் சிறைப்பாரம் உகிரில் கிடப்பக்

                        கிளர்ந்து உம்பர் கோமானை மானம் கெடுத்ததே.     537

 

[சிறைப்பாரம்=சிறகுகளின் சுமை; உகிர்=நகம்; உம்பர்=தேவர்; கோமான்=அரசன்]

 

வீரபத்திரரின் படைகள் வந்து விழும் வெள்ளிமலை, பொன்மலை, கல்மலை, எல்லாவற்றின் சிறகுகளையும் தம் கை நகங்களாலேயே கிள்ளி எறிவது கண்டு முன்பு தன் வச்சிராயுதத்தால் மலைகளின் சிறகுகளை வெட்டி வீழ்த்திய தேவர்களின் அரசனான தேவேந்திரனுக்கு மானமே பறி போனது.

                

            பொற்பு ஊடறக் கற்பகக்காடு சாடிப்

                  புகுந்து உம்பர் கோன்முன்பு பூதப்பிரான்மார்

            வெற்பு ஊடறப்போம் வெறுங்கைக ளாலே

                  விழுத்தொகை யான்வாகை வெள்வேலை வென்றதே.    538

 

[பொற்பு=அழகு; ஊடற=உள்ளழிய; சாடி=அழித்து; உம்பர்=தேவர்; வெற்பு=மலை; விழுத்தொகை=பெருமை பெற்ற; வெள்வேல்=வெற்றிவேல்]

 

தேவேந்திரனின் கற்பகச்சோலையின் உள்ளே புகுந்து அதன் அழகு அழிய பூதத்தலைவர்கள் அதைக் கைகளாலேயே அழித்தனர். கிரவுஞ்ச மலையைப் பிளந்த பெருமைபெற்ற முருகப்பெருமானின் வெற்றி வேல் போல வெற்றி கொண்டனர்.

                   

                  குமிழ்க்கும் குவட்டு எழுகுன்றும் பிலத்தே

                        குளிப்பக் குறும்பூதம் ஒன்றே குமைத்துத்

                  தமிழ்க் குன்றின் வாழும் சடாதாரி பேரியாழ்

                        தழங்கும் திருக்கைத் தருக்கைத் தவிர்த்தே.        539

             

[குமிழ்=குவிந்த; குவடு=குன்று; பிலம்=பாதாள உலகம்; சடாதாரி=சடையை உடைய அகத்தியன்; தருக்கு=ஏழு மலைகள்; கயிலை, இமையம், விந்தியம், நிடதம், மந்தரம், ஏமகூடம். கந்தமாதனம்]

 

தமிழ் மலையாகிய பொதியமலையில் வாழும் அகத்தியர், யாழ் மீட்டும் தம் திருக்கையால் முன்னொருகாலத்தில் விந்திய மலையின் கருவத்தை அடக்கி அதை பூமிக்குள் புதையச் செய்த பெருமையானது கெட, குள்ளப் பூதம் ஒன்றே இப்பொழுது ஏழு மலைகளையும் பாதாள உலகத்தில் போய்ச் சேருமாறு அழுத்தியது.

                                         

                  கட்டிக் குறங்கைக் குறங்காலும் மோதி

                        காதும் சிறைக் கைகளைக் கைகளாலே

                  மட்டித்து வெற்போடு மற்போர் செய்பூதம்

                        மல்லர்க் கடந்தானை மானம் கெடுத்தே.           540

 

[கட்டி=திரட்சி; குறங்கு=மலை அடிவாரம்; துடை; காதுதல்=அழித்தல்; மட்டித்து=முறித்து; வெற்பு=மலை]

 

திரண்ட பெரிய மலைகளைத் துடைகளால் மோதித் தாக்கி அவற்றின் சிறகுகளைக் கைகளால் ஒடித்து அழித்து மலைகளோடு மற்போர் செய்யும் பூதம்,  முன்பு மாயவனாகிய திருமால் மல்லர்களோடு போரிட்டு வென்ற சிறப்பைக் கெடுக்குமாம்.

                      

                  அலங்கல் பணைத் தோள்இணைக் குன்றின் ஒன்றால்

                        அடற்பூதம் ஒன்று ஏழை ஆகண்டலன்தன்

                  விலங்கல் குழாம் மாரிபோய் நீறுநீறாய்

                     விழப்பண்டு கல்மாரி வென்றானை வென்றே.         541

 

[அலங்கல்=மாலை; பணை=பருத்த; அடல்=வலிமை; ஆகண்டலன்=இந்திரன்; விலங்கல்=மலை; நீறுநீறாய்=பொடிப்பொடியாய்; கல்மார்=கல்மழை;

 

மாலை சூடிய பருத்த இருமலைக்குன்றுகள் போலிருக்கும் தன் தோள் ஒன்றினாலேயே ஒரு பூதம் முன்னர் இந்திரன் கருவம் கொண்டு கல்மழை பெய்த போது, கிரிமலையைக் குடையாய்ப் பிடித்து, அக்கல்மழையைப் பொடிபொடியாய்ப் போகச்செய்த கோவலரான கண்ணன் செயலை வென்றது.

                     

                  புடைக்காலம் மற்றுஒருத்து உருக்குண்ண ஏழ்பொற்

                        பொருப்பும் கனற்கண் கடைசுட்ட பூதம்

                  கடைக்காலம் எக்குன்றமும் சுட்டுருக்கும்

                        கடுங்கோள்கள் ஈராறும் நாணிக் கவித்தே.          542

 

[புடைக்காலம்=அழிவுக்காலம்[

 

உலகம் அழியும் காலம் வந்துவிட்டதைப் போல ஒரு பூதம் ஏழு மலைகளையும் தனது கண் நெருப்பால் சுட்டுப் பொசுக்கி ஊழி முடிவில் எல்லா மலைகளையும் சுட்டுப் பொசுக்கும் பன்னிரு சூரியர்களையும் வெட்கப்பட வைத்தது.

                         

                  கைநாக மேமேயும் மாநாக நாகக்

                        கணம்கூட வாரிக் கவுட் கொண்டபூதம்

                  மைந்நாக வெற்பு ஒன்றையும் தன்வயிற்றே

                        மறைக்கும் கடற்கோனை மானம் கெடுத்தே.        543

 

[மாநாகம்=பெரிய பாம்பு; கவுள்=கன்னம்; மைந்நாகம்=ஒரு மலை; கடற்கோன்=வருணன்]

 

கைமலை எனப்படும் பெரிய யானைகளையும் விழுங்கும் மிகப்பெரிய பாம்புகளான பல மலைகளை எடுத்துத் தன் கன்னக் கதுப்பில் அடக்கிக்கொண்ட ஒரு பூதம் அந்த நாளில் மைநாக மலையைத் தன் வயிற்றில்  மறைத்துக் கொண்ட கடலரசனின் மானத்தைக் கெடுத்தது.

                      

                  சோரிக் கடல்சாடி விற்குன்றம் ஒன்றை

                        சுழற்றித் துழாய் வெண்நிணம் துய்த்தபூதம்

                  பாரித்த பௌவம் கடைந்தார்கள் என்னும்

                        பராவின்மை தேவாசுரர்க்குப் பணித்தே.              544

 

[சோரி=இரத்தம்; சாடி=கலக்கி; துழாய்=தேடி; நிணம்=சதை; துய்த்தல்=உண்ணல்; பௌவம்=கடல்; பராவின்மை= பெருமை; பணித்தல்=குரைத்தல்]

 

இரத்தம் கடல்போலப் பெருகியது; ஒருபூதம் ஒரு மலையை நட்டுக் கலக்கிக் கடைந்து, கையை விட்டுத் துழாவி வெண்ணிறச் சதைக் கொழுப்பை உண்டு, முன்னொரு காலத்தில் பெரியதான பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்து அமுதம் எடுத்தார்கள் எனும் புகழை மங்கச் செய்தது.

                      

                  மேலாழியார் வெள்ளி வேதண்ட லோகம்

                        விழிக்கே உருக்குண்ண வெள்ளம் செய்பூதம்

                  பாலாழி யும்தாழ அவ்வாழி வைகும்

                        பரந்தாமனும் தாழஉட்பள்ளி கொண்டே.        545

 

[ஆழியார்=சக்கரவர்த்திகள்; வெள்ளி=ஒரு மலை; வேதண்டலோகம்=வித்தியாதரர் உலகம்; பாலாழி=பாற்கடல்]

 

மேல் உலகச் சக்கரவர்த்திகளான வித்தியாதரர்கள் வாழ்கின்ற உலகத்தை விழியால் எரித்துக் கடல் போலச்செய்த ஒரு பூதம், அதில், பாற்கடலும், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனும் தாழ்வடையத் தான் படுத்து உறங்கியது.

                     

                  சென்றெட்டு வெற்பும் பணிப்பத் துணிப்பச்

                        செயிர்த்த எண்மர் கணநாதர் இனம்மிண்டு சிகரக்

                  குன்றெட்டும் இட்டுஎண் திசாதேவர் ஏறும்

                        கொல்யானை எட்டும் விழக் குவித்துவித்தே,        546

 

[எட்டு மலைகள்: கயிலை, இமயம், நிடதம், விந்தம், ஏமகூடம், கந்தமானம், நீலகிரி. எட்டுத்திசைக்காப்பளர்கள்: இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். எட்டு யானைகள்: ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்கபதந்தம், , சாகுவபூபம், சுப்ரதீபம். எட்டு பூதத்தலைவர்கள்: சருவன். ருத்திரன், பசுபதி, ஈசானன், பவன். உக்கிரன், மகாதேவன், மகிமன்.

 

வீர்பத்திரர் படைகள் எட்டுத் திக்குகளிலும் சென்று எட்டு மலைத்தொடர்களையும் சிதைந்து அழித்து. எட்டுத்திசைக் காவலர்கள் ஊர்ந்து வரும் எட்டு யானைகளையும் வீழ்ந்திறக்கச் செய்தனர்

                 

             தம் பூதராதி களொடும் கூடி ஆடித்

                  தயிராக வயிராகரக் குன்று இளக்கிக்

            கும்போத ராதிகள் குடித்துத் தடித்துக்

                  கொள்ளாத வச்சிர காயம் கொண்டு கொண்டே.         547                 

[வயிராகரக் குன்று=வயிர மலை; இளக்கி=உருக்கி; கொள்ளாத=ஏற்புடையதல்லாத]

 

பூதகணங்கள் எல்லாம் எட்டுத்திக்கு யானைகளை அழித்த மகிழ்ச்சியில் ஒன்று சேர்ந்து கூத்தாடி, இந்திரனுக்கு வச்சிராயுதம்போலப் பாதுகாப்பாக உள்ள வயிர மலைகளைக் கோபக்கனலால் உருக்கித் தயிராக்கிக் குடித்து வச்சிர உடம்பு பெற்றவராயினர்.

                              

               தீவாய் வயின்திண் பொருப்பிட் டுருக்கிச்

                  செவ்வாய்தொறும் கொண்டு கொண்டு உம்பர் சென்மார்

              வாய்வாய் தொறும் கொப்புளிப்பார் களிப்பார்

                  மழுவாளியார் சாரமாணி எனவந்தே.                   548

 

[வாய்வயின்=வாயில்; பொருப்பு=மலை; உம்பர்=தேவர்; சென்மார்=செல்வோர்; மழுவாளியார்=வாம மதத்தினர்; சாரமாணி=கோமாளி]

 

தீயைக் கக்கும் வாயை உடைய கொள்ளிவாய்ப் பேய்கள், பெரிய மலைகளைத் தம் வாய் நெருப்பால் உருக்கி, செந்தீக்குழம்புகளை வானில் செல்லும் தேவர்கள் மீது கொப்பளித்து மகிழ்ந்தது, வாம மதத்தினர் மற்றவர் முகத்தில் உமிழும் கோமாளித்தனமாக இருந்தது.

                 

 

            அலைகொன்று வருகங்கை வாராமல் மேன்மேல்

                  அடைக்கின்ற குன்று ஊடறுக்கின்ற பூதம்

            மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்

                  வர ராசராசன் கைவாளென்ன வந்தே.                  549

 

[கொன்=பெருமை; ஊடறுத்து=உடைத்து; மலை=சையமலை; பொன்னி=காவிரி; வரராசன்=ராசராசசோழன்]

 

வீரபத்திரர் விருப்பப்படி, வேள்விச் சாலையை அழிக்க அலைகள் வீசி வந்த கங்கை வெள்ளத்தைத் தடுக்கத் தேவர்கள் அணையாக மலைகளைக் கொண்டுவந்து போட, அம்மலைகளைப் பூதப்படையினர், உடைத்துத் தூளாக்கினர். இது அக்காலத்தில் காவிரின் பெருக்குக்குத் தடையாக இருந்த சையமலையை கண்டன் என்னும் இரண்டாம் இராசராசசோழன் கைவாளை ஒத்ததாக இருந்தது.

           

    

            மின்வெள்ளி பொன்கொல் எனச்சொல்லும் முப்போர்

                  விலங்கற்குழாம் ஓர்விழிச் சுட்ட பூதம்

            பொன்வெள்ளி எஃகென்ன வானத்து உலம்முப்

                  புரம்சுட்ட வீரர்க்கு மேலே பொலிந்தே.                550

 

[கொல்=பஞ்சலோகம்; விலங்கல் மலை=; குழம்=கூட்டம்; புரம்=திரிபுரம்; அட்ட=அழித்து]

 

மின்னும் வெள்ளி, பொன். பஞ்சலோகம் எனப்படும் உலோக மலைகளைத் தங்கள் கோபக்கனல் வீசும் விழிகளாலேயே சுட்ட ஒரு பூதம், முன்பொரு காலத்தில் பொன், வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்துக் கொண்டு வானத்தில் பறந்து திரிந்த திரிபுராதிகளைத் தம் நெற்றிக்கண் நெருப்பாலே சுட்டு எரித்த சிவபெருமானைப் போல விளங்கியது.

 

Series Navigationவடகிழக்கு இந்தியப் பயணம் : 9 எச்சில் சீட்டுகள்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *